
சனா - படம்: க.பாலாஜி
“என் எந்தத் தயாரிப்பாளருக்கும் கதை சொல்லமாட்டேன். ஏன், படத்தோட பெயரைக்கூடச் சொல்லமாட்டேன். ஆனா, இந்தப் படத்தை விஜய் மில்டன், புதிய தயாரிப்பாளர் இசக்கி துரையோட சேர்ந்து உருவாக்கியிருக்கேன். அவருக்கு இதுதான் முதல் படம். விஜய் மில்டன் அவரை என்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கும்போது, ‘என் நிபந்தனைகளுக்கு ஓகேவா?’ன்னு கேட்டு, அவர் சம்மதம் சொன்னபிறகுதான், ஷூட்டிங்கை ஆரம்பிச்சோம்” - தயாரிப்பாளரைப் பற்றிய அறிமுகத்தோடு உரையாடலைத் தொடங்குகிறார், பாலாஜி சக்திவேல். புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும், ‘யார் இவர்கள்?’ படம் குறித்து அவரிடம் பேசினேன்.
“உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சுப் படம் எடுக்கிறது உங்க ஸ்டைல். இந்தப் படமும் அப்படித்தானா?”
“என்னோட ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’படங்கள்ல எல்லாம் உண்மைச் சம்பவங்களைத் துல்லியமா காட்டியிருப்பேன். ஆனா, இந்தப் படத்துல உண்மை அப்பட்டமா இருக்காது. ஆனா, எல்லோரும் நான் சொல்ற அந்தப் பிரச்னையைக் கடந்துதான் வந்திருப்பாங்க. படம் பார்க்கிற ரசிகர்களும் அந்தப் பிரச்னையை சந்திச்சிருந்தா, ‘யார் இவர்கள்?’ அவங்களுக்கான படம்தான்!”

“அப்படியென்ன சம்பவத்தைப் பதிவு பண்ணியிருக்கீங்க?”
“ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர், சில காரணங்களால் ஒருத்தர்மேல கடுமையான கோபத்துல இருப்பார். அவரைக் கொலை பண்ணியே ஆகணும்னு அவரைத் தேடிப் போறப்போ... அந்த நபர் இறந்துகிடப்பார். அந்தக் கல்லூரி மாணவருக்கு உடம்பே வெடவெடத்துப்போயிடும். பண்ணாத கொலைக்குப் பழி நம்மமேல விழுந்துடுமோங்கிற பயம். நினைச்சமாதிரியே பழி விழுந்திடும். இந்தப் பிரச்னையில இருந்து அந்த மாணவர் எப்படி வெளியே வர்றார், கொலை செய்த நபர் யார், காரணம் என்ன... இதைத்தான் த்ரில்லர் ஜானர்ல சொல்லியிருக்கேன். முக்கியமான வக்கீல் கேரக்டர்ல வினோதினி நடிச்சிருக்காங்க. படத்துலேயே எல்லோருக்கும் அறிமுகமான முகம்னா, அது இவங்க மட்டும்தான். மத்தபடி, எல்லோருமே புதுமுகங்கள்”
“அடிக்கடி புதுமுகங்களை வெச்சே படம் எடுக்குறீங்களே, என்ன காரணம்?”
“சிறப்பான காரணம் எதுவும் கிடையாது. என் படங்கள்ல கதைதான் பிரதானமா இருக்கும். இதை நான் எப்படி பெரிய ஹீரோக்களுக்குச் சொல்லமுடியும்? அப்படியே சொன்னாலும், ‘சார்.. என்னை மையப்படுத்திக் கதை நகரமாட்டேங்குதே?’னு சொல்வாங்க. என் முந்தைய படம் ‘ரா ரா ராஜசேகர்’. இன்னும் ரிலீஸ் ஆகலை. அந்தப் படத்துல நடிச்ச சுபிக்ஷாங்கிற பொண்ணுதான் இந்தப் படத்துக்கும் ஹீரோயின்”

“நேரடி அரசியல் படம் பண்றதுல, இங்கே பிரச்னை இருக்குனு நினைக்கிறீங்களா?”
“நிச்சயம், நிறைய பிரச்னைகள் இருக்கு. ‘கல்லூரி’ எடுக்கும்போதே நிறைய பிரச்னைகள் இருந்துச்சு. மக்கள் உண்மைச் சம்பவங்களைப் படமா எடுத்தா, அதைப் பார்க்க விரும்புறதில்லை. தவிர, அந்தப் படம் ஓடாதுன்னும் நினைக்கிறாங்க. தவிர, ‘கல்லூரி’ படத்தைப் பார்த்த பலரும், ‘நம்ம ஊர்ல நடந்த கதையை வேற எங்கேயோ நடந்தமாதிரி காட்டியிருக்கீங்க’னு கேட்டாங்க. நான் அப்படிப் பண்ணியிருக்கக்கூடாதுனு புரிஞ்சுக்கிட்டேன்.”
“அப்படின்னா, நேரடி அரசியல் படங்களை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கலாம்தானே?”
“ ‘யார் இவர்கள்’ படத்தில் அரசியல் இருக்கும். தவிர, நேரடி அரசியலைச் சொல்ல, ஆவணப் படங்கள்தான் சரியா இருக்கும். அதேசமயம், தீர்வு சொல்லணும்னு முடிவெடுத்த பிறகு, அதை ஒரு கலைப் படைப்பா கொண்டுபோனாதான், படம் பார்க்கிற மக்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும். என் படம் இப்படித்தான் இருக்கணும்ங்கிறதுல தெளிவா இருக்கேன். அரசியல்வாதிகள் நம்மகிட்ட நல்லவன் மாதிரி நடிச்சு ஏமாத்துறாங்கள்ல, அந்தமாதிரி நாமளும் ஒண்ணுமே தெரியாத மாதிரி ஒரு படம் எடுத்து, அதில் அரசியல் பேசணும்”

“சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வர்றதைப் பற்றி...?”
“நடந்துகிட்டிருக்கிற போராட்டங்களை யெல்லாம் முன்னெடுத்துப் போறது யாரு, மாணவர்களும், பொது மக்களும்தானே? மக்கள் எந்தத் தலைவரையும் எதிர்பார்த்துப் போராடலை. அதனால, பொதுமக்களில் இருந்து தான் தலைமை உருவாகணும். முக்கியமா, போராட்டக்களம் கண்டவரா இருக்கணும். மக்களின் எந்தப் பிரச்னையும் தெரியாம, சினிமாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு, ரிட்டயர்மென்ட் ஆகுற வயசுல அரசியலுக்கு வரக்கூடாது.”
“சக இயக்குநர்களோட படைப்புகளையெல்லாம் கவனிக்கிறீங்களா... பிடிச்ச இயக்குநர் யார்?”
“அழகியல் ரீதியாவும், கொள்கை ரீதியாவும் பா.இரஞ்சித் அழகான படைப்புகளைக் கொடுக்கிறார். ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களைப் பார்த்துட்டு, இரஞ்சித்தைப் பாராட்டினேன். குறிப்பா, ‘கபாலி’ படம் ரஜினி படமா மட்டுமில்லாம, இரஞ்சித் படமாவும் இருந்தது. டைரக்ஷன் அடிப்படையில கார்த்திக் சுப்புராஜ் படங்கள் ரொம்பப் பிடிக்குது. தொடர்ந்து அழுத்தமான கதைகளைக் கையாள்ற வெற்றிமாறனை எப்பவும் பிடிக்கும். இயக்குநர் ராம் காத்திரமான விஷயங்களைப் படமாக்குறார். சமீபத்துல அவரோட ‘பேரன்பு’ படத்தைப் பார்த்தேன். இப்படியொரு படத்தை அவரைத் தவிர, வேற யாராலும் எடுக்க முடியாது. ராஜூமுருகன், கோபி நயினார் படங்களும் பிடிக்கும். இவர்கள்தான், தமிழ்சினிமாவின் குறிப்பிடத் தகுந்த இயக்குநர்கள்னு சொல்லலாம். தவிர, நடிகர்களும் இவர்களுடைய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சந்தோஷமான விஷயம். முக்கியமா, விஜய் சேதுபதி!”

“பா.இரஞ்சித் குறிப்பிட்ட சாதிகளுக்கான படைப்புகளையே தொடர்ந்து எடுக்கிறார்னு ஒரு குற்றச்சாட்டைச் சொல்றாங்களே?”
“ ‘சின்னக் கவுண்டர்’, ‘தேவர் மகன்’ படங்களும் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி ரொம்பவே பெருமை பேசிய படங்கள்தான். அப்போ இந்தக் கேள்வியை ஏன் யாரும் எழுப்பலை? சமீபத்துல வந்த ‘கொம்பன்’ படத்தை ஏன் யாரும் கேள்வி கேட்கலை? ஆனா, இரஞ்சித் நோக்கி மட்டும் இத்தனை கேள்விகள் வருது. அவங்களையெல்லாம் கேட்காம, இவரை மட்டும் கேள்வி கேட்குற அரசியலை நான் எதிர்க்கிறேன்.”
“ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்னு அரசாங்கம் சொல்லியிருக்கு. இந்த அறிவிப்பு குறித்து உங்க கருத்து என்ன?”
“லாஜிக்காக ஒரு கேள்வி கேட்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையை மூடுறது இவ்வளவு ஈஸியான விஷயம்னா, அதை ஏன் முன்னாடியே பண்ணலை? எதுக்கு இத்தனை உயிர்ப் பலிகள்? ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடிப் போராட்டம் மக்களுக்கு ஒரு விஷயத்தை உணர்த்தியிருக்கு. இதுவரை, ‘ஆள்பவர்கள் அரசியல்வாதிகள்’னு நினைச்சுக்கிட்டு இருந்த மக்களுக்கு, ‘இல்லை... ஆள்பவர்கள், முதலாளிகள்’னு புரிய வெச்சிருக்கு. மக்கள் முட்டாள்கள் கிடையாது. இதுபோன்ற போராட்டங்கள் மூலமா, நுட்பமான அரசியல் தெளிவு மக்கள்கிட்ட வெளிப்படுதுன்னு நான் நம்புறேன்”