
தமிழ்ப்பிரபா - படங்கள்: க.பாலாஜி
`நான் பிறந்த ஊர், மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்தில் பழையூர்பட்டி. என் அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். எங்க வீட்டிலேயே கட்சி ஆலோசனைகள், கூட்டங்கள் நடக்கும். `செம்மலர்’, `ஜனசக்தி’, `தாமரை’ இதழ்கள்லாம் சின்ன வயசுலேயே வாசிக்க ஆரம்பிச்சு, தீவிர அரசியல் பின்னணியோடத்தான் வளர்ந்தேன்

மலம் அள்ளும் தொழிலாளர்களின் ஒருநாள் குறித்து 2003-ம் ஆண்டில் எடுத்த `பீ’ என்கிற ஆவணப்படம், கூடங்குளம் போராட்டத்தைப் பற்றி `கதிர்வீச்சுக் கதைகள்’, திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளை மையப்படுத்தி `டாலர் சிட்டி’, திருமங்கலம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டம் பற்றிய `ஹலோ மிஸ்டர் காந்தி’, திருச்சியில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளர்களைப் பற்றி `செருப்பு’ எனத் தொடர்ந்து மக்கள் உரிமைகள் சார்ந்தும், அவர்களுக்கான அரசியல் கோரிக்கையை முன்வைத்தும் 19 ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.பி.அமுதன்.
உலகளவில் முக்கியமான ஆவணப்படங்களைத் தமிழகத்தில் திரையிடுவது, அது தொடர்பான கருத்தரங்குகள் நடத்துவது, மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை, தேசிய அளவில் ஆவணப்படங்களுக்கான பன்னாட்டுத் திரைப்பட விழா போன்றவற்றையும் 25 வருடங்களாக நடத்திவருகிறார்.
``பிறந்த ஊர், மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்துல பழையூர்பட்டி. அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். வீட்டிலேயே கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும். இன்னொருபுறம் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.
அம்மா தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகை. எங்க ஊர்ல தியேட்டர் கிடையாது. நடந்தே போய்ப் பக்கத்து ஊரில் படம் பார்த்துட்டு வருவோம். இப்படி சிறுவயதிலேயே அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்து நான் வளர்ந்ததால என் படங்கள்லயும் அது பிரதிபலிச்சதுல எந்த ஆச்சர்யமும் இல்லை.
திரைப்பட இயக்குநர் ஆகணும்னுதான் இருந்தேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ கம்யூனிகேஷன் படிக்கும்போது, ஸ்பானிஸ் இயக்குநர் லூயி புனுவல் படங்களைப் பார்க்கிற வாய்ப்புக் கிடைச்சது. என்னுடைய சினிமாப்பார்வை அப்படியே வேறு பக்கம் திரும்பியது. டெல்லியில் இருந்து ஒரு டீம் வந்து டாக்குமென்ட்ரி வொர்க்ஷாப் நடத்தினாங்க. அஞ்சு நாள் அதைப் பார்த்தேன். எல்லாம் பொலிட்டிக்கல் டாக்குமென்ட்ரி.
ரெண்டு வருஷம் டெல்லியில ஆவணப்படங்கள் எடுப்பது தொடர்பா படிச்சுட்டு, 1997ல் என்னுடைய முதல் ஆவணப்படத்தை எடுத்தேன். சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் லீலாவதி மதுரையில் கொல்லப்பட்டதை அடிப்படையா வெச்சு எடுக்கப்பட்ட படம் அது. அடுத்ததா, குண்டுப்பட்டியில நடந்த காவல் துறையின் அத்துமீறலைப் பற்றி `தீவிரவாதிகள்’ என்ற பெயரில் 1998ல் ஒரு படம் எடுத்தேன். அடிப்படை வசதிகளுக்காகப் போரடிய தலித் மக்கள் ஒருகட்டத்தில் சோர்வுற்று தேர்தல் புறக்கணிப்பு செஞ்சாங்க. அந்த ஊர் மக்களைக் கண்மண் பார்க்காமல் அடிச்சு உதைச்சு, அவங்களோட உடைமைகளைக் காவலர்கள் சூறையாடினாங்க. பெண்களை எல்லாம் ஒண்ணா உட்காரவெச்சு ரெண்டு மணி நேரம் கெட்டவார்த்தைகளால திட்டித்தீர்த்தாங்க. அதையெல்லாம் மிகத் தைரியமா பதிவுசெய்த ஆவணப்படம் அது. அதுக்கப்புறம் என் நண்பர்கள் வட்டத்துல `தீவிரவாதிகள்’ அமுதன்னே கொஞ்சநாள் நான் அழைக்கப்பட்டேன்.’’

``ஆவணப்படங்களின் தேவை, சமகாலத்தில் எந்த அளவுக்கு முக்கியம்?’’
``சமீபகாலமாக தமிழ்நாட்டில் மக்கள் நிலத்துக்காகவும், நீருக்காகவும், பண்பாட்டு அடையாளத்துக்காகவும் வீதிக்கு வந்து போராடுறாங்க. இந்தச் சூழல்ல ஆவணப்படங்களோட பங்கு முக்கியமானது. உதாரணத்துக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை மையப்படுத்தி நேர்மையான ஒரு ஆணவப்படம் எடுப்பீங்கன்னா, இது தொடர்பா இருட்டடிப்பு செய்யப்பட்ட, ஊடகங்கள் பதிவுசெய்யத் தயங்கிய, மொத்தச் சத்தத்தில் காணாமல்போன சிறிய குரல்களைத் தேடிக் கண்டுபிடிச்சு பதிவுசெய்ய முடியும். எப்பவும் இல்லாத அளவுக்கு ஆவணப்படங்களின் தேவை இப்போ அதிகமாகியிருக்கு.’’
``ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம், இளைஞர்கள் மத்தியில் ஏன் குறைவாக இருக்கிறது?’’
``சமீபமாக இளைஞர்கள் குறும்படங்களுக்கே அதிக ஆர்வம் காட்டி வர்றாங்க. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் முன்னால் எது இருக்குதோ அதுக்குத்தானே எதிர்வினை செய்வாங்க. குறும்படங்களுக்கு அதிக கவனம் கிடைக்கிறதுக்குக் காரணம், யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள்ல வேலைக்குப் போகலாம், தமிழ் சினிமாவுக்குப் போகலாம்னு ஆசை தூண்டும் விஷுவல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவு. அதிக கவனக்குவியலைக் கோருகிற ஒரு கலைவடிவம் ஆவணப்படங்கள். அதைப் பார்க்கிறதுக்கும் அந்தப் படங்களோட பின்னணியைப் புரிஞ்சுக்கிறதுக்கும் முன் உழைப்பு தேவை. பார்வையாளரைக் குஷிப்படுத்தவேண்டிய அவசியம் ஆவணப்பட இயக்குநர்களுக்கு இல்லை. பெருங்கூட்டத்தைச் சேர்க்கணுங்கிற நோக்கம் ஒரு கலைக்கு ஏற்படும்போதுதான் அது நீர்த்துப்போகுது. ஆவணப்பட இயக்குநர்களுக்கு அந்த நோக்கமும் இல்லை”
``இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்றன?’’
``தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான வரலாற்றுச் சம்பவங்கள் இன்னும் ஆவணப்படங்களாக எடுக்கப்படாம இருக்கு. உதாரணமா, அயோத்திதாசப் பண்டிதர் வாழ்க்கை வரலாறு, இந்தி எதிர்ப்புப் போராட்டம், திராவிட இயக்க அரசியல் வரலாறு, எண்பதுகள்ல மார்க்சிய லெனினிய அமைப்பைச் சேர்ந்த நிறைய பேரைக் காவலர்கள் சுட்டுக் கொன்றதின் பின்னணி... இப்படி நிறைய. தமிழ்நாட்டுல 13 கடற்கரை மாவட்டங்கள் இருக்கு. ஆனா, மீனவர்களைப் பற்றிப் போதுமான ஆவணப்படங்களே இல்லை. அதேபோல் இருளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் இல்லைனு சொல்லிக்கிட்டே போகலாம். ஆவணப்படம் என்பது வரலாற்றுப் பதிவு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் குரலும்கூட!’’
மெல்லப் புன்னகைக்கிறார் அமுதன்.