
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்

“கமல்ஹாசனோட உங்களுக்கு இருக்குற நட்பு பற்றி சொல்லுங்க?”
- ப்ரேம்
“கமல் சாரோட ‘அன்பே சிவம்’, ‘தெனாலி’ படங்கள்ல நான் நடிக்க கமிட்டாகி பிறகு முடியாமல் போச்சு. அப்ப வேறு சில படங்கள்ல நான் நடிச்சிட்டு இருந்தேன். ஆனா, படத்தைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் புரிஞ்சது, நல்லவேளை அந்த ரோல் நான் பண்ணலைனு. ஏன்னா ஜெயராம் பிரமாதமா நடிச்சிருந்தார். சில சமயம் நாம மிஸ் பண்ற விஷயம் படத்துக்கு நல்லதா அமைஞ்சிடும். ரெண்டு மூணு வருஷத்துக்கு முன் கமல் சார் அவருடைய பிறந்த நாளுக்கு என்னை இன்வைட் பண்ணியிருந்தார். அப்ப பேசினதுதான், பிறகு அவர்கூட பேச வாய்ப்பு அமையலை. அவர் ஒரு பேராசிரியர் மாதிரி. எப்போ பேசினாலும் ஏதாவது ஒரு விஷயத்தை அவர்ட்ட இருந்து கத்துக்கலாம்.”

``உங்களைப் பொறுத்தவரை காதல்னா என்ன?’’
- குணவதி
“நீங்க எதை அளவுக்கதிகமா விரும்புறீங்களோ அதுதான் காதல். சில காதல் நிபந்தனையற்றதா இருக்கும். சில காதல் நிபந்தனைக்கு உட்பட்டதா இருக்கும். காதல்ல நிறைய வேறுபாடு இருக்கு. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல்ல புரிந்துணர்வும் ஏற்றுக்கொள்ளுதலும் ரொம்ப முக்கியம். ஒருத்தரை அப்படியே ஏத்துக்கிற மனப்பக்குவமும் அளவுக்கதிகமா நேசிக்கிற குணமும் இருந்ததுனா நீங்க காதல்ல இருக்குறீங்கனு அர்த்தம். ஒருத்தவங்களை காதலனாவோ காதலியாவோ ஏத்துகிட்டு, அவங்களை தன் வழிக்கு மாத்தணும்னு நினைச்சீங்கன்னா அதுக்குப் பேர் காதல் இல்லை.”

“இந்த சினிமா பயணத்துல உங்களை காயப்படுத்தின, பெருமைப்பட்டுக்கொண்ட தருணங்களை பகிர முடியுமா?”
-தமிழ்ப்பிரபா
“சினிமாவில் காயம்பட்ட தருணம்னு சொல்ல எதுவும் இல்லை. வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் அப்படி நடந்திருந்தாலும் அதையெல்லாம் மனசுல இருந்து அப்பப்ப கழட்டுவிட்டுடுவேன். அப்படி செஞ்சாதான் அதிலிருந்து வெளியே வர முடியும். பெருமைப்பட்டதுனு சொன்னா, உடல்சார்ந்த பிரச்னைகளை ஓவர்கம் பண்ணி மறுபடியும் சினிமாவுக்கு வந்ததை சொல்லலாம். அப்படி வந்த என்னை மக்களும் ஏத்துக்கிட்டாங்க. அப்படின்னா அந்தப் பெருமை எல்லாரையும் போய்ச்சேரும்.”
“அரசியல் கட்சிகள்ல சேர வாய்ப்பு வந்தா போவீங்களா?”
- இரா.கலைச்செல்வன்
“அப்படியான அரசியல் வாய்ப்புகள் எனக்கு முன்னாடியே வந்துருக்கு. அப்ப எனக்கு 23 வயசுதான். ஒரு தேசியக் கட்சி என்னை கூப்பிட்டது. ஆனால் அரசியல்ல எனக்கு ஆர்வம் இல்லை. நான் யார், என்னோட ஐடியாலஜி என்னனு எதுவுமே அவங்களுக்குத் தெரியாது. வெறும் புகழை மட்டும் வெச்சு அரசியலை அணுகுறதுல எனக்கு விருப்பம் இல்லை. ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தா நல்லது பண்ணுவேன் என்ற நம்பிக்கை இருக்கு.”

“சிம்பு ஒழுங்கா ஷூட்டிங்க்கு வர்றாரா?”
- வெய்யில்
“அவரைப் பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கேன். அவரின் மற்ற படங்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனா இந்தப் படத்துக்கு அவர் செம பங்ச்சுவலா இருக்கார். எல்லாருக்கும் முன்னாடியே வந்து உட்கார்ந்திருப்பார். காலையில ஆறு மணிக்கு ஷூட்டிங்னா, நான் 5.40க்கு போவேன். ஆனா அவர் ஐந்து மணிக்கே வந்து உட்கார்ந்துடுவார். எப்போதும் எங்க எல்லாருக்கும் முன்னாடியே சிம்பு ஸ்பாட்ல இருப்பார்.”
“‘தாலாட்டு’ பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இளையராஜா வந்தபோது, நீங்க சிகரெட் பிடிச்சுகிட்டே அவரை வரவேற்றதா சொல்வாங்க. அது உண்மையா?”
- மா.பாண்டியராஜன்
``என் மனசுல யாரையும் அவமதிக்கணும்கிற எண்ணமெல்லாம் கிடையாது. தவிர அப்ப எனக்கு சினிமாவின் பழக்கவழக்கம் எதுவும் தெரியாது. என்னைப்பொறுத்தவரை நான் தம் அடிக்கிறது என் அப்பா, அம்மாக்கு தெரியக்கூடாது; மற்ற யாருக்கு தெரிஞ்சாலும் எனக்குப் பிரச்னை இல்லைனு நினைச்சுகிட்டிருந்த காலம் அது. எனக்கு இளையராஜா சாரை அவ்வளவு பிடிக்கும். என் படங்கள் இல்லாத மற்றவங்க படங்களோட ரெக்கார்டிங்குக்குப்போய் அவர்கூட உட்கார்ந்திருக்கேன். அவரோட திறமையை நான் அவ்வளவு லவ் பண்றவன். அவரோடு நேரம் செலவிடுறதை விரும்புவேன்னு அவருக்கே தெரியும். அன்னைக்கு நான் பண்ணினதை அவரும் அவமரியாதையா எடுத்துக்கலை.”

“மிஸ் பண்ணிட்டோமேனு நீங்க நினைக்கக்கூடிய படம் என்ன?”
- வெய்யில்
“சேரனின் ‘ஆட்டோகிராஃப்’. இந்தப் படத்துல நான் நடிக்க முடியாமப் போனதால சேரன் நடிகனாகிட்டார்.”

“அப்ப நிறைய வீடுகளில் மாப்பிள்ளை பார்க்கும்போது, ‘பையன் அர்விந்த் சுவாமி மாதிரி இருக்கணும்’னு சொல்லுவாங்க. அதெல்லாம் கேட்கும்போது உங்க மனநிலை அப்ப எப்படி இருக்கும்? உங்களோட அன்றைய காலகட்டத்து ரசிகைகளைப் பற்றியும் சொல்லுங்க?”
- சனா
``எதனால என்னைமாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்டாங்கனு எனக்குத் தெரியாது. நான் அதை பெரிய அச்சீவ்மென்ட்டாவும் பார்க்கலை. என்னைப்பற்றி முழுசா தெரிஞ்சிருந்தா யாரும் என்னைமாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்டிருக்கவேமாட்டாங்கனு நினைக்கிறேன். (சிரிக்கிறார்) ரசிகைகள்னு சொன்னதும் ஒரு சம்பவம்தான் நினைவுக்கு வருது. `பம்பாய்’ படம் வந்த சமயம். ஒரு காலேஜ் ஃபங்ஷனுக்கு போயிருந்தேன். அந்த காலேஜ்ல பாதுகாப்பு வசதிகள் எதுவும் சரியா பண்ணலை. நிறைய ஸ்டூடன்ட்ஸ் என்னை சுற்றி வளைச்சுட்டாங்க. என் சட்டையெல்லாம் கிழிஞ்சிருச்சு. இந்தமாதிரி அப்பல்லாம் அடிக்கடி நடக்கும்.”
அடுத்த வாரம்...
“உங்களைப் பற்றி வந்த கிண்டல் மீம்ஸ்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணீங்க?”
“ரஜினியோட அரசியல் பிரவேசத்தை எப்படிப் பார்க்குறீங்க?”