சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“நானும் ஹீரோ ஆவேன்!”

 “நானும் ஹீரோ ஆவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நானும் ஹீரோ ஆவேன்!”

சுஜிதா சென்

 “நான் வளர்ந்தது சென்னையில்தான். தமிழ்ப் படங்கள் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். ஆனா தெலுங்கில் வரிசையாப் படங்கள் கமிட் ஆனதும் தமிழ்ப்பக்கம் வரவே முடியலை. இப்போ தெலுங்கிலும் நிறைய படங்களை, வேணாம்னு சொல்லிகிட்டிருக்கேன். கொஞ்சமாவது ஓய்வு வேணும்னு நினைக்கிறேன். இந்தப் படம் மட்டுமல்லாம அடுத்தடுத்து நிறைய தமிழ்ப் படங்கள் பண்ணலாம்னு இருக்கேன்.” - ‘தமிழ்ல ஏன் இத்தனை ஆண்டு இடைவெளி?’ என்ற கேள்விக்கான  தேவிஸ்ரீபிரசாத்தின் பதில்தான் இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சாமி-2’ படத்தின்மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். 

“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கர்நாடக சங்கீதம் தெரியும். அம்மாதான் என்னை மேண்டலின் ஸ்ரீனிவாசன் சார்கிட்ட மியூசிக் கத்துக்க சேர்த்துவிட்டாங்க. அவரைமாதிரி குரு கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும். நல்ல ஃப்ரெண்ட் மாதிரிப் பழகினார். அவர் மூலம்தான் எனக்கு இசையில் ஆர்வம் வந்துச்சு. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளாஸுக்குப் போயிடுவேன். ஸ்கூல் முடிந்து வந்ததும் மறுபடியும் ஆறு மணிக்கு கிளாஸ்னு வெறித்தனமா மேண்டலின் கத்துக்கிட்டேன். பிறகு அந்த அனுபவத்தை வெச்சு மற்ற இசைக்கருவிகளை வாசிக்க ஆரம்பிச்சேன். இப்ப எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கிருந்து ஒரு புது இசைக்கருவியை வாங்கிட்டு வர்றதைப் பழக்கமா வெச்சுருக்கேன். அப்படி சேர்த்த இசைக்கருவிகளை வெச்சுத்தான் என் ஸ்டுடியோவை அமைச்சிருக்கேன்.”

 “நானும் ஹீரோ ஆவேன்!”

“ ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படத்தில் கிராமத்துப் பாணியில் இசையமைத்த அனுபவம் பற்றி...?”

“’ரங்கஸ்தலம்’தான் என் ஒரிஜினல் ஸ்டைல். நாலு நாள்ல மொத்தப் படத்தோட ட்ராக்கையும் முடிச்சுட்டேன். பாண்டிச்சேரி ரிசார்ட்ல நான் சும்மா டேபிள்ல தட்டிகிட்டு இருந்த பாடல்தான், ‘என்ன சக்க உன்னாவே’. அந்த ட்யூன் சுகுமார் சாருக்குப் பிடிச்சிருந்துச்சு. உடனே அந்த ரிசார்ட் ரூம்லயே வெச்சு ட்ராக் ரெக்கார்ட் பண்ணினோம்”

“ ‘சாமி-2’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?”

“சம்ஸ்கிருத காயத்ரி மந்திரத்துடன் வெஸ்டர்ன் கலந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சதோட விளைவுதான் ‘சாமி-2’ தீம் மியூசிக். வழக்கமா டீஸருக்கு மாஸ் மியூசிக் போடணும்னு எதிர்பார்ப்பாங்க. அதை உடைக்கணும்னு தோணுச்சு. நள்ளிரவுகளில் பாட்டு கம்போஸ் பண்ணும்போது பல சமயங்களில் கவிஞர் விவேகாவுக்கு போன் பண்ணிப் பாடல்வரிகள் எழுதச்சொல்லிக் கேட்பேன். அந்தளவுக்கு நாங்க நெருங்கிய நண்பர்கள். ‘சாமி- 2’ பாடல்கள்லகூட பட்டையக் கிளப்பியிருக்கார். இதில் மாஸ் பாடல்களும் இருக்கு. உருக வைக்கும் காதல் பாடல்களும் இருக்கு.”

“மியூசிக் கம்போஸ் பண்ணும்போது மொழி ஒரு தடையா இருக்குமா?”

“இசைக்கு மொழி கிடையாது. ஆனா, பாடல்கள் கம்போஸ் பண்ணும்போது அதை உணர்வுபூர்வமா மாற்ற, பாடல் வரிகள்ல அதிக கவனம் செலுத்தணும். ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’ பாடலைத் தெலுங்கில் கேட்டீங்கன்னா, ‘உனக்குப் பசிச்சா சோறு போடுவேன்’னு இருக்கும். அந்த வரிகளை அப்படியே தமிழ்ல வெச்சு கம்போஸ் பண்ணா மக்களால கேட்க முடியாது. எனக்குத் தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ், இந்தினு நான்கு மொழிகளை எழுதவும் படிக்கவும் பேசவும் தெரியும்கிறது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு!”

 “நானும் ஹீரோ ஆவேன்!”

“தமிழ் சினிமாவுல யாரெல்லாம் நெருங்கிய நண்பர்கள்?”

“இயக்குநர்கள், நடிகர்கள்னு நிறைய பேர் இருக்காங்க. தமிழ்ல என் இரண்டாவது படமான ‘சச்சின்’, விஜய்யுடன் அமைஞ்சுது. தமிழ்ல கடைசியாப் பண்ணின படமும் விஜய் சாரின் ‘புலி’. எனக்கு அவரின் குரல் ரொம்பப் பிடிக்கும்.

நிறைய ஃபாஸ்ட் பீட் பாடல்களைப் பாடியிருக்குற அவரை மெலடி பாட வெக்கணும்னு ஆசை. அதனால்தான் ‘புலி’ படத்துல ‘அடி ஏன்டி ஏன்டி என்னைத் தாக்குற?’ பாடலைப் பாடவெச்சேன். கமல் சார் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. சின்ன வயசில இருந்தே நான் அவரின் தீவிர ரசிகன். ‘தசாவதாரம்’ படத்துல பின்னணி இசை மட்டும் என்னைப் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. பின்னணி இசை மட்டும் ஒரு படத்துக்குப் பண்ண மாட்டேன். கமல் சார் படம் என்பதால யோசிக்காம ஓகே சொல்லிட்டேன். பிறகு ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘நீ நீலவானம்’ பாடல் கம்போஸ் பண்ணும்போது, கமல் சாருக்கு என்னை இன்னும் பிடிச்சுப்போச்சு”

 “நானும் ஹீரோ ஆவேன்!”

“டைட்டில் தீம் பாடல்கள் அமைக்கிற பழக்கத்தை நீங்கதான் ஆரம்பிச்சு வெச்சீங்க. அதைப் பற்றிச் சொல்லுங்களேன்...”

“ ‘சச்சின்’ படத்துல சும்மா ஜாலியாதான் இதை ஆரம்பிச்சேன். அது சூப்பர் ஹிட் ஆச்சு. அதனால் அடுத்தடுத்த படங்களுக்கும் அதை ஃபாலோ பண்ணலாம்னு நெனச்சேன். அப்படித்தான் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸின் ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைச்சுட்டிருந்தேன். பட டைட்டில் முடிவாகாம இருந்துச்சு. அப்ப அவரிடம், ‘இந்தப் படத்துக்கு ஜல்சானு பேரு வெச்சா, ‘சரிகமபதநிச கமான் கமான் ஸே ஜல்சா’னு ஒரு தீம் மியூசிக் யோசிச்சு வெச்சுருக்கேன்’னு சொன்னேன். அவருக்கு இந்த ஐடியா ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. உடனே அந்தப் படத்துக்கு ‘ஜல்சா’னு பெயர் வெச்சுட்டார்.”

“ஹீரோவாகப் போறீங்கனு சொல்றாங்களே, எப்ப உங்களை திரையில் பார்க்கலாம்?”

“நிறைய இயக்குநர்கள் கதை சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. தமிழ்லகூட நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் சரியான சந்தர்ப்பமும் அமைய மாட்டேங்குது. ‘ரங்கஸ்தலம்’ படத்துல நான்தான் ஹீரோவா நடிக்கணும்னு சுகுமார் சார் ஆசைப்பட்டார். அந்த சமயத்துல துரதிர்ஷ்டவசமா என் அப்பா தவறிட்டார். அதனால் அதுல நடிக்க முடியாமப்போயிடுச்சு. நடிக்கணும்ங்கிற ஆசை இப்பவும் இருக்கு”