
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்

“உங்களுக்கு நடந்த விபத்து குறித்து சொல்லுங்க...”
- இரா.கலைச்செல்வன்
“ஒரு இடத்துல இருந்து தெரியாத்தனமா கீழே குதிச்சுட்டேன். ஆனா அந்த இடம் அவ்வளவு ஆழமா இருக்கும்னு எனக்கு முதல்ல தெரியலை.முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். கொஞ்சநாள் கழிச்சு நடக்க முடியாமப் போயிருச்சு. ஒரு கால்ல சுத்தமா உணர்ச்சி இல்லை. ‘தண்டுவடத்துல அறுவை சிகிச்சை பண்ணினாத்தான் சரியாகும்’னு சொன்னாங்க. எனக்கு அறுவைசிகிச்சை பண்றதுல விருப்பம் இல்லை. பத்து மாசம் வெறும் பிசியோதெரபி மட்டுமே பண்ணிட்டு சமாளிச்சுட்டு இருந்தேன். ஆனா அது சரியா வரலை. அப்பதான் நண்பர் ஒருவர் ஆயுர்வேத மருத்துவத்தைப் பரிந்துரை செய்தார். அந்த சிகிச்சைக்குப் பிறகுதான் குணமாகி, பழைய நிலைமைக்குத் திரும்பினேன்.”
“நீங்க உடல்நலம் சரியாகித் திரும்பிவந்தப்ப, உங்களைப் பற்றி வந்த மீம்ஸ்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணீங்க?”
- வெ.நீலகண்டன்
“நான் குண்டா, மொட்டைத் தலையுடன் இருப்பதை வைத்து வெளியான மீம்ஸ்களைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. அப்போ எனக்கு இருந்த உடல் சூழ்நிலையே வேற. அது தெரியாத சிலரும், தெரிஞ்ச சிலரும் மீம்ஸ் போட்டிருந்தாங்க. ஆனா அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. நான் முதலில் அழகா இருந்தேன்னும் நினைக்கலை. அப்புறம் அசிங்கமாயிட்டேன்னும் நினைக்கலை. நான் அழகா இருக்குறேன்னு மக்கள்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதே மக்கள் மீம்ஸ் போட்டும் கலாய்ச்சாங்க”
“மணிரத்னத்துடன் உங்கள் செகண்ட் இன்னிங்ஸ் எப்படி ஆரம்பிச்சது?”
- வெய்யில்
“நடுவுல உடம்பு சரியில்லாம இருந்த சமயத்தில் நிறைய மாத்திரைகள் சாப்பிட்டதால என் உடல் எடை 110 கிலோ இருந்துச்சு. தினசரி வேலைகள் செய்யறதே கஷ்டம். கொஞ்சம் கொஞ்சமா குணமாகிட்டு இருந்தேன். அப்ப ஒருநாள் திடீர்னு மணி சார் கூப்பிட்டார். ‘எப்படி இருக்கே. ஒரு புராஜெக்ட் இருக்கு’ன்னார். ‘இதை ஏன் நம்மகிட்ட சொல்றார்’னு எனக்குள் யோசனை. ‘நீ பண்ணு’ன்னார். ‘என்னால முடியாது சார்’னு சொன்னேன். ‘நீ பண்ண முடியுமா, முடியாதானு உன்கிட்ட கேட்கலை. உனக்கு இந்த ரோல் பிடிச்சிருக்கான்னுதான் கேட்டேன். உன்னால முடியும். ரெண்டு மாசம் டைம் இருக்கு’ன்னு சொன்னார். ‘ஓகே. இதைச் சவாலா எடுத்துக்குறேன். ஒரு மாசம் கழிச்சு வர்றேன். அப்ப எனக்கு நம்பிக்கை இல்லைனா வேண்டாம்னு சொல்லிடுவேன்’னேன். பிறகு தினமும் உடற்பயிற்சி, ரன்னிங் போக ஆரம்பிச்சேன். ‘இன்னைக்கு இதுதான் நடந்துச்சு’னு தினமும் மணி சாருக்கு மெசேஜ் பண்ணுவேன். ‘உன்னால் முடியும்’னு அவர்கிட்ட இருந்து பதில் மெசேஜ் வரும். ஒரு மாசத்துல 14 கிலோ எடை குறைச்சேன். அவருக்கு என்மேலே நிறைய நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னைக் ‘கடல்’ மூலம் திரும்ப வரவெச்சது!”

“நிறைய பெண்களுக்கு உங்க மேல ஈர்ப்பு இருந்திருக்கும். அப்படி உங்களுக்கு யார் மேல ஈர்ப்பு இருந்தது?”
- சனா
“நிறைய பேர் மேல க்ரஷ் இருந்துச்சு. நாலாவது படிக்கும்போது என் கிளாஸ் பொண்ணு மேல ஃபர்ஸ்ட் க்ரஷ் வந்துச்சு.”
“சினிமாவுக்கு வந்தபிறகு அவங்களைப் பார்த்தீங்களா, பேசியிருக்கீங்களா?”
“குறிப்பிட்ட அந்தப் பெண்ணை நான் பார்க்கலை. ஆனா ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு க்ரஷ் இருந்துச்சு. சினிமாவுக்கு வந்தபிறகு அந்த பொண்ணுகிட்ட பேசியிருக்கேன்.”
“சினிமாவில அப்படி ஏதும் க்ரஷ் இருக்கா?”
“கடைசியா அப்படி ஒரு க்ரஷ் இருந்தது.ஆனா அவங்ககிட்ட பேசலை. அவங்க யார்னு நான் சொல்லமாட்டேன், நீங்க யோசிச்சுட்டே இருங்க.”

“தெரியாத மொழிப் படங்கள் நடிக்கிறது பற்றி என்ன நினைக்கிறீங்க?”
- அலாவுதீன் ஹுசைன்
“எனக்குத் தெரியாத மொழிகள்ல வேலை செய்றது கஷ்டம். நிறையபேருக்கு அது ரொம்ப சுலபமா செய்ய முடியும். பிரகாஷ்ராஜை நான் இந்த விஷயத்தில் ரொம்ப மதிக்கிறேன். எல்லா மொழியையும் ஈஸியா கத்துப்பாரு. எனக்கு அந்த விஷயத்துல கற்றல் குறைபாடு (learning disability) இருக்கு. நான் ஸ்கூல்ல படிச்சது இங்கிலீஷ். அங்க இந்தி இரண்டாவது மொழி. வீட்ல தமிழ் சொல்லிக்கொடுத்தாங்க. இந்த மூணு மொழிகளைத் தவிர எனக்கு வேறு எந்த புதிய பாஷையும் எளிதா வராது. தெரிஞ்ச மொழிகள்லதான் என்னால யோசிக்க முடியும். அப்பதான் அந்த எமோஷன்ஸ் சரியாக வரும். தெரியாத மொழிகள்ல பேச முயற்சி பண்ணும்போது கை, கால் எல்லாம் நடுங்கும். தெலுங்குல ‘துருவா’ படத்துல நடிக்கும்போது அதை நான் கவனிச்சேன். என்ன பேசுறேன் என்பதை என்னால உணரமுடியல. நம்புறமாதிரி இருக்கணும்கிறதுக்காகப் பார்த்துப் பார்த்து பண்ணவேண்டியதா இருந்துச்சு. அதனாலேயே வேற்று மொழிப் படங்கள்ல நடிக்கிறதுக்குத் தயக்கம். ஆனால் அதை ஒரு சவாலா எடுத்துட்டுப் பண்ணணும்னா பண்ணலாம்.”

“உங்க குட் பாய் இமேஜைத் தாண்டி வில்லன், ஓரினச் சேர்க்கையாளர்னு ஹீரோக்கள் பண்ணத் தயங்குகிற கேரக்டர்கள்ல நடிக்கிறீங்க.ஓரினச் சேர்க்கையாளர் களுக்கு உலகம் முழுக்கவே எதிர்ப்புகள் இருக்கு. அவங்க வாழ்க்கையை எப்படிப் பார்க்குறீங்க?”
- அதிஷா
“இமேஜ்னு ஒரு விஷயம் சொன்னீங்கள்ல, அது பிடிக்காமதான் 90களிலேயே நிறைய விஷயங்களைப் பண்ணினேன். ஆனாலும் இமேஜ்னு ஒண்ணு வந்துடுச்சு. ‘ரோஜா’, ‘பம்பாய்’ படமெல்லாம் ரொமான்ஸுக்கான படங்கள்னு நினைச்சு நான் பண்ணலை. காஷ்மீர் பிரச்னை, பாம்பே கலவரங்கள் பற்றி இருந்ததனால அந்தப் படங்கள் பண்ணினேன். ‘தாலாட்டு’, ‘தேவராகம்’, ‘புதையல்’னு என் இமேஜுக்கு சம்பந்தமே இல்லாத சில படங்களையும் பண்ணினேன். ஆனாலும் என் இமேஜைத் தாண்டி வேற படங்கள் அப்ப எனக்கு வரவேயில்லை. ஆனால், சினிமா இப்போ மாறிடுச்சு. இமேஜுக்கு சம்பந்தம் இல்லாத நிறைய கேரக்டர்ஸ் வருது.
நான் எப்போதுமே ‘வாழு; வாழ விடு’ கொள்கையை ஃபாலோ பண்றவன். அந்த வகையில் நான் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்கிறேன். ‘டியர் டாட்’ (Dear Dad) படத்தில் ஓரினச் சேர்க்கையாளர் கேரக்டர்ல நடிக்கணும்னு வந்தப்ப, அந்த கதாபாத்திரத்துக்கு என்னால நியாயம் செய்ய முடியுமானு ஒரு சந்தேகம். ஒரு வில்லன் ரோல்னா அவன் தப்பு பண்ணுவான், அது என்ன தப்புனு ஸ்கிரிப்ட்ல இருக்கும். அதைப் பண்ணிடலாம். ஆனால், அந்த ரோலில் அப்படி யோசிக்க முடியாது. ஆனாலும் யாரோ ஒருத்தர் நான் இந்த ரோலைப் பண்ணுவேன்னு என்னை நம்பி இந்த ஸ்கிரிப்டை எடுத்துட்டு வந்திருக்கார். அப்ப நான் மணி சாருக்கு கால் பண்ணிக் கேட்டேன். ‘ஒரு நடிகனா உனக்கு இந்த ரோல் பெருமை சேர்க்கும்னா நீ ஏன் இதைப் பண்ணத் தயங்குறே? பண்ணு’னு சொன்னார். அப்ப எனக்கு ஒரு தெளிவு கிடைச்சுது. பாலிவுட்ல தயாரான சின்ன பட்ஜெட் படம் அது. அதுக்கு அந்தளவுக்கு கமர்ஷியல் ரிலீஸ் கிடைக்கும்னுகூட அப்ப எனக்குத் தெரியாது.’’

“ ‘சாக்லேட் பாய்’ இமேஜ் இருக்கும்போதே பாலுமகேந்திராவுடன் ‘மறுபடியும்’ பண்ணுனீங்க. அதேபோல மகேந்திரனுடன் ‘சாசனம்’னு பண்ணுனீங்களே?”
- வெ.நீலகண்டன்
“அந்தக் காலகட்டத்துல என்ன கதாபாத்திரம் நடிக்கிறோம் என்பதைவிட, ‘இவங்க எப்படி படம் பண்றாங்க’ன்னு தெரிஞ்சுக்கிறதுலதான் என் முழுக் கவனமும் இருந்துச்சு. யார் படங்களை யெல்லாம் நான் பார்த்தேனோ, எந்த இயக்குநர்களை நான் மதிச்சேனோ அவங்க படங்கள்ல நிறைய விஷயங்களைக் கத்துக்கலாம். அப்படித்தான் பாலு மகேந்திரா சார், மகேந்திரன் சார் படங்கள்ல நடிச்சேன். மகேந்திரன் சார்கூட நான் கமர்ஷியல் படம் எதுவும் பண்ணலை.
என்.எஃப்.டி.சிக்காக ‘சாசனம்’ படத்தை சம்பளம் இல்லாம ஒப்புக்கிட்டேன். அது, நான் பீக்ல இருந்த டைம். அவங்ககூட வேலை செய்யணும் என்பது மட்டும்தான் எனக்கு முக்கியமா இருந்துச்சு. அவங்களிடம் இருந்து நிறைய கத்துக்கிட்டேன்.”
அடுத்த வாரம்...
* தேவியின் மரணம் உங்களை எந்தளவுக்குப் பாதித்தது?
* உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?