சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“சிந்திப்பதற்கும் தணிக்கை வரலாம்!”

“சிந்திப்பதற்கும் தணிக்கை வரலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சிந்திப்பதற்கும் தணிக்கை வரலாம்!”

சா.ஜெ.முகில் தங்கம்

`ஒழிவுதிவசத்தே களி’ மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன். அவரது சமீபத்திய திரைப்படம் ‘செக்ஸி துர்கா’. பல்வேறு சர்ச்சைகள், தடைகளுக்குப் பிறகு ‘எஸ் துர்கா’ எனப் பெயர் மாற்றப்பட்டு வெளியாகியிருக்கிறது.  கலையின் வழியே சமூக நிலையை அழுத்தமாகப் பதிவு செய்வதைத் தொடர்ச்சியாக `எஸ் துர்கா’விலும் செய்திருக்கிறார். சென்னைக்கு வந்திருந்தவரோடு  மலையாள சினிமா, தமிழ் சினிமா, சமகால அரசியல் எனப் பல விஷயங்கள் குறித்தும் உரையாடினேன்.

“சிந்திப்பதற்கும் தணிக்கை வரலாம்!”

“பல்வேறு அரசியல் நெருக்கடிகள் தடைகளைத் தாண்டி, எஸ் துர்கா வெளியாகியுள்ளது. எப்படி உணர்கிறீர்கள்?”

“இதனை நான் இரண்டு அம்சங்களாகப் பார்க்கிறேன். படத்தின் உள்ளடக்கம் சார்ந்ததாகவும் அழகியல் சார்ந்ததாகவும். படத்தின் உள்ளடக்கமோ அழகியலோ அவர்களை ஒன்றும் செய்யவில்லை. படத்தின் தலைப்புதான் அவர்களுக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. அடிப்படைவாதக் குழுக்களுக்கு அதிர்ச்சியைத் தரும்போதெல்லாம் இவ்வாறு நிகழ்வது இயற்கைதான். படம் வெளியாகிவிட்ட காரணத்தாலேயே அந்தத் தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் போய்விட்டதாக அர்த்தம் இல்லை. மீண்டும் அடிப்படைவாதக் குழுக்களுக்கு அதிர்ச்சியைத் தரும் வகையில் அடுத்த படத்துடன் வந்தாலும் இதேமாதிரியான நெருக்கடியான சூழல் ஏற்படும்”

“வழக்கறிஞராகப் பணியாற்றிய நீங்கள் சினிமாவுக்குள் எப்படி நுழைந்தீர்கள்?”

“நான் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறுவயதில் இருந்தே சினிமா பார்ப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் கிராமத்தில் இருக்கும் தியேட்டரில் படங்களைப் பார்க்கும்போதே சினிமா பற்றிய கனவுகள் வந்துவிட்டன. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு அதற்குரிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அதனால் வழக்கறிஞரானேன். ஆனாலும் சினிமா வேட்கை விடவில்லை. சினிமா இயக்குநராகிவிட்டேன்”

“சிந்திப்பதற்கும் தணிக்கை வரலாம்!”

“முற்போக்கு மாநிலமாகச் சொல்லப்படுகிற கேரளத்திலும் அடிப்படைவாதிகள் நிறைந்திருக்கிறார்கள் என்பதை உங்கள் படங்கள் பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?”

“அடிப்படைவாதம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நமக்கு உள்ளே இருக்கும் வன்முறைதான் அடிப்படைவாதம். இது ஒரு குழு சார்ந்த விஷயம் கிடையாது. நமக்குள்ளே வன்முறையும் சகிப்பின்மையும் இருக்கத்தான் செய்கிறது. அது வெளிப்படும்போதுதான் அடிப்படைவாதமும்

“சிந்திப்பதற்கும் தணிக்கை வரலாம்!”

வெளிப்படுகிறது. ஆனால் கேரளாவை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் முற்போக்கு மாநிலமாக, கல்விப் பின்புலமுள்ள மாநிலமாகப் பார்க்கிறார்கள். இங்கு முற்போக்கான செயல்பாடுகளும் கலாசார விவாதங்களும் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் கேரளாவிலும் சாதி, மதம், ஆணாதிக்கம் போன்ற பிற்போக்கு மனநிலைகளும் இருக்கின்றன. எனவே எனது படம் அவற்றைப் பதிவு செய்கிறது. அதற்கு எதிர்ப்பு வருவதில் ஆச்சரியமொன்றுல்லை”

“எஸ் துர்கா பல்வேறு முரண்களைப் பேசுகிறது. ஒருபக்கம் பெண் தெய்வம் - சாதாரண பெண், பாரம்பர்ய இசை - மெட்டல்ரக நவீன இசை , நேர்த்திக்கடன் என்ற பெயரில் சுயவதை செய்தல்- பிறர் மீதான வன்முறை... இந்த முரண்களின் வழியே வலுவான அரசியலைப் பேசியிருக்கிறீர்கள். இது திட்டமிடப்பட்டதா?”


“ஆம், திட்டமிடப்பட்டதுதான். படத்தின் தலைப்பாக ‘செக்ஸி துர்கா’வை வைத்ததே இந்த முரணின் அடிப்படையில்தான். இந்த இரண்டு வார்த்தைகளையும் இதுவரை ஒன்றாக நாம் கேட்டதில்லை. படத்தில் இருக்கும் பல்வேறு முரண்களையும் அது பேசக்கூடிய அரசியலையும் சொல்லும்விதமாகத்தான் இந்தத் தலைப்பை வைத்தேன். மற்றபடி சர்ச்சைக்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ இதைச் செய்யவில்லை”

“சிந்திப்பதற்கும் தணிக்கை வரலாம்!”

“உங்கள் படங்களில் நிறைய லாங் ஷாட்களைப் பயன்படுத்துவது ஏன்?”

“நிஜ வாழ்க்கையில் இருக்கும்  அதிர்வு லாங் ஷாட்டிலும் இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் ‘ஒழிவுதிவசத்தே களி’ இறுதிக் காட்சியின் தாக்கம் பார்வையாளர்களுக்கு அழுத்தமாக இருந்தது”

“மலையாளத்தில் மாற்றுசினிமாவை விரும்புகிற ஏராளமான நல்ல நடிகர்கள் இருந்தும் அவர்களை ஏன் அதிகம் பயன்படுத்துவதில்லை?”

“எனது படமாக்கல் முறைக்குப் புதியவர்களே அதிகம் ஒத்துழைப்பார்கள். பிரபலமான நடிகர்கள் படத்தில் தனக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதையே கவனிக்கிறார்கள். ஆனால் எனது படங்களில் யாருக்கும் முக்கியத்துவம் இருக்காது. நான் விரும்புகிற அரசியலை மக்களிடையே கடத்த வேண்டும் என்பதையே முக்கியமாய்ப் பார்க்கிறேன். அப்படியிருக்கும்போது ஒரு நடிகருக்காக என்னால் வேலை பார்க்க முடியாது”

“சிந்திப்பதற்கும் தணிக்கை வரலாம்!”

“அரசியலைப் பேச வேண்டும் என கலைப்படைப்பை அணுகுகிறீர்களா அல்லது கலைப்படைப்பானது அதன் போக்கில் அதற்கான அரசியலைப் பேசிக்கொள்ளும் என நினைக்கிறீர்களா?”

“நாம் வாழும் சூழலில் அரசியல் இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருக்கிறது. அப்படி இருக்கும்போது எந்தவொரு கலைவடிவமும் அரசியலைப் பேசுவதாகத்தான் இருக்க வேண்டும். நேரடியாகப் பிரசாரமாக அல்லாமல் ஒவ்வொரு கலைப்படைப்பும் அதன் இயல்பில் வலுவான அரசியலை முன்வைப்பதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். எனது படங்களும் அதையே செய்யும்”

“தமிழ்நாட்டிலும் மலையாள சினிமாக்கள் கொண்டாடப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இரு மாநில மக்களுக்கும் கலாசார ஒற்றுமைகள் நிறைய இருக்கின்றன. கேரளாவைவிட தமிழ்நாட்டில்தான் எஸ் துர்காவைப் பற்றிய கவனம் அதிகமாக இருந்ததை உணர்ந்தேன். படம் வெளியானவுடன் அதனைப் பற்றிய பேச்சுகளும் தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருந்தன”

“உங்கள் அடுத்த படமான ‘உன்மாடியுடே மரணம்’ பற்றி...?”

“`உன்மாடியுடே மரணம்’ கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிய படமாக இருக்கும். நாம் சிந்திப்பதற்கு இங்கே தணிக்கைகள் இல்லை. வருகின்ற காலத்தில் அதுவும் நிகழலாம். சுதந்திரமாகச் சிந்திப்பதையும் பேசுவதையும் இந்தப் படம் பேசும். இதிலும் என் முந்தைய படங்களைப்போலவே கதை, திரைக்கதை எதுவும் இல்லை. ஆனால் எனது மற்ற படங்களில் இருந்து இந்தப் படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்”