
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்
“கடலூர்ல ஒரு பெண்மேல ஆசிட் வீசிய ஒருவர், ‘அதை நான் படத்தைப் பார்த்துதான் செஞ்சேன்’ன்னு சொன்னார். சினிமா சமூகத்தின் மீது ஒரளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தத்தானே செய்யுது?”
- இரா.கலைச்செல்வன்
“நம்ம வாழ்க்கையில தாக்கமே இல்லாம இருக்க முடியாது. நீங்க ஒரு விஷயத்தை எழுதுறீங்க, அதைப் பார்த்து ஒருத்தனுக்கு ஒரு மோசமான ஐடியா வருது. அப்ப நீங்க பண்றது தப்பா? அவங்க பணறது தப்பா? என் குழந்தை ஸ்கூலுக்குப் போகும்போது அவங்களை எதுவுமே பாதிக்கக்கூடாதுன்னு நான் நினைக்கிறது நடக்காத விஷயம். அவங்க வயசுப் பசங்களோட அவங்க நிறைய பேசுவாங்க, வளரும்போது நிறைய விஷயத்தைப் பார்ப்பாங்க, நிறைய படிப்பாங்க. என் வீட்டில் இருக்கும் குழந்தையையே வெளிப்புறத் தாக்கத்தில இருந்து என்னால் பாதுகாக்க முடியாதப்ப, நான் எப்படி சமூகத்தைப் பாதுகாக்கமுடியும்? எங்கேயாவது ஒருத்தருக்கு சினிமா ஒரு தாக்கமா இருந்திருக்கலாம், நாளைக்கே அவரை வேற ஏதாவது ஒண்ணு இன்ஃபுளூயென்ஸ் பண்ணலாம். ஒரு கெட்ட விஷயம் பண்ண அவங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவை. அது நியூஸ் பேப்பரா இருக்கலாம், கனவா இருக்கலாம், சினிமாவா இருக்கலாம், அவ்வளவுதான்.”

“ ‘தேவராகம்’ படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? அவரது மரணம் குறித்த செய்தி எந்த வகையில உங்களைப் பாதிச்சது?”
- சுஜிதா சென்
“எனக்கு ரொம்ப அதிர்ச்சி. அவங்ககூட சேர்ந்து ‘தேவராகம்’ல நடிச்சதை லக்கியா ஃபீல் பண்றேன். சின்ன வயசுல அவங்க படம் நிறைய பார்த்திருக்கேன். பின்னாளில் அவங்ககூட நடிக்க ஒரு நல்ல வாய்ப்பா `தேவராகம்’ அமைஞ்சது. ஷூட்டிங்ல ஸ்ரீதேவி ரொம்ப அமைதியா இருப்பாங்க. அதிகம் பேச மாட்டாங்க. ஆனா கேமரா ஆன் ஆகிட்டா வேற ஸ்ரீதேவியா நிப்பாங்க.”
“உங்க ஸ்கிரிப்ட்ல எந்த ஹீரோ நடிச்சா நல்லாயிருக்கும்னு நினைக்கிறீங்க?”
- பரிசல் கிருஷ்ணா
“நான் நடிச்சாத்தான் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். ஆனால், நான் அந்தளவுக்கு இப்ப ஃப்ரீயா இல்லை. அதனால் நெக்ஸ்ட் பெஸ்ட் யாருனு பார்த்து அவங்களை நடிக்க வைப்பேன். ஃபோகஸ் மிஸ்ஸாகும் என்பதால் நான் டைரக்ட் பண்ணும் படங்கள்ல நான் நடிக்கமாட்டேன்.”
“ ‘மீம் கலாசாரம்’ தவிர்க்க முடியாத ஒண்ணா மாறிக்கிட்டு வருது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?”
- இரா. கலைச்செல்வன்
“தகவல்கள்தான் இப்போதைய உலகத்துல ரொம்ப முக்கியமானது. சினிமாவில் சில காட்சிகள் சில மனிதர்களைக் கஷ்டப்படுத்துற மாதிரிதான் இருக்கும். அதே மாதிரிதான் மீம்ஸ்களும். அதுக்காக மீம்ஸே தவறுனு சொல்லிடக்கூடாது. அதுவும் ஒரு கிரியேட்டிவிட்டிதானே. அதை ரசிக்கணும்.”

“ ‘சவாலான, புதிதான விஷயங்களைப் பண்றது பிடிக்கும்’னு சொன்னீங்க. அந்த மாதிரி இப்ப என்னென்ன விஷயங்கள் பண்ணிட்டு இருக்கீங்க?”
- ப.சூரியராஜ்
“சவாலான விஷயங்களாத் தேடிப்போய்ப் பண்ணணும்னு நினைக்க மாட்டேன். எனக்குத் தெரியாதுங்கிறதுக்காக ஒரு விஷயத்தைப் பண்ணாமலும் இருக்க மாட்டேன். அதைக் கத்துக்கிட்டு பண்ணுவேன். கத்துக்கிறதுக்கு முதல்படியே உங்களுக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கிறதுதான். அதுல எந்த ஈகோவும் பார்க்கக்கூடாது; ‘தெரியாது’னு சொல்ல வெட்கப்படக்கூடாது. அப்படியிருந்தா நிறைய கத்துக்கலாம். கடந்த ஒன்றரை வருஷமா ஒரு ஆப் கிரியேட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ அது பீட்டா (Beta) டெஸ்ட்ல இருக்கு. அதுதவிர நான் எழுதுனதுல ஒரு ஸ்கிரிப்ட்டை எடுத்து டெவலப் பண்ணிட்டு இருக்கேன். இந்த வருஷக் கடைசியில் அதை டைரக்ட் பண்ணுவேன்.’’
“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?”
- வெய்யில்
“கடவுள் மேல வைக்கிறதைவிட சக மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்கிறதுலதான் அதிக ஆர்வம். சின்ன வயசுவரை கடவுள் நம்பிக்கையோடதான் வளர்ந்தேன். எங்கப்பா வேத பாடசாலையெல்லாம் நடத்தியிருக்கார். நிறைய கோயில்களுக்குத் தானம் பண்ணியிருக்கார். அப்பாவும் அம்மாவும் கடவுள் நம்பிக்கையோடு இருந்தவங்க. அந்தமாதிரி ஒரு சூழல்லதான் வளர்ந்தேன். நான் சம்ஸ்கிருதம் படிச்சிருக்கேன். எனக்கு வேதம் சொல்லிக்கொடுத்தி ருக்காங்க. கோயில்கள்ல அர்ச்சனை பண்ணும்போதும் பூஜை பண்ணும்போதும் அந்த மந்திரங்களை எல்லாம் கேட்டுக்கேட்டு மனசுல பதிஞ்சிடுச்சி. நானும் சொல்லிட்டு இருப்பேன். ஆனா கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கணும்னு எனக்குத் தெரியாது.
எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா என்பது இங்கே முக்கியம் இல்லை. ‘கடவுள்னு ஒருத்தர் இருக்கார். நீ அவருக்குப் பூஜை பண்ணலைனா உன்னைத் தண்டிப்பார்’னு சொல்லித்தான் வளர்க்கிறாங்க. பரீட்சைக்கு முன் பூஜை பண்ணணும், பிள்ளையார்சுழி போடலைனா மார்க் வராதுன்னு சொல்றதெல்லாம் பாதுகாப்பின்மைதான். ‘கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா அவர் நல்லவராத்தானே இருக்கணும். இந்த பூஜையெல்லாம் பண்ணினாதான் மார்க் போடுவாரா?’ - ஸ்கூல் படிக்கும்போது இந்தமாதிரியான கேள்விகள் தோண ஆரம்பிச்சுது.
ஆனா கடவுளை நம்பாதேன்னு சொல்லமாட்டேன். ஏன்னா அந்த நம்பிக்கை எனக்கே இருக்கா இல்லையானு தெரியாது. முடிஞ்சவரை நல்லது பண்றேன், யார் மனசையும் புண்படுத்தக்கூடாதுன்னு முயற்சி செய்றேன். இதெல்லாம் ஒரு ஞாபகம்தான். நாம வாழ்றோம், சாகப்போறோம். இதுக்கிடையில் ஏதாவது ஒண்ணு பண்ணிட்டு இருக்கப்போறோம். நான் ஒண்ணும் பெருசா இன்னும் சாதிக்கலை. பெருசா ஏதும் சாதிக்கணும்னு வேண்டிக்கப் போறதும் இல்லை. சாதிக்கணும்னா நாமளா முயற்சி எடுத்து பண்ணப்போறோம். அதுல தோல்வியா இருந்தாலும் வெற்றியா இருந்தாலும் ஓ.கே. நம்ம வாழ்க்கையை நாமதான் வாழ்ந்தாகணும். அவ்வளவுதான்.”

“ஹாரர் படங்கள்ல நடிக்கப் பிடிக்காதுனு சொல்லியிருந்தீங்க. ஏன்?”
- பிரதீப்
“ஹாரர் படங்களைப் பார்க்கமாட்டேன். அந்த சவுண்ட் எஃபெக்ட், மியூசிக் மட்டும்தான் பயமுறுத்துதே தவிர பேய்கள்ல நம்பிக்கை கிடையாது. அந்த சவுண்ட் எஃபெக்டோட பூனை வந்தாலும் பயமா இருக்கும். எனக்கு இந்த மாதிரிப் பேய்ப்படங்களைப் பார்த்தா காமெடியாதான் இருக்கும்.”
“ ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல பெரிய நடிகர் பட்டாளமே இருக்கு. புதிய ஆட்களுடன் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?”
- வெய்யில்
“நிறைய நடிகர்களோட நடிக்கிறது எப்பவுமே இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். நான் நடிகர்களை வெளியே சந்திச்சுப் பேசுறது ரொம்பவே குறைவு. ஆனா இந்த ஷூட்டிங் ஸ்பாட்ல சக நடிகர்களைப் பார்க்கும்போது நல்லாயிருக்கு. இதில் சிலரோட நடிப்பு பிடிச்சிருந்திருக்கு. அப்படிப்பட்டவங்களோட வேலை செய்யும்போது அவங்க எப்படி ஒரு காட்சியை அணுகுறாங்கனு பார்க்கமுடியுது. பெர்சனலா அவங்களைப் பற்றி தெரிஞ்சுக்குறதுக்கும் ஒரு வாய்ப்பா இருக்கு.”