விகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது!” - அர்விந்த் சுவாமி

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்
“ ‘தயாரிப்பாளர்களின் பழைய கடன் பாக்கியால் ‘சதுரங்கவேட்டை-2’, ‘நரகாசூரன்’ படங்களுக்கு பிரச்னைகள் தொடர்வதை எப்படிப் பார்க்கிறீங்க?”
- அலாவுதீன் ஹுசைன்
“இது எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. ஒரு படத்தை ஆரம்பிக்கும்போது நிறைய பாசிட்டிவான விஷயங்களுடன் ஆரம்பிக்கிறோம். எனர்ஜியுடன் அந்தப் படங்கள்ல வேலை செய்றோம். ஆனா ரிலீஸின்போது நிறையப் பிரச்னைகள் வருது. இப்படி வரும்னு தெரிஞ்சிருந்தா அந்தப் படங்களை பண்ணியிருக்கவே மாட்டோம். இல்லைனா ஆரம்பத்திலேயே அதை எப்படி சரி பண்ணலாம்னு முயற்சி எடுத்திருப்போம். ஆனா, எல்லாத்தையும் தாண்டி ரிலீஸுக்கு முதல்நாள் பிரச்னை வரும்போது இயக்குநர், நடிகர்னு எல்லாருக்கும் மன அழுத்தம் ஏற்படுது. அப்ப ரிலீஸுக்காக நிறைய சமாதானங்கள் செய்துகொள்ள வேண்டி இருக்கு. சினிமா தயாரிப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாம இருக்கிறதுதான் இதுக்கெல்லாம் காரணம். அது சரிசெய்யப்படணும்.”

“ ‘நரகாசூரன் ‘ படப் பிரச்னை பற்றி கார்த்திக் நரேன் ஒரு ட்வீட் போட்டார். அவருக்கு நீங்களும் ஆதரவு தெரிவிச்சு ட்வீட் போட்டீங்க. என்னதான் பிரச்னை?”
- பரிசல் கிருஷ்ணா
“கார்த்திக் நரேன் மாதிரி இயக்குநருடன் வேலை செய்வதைப் பெருமையா நினைக்குறேன். அவர் ரொம்ப சின்னப் பையன். இருபத்து மூணு வயசுதான் ஆகுது. ‘துருவங்கள் பதினாறு’ படத்தைத் தயாரிக்க நிறையப் பேர்கிட்ட கேட்டிருக்கார். பலர், ‘கதை இப்படியிருந்தா நல்லாயிருக்கும்’னு அவங்களோட அபிப்பிராயத்தைச் சொல்லியிருக்காங்க. பிறகு ‘நம்ம படத்தை நாமளே தயாரிக்கலாமே’னு தன் அப்பாவுடன் சேர்ந்து அவரே தயாரிச்சு, இயக்கி, ரிலீஸ் பண்ணியிருக்கார். இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அந்தப் படமும் ரொம்ப நல்லா இருந்துச்சு.
‘என்கிட்ட இன்னொரு புராஜெக்ட் இருக்கு. உங்களைச் சந்திக்கலாமா?’னு கேட்டார். சந்திச்சோம். திரைக்கதையில் அவருக்கு இருக்கும் கன்ட்ரோல்... இத்தனை வருஷங்கள்ல சிலரைத் தவிர வேற யார்கிட்டயும் நான் பார்த்தது இல்லை. அதனால அவர் படத்தில் கமிட் ஆனேன். அந்தப்பட தயாரிப்பாளர் எனக்கு போன் பண்ணி, ‘நான்தான் படத்தைத் தயாரிக்கிறேன். உங்களுக்குக் கதை பிடிச்சிருக்கா’’னு கேட்டார். ‘இந்த ஜானர்ல நான் நிறைய படங்கள் பண்ணினது இல்லை. கார்த்திக் நரேனின் ஸ்க்ரீன் ப்ளே சென்ஸ், கிளாரிட்டி பிடிச்சிருக்கு. எனக்கு மனோஜ் நைட் சியாமளன் ஞாபகம் வந்துச்சு. அவருடைய பயணத்தில் எனக்கான பார்ட்டுக்காக இந்தப் படம் பண்றேன்’’னு சொன்னேன்.
பிரச்னைகளை இப்ப சொன்னா நல்லாயிருக்காது. ஏன்னா, இப்பதான் அதெல்லாம் தீர்க்கப்பட்டு வருது. அதில் என்ன பிரச்னை என்பதை கார்த்திக் நரேனே தன் ட்வீட்ல ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருந்தார். நான் கார்த்திக்கை என் யங்கர் ப்ரதர் மாதிரிதான் ட்ரீட் பண்ணுவேன். அவர் போட்ட ட்வீட் சரிதான்னு எனக்குத் தோணுச்சு. ஆனால், அதுக்கு சம்பந்தப்பட்டவங்கள்ட்ட இருந்து வந்த ரெஸ்பான்ஸ் சரியா இல்லை. அதனால கார்த்திக்கை சப்போர்ட் பண்ணணும்னு நினைச்சுதான் நானும் ட்வீட் போட்டேன்.”
“மணிரத்னத்துடனான உங்களுடைய பயணம் தொடங்கிய தருணம் பற்றிச் சொல்லுங்க..”
- வெய்யில்
“நான் எப்போதும் நிறைய விஷயங்களை முயற்சி பண்ணிப் பார்ப்பேன். அப்படித்தான் மணிரத்னம் படத்துக்கு ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விப்பட்டு போனேன். நிறைய தலைமுடியும் தாடியுமா சந்தோஷ் சிவன் உட்கார்ந்திருந்தார். எனக்கு அப்போ அவரை யார்னே தெரியாது. ‘யாருடா இந்த மனுஷன்’னு பார்த்தபடியே உள்ளே போனேன். அந்த ரூம்ல மணிரத்னம் சார் இருந்தார். ‘ஒரு சீன் பண்ணணும். இதுதான் டயலாக் ஷீட். உங்க அப்பா முன்னாடி பேசுற மாதிரி பேசணும்’னு சொன்னார். பிறகு, ‘தமிழ் தெரியுமா.. டயலாக்கைப் பார்த்து படிப்பியா’னு கேட்டார். ‘ஓரளவுக்குப் படிப்பேன். முதல்ல இதை நீங்க படிங்க. பிறகு உங்களை ஃபாலோ பண்ணி நான் படிச்சுக்கிறேன்’னு சொன்னேன். மணிரத்னம் சார் படிச்சுக் காட்டினார்.
பிறகு டயலாக் பேப்பரை என்கிட்ட கொடுத்தார். அதைப் பார்த்துட்டு, ‘இங்க தம் அடிக்கலாமா?’ன்னு கேட்டேன். ‘இங்க அடிக்க முடியாது. அங்கப்போய் அடி’னு சொன்னார். ‘இந்தப் பேப்பரை எடுத்துட்டுப்போறேன்’னு சொல்லிட்டு வெளியேபோய் தம் அடிச்சுகிட்டே டயலாக்கை மனப்பாடம் பண்ணினேன். பிறகு வந்து நடிச்சு காட்டினேன். ‘இன்னும் ரெண்டு வாரத்துல ஷூட்டிங் இருக்கும். ரெடியா இரு’னு சொன்னாங்க.
‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஆடிஷனுக்கு வந்தேன். ஷூட்டிங் போகணும்னா அப்பா, அம்மாகிட்ட பெர்மிஷன் கேட்கணும். நீங்களே கேளுங்க’னு மணி சார்ட்ட சொன்னேன். பிறகு அவர் என் அப்பாவைச் சந்திச்சார். ‘சினிமாவை உன் புரொஃபஷனலா எடுத்துக்கப்போறியா?’னு அப்பா என்கிட்ட கேட்டார். ‘இல்லை டாடி சும்மா’னு சொல்லி அவரை சமாதானப்படுத்திதான் ‘தளபதி’ படத்துல நடிச்சேன்.
சினிமா ஷூட்டிங் எப்படி இருக்கும்னே எனக்குத் தெரியாது. அதனால, ‘ரெண்டு நாள் முன்னாடியே ஷூட்டிங் ஸ்பாட் வந்து எப்படி நடக்குதுன்னு பார்’னு மணி சார் சொல்லிட்டார். நானும் ரெண்டு நாள் முன்னாடியே ஷூட்டிங் நடந்த மைசூருக்குப் போயிட்டேன். ஷூட்டிங் போயிட்டிருந்துச்சு. கூட்டத்துல நான் நின்னுகிட்டு இருந்தேன். அப்ப ஒருத்தர், ‘சார், உங்களை மீட் பண்ணணும்னு சொன்னார்’னு கூப்பிட்டார். போய்ப் பார்த்தா, ஒரு வெள்ளை கலர் அம்பாசிடர் கார் நின்னுச்சு. பக்கத்துல போனதும் அதில இருந்து ரஜினி சார் வெளியே வந்தார். ‘ஹலோ சார்.. நைஸ் டூ மீட்டிங்’னு சொன்னார்.
‘நமக்கு எதுக்கு இவர் விஷ் பண்றார்’னு எனக்கு ஒரே குழப்பம். அதுக்குப்பிறகு இரண்டு நாள் கழிச்சு நைட் ஒன்பது மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொன்னாங்க. நைட் முழுக்க ஷூட்டிங் போச்சு. எனக்கான ஷாட் அடுத்தநாள் காலையில தான் எடுத்தாங்க. அதுதான் ரஜினி சார்-மம்மூட்டி சாருடன் நான் பேசிய காட்சிகள். மணி சார் என்ன சொல்லிக்கொடுத்தா ரோ அதை அப்படியே ஃபாலோ பண்ணி பண்ணிட்டேன்.
நடிப்பு ஈஸியா வந்துருச்சுன்னுதான் சொல்லணும். ஆனால், ‘கேமரா ரைட்ல இருக்கு. நம்மை ஏன் லெஃப்ட்ல நிக்க சொல்றாங்க’ மாதிரியான டெக்னிக்கல் விஷயங்கள்தான் எனக்குப் புரியலை. அதைப்பற்றித்தான் மணி சார், சந்தோஷ்சிவனிடம் கேட்டுக்கிட்டே இருப்பேன். அவங்களும் சளைக்காம பதில் சொல்லிட்டே இருப்பாங்க. அப்படித்தான் என் பயணம் ஆரம்பிச்சுது.”

“‘நரகாசூரன்’, ‘செக்கச் சிவந்த வானம்’னு கிட்டதட்ட ஐந்து படங்கள் முடிச்சிருக்கீங்க. அந்தப் படங்கள் பற்றிய உங்க அனுபவம் சொல்லுங்க?”
- இரா.கலைச்செல்வன்
“ ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’...னு இந்தப் படங்கள் எல்லாமே கடைசி ஒன்றரை வருடங்களில் கமிட் ஆனவை. இந்தப் படங்கள் ஒவ்வொண்ணுக்கும் ஸ்க்ரிப்ட்டில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இவை எனக்கு வித்தியாசமான நல்ல அனுபவங்களை கொடுத்திருக்கு. இடையில் சினிமாவில் எனக்குப் பெரிய இடைவெளி. இப்ப திரும்ப வந்திருக்கேன். இப்ப எனக்கு 48 வயசு ஆகுது. இன்னும் இரண்டு, மூணு வருஷங்கள்தான் எனக்கான வாய்ப்புகள் வரும்னு நினைக்கிறேன். இந்த காலங்கள்ல என்னால எவ்வளவு வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண முடியுமோ பண்ணிடணும்னு முடிவுபண்ணி கதைகள் கேட்டு கமிட் ஆகிட்டு வர்றேன்.”
“ ‘அர்விந்த் சுவாமியின் கிரிக்கெட் அறிவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்’னு கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் சமீபத்தில் ட்வீட் பண்ணியிருந்தாரே?”
- மு.பிரதீப் கிருஷ்ணா
“நான் சின்ன வயசுல இருந்து கிரிக்கெட் விளையாடிட்டிருக்கேன். சில வருஷங்கள் முன்னாடிவரை கிளப் லெவல் மேட்ச், கார்ப்பரேட் டோர்னமென்ட்னு ஆர்வமாப்போய் விளையாடியிருக்கேன். ரஞ்சி, லீக் ப்ளேயர்ஸ் கூடவும் நேரம் செலவழிப்பேன். பத்ரிநாத்கூட பேசும் போது, என் பௌலிங் ஸ்டைல் பற்றிக் கேட்டார். `முன்னாடி மீடியம் பேஸ் போட்டுட்டு இருந்தேன். விபத்துக்குப்பிறகு ஆஃப் ஸ்பின்தான் போட்டுட்டு இருக்கேன்’னு சொல்லிட்டு, ஸ்பின் பத்திப் பேசிட்டு இருந்தோம். அப்போ நான் சொன்ன சில விஷயங்களைக் கேட்டுட்டு, ’இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்’னு ஆச்சர்யப்பட்டார். இதைத்தான் அவர் ட்வீட்ல சொல்லியிருந்தார்.’’
“நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு நடிகர் என்கிற தகுதி மட்டும் போதுமா? அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றி உங்க கருத்து...”
- சக்தி தமிழ்ச்செல்வன்
‘` யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; அதற்கு எந்த தடையும் இல்லை. அப்படி வர்றவங்கள்ல நாம எதைப் பார்த்து ஓட்டு போடப்போறோம் என்பதுதான் முக்கியம். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பிரபலமானவர் அரசியலுக்கு வரும்போது, அவரைப் பற்றி நமக்கு நிறைய விஷயங்கள் தெரிய வாய்ப்பு இருக்கும். ஆனால், அதற்காக நாம் ஓட்டு போடப்போறது இல்லை. அவங்களோட திட்டங்கள் என்ன; அதை எப்படி செயல்படுத்தப்போறாங்க; அவங்க டீம் யார்யார்; அவங்க மேல நம்பிக்கை இருக்கானு நிறைய விஷயங்கள் பார்த்துதான் நாம ஓட்டுப் போடப்போறோம்; அப்படித்தான் ஓட்டுப் போடணும். நடிகர் என்பதற்காக ஓட்டுப் போடக்கூடாது; நான் போட மாட்டேன். ஒரு ரசிகனா ஓட்டுப் போடாம ஒரு வாக்காளனா சிந்திச்சு ஓட்டுப் போடணும்.’’
அடுத்த வாரம்...
“ “இந்த சினிமா பயணத்தில் உங்களைக் காயப்படுத்திய, பெருமைப்படுத்திய தருணங்களைப் பகிருங்களேன்...”
“மிஸ் பண்ணிட்டோமேனு நீங்க நினைக்கக்கூடிய படம் எது?”