சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“விருதுகளுக்காகக் காத்திருக்கிறோம்!”

“விருதுகளுக்காகக் காத்திருக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“விருதுகளுக்காகக் காத்திருக்கிறோம்!”

சனா - படம்: தி.குமரகுருபரன்

 “இன்று கூட்டுக்குடும்பங்கள் சிதறித் தனித்தனி குடும்பங்களாக உடைந்துவிட்டன. இந்தச் சூழலில் தனிக் குடும்பங்களில் உள்ளவர்களிடம் ஏகப்பட்ட கருத்து முரண்பாடுகள். எல்லாவற்றுக்கும் காரணம் ஈரமற்றுப்போனதும் அறத்தில் இருந்து விலகியதும்தான். அறமும் அன்புமே மனித வாழ்க்கையின் அடிப்படைகள் என்று வலியுறுத்தும் ஒரு சினிமா எடுக்க ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான் இந்தப் படம். இது உறவுகளின் புனிதத்தைப் பேசும் சினிமா.” - உதயநிதி-தமன்னா காம்பினேஷனுடன் ‘கண்ணே கலைமானே’ பாட வருகிறார் சீனு ராமசாமி.

“விருதுகளுக்காகக் காத்திருக்கிறோம்!”

“உதயநிதி தயாரிப்பாளர் என்பதால் அவரே ஹீரோவாகிவிட்டாரா?”

“நான் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். வாழ்க்கை ஒருமுறைதான் என்று நம்பக்கூடியவன். அதனால், எனக்குப் பிடித்தமான படைப்பைத்தான் உருவாக்குவேன். ‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால் அவசரப்படாமல் என் மனதுக்குப் பிடித்த இரண்டு கதைகளை எழுதினேன். அந்த நேரத்தில் உதயநிதி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. இரண்டு கதைகளைச் சொன்னேன். உதயநிதிக்கு, ‘கண்ணே கலைமானே’ கதை பிடித்திருந்தது. ஏன் இந்தப் படத்துக்கு உதயநிதி என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

உதயநிதி ‘கண்ணே கலைமானே’ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தால், மம்மூட்டி, மோகன்லால், விஜய் சேதுபதி போன்ற யதார்த்த நடிகர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார். மண்புழு உரம் உற்பத்தி செய்யக்கூடியவராக ‘கமலக்கண்ணன்’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் பெண்களின் இதயத்துக்கு அருகில் அவரைக் கொண்டுபோய் அமர்த்தும்.”

“தர்மதுரை’ படத்தைத் தொடர்ந்து இதிலும் தமன்னாவே ஹீரோயின். என்ன காரணம்?”


“தமன்னாவுக்கு சோழவந்தான், வாடிப்பட்டி ஏரியாவின் வங்கி அதிகாரி கதாபாத்திரம். அவரது நடிப்பு, ஒரு பூ உதிர்ந்து நதியில் விழுவதுபோல் இருக்கும். நுட்பமான நடிப்பாலும் தன் மௌனப் பார்வையாலும் படத்துக்கு பெரும்பலம் சேர்த்திருக்கிறார். ஒரு பேட்டியில், ‘எனக்கும் சீனு ராமசாமி சாருக்கும் இடையில் ஒரு புரிதல் இருக்கு. அவர் எப்ப நடிக்கக் கூப்பிட்டாலும் நடிப்பேன்” என்று சொல்லியிருக்கிறார். ‘திரும்பத்திரும்ப உங்களுடன் படம் பண்ண விரும்புறேன்’ என்று நானும் தமன்னாவிடம் சொல்லியிருக்கிறேன். ஏனெனில், எழுதிய கதாபாத்திரங்கள் நிஜமாகும் தருணம் என்பது ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபோன்றது. அதன் வலி, அந்தத் தாய்க்குத்தான் தெரியும். அப்படி என் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த தமன்னாவுக்கு நன்றி.”

“விருதுகளுக்காகக் காத்திருக்கிறோம்!”

“‘தென்மேற்கு பருவக்காற்று’ பட ஹீரோயின் வசுந்தரா இதிலும் நடித்திருக்கிறார். டபுள் ஹீரோயின் சப்ஜெக்டா?”

`` ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆகின்றன. அதன்பிறகு வசுந்தராவுடன் பேசவே இல்லை. ஒரு காலைப்பொழுதில் அவரை அழைத்து, ‘என் அடுத்த படத்தில் ஒரு பாத்திரம் இருக்கிறது. பண்ணுகிறீர்களா?’ என்றேன். கதாநாயகியாக நடித்தவரை கேரக்டர் ரோல் பண்ணக் கூப்பிடுகிறோமே என்று எனக்கும் வருத்தம்தான். ஆனால் இந்தக் கதாபாத்திரம் வசுந்தரா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று என் மனசு சொன்னது. ஒரு கதாநாயகிக்கான முக்கியத்துவத்தை நானும் என் படக்குழுவும் அவருக்குக் கொடுத்தோம். உதயநிதியின் பள்ளித் தோழியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் வசுந்தரா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தைத் தாங்கும் தூணாக வடிவுக்கரசி இருக்கிறார். ‘பூ’ ராமு நடித்துள்ளார். தீப்பெட்டி கணேசனுக்கு முக்கியமான கேரக்டர். இவர்களில் சிலருக்குத் தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்புண்டு”

“யுவன்ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் பாடல்கள் எப்படி வந்துள்ளன?”

“படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். உறவுகளின் புனிதத்தைப் பற்றிய பாடல்களுக்கு யுவன் அழகாக ட்யூன் போட்டுக் கொடுத்தார். கவிஞர் வைரமுத்து ஒவ்வொரு சொல்லையும் செதுக்கியிருக்கிறார். சில பாடல்களை எழுதுவதற்கு முன் காட்சிகளைப் பார்த்துவிட்டு எழுதினார். இந்த இசைக்கூட்டணி படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்தும். இந்த முறை யுவன் நிச்சயமாக தேசிய விருது வெல்வார்.”

“விருதுகளுக்காகக் காத்திருக்கிறோம்!”

“உங்களின் ‘இடம் பொருள் ஏவல்’ படம் எப்போது ரிலீஸ் ஆகும்?”

“பனி, வெயில், குளிர் என்று மூன்று விதமான நிலப்பரப்பில் எடுக்கப்பட்ட படம். இரண்டரை வருட உழைப்பு. படத்தைப் பார்த்த சிலர் நம்பிக்கைக்குரிய கருத்துகளைச் சொன்னார்கள். ‘சத்தியம் ஒளிரும் இடத்தில் வெற்றி சூழும்’ என்று காந்தி சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர் லிங்குசாமியும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் படத்தை விரைவில் ரிலீஸ் செய்வார்கள் என்று நம்புகிறேன்.”

“‘மாமனிதன்’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியை இயக்க உள்ளீர்கள். என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?”

“இது ஒரு சாமானிய மனிதனைப் பற்றிய கற்பனைக் கதை. ஆனால், இதில் நிஜமும் உண்டு. விஜய் சேதுபதியைத் தவிர இதில் யாரும் நடிக்க முடியாது. நான் விஜய்சேதுபதிக்குத் தந்ததைவிட அவர் எனக்கு அதிகமாகவே திருப்பிக் கொடுத்துவிட்டார். ‘இடம் பொருள் ஏவல்’ பட பிரிவியூ பார்த்துவிட்டு, ‘நாம திரும்பவும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும் சார்’’ என்றார். அவருடைய அன்பு பெரிது. அந்த ‘மாமனித’னின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும். ஒவ்வொரு படம் தொடங்கும்போதும், ‘இதற்கு இளையராஜா சார்தான் இசை. போய்ப் பேசுவோம்’ என்று நினைப்பேன். ஆனால் சூழல் சரியாக அமையாது. அந்த ஆசையை ‘மாமனிதன்’ நிறைவேற்றுவான் என்று நம்புகிறேன். கதையை முதலில் யுவனிடம்தான் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. ‘இதற்கு அப்பா, அண்ணா, நான் மூன்று பேரும் சேர்ந்து இசையமைக்கிறோம்’ என்று சொன்னார். ஆமாம் இதில் இளையராஜா சார், கார்த்திக் ராஜா, யுவன் மூவரும் இசையமைக்கிறார்கள். பக்கெட் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த எனக்கு அருவியில் குளித்ததுபோல் சந்தோஷமாக இருக்கிறது. இசைஞானிக்குக் கதைசொல்லக் காத்திருக்கிறேன்.”