பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

காலா - சினிமா விமர்சனம்

காலா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
காலா - சினிமா விமர்சனம்

காலா - சினிமா விமர்சனம்

‘நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை’ என்று கார்ப்பரேட் மற்றும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்புபவனே ‘காலா’!

 ‘காலா’ தாராவி மக்களின் மதிக்கத்தக்க மனிதர். தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் அதிகார வர்க்கத்தை அலறவைப்பவர். ‘எல்லோருக்கும் வீடு’ என்ற பெயரில், இருக்கும் நிலத்தையும் அபகரிக்கத் துடிப்பதை எதிர்த்துப்போராடுகிறார். ‘மனு பில்டர்ஸ்’, ‘தண்டகாரண்யா நகர்’, புத்தர், ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் படங்கள், பெரியார் சிலை, அயோத்திதாசப் பண்டிதரை நினைவுபடுத்தும் ‘பண்டிதர் நூலகம்’, கறுப்பு, சிவப்பு, நீலம் என்று ஏராளமான அரசியல் குறியீடுகளின் வழியே நகர்கிறது ‘காலா’ கதை.

உச்ச நட்சத்திரத்தை வைத்துப் படம் எடுத்தாலும், தான் நம்பும் அரசியலை உரத்துப்பேசும் பா.இரஞ்சித்துக்கு ரொம்பவே துணிச்சல். படத்தின் முதல் ஃப்ரேமில் நிலத்துக்கான அரசியலைப் பேசியதிலிருந்து எண்ட் கார்டில் நானா, ஹூமாவோடு சாதிப் பெயரைச் சேர்க்காதது வரை படம் முழுக்க இரஞ்சித் ராஜ்ஜியம்.

காலா - சினிமா விமர்சனம்

மீண்டும் ஒருமுறை ரஜினிக்குள் இருக்கும் மகத்தான கலைஞனை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இரஞ்சித். ‘குமாரு, யார் இவரு?’ என்று கலகலப்பூட்டும் காட்சிகளாகட்டும், மின்சாரம் இல்லாத வீட்டில் தன் பழைய காதலியைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கும் காட்சிகளாகட்டும், “ஐ லவ் யூ”,  “நிஜமாவே பெருமாளைக் காதலிச்சியா?” என்று மனைவியிடம் நெளிந்து குழைவதாகட்டும், காவல் நிலையத்தில் நாற்காலியைத் தூக்கிப் போட்டு உடைத்து அதிரடி காட்டுவதாகட்டும்... நிஜமாகவே இது காலா கோட்டைதான்!

குடும்பத்தினரோடு அறிமுகமாகும் அந்த முதல் காட்சியிலேயே ‘செல்வி’யாக நம் இதயங்களில் நாற்காலி போட்டுக் கம்பீரமாக உட்கார்ந்துவிடுகிறார் ஈஸ்வரி ராவ். “எனக்கும்தான் என்னையவே சுத்தி வந்த பறையடிக்கும் பெருமாளைப் பிடிச்சிருந்துச்சு. நான் வேணும்னா ஒரு எட்டு ஊருக்குப்  போய்ப் பார்த்துட்டு வரட்டா?” என்று கணவனைக் கடுப்பேற்றுவதில் இருந்து,  “உன் லவ்யூ காதுக்குள்ள நுழைஞ்சு நெஞ்சுக்குள்ள போயிடுச்சு” என்று ரொமான்ஸ் காட்டுவது வரை ஈஸ்வரி ராவ்... வாவ்!

ஹரிதாதா என்னும் அதிகார மையமாக நானா. பேத்தியிடம், ‘காலா ஒரு ராவணன்மா. அவரைக் கொல்லணும்னு வால்மீகியே எழுதியிருக்காரு!’ என சிரிக்கும்போது...  ‘உன்னைத்தான் கொல்லணும்னு நினைச்சேன். பாவம் உன் பொண்டாட்டியும் பிள்ளையும் இறந்துட்டாங்க’ என்று ரஜினியிடம் வில்லத்தன ஆறுதல் சொல்லும்போது, ‘ரெண்டு அடிதானே உனக்கும் எனக்கும். வா! வந்து என் காலைத் தொட்டு மன்னிப்புக் கேளு, விட்டுடுறேன்’ என்று மிரட்டும்போது என உடம்பின் ஒவ்வொரு தசையும் நடிக்கிறது நானாவுக்கு.

காலா - சினிமா விமர்சனம்பழைய காதலி சரினாவாக வரும் ஹூமாவின் நடிப்பு ஏமாற்றமளிக்கிறது. வேகமும் அவசர புத்தியும் கொண்ட துடிப்பான இளைஞனைக் கண்முன் கொண்டு வருகிறார் ரஜினியின் கடைசி மகனாய் வரும் மணிகண்டன். அவரது காதலியாக வரும் ‘புயல்’ அஞ்சலி பாட்டீல், போராளிப் பெண்களின் புதிய வார்ப்பு. ‘காலா’வின் நண்பர் வாலியப்பனாய் சமுத்திரக்கனி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். திலீபன், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ் ஆகியோர் பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பின்னணி இசையில் அதிரடி காட்டியிருக்கும் சந்தோஷ் நாராயணனின் இசையில், பாடல்கள் படத்தின் வெவ்வேறு உணர்வுநிலைகளைக் கடத்தியிருக்கின்றன. தாராவியை அதன் அழகியலோடு திரையில் கொண்டுவர அதிகம் மெனக் கெட்டிருக்கிறார்கள்  ஒளிப்பதிவாளர் ஜி.முரளியும் கலை இயக்குநர் ராமலிங்கமும்.

படத்தின் வசனங்களை எளிமையாகவும் வலிமையாகவும் எழுதியிருக்கிறார்கள்  மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா மற்றும் இரஞ்சித். ‘சமத்துவம்னா கையைக் கொடு. கால்ல விழ வைக்காதே!’, ‘என் நிலத்தைப் பறிக்குறதுதான் கடவுளோட வேலைன்னா உன் கடவுளையும் விடமாட்டேன்!’, ‘இந்த உடம்புதான் நம்ம ஆயுதம்’ என கவனம் ஈர்க்கும் வசனங்களுக்குப் பஞ்சமே இல்லை.  ‘நான் நீ முன்னாடி பார்த்த சரீனா இல்ல, உனக்கு உன் நினைவுகள்ல இருக்குற சரீனா போதும்’ என காதல் வரிகளும் படம்நெடுக நிறைந்திருக்கின்றன.

அதேநேரத்தில் ‘காலா’ என்பவர் தாதாவா, ரவுடியா, போராளியா? மக்கள் உயிரையே கொடுக்கும் அளவுக்கு அவர் என்ன செய்தார்? தன் தந்தை வேங்கையன் இறந்து 40 ஆண்டுகளில் அவரது செயல்பாடுகள் என்ன, அவரது மகன் லெனினின் அரசியல் புரிதல் என்ன, தங்கள் திருமணம் நிற்பதற்குக் காரணமான ஹரிதாதாவின் திட்டத்தை நிறைவேற்ற ஏன் சரினா முயல்கிறார் என்று பாத்திரப் படைப்புகளில் ஏராளமான குழப்பங்கள்.  காதல், குடும்பப் பாசம், அரசியல் என்று வெவ்வேறு உணர்வுகளையும் முழுதாக உள்வாங்குவதற்குள், வெவ்வேறு களங்களில் கதை சட்டென்று நகர்ந்துவிடுவது திரைக்கதையின் பலவீனம். ‘காலா’வை சாகசக்கார நாயகனாகக் காட்டுவதா, சராசரி மனிதனாகக் காட்டுவதா என்பதிலும் தடுமாற்றம் தெரிகிறது.

இருந்தபோதும், காலத்துக்குத் தேவையான அரசியலைப் பதிவு செய்தவகையிலும் நாயக வழிபாடுகளைக் குறைத்து, தனித்துவமான பெண் பாத்திரங்களைச் சித்திரித்த வகையிலும் கவனம் ஈர்க்கிறார் ‘காலா’.

- விகடன் விமர்சனக் குழு