
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்

“நடிகர் சங்கப் பிரச்னையின்போது நீங்களும் ராதாரவியும் எதிரெதிரா இருந்தீங்க. இப்போ நீங்க அவரை எப்படிப் பார்க்கிறீங்க? அவர் உங்களை எப்படிப் பார்க்கிறார்?”
- பரிசல் கிருஷ்ணா
“நான் அவரைப் பெரியவராத்தான் பார்க்கிறேன். அவரை எதிர்க்கணும், அவரோட பதவியில் உட்காரணும்ங்கிற நோக்கத்துல நான் எதையும் பண்ணலை. அவர் என்னைக் கெட்ட வார்த்தைகள்ல திட்டியிருக்கார்னு கேள்விப்பட்டிருக்கேன். அவர்கூட ‘மருது' படத்தில் சேர்ந்து நடிச்சிருக்கேன். நானும் சரத்குமார் சாரும் ஒரு படத்துல சேர்ந்து நடிக்கிற மாதிரி சூழல் வந்தாலும் கண்டிப்பா நடிப்பேன். இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைனு நம்புறேன்”
“தமிழ்நாட்டுல மட்டும் ஏன் தென்னிந்திய நடிகர் சங்கம்னு பேர் இருக்கு? தமிழ்நாடு நடிகர் சங்கம்னு வைக்கலாமே?”
- ரீ.சிவக்குமார்
“எம்.ஜி.ஆர் ஐயா காலத்துல இருந்தே இப்படித்தான் இருக்கு. மற்ற மாநில நடிகர்கள், நடிகைகளும் இதுல உறுப்பினரா இருக்காங்க. அதனாலதான் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’னு பெயர் வெச்சிருக்காங்க. எங்க நோக்கம், சங்கத்துக்குக் கட்டடம் கட்டுறதுதான். பெயரை மாத்துறதைப் பத்தியெல்லாம் யோசிக்கலை.”

“தமிழில் ஏன் இத்தனை திரைப்படங்கள், அவற்றில் ஏனோதானோ என ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்படுவதைத் தடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”
- கார்க்கி பவா
“நாங்க புராஜெக்ட் அசெஸ்மென்ட் கமிட்டி, தியேட்டர் ரிலீஸிங் கமிட்டி, பிரிண்ட் ரெகுலஷன் கமிட்டினு புதுசா மூணு கமிட்டி அமைச்சிருக்கோம். இதில் புராஜெக்ட் அசெஸ்மென்ட் கமிட்டியின் வேலைகளை விளக்குறேன். புதுசா வர்ற தயாரிப்பாளர், இயக்குநர்கள்கிட்ட ‘நீங்க என்ன மாதிரியான படம் பண்றீங்க, எவ்வளவு பட்ஜெட், வருமானத்துக்கான பிளான் என்ன, ஃபைனலா உங்களுக்குக் கிடைக்கப்போறது என்ன’ன்னு எல்லாத்தையும் சொல்லி, லீகல் டாக்குமென்ட் மாதிரி நாங்க சீல் பண்ணிக் கொடுத்தாதான், ஃபெப்சி தொழிலாளர்கள் அந்தப் படத்தில் வேலை பார்ப்பாங்க. ப்ரீ புரொடக்ஷன் வொர்க் பண்ணும்போதே ‘இந்தப் படம் வொர்க் அவுட் ஆகும்; ஆகாது'னு சொல்லிடுவோம். இப்படித்தான் பல மோசமான சினிமாக்களைத் தடுக்க முடியும்!”
“அன்புச்செழியன் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?”
- மா.பாண்டியராஜன்
“அசோக்குமார் இறப்புக்கு அன்புச்செழியன்தான் காரணம்னு அவர் எழுதிய லெட்டர்ல இருக்கு. அது நாங்களா சொன்ன விஷயம் கிடையாது. சமீபத்தில் அன்பு சாரை நான் பார்த்தப்போ, ‘சார் நீங்க என்கிட்ட நல்லாப் பேசுறீங்க. மற்ற தயாரிப்பாளர்கள்கிட்டயும் நல்லாப் பேசுறீங்க. அதுக்காக இந்த விஷயத்தை என்னால விட்டுக்கொடுக்க முடியாது’ன்னு அவர்கிட்டேயே சொன்னேன். தவிர, இந்த விஷயத்தில தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்குறது முக்கியம் இல்லை. சட்டம் நடவடிக்கை எடுக்கணும்.’’

“அரசியலில் உங்களுக்கு ரோல் மாடல் யார்னு கேட்டா, எல்லோரும் முன்னாள் தலைவர்களைத்தான் சொல்றாங்க. ஏன் இப்போ இருக்கிற அரசியல்வாதிகள் யாரையும் ரோல் மாடலா எடுத்துக்க முடியாதா?”
- தார்மிக் லீ
“இப்போ இருக்கிற அரசியல்வாதிகள் யாரையும் ரோல்மாடலா சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரை அரசியல்னா சேவை. அதைப் பண்றதுக்கு ஏன் இத்தனை கட்சிகள் சண்டை போட்டுக்கிட்டு இருக்கணும்? அரசியல், வியாபாரம் இல்லையே! இப்போ இருக்கிற அரசியல்வாதிகளை எனக்குப் பிடிக்காதுன்னு சொல்றதைவிட, யாரையும் ரோல் மாடலாச் சொல்றதுல உடன்பாடு இல்லை, அவ்வளவுதான்!”

“அரசியலிலும் சினிமாவிலும் உங்க ரோல் மாடல் யார்?"
- பரிசல் கிருஷ்ணா
``சினிமாவில் கமல்ஹாசன் சார். பத்து வருடம் கழிச்சு நடக்கப்போறதை இப்பவே யோசிக்கிற நபர். அரசியலில் பகத் சிங், அப்துல் கலாம் ஐயாவை எனக்குப் பிடிக்கும்!’’

“நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிச்சாதான் கல்யாணம்னு சொல்லியிருந்தீங்க. கட்டடம் கட்டும் வேலை எவ்ளோ முடிஞ்சிருக்கு, பொண்ணு பார்த்தாச்சா, யாரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க?"
- வெ.வித்யா காயத்ரி
“ஜனவரி, 2019-ல் கட்டடம் ரெடி ஆயிடும். பிப்ரவரி முதல் வாரத்துல திறப்புவிழா. கட்டடம் கட்டி, அதைக் கண்ணால பார்த்ததுக்கு அப்புறம்தான், கல்யாணம் பண்ணப்போற பொண்ணைப் பார்க்கப்போறேன். கல்யாணம் எப்போன்னு அப்போ சொல்றேன்!”