சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”

“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”

ப.திருமாவேலன், ரீ.சிவக்குமார் - படம்: கே.ராஜசேகரன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

(இசைப்பயணம் இந்த வாரமும் தொடர்கிறது)

“எப்போதுதான் உங்களுக்கே திருப்தி தரும் இசை வாய்த்தது?”

‘‘ நேரு இறந்த நேரம், கச்சேரிகளில் அவருக்கான அஞ்சலிப் பாடலைப் பாடுவோம். அப்போது ‘தினத்தந்தி’யில் நேருவுக்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அஞ்சலிக் கவிதை வெளியாகியிருந்தது. அதற்கு நான் மெட்டு அமைத்து கச்சேரிகளில் பாடியதுதான், எனக்குத் திருப்தியளித்த முதல் மெட்டு. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த, பாரதிராஜாவின் ‘பாசறை பலிகடாக்கள்’ என்ற நாடகத்துக்கு இசை அமைத்தேன். அல்லிநகரத்துக்கு  அருகில் உள்ள சௌடாம்பிகா கோயில் திருவிழாவில் பாரதிராஜா நடத்திய நாடகத்துக்கும் இசை அமைத்தேன். நண்பர்கள் வட்டாரத்தில் இசைக் கலைஞனாக வலம் வந்ததால் அவர்கள் ‘அந்தப் பாட்டு பாடு’, ‘இந்தப் பாட்டு பாடு’ என்று கேட்பார்கள்; பாடுவேன். இடையில் நான் இசை அமைத்த ஏதாவது ஒரு பாடலை சொருகிவிடுவேன். ‘இது நல்லா இருக்கே... எந்தப் படத்துல வந்தது’னு கேட்பார்கள். ‘இனிமேதான் வரப்போகுது’ன்னு சொல்வேன். நண்பர்கள் கேட்ட அந்தக் கேள்விதான் எனக்கே ஒரு விதையாக ஆனது.  அந்த வார்த்தைகளில் இருந்துதான் நானும் அண்ணன் பாஸ்கரும் எங்கள் புதுப்பாதையைத் தொடங்கினோம்!”

“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”

‘‘சென்னை அழைத்து விட்டதா?”

‘‘சென்னை அழைக்கவில்லை, முதலில் மதுரைதான் அழைத்தது. பாவலர் அண்ணன் வெளியூர் சென்ற நேரமாகப் பார்த்து நானும் பாஸ்கரும் அம்மாவிடம் பேசினோம். சென்னைக்குப் போய் கச்சேரி நடத்தி வாழ்ந்து கொள்வதாகச் சொன்னோம். வீட்டில் இருந்த ரேடியோவை விற்று 400 ரூபாய் கொடுத்தார். அவரிடமும் கையில் வேறு எந்தக் காசும் இல்லை. மொத்தமாக எங்களிடம் கொடுத்துவிட்டார்.

‘உனக்கு செலவுக்குப் பணம் வேணுமா அம்மா?’னு நாங்களும் கேட்கலை; ‘எனக்குச் செலவுக்கு வேணும்’னு அவங்களும் கேட்கலை. அதுதான் தாயன்பு! ‘என்னப்பா பண்ணப்போறீங்க?’ என்று கேட்டார் அம்மா. ‘பிளாட்ஃபார்ம்ல பாடியாவது பிழைத்துக் கொள்வோம்’ என்றோம். அம்மா அதிர்ச்சி அடைந்தார். ‘ஆமாம்மா, இதுவரை கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் பாடினோம். அங்கேயும் மக்கள் இருந்தார்கள். அவர்களிடம்தான் தோழர்கள் பணம் வசூல் செய்தார்கள். பிளாட்ஃபார்மில் பாடும்போதும் மக்கள்தானே பணமளிக்கப்போகிறார்கள்’ என்றோம்.

 மதுரைக்கு வந்தோம். அங்கேதான் தெரிந்தவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். ஆனால் நாங்கள் யாரை நம்பி எதிர்பார்த்துப்போனோமோ, அவர் எங்களுக்கு உதவவில்லை. அந்த ஒரே நாளில் உலகத்தைத் தெரிந்துகொண்டோம். அன்று இரவே சென்னைக்குக் கிளம்பிவிட்டோம். 12 ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட். ரெண்டு டிக்கெட் எடுத்தோம்.

“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”



நானும் பாஸ்கரும் வந்து இறங்கியது பாரதிராஜாவின் அறை. ‘என்னடா சொல்லாம வந்துட்டீங்க’ என்று பாரதிராஜா கேட்டதுக்கு, ‘அதிர்ஷ்டம் சொல்லிட்டா வரும்?’ என்றோம். ரிக்‌ஷாவில் இருந்த ஆர்மோனியத்தை இறக்கி மாடிக்குக் கொண்டுபோனோம்.

சங்கிலி முருகனை எங்களுக்கு முன்பே தெரியும். அவர்தான் ஓ.ஏ.கே.தேவருக்கு மேனேஜர். அவர் நாடகத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியில் நாடகம் முடித்துவிட்டு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது பாடகி கமலாவிடம்( எம்.எஸ்.வி. குரூப்பில் இருந்தவர்), ‘எனக்கு முறையாக மியூசிக் கத்துக்கணும். நல்ல மாஸ்டராகச் சொல்லுங்கள்’ என்றேன். அவர்தான் கிதார் கலைஞர் சாய்பாபா (டி.எஸ்.பாலையாவின் மகன்)விடம் அழைத்துப் போனார். அவர்  மூலம் எங்களுக்குத் தன்ராஜ் மாஸ்டர் அறிமுகம் கிடைத்தது. இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் தன்ராஜ் மாஸ்டர் அறிமுகம் செய்து வைத்தார். என்னைப் பற்றி ‘இவர் என்னோட ஸ்டூடண்ட்’ என்று சொல்வதற்குப் பதிலாக, ‘இவர் மியூசிக் டைரக்டர்’ என்று தவறுதலாகச் சொல்லி விட்டார் மாஸ்டர். “என்ன வாசிப்பாய்?” என்றார் ஜி.கே.வி. நான், ‘ஆர்மோனியம்’ என்றேன். ‘சினிமாவுல ஆர்மோனியத்தை வெச்சு ஒண்ணும் செய்யமுடியாது. கிடார் எடுத்துட்டு வா’ன்னார். தன்ராஜ் மாஸ்டரிடம் இருந்த கிடாரை எடுத்துக் கொண்டேன். அப்படித்தான் சினிமாவுக்குள் நுழைந்தேன். அப்போது எனக்கு நோட்ஸ் எழுதத் தெரியாது. யாரும் கத்துக்கொடுக்கலை. ஆனால் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்வேன். ஒருமுறை வெங்கடேஷ் சார் போட்ட பத்து ட்யூன்களையும் ஞாபகம் வைத்து, திருப்பிச் சொன்னேன். அதைப்பார்த்தபிறகு, ‘நாளைக்கு நீதான் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு நோட்ஸ் சொல்லணும்’ என்றவுடன் பதற்றத்தில் இரவெல்லாம் எனக்குத் தூக்கம் வரவில்லை. இரவு முழுவதும் ட்யூனுக்கு உரிய ஸ்வர அமைப்புகளை எழுதி, மறுநாள் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு சொல்லிக்கொடுத்தேன். இப்படியாக, ‘அன்னக்கிளி’யில் ஆரம்பித்த என் பயணம்... அதற்கப்புறம் உங்களுக்கே தெரியும்!”

‘‘ஒரு வெள்ளந்தியான கிராமத்து மனிதனாக வாழ்ந்த, வளர்ந்த நீங்கள் பல சாமர்த்தியங்களும் தந்திரங்களும் நிறைந்த தொழிலுக்குள் வரும்போது வாழ்க்கை சிரமமாக இல்லையா?”

‘‘கஷ்டமே இல்லை. எல்லோருக்கும் பசியைப் பற்றித் தெரியும். சிலருக்குத்தான் பட்டினி தெரியும். நானும் பாஸ்கரும் பாரதிராஜாவும் சாப்பிட வழியில்லாமல்  மூன்று நாட்கள் பட்டினியாய் இருந்திருக்கிறோம். பலநாள்கள் அரைப்பட்டினி, முழுப்பட்டினி. நவராத்திரி நேரத்தில் கோடம்பாக்கம், வடபழனிப் பகுதிக் கடைகளில் பூஜை செய்து சுண்டல் போன்றவற்றை இலவசமாகத் தருவார்கள். அதை மொத்தமாக வாங்கி வந்து ஒன்றாக வைத்துச் சாப்பிட்டோம். அதன் நினைவாகத்தான் என் மனைவி வருடந்தோறும் நவராத்திரி கொண்டாடி, நாள்தோறும் அன்னதானம் செய்தாள். இன்னும் அது தொடர்கிறது. ‘மாமா இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்காங்க’ என்ற தன் உணர்வை அவள் என்னிடம் வார்த்தைகளால் சொல்லவில்லை. ஆனால் எனக்கு அது தெரியும். கலை வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இல்லை. கணக்குப் பார்ப்பவன்தான் அதுபற்றிக் கவலைப்பட வேண்டும். எனக்குக் கஷ்டமும் இல்லை; கவலையுமில்லை!”

“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”

“உங்களுக்கு முன்பு பல திறமையான இசையமைப்பாளர்கள் அற்புதமான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பின்னணி இசையின் மூலம் திரைப்படங்களுக்கு உயிரூட்டிய மாயாஜாலத்தை முதன்முதலில் செய்தவர் நீங்கள்தான். எப்படி அதைச் சாத்தியமாக்கினீர்கள்?”

“நான் சினிமாவுக்கு வந்தபோது என் கற்பனையில் இருந்த இசை வேறு. ஆனால் தொழில்ரீதியாக நடைமுறையில் இருந்த இசை வேறு. ஒரு காட்சி தொடங்கியவுடனே மியூசிக் ஆரம்பிச்சிடும். அதுதான் அப்போதைய பின்னணி இசை. ஆரம்பத்தில் நான் பின்னணி இசை அமைக்கத் திணறினேன். காரணம், வழக்கமாக இருந்த நடைமுறைப் பின்னணி இசையை மீற முடியாமல் தவித்தேன். முதல் 12 படங்களுக்கு அதேமாதிரியான பின்னணி இசையைத்தான் தந்திருப்பேன். ‘16 வயதினிலே’ படத்துக்குப் பிறகுதான் புதுவகையான பின்னணி இசையை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஒரு காட்சிக்கு இசையமைக்கும்போது, ‘இந்தக் காட்சிக்கு வேறு யாராவது இசையமைத்தால் எந்த இடத்தில் தொடங்குவார்கள்’ என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன். அங்கே நான் தொடங்க மாட்டேன். வேறு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, தொடங்குவேன். அதேபோல் இந்தக் காட்சியில் மற்ற இசையமைப்பாளர்களின் இசை என்னமாதிரியாக இருக்கும், எந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்துவார்கள் என்று யோசித்து, நான் வேறு இசைக்கருவிகளை வைத்து, வேறுமாதிரியான இசையை அமைப்பேன். இதனால் என் இசை வித்தியாசமாகத்தானே இருக்கும்!

“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”


இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன். ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் பின்னணி இசையை மொத்தம் ஐந்தே இசைக்கலைஞர்களை வைத்தே அமைத்தேன். அதேபோல் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியைத் தவிர, மற்ற காட்சிகளுக்கான பின்னணி இசையையும் ஐந்து பேரை வைத்தே உருவாக்கினேன். அந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆனபோது, மும்பை இசைக்குழுவினர், ‘மொத்தமே ஐந்துபேரை வைத்துத்தான் இசையமைத்தீர்களா?’ என்று ஆச்சர்யப்பட்டார்கள்”

“பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இடையிசையிலும் பல புதுமைகளைச் செய்ததும் இப்படித்தானா?”

“ஆமாம். ஆனால் ஒன்று, எல்லாப் பாடல்களுக்கும் ட்யூன் போட நான் அரைமணிநேரத்துக்கு மேல் எடுத்துக்கொண்டதேயில்லை. ‘அரைமணிநேரத்துக்குள் மெட்டமைக்க வேண்டும்’ என்றெல்லாம் வரையறை வைத்துக்கொண்டு உருவாக்கவில்லை. இயல்பாகவே அப்படி அமைந்தது.”

“என்னமாதிரியான பாடல் வரிகளை நீங்கள் விரும்புவீர்கள்?”

“பாடலாசிரியரின் புத்திசாலித்தனத்தைக் காட்டும் வரிகளைவிட, கதாபாத்திரத்தின் குரலாக ஒலிக்கும், எளிமையான பாடல்களைத்தான் விரும்புவேன். இதில் கவிஞர் கண்ணதாசன் வித்தகர். பாடல்களில் ஆழமிருக்கும், அதேநேரத்தில் எளிமையும் இருக்கும். ஒருமுறை ‘புதிய வார்ப்புகள்’ படத்துக்கு உருவான ட்யூன் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டான் பாரதிராஜா.

அடுத்தநாள் காலை 9 மணிக்குப் பாடல் தயாராக வேண்டும். முதல்நாள் கவிஞரிடம் பேசினேன். காலை 7 மணிக்கெல்லாம் வந்துவிட்டால் 9 மணிக்குப் பாடலை முடித்துவிடலாம் என்பது என் கணக்கு. ஆனால் கவிஞரோ ‘9 மணிக்கு வந்துடறேன்’ என்றார். அடுத்தநாள் காலை, பின்னணி இசை முடித்துவிட்டு, ட்யூனும் போட்டு இசைக்குழுவினருடன் தயாராக இருந்தேன். கவிஞர் வந்தார். ட்யூனை வாசித்துக்காட்டினேன். கொஞ்சம்கூட அவர் யோசிக்கவில்லை, ‘வான்மேகங்களே வாழ்த்துங்கள்...’ என்று பல்லவியைச் சொல்லிவிட்டார். ‘என்னண்ணா யோசிக்கவே மாட்டீங்களா?’ என்றேன் பிரமிப்புடன். கவிஞருக்குப் பிறகு அப்படியான பாடலாசிரியர்கள் உருவாகவில்லை. என் இசையில் எழுதிய எல்லாப் பாடலாசிரியர்களின் பாடல்களிலும் என் வரிகள் உண்டு”.

“ இந்திப்பாடல்கள் ஆக்கிரமித்திருந்த தமிழகத்தை இளையராஜா இசை மீட்டெடுத்தது என்ற பெருமிதம் உங்களுக்கு உண்டா?”

“இந்திப்பாடல்கள் நல்லா இல்லைன்னு சொல்ல முடியுமா? நல்லா இல்லாம இருந்திருந்தா யாராவது கேட்டிருப்பாங்களா? எனவே அதில் அரசியல் வேண்டாம்”

“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”

“தமிழர்களின் வாழ்க்கையை இளையராஜாவின் பாடல்களைக் கழித்துவிட்டு, அளந்துவிட முடியாது. நெடுந்தூரப் பயணம், இரவின் அமைதியை ரசிக்க, துயர நேரங்களின் ஆறுதல் என்று பலநேரங்களில் உங்கள் இசைதான் துணை. இளையராஜா இசையைக் கேட்கும்போது ஏற்படும் உணர்வுகளை உங்களிடம் ரசிகர்கள் யாராவது பகிர்ந்திருக்கிறார்களா?”

ஏராளமாய். இன்னும் சொல்லப்போனால் பலருடைய வாழ்க்கையில் என் இசையால் பல மிராக்கிள்ஸ் நடந்திருக்கின்றன. ஜெர்மனியில் வசிக்கும் தமிழ்ப்பெண் ஒருவர் திருமணமாகி முதல் கர்ப்பம். எட்டுமாதம் ஆகிவிட்டது. குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லை. ‘குழந்தை இறந்துவிட்டது’ என்று முடிவு செய்து ஆபரேஷன் செய்யவும் தீர்மானித்துவிட்டார்கள். இரண்டுநாள்கள் ‘திருவாசகம்’ இசையை மருத்துவமனையில் இருந்தபோது, அந்தப் பெண் விரும்பிக் கேட்டார். மூன்றாம்நாள் பரிசோதனையில் குழந்தையின் அசைவுகள் தெரிந்தன. அவர்களுக்கு ரொம்ப ஆச்சர்யம்! ‘முதலையுண்ட பாலகனை’ மீட்டது சுந்தரரின் பாடல் என்பார்கள். வயிற்றில் எந்த அசைவும் இல்லாமல் இருந்த குழந்தைக்கு உயிர் தந்தது ‘திருவாசகம்’.

இன்னோர் அதிசயம், உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். பக்கத்தில் இருக்கும் காட்டில் இருந்து யானைக்கூட்டம் வரிசையாக அந்தக் கிராமத்தில் உள்ள தியேட்டருக்கு, குறிப்பிட்ட நேரத்தில் வரும். அது பாடல் ஒலிக்கும் நேரம். பாடலைக் கேட்டுவிட்டு அமைதியாக, பயிர்களுக்கு எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தாமல், ஆற்றைக் கடந்து காட்டுக்குத் திரும்புமாம் யானைகள் கூட்டம். அந்தப் பாடல் ‘ராசாத்தி உன்னைக் காணாம நெஞ்சு’. இது தினந்தோறும் நடந்திருக்கிறது. இது மாலை நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி.

“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை!”



 சிலர் என்னிடம், ‘’உங்க இசை மட்டும் இல்லைன்னா செத்துப்போயிருப்பேன்” என்று சொல்லியிருக்கிறார்கள்.  ‘உங்க இசைதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிறதுக்குக் காரணம்’ என்று சிலர் சொல்ல, ஒரு ஆட்டோ டிரைவரோ,  ‘உங்க இசை மட்டும் கேட்காம இருந்திருந்தா, என் மனைவியை அடிச்சே கொன்றிருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். எத்தனை பேருக்கு லவ் லெட்டரா என் பாடல்கள் மாறியிருக்கு?” (சிரிக்கிறார்)

‘‘உங்கள் பாடல்களைக் கேட்கும் போது ரசிகர்களுக்குக் கிடைக்கும் பரவச உணர்வு, நெகிழ்ச்சியில் முளைக்கும் கண்ணீர்த்துளி...எது உன்னதம் என்று நினைக்கிறீர்கள்?”


“கண்ணீர்தான் உன்னதம். உடலே உருகி ஆவியாகி கண்ணில் நீராய் வர வைக்கிறது என்றால் அது அல்லவா பாடல்!  ஆனால் இப்போது அந்த மனநிலை, உணர்வு கொஞ்சம் குறைந்திருக்கிறது. இது அப்பார்ட்மெண்ட் ஜெனரேஷன். இங்கு கிரியேஷன் குறைந்து காப்பியிங் மட்டுமே அதிகமாகிவிட்டது. ஆனாலும் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது துயரம் வரும்போது, வாழ்க்கை துரத்தும்போது என் இசைதான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்!”

‘‘உங்கள் இசைக்கு யார் வாத்தியார்?”


‘‘வாத்தியாரே இல்லைன்றதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால் வாத்தியாரிடம் கற்றிருந்தால் இந்த இளையராஜா உருவாகாமலேகூட போயிருக்கலாம். ஏதாவது ஒரு வாத்தியத்தைக் கற்றுவிட்டு, ஆர்க்கெஸ்ட்ராவில் வாசிக்கும் ஒருத்தனா இருந்திருப்பேன்.

எந்த இசையையும் முறைப்படி கற்றவனல்ல நான். விதிகளின்படி பயன்படுத்தியவனும் இல்லை. உலகம் முழுவதும் முறையாகப் பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள்தான் பெரும்பாலும் உருவாகிவந்திருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் எனக்கு அப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான் இயற்கையிடமிருந்து, மண்ணிலிருந்து, மக்களிடமிருந்து இசை கற்றவன்!”

‘‘உங்கள் இசைக்குப் பெயர் சூட்டுவதாக இருந்தால் என்ன பெயர் சூட்டலாம்?”

‘‘அதை நீங்கள்தான் வைக்க வேண்டும். ஆயிரம் படங்கள், அதற்காக நான் வாங்கிய பட்டங்கள், விழாக்கள், விருதுகள், பாராட்டுகள், கிரீடங்கள் இவை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இவற்றை எல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தாலும் இளையராஜா என்ற ஆள் இல்லாமல் போய்விடுவானா? இளையராஜா என்பது தீ அல்ல. ஜோதி. யாரும் ஏற்றி வைக்க வேண்டியதும் இல்லை. அணைக்கவும் முடியாது.”

75 ஆண்டுகளைக் கடந்த இசை ஜோதி, பிரகாசமாய்ச் சிரிக்கிறது. அறை முழுக்க இசை வெளிச்சம்.