சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

‘96’ ரகசியம்...

‘96’ ரகசியம்...
பிரீமியம் ஸ்டோரி
News
‘96’ ரகசியம்...

அலாவுதீன் ஹுசைன்

 “என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப நாள் கழிச்சு 2015ல் ஒண்ணு கூடினாங்க. என்னால அதில் கலந்துக்க முடியலை. ‘என்ன நடந்துச்சு’னு பிறகு விசாரிச்சேன். என்கூட படிச்ச ஒரு பையனைப் பற்றியும், அடுத்த பேட்ச்ல படிச்ச ஒரு பெண்ணைப் பற்றியும் அவங்க சொன்ன விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சது. அதை ஒரு கதையா எழுதலாமேனு தோணுச்சு. அது சென்னைப் பெருமழைக் காலம்.  தொடர்பு எல்லைக்கு வெளியே தனித்தீவா இருந்த நாள்கள். அந்தத் தனிமை நாள்களில் இரவெல்லாம் எழுதுறது, பகலெல்லாம் தூங்குறதுன்னு இந்த ஸ்கிரிப்டை எழுதி முடிச்சேன்.

நண்பர்களிடம் சொன்னதும், ‘சேதுவை மனசுல வெச்சுதானே எழுதினே?’ன்னு கேட்டாங்க. விஜய் சேதுபதிட்டயும் அந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. வேறு இயக்குநரை வெச்சு டைரக்ட் பண்லாம்னு சொன்னப்ப, ‘நீங்களே டைரக்ட் பண்ணுங்க’ன்னு அவர் சொன்னார். என்னை இயக்கத் தூண்டிய இயக்குநர் சேதுதான்!” - விஜய் சேதுபதி-த்ரிஷா காம்பினேஷனில் ‘96’ படம் மூலம் இயக்குநர் ஆன தருணத்தை விவரிக்கிறார் ச. பிரேம்குமார். ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘ரம்மி’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவர் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படமாகவும் ஆனது.

‘96’ ரகசியம்...

“சொந்த ஊர் தஞ்சாவூர். நேஷனல் ஜியாகிராஃபி இதழில் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆகணும் என்பதுதான் என் லட்சியம். அதுக்காகவே விஸ்காம் படிச்சேன். அந்த சமயத்தில் நேஷனல் ஜியாகிராஃபி தனி சேனலும் ஆரம்பிச்சுட்டாங்க. ஒளிப்பதிவு தெரிஞ்சா அதுல சேர்ந்துடலாம்னு சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் டிஎஃப்டி சேர்ந்தேன். கானுயிர்ப் புகைப்படக்கலை பற்றிக் கத்துக்க யாரிடம் சேரலாம்னு விசாரிக்கும்போதுதான் அல்போன்ஸ்ராய் பற்றிக் கேள்விப்பட்டேன். ‘நீ அவரை நெருங்கவே முடியாது. வேணும்னா முயற்சி பண்ணு’னு சொன்னாங்க. ஏன்னா டாக்குமென்ட்ரிக்குத் தரப்படும், ஆஸ்கருக்கு இணையான எம்மி விருது வாங்கியவர்.

நான் எடுத்ததுல சிறந்த 100 போட்டோக்களை செலக்ட் பண்ணி, கையோடு எடுத்துட்டுப் போய் அவரைப் பார்த்தேன். ‘நாளையில இருந்து வேலைக்கு வந்துடு’னு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிட்டார். அஞ்சாறு வருஷம் அவரிடம் இருந்தேன். பிறகு, ஒளிப்பதிவாளர் ரத்னவேல் சாரிடம் சேர்ந்து ‘பேரழகன்’ல இருந்து ‘வாரணம் ஆயிரம்’ வரை ஒர்க் பண்ணினேன். நான் ஒளிப்பதிவாளராப் பணிபுரிந்த முதல் படம் ‘வர்ணம்.’ அந்தப் படத்தில்தான் விஜய் சேதுபதி, கேரக்டர் ஆர்ட்டிஸ்டா அறிமுகமானார். அந்த நட்புதான் என்னை இன்னைக்கு இயக்குநராக்கி இருக்கு.”

‘96’ ரகசியம்...

“அந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மறதி இன்னமும் இருக்கா?”

“(சிரித்தபடியே) அந்தப் படம் பார்க்கும்வரை, என் மனைவிக்குக்கூட அது தெரியாது. இப்பவும் கார் சாவி, மொபைல்னு எதையாச்சும் மறந்துட்டா, ‘ஏங்க... அந்தப் பிரச்னை குணமாகிடுச்சுல்ல?’னு சந்தேகத்தோட கேட்பாங்க”

‘96’ ரகசியம்...

“ ‘96’ என்ன கதை?”

“வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய அனுபவங்கள்னா அது பள்ளிக் காதல்கள்தான். மற்றவங்க சீரியஸா எடுத்துக்க மாட்டோங்களோனு அதை வெளியில பகிர்ந்துக்கவே மாட்டோம். ஆனா மனைவியுடன் சண்டை வரும்போதோ, ஒரு சோகத் தருணத்துலயோ, அவ்வளவு ஏன், வயசான காலத்துலகூட அந்தக் காதல் அப்பப்போ ஞாபகத்துக்கு வரும். அதை இந்தப் படத்துல நினைவுபடுத்துறேன். அந்தப் பள்ளிக்கால காதல், நிகழ்காலத்துல ஒருத்தரின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்குது என்பதுதான் கதை”

‘96’ ரகசியம்...

“அதென்ன ‘96‘?”

“96 என்பது 1996ம் ஆண்டைக் குறிக்கும். அது அவங்க இருவரும் பிளஸ்டூ முடிச்ச வருஷம். ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும் காதலை அணுகுற விதத்தில் மாற்றம் இருக்கும்னு சொல்லுவாங்க. அப்படி இந்தப் படம் பாக்குறவங்களுக்கு ஒரு நாஸ்டால்ஜியா ஃபீல் வரும்னு தோணுச்சு. அதுக்கேத்தமாதிரி ஒரு டைட்டில் வேணும்னு வச்சதுதான் ‘96’ ”

‘96’ ரகசியம்...

“விஜய் சேதுபதி-த்ரிஷா காம்பினேஷனை எப்படி கொண்டுவந்தீங்க?”

“ஸ்கூல் படிக்கும்போது, ‘அவங்க இதுவா ஆவாங்க, அதுவா ஆவாங்க’னு ஒரு அனுமானம் இருக்கும். ஆனால் பத்து பதினைந்து வருஷங்கள் கழிச்சுப் பார்த்தா, கிளாஸ் ஃபர்ஸ்ட் வர்ற பொண்ணுக்கு சீக்கிரமே  கல்யாணம் முடிஞ்சிருக்கும். மிடில் பெஞ்சு பையன் ஆச்சர்யமான ஒரு காரியம் பண்ணியிருப்பான். நம்ம அனுமானங்கள் எல்லாம் வேறுமாதிரியா மாறியிருக்கும். இப்படியான சூழல்களைத் திறமையாப் பிரதிபலிக்கக்கூடிய இரண்டு சிறந்த நடிகர்கள் விஜய் சேதுபதி, த்ரிஷா. அவங்க ரெண்டுபேரும் கிடைக்கலைனா இந்தக் கதையை அப்படியே தூக்கிவெச்சுட்டு ஒளிப்பதிவாளர் வேலையைத் தொடர்ந்திருப்பேன்.

‘96’ ரகசியம்...

சேது என் ஃப்ரெண்ட். அவரைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஆனால் த்ரிஷா 15 வருஷமா ஃபீல்டுல இருக்கிற சீனியர். அவரிடம் பேசும்போது ஒரு தயக்கம் இருந்தது. ‘ஸ்கிரிப்ட் லைன் சொல்ல 20 நிமிஷம் போதுமா?’னு கேட்டாங்க.  இடையில் போன்கூட அட்டெண்ட் பண்ணாம கதையைக் கேட்டு முடிச்சாங்க. ஐந்து நிமிஷம் அமைதியா இருந்துட்டு, ‘கண்டிப்பா பண்றேன்’னாங்க. நான் ரொம்ப ஹேப்பி!

அதேபோல் சேது இதுவரை நடிக்காத கேரக்டர் இது. கூச்ச சுபாவம் உள்ள பாத்திரம். வைல்ட் லைஃப் போட்டோகிராபரா நடிக்கிறார். ஒரு ஸ்டாரோட வளர்ச்சியைப் பக்கத்துல இருந்து பார்க்கும் வாய்ப்பு சிலருக்குத்தான் கிடைக்கும். அவர் குடும்பத்துக்கு அடுத்து எங்களுக்குத்தான் அது கிடைச்சது. முன்பெல்லாம் வீட்டுக்கு வருவார். ஆனா இப்ப அவர் வரும்போது கூட்டம் கூடிடுமோனு, சத்தமில்லாம கூட்டிட்டு வரவேண்டி இருக்கு. ‘வர்ணம்’ பட ஷூட்டிங்கின்போதே, நவாஸுதீன் சித்திக், நஸ்ருதீன் ஷா, பிரகாஷ் ராஜ் மாதிரி  சேது மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரா வருவார்னு நினைச்சேன். இப்படி ஒரு மாஸ் ஹீரோவா வருவார்னு நினைச்சுப் பார்க்கலை.

‘96’ ரகசியம்...

‘பசங்க’, சேது பண்ணவேண்டிய படம். ‘நல்லாயிருக்கீங்க. நல்லாவும் நடிக்கிறீங்க. ஆனா இந்த கேரக்டருக்கு கொஞ்சம் செவத்த பையன் வேணும்’னு பாண்டிராஜ் சார் சொன்னார். அப்ப சேது ரெஃபர் பண்ணி வந்தவர்தான் விமல். இருவரும் கூத்துப்பட்டறையில் நண்பர்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் கண்ணெதிரிலேயே ஒரு ஹீரோ உருவாகிட்டு இருந்ததைப் பார்த்தோம்”

”ரொம்ப நாள் கழிச்சு இதில் ஜனகராஜ் நடிச்சிருக்கார்போல?”

“படத்தில் முக்கியமானது  ஸ்கூல் வாட்ச்மேன் கேரக்டர். உடலளவுலதான் வயசாகும், மனதளவுல அதே  இளமையோடவும், இயல்போடவும் இருக்கும் கேரக்டர். அதில் நடிக்கிறதுக்கு ஜனகராஜ் சாரைத்  தேட ஆரம்பிச்சோம். ‘அவர் நடிக்கறது இல்லை, அமெரிக்கா போயிட்டார்’னு எல்லாம் சொன்னாங்க.ஆனா அவர் தேனாம்பேட்டையிலதான் இருந்தார். ‘எனக்குப் பிடிச்சிருக்கு. நான் பண்றேன்’னு சொல்லிட்டார். சின்ன வயசு விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கரோட பையன் ஆதி நடிச்சிருக்கார். இசை, கோவிந்த் மேனன். ‘தைக்குடம் பிரிட்ஜ்’ குழுவில் முக்கியமான பாடகர்.  இந்த ‘96’ நிச்சயம் உங்களைப் பழைய பள்ளி நாட்களுக்கு அழைச்சுட்டுப் போகும்.”

கண்களில் ஆர்வம் மிதக்கச் சொல்கிறார் பிரேம்குமார்.