
மா.பாண்டியராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்
ஸ்கிரிப்ட் ரைட்டர், இயக்குநர், ட்ராவலர் இப்போது நடிகர் என தன் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர் ஜி.எம்.குமார். இவர் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த ஹைனெஸ் கதாபாத்திரம் இவரை ஒரு தேர்ந்த நடிகராக மக்கள் மனதில் பதிய வைத்தது. தன் வயதையும், தனக்கிருக்கும் உடல் உபாதைகளையும் மீறி பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவரைச் சந்தித்தேன்.
“இயக்குநராக நான்கு படங்கள் மட்டுமே பண்ணியிருக்கீங்களே, அதற்கடுத்து ஏன் படம் பண்ணலை?”
“நான் எடுத்த நான்கு படங்களுமே சென்சார் போர்டு கொத்திப்போட்டதற்குப் பிறகுதான் ரிலீஸ் ஆச்சு. என்னை, `இந்த மாதிரியெல்லாம் படம் எடுக்காதீங்க’னு சொன்னாங்க. பல காட்சிகளை வெட்டினாங்க. `எந்தக் காட்சியையும் நீக்காம ரிலீஸ் பண்ண முடியாது. அப் நார்மலா படம் எடுக்காதீங்க’னு சொன்னாங்க. கமர்ஷியலா படம் எடுக்குறதுக்காக நான் சினிமாவுக்கு வரலை. அதனால் நான் அடுத்துப் படம் எடுக்கலை. `அவருக்கு அந்தப் பழக்கம் இருந்துச்சு; இந்தப் பழக்கம் இருந்துச்சு; அதனாலதான் அடுத்துப் படம் எடுக்கலை’னு என்னைப் பத்தி நிறைய பேர் சொன்னாங்க. ஆனால், நான் படம் எடுக்காதததுக்கு சென்சார் போர்டுதான் காரணம். ஆனால் இப்போ என்கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. டெல்டா பகுதிகளில் ஆயில் எடுக்குறது சரியா தப்பா, விவசாயத்தோட எதிர்காலம் என்ன, சுற்றுச்சூழலுக்காக இப்போ நடக்குற போராட்டங்கள் சரியா, இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை என்னன்னு ஒரு கதை ரெடி பண்றேன். கண்டிப்பா இதைப் படமாப் பண்ணிடுவேன்.’’

“இளையராஜாகிட்ட இருந்து ஒரு பெஸ்ட் பாடல் வாங்கி அதைப் படத்தோட டைட்டில் கார்டில் வைக்கிற யோசனை எப்படி வந்தது..?”
“இளையராஜா மேல இருக்கிற பயங்கரமான மரியாதை, பயங்கரமான லவ், பயங்கரமான வெறியில அவர்கிட்ட எவ்வளவு சாங் வாங்க முடியுமோ அவ்வளவு சாங் வாங்கிடணும்னு நினைச்சேன். ‘அறுவடை நாள்’ படத்தோட டிஸ்கஷனில் ‘தேவனின் கோயில்’ சாங் இருந்தது. ஆனால், ஸ்கிரிப்ட் ஃபைனல் ஆகும்போது அந்த சாங் இல்லை. இருந்தாலும் ராஜா சார்கிட்ட இந்த சாங்கைக் கேட்டேன். அப்போ ராஜா சார், ‘இந்த சாங் படத்துல வராதே’னு சொன்னார். `இல்லை சார், வரும்’னு சொன்னதுக்கு, ‘நான் வராதுனு சொல்றேன். சரி, நீங்க கேட்கிறதுக்காக போட்டுத்தரேன்’னு சொல்லிட்டு ‘தேவனின் கோவில்’ சாங் போட்டுக்கொடுத்தார். அவர் சொன்ன மாதிரி படத்துல அந்த சாங்கை வைக்க முடியலை. அதனாலதான் டைட்டில் கார்டில் வைத்தேன். டைட்டில் ரீல் 350 அடிதான்; அதுக்காகப் பாதி பாடலை கட் பண்ணிட்டேன். ராஜா சார் அதைப் பார்த்துட்டு ரொம்ப கோவிச்சுக்கிட்டார். அதனால அந்தப் பாட்டை அப்படியே ரீ ரெக்கார்ட்டிங்ல யூஸ் பண்ணிட்டு, ‘இப்போ என்ன பண்ணுவே’னு என்கிட்ட கேட்டார். அதான் ராஜா!’’
“நீங்க இயக்குன முதல் படத்தோட ஹீரோயினையே கல்யாணமும் பண்ணிக்கிட்டீங்க. அந்த கதையைச் சொல்லுங்க..”
“80-களிலேயே லிவ்விங் டு கெதரில் வாழ்ந்த ஜோடி நாங்கள் தான். எங்க அப்பா, அம்மா கல்யாணம் பண்ணிக்கங்க, கல்யாணம் பண்ணிக்கங்கனு சொல்லிட்டே இருந்தாங்க. அவங்களைப் பார்க்கப் போகும்போது மட்டும் பல்லவி தாலி கட்டிப்பா. இப்படி நானும் அவளும் ரொம்ப வருஷம் வாழ்ந்தோம். ஒரு நாள் சமயபுரம் கோயில்கிட்ட இருந்த ஒரு மரத்தடியில் சாப்பிட்டுட்டு இருந்தோம். அப்போ திடீர்னு எனக்கு ஒரு யோசனை வந்தது. ‘பல்லவி நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’னு கேட்டேன். `ஓ பண்ணிக்கலாமே’னு அவளும் சொன்னாள். அவ வெச்சிருந்த தாலியை வாங்கி அந்த இடத்துலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு குழந்தை இல்லை. அதனால் பல்லவியோட அண்ணன் மகனைத் தத்தெடுத்து வளர்ந்தோம். பையனுக்குக் கல்யாணமும் பண்ணி வெச்சோம். மும்பை வெள்ளத்தில் எங்க பையன் இறந்துட்டான். நான் தயாரிச்சு இயக்கிய படத்தால் பெரிய நஷ்டத்தில் மாட்டிக் கொண்டேன். இப்படித் தொழில் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பிரச்னைகள் இருந்ததால், நாம இனிமேல் சேர்ந்து வாழ முடியாதுனு நாங்களே முடிவு பண்ணிட்டோம். பல்லவி இப்போ அமெரிக்காவில் இருக்காங்க.’’
“நீங்க உதவி இயக்குநராகவும் இயக்குநராகவும் இருந்தபோது படைப்பாளிகள் சந்தித்த பிரச்னைகள் என்ன..?”
“அப்போ இருந்த பிரச்னை போட்டிதான். நான் உதவி இயக்குநராக இருந்தப்போ ஒரு உதவி இயக்குநர் நல்ல சீன் சொல்லிட்டா நான் அதைவிட இன்னொரு நல்ல சீன் சொல்லணும்னு நினைப்பேன். எல்லா உதவி இயக்குநரும் அப்படி நினைச்சுத்தான் வேலை பார்த்தோம். ஆனால், இப்போ இருக்கிற இயக்குநர்கள் சந்திக்கிற பிரச்னையே வேற. மக்களை தியேட்டருக்கு கொண்டு வரவே கஷ்டப்படுறாங்க.
ஆந்திராவுக்கு ஒருமுறை போயிருந்தபோது, படம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க. ஆனால், இங்க மக்கள் தியேட்டருக்கு வர ரெடியா இல்லை. தியேட்டரில் படம் பார்க்காமல் டிவியில் பார்த்துட்டு இருந்தாங்க. இப்போ மொபைல் ஸ்க்ரீன்ல பார்க்கிறாங்க.
அதுமட்டுமில்லாமல், ஸ்கிரிப்ட் டிஸ்கஷனே இப்போ மாறியிடுச்சு. நான் பாக்யராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்க்கும்போது ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தோட டிஸ்கஷன் மட்டுமே 1 வருஷம் 4 மாதம் நடந்துச்சு. எங்க உதவி இயக்குநர்கள் டீமில் எல்லா ஊர்காரர்களும் இருப்போம். அது ஏன்னா, ஒவ்வொரு ஊரிலும் மக்கள் வேற வேற மாதிரி இருப்பாங்க. ஒரு ஊரில் ரசிக்கப்படுற படம் இன்னொரு ஊரில் ரசிக்கப்படாமல் போகலாம். இப்படி எல்லா ஊர்க்காரர்களின் அனுபவங்கள் மற்றும் ரசனைகளுடன் ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுவோம். ஆனால், இப்போ யாரும் கதையை வெளிய சொல்றதே இல்லை. பெரும்பாலும் தனியான ஸ்கிரிப்ட்ஸ்தான்.’’

“நடிக்க வந்ததற்காக காரணம் என்ன..?”
``சினிமாவில் இருக்கிற துறைகளில் எனக்குப் பிடிக்காதது நடிப்புதான். கேமராவுக்கு முன்னாடி வருவதே எனக்குப் பிடிக்காது. ஆனால், பாக்யராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா இருக்கும்போது என்னை அவர் படத்தில் நடிக்க வெச்சார். அப்பறம் அது எடிட்டிங்ல போயிடுருச்சு. அப்பறம் `கேப்டன் மகள்’ படத்தில பாரதிராஜா சார் என்னை நடிக்க வெச்சார். அதுக்கப்பறம் `தொட்டிஜெயா’ படத்துல வி.இஸட்.துரை நடிக்க வெச்சார். ஷங்கர் சார் ஆபிஸ்ல இருந்து `வெயில்’ படத்துக்குப் பேசினாங்க. அந்தக் கதையைக் கேட்கும்போதே, `இந்த கேரக்டரில் என்னால சத்தியமா நடிக்க முடியாது, விட்டுடுங்க’னு சொன்னேன். `இல்லை நீங்கதான் நடிக்கணும்’னு நடிக்க வெச்சாங்க. அந்தப் படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சது. அப்பறம் `மாயாண்டி குடும்பத்தார்’ படத்துல நடிச்சபோதும் பாராட்டுகள் வந்துச்சு. ஆனால், அதுவரை எனக்கு நடிப்புல ஆர்வமே இல்லை. ‘அவன் இவன்’ படம்தான், ‘பரவாயில்லையே, நாமளும் தொடர்ந்து நடிக்கலாம்போல’னு தோண வெச்சது. முதல்ல அந்தப் படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரம்தான் பாலா சார் கொடுத்தார். அப்பறம் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்கள் பண்ணிட்டு, முழுக் கதையையும் என்கிட்ட சொன்னார். க்ளைமாக்ஸில் நீங்க நிர்வாணமா நடிக்கணும்னு சொன்னபோது தூக்கி வாரிப் போட்டுடுச்சு. அவர் அந்தக் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது, ‘சார் இந்த சீனைக் கடைசி நாள் எல்லாரும் போனதுக்கு அப்பறம் எடுத்துக்கலாம்’னு சொன்னேன். ஆனால், நுற்றுக்கணக்கான நபர்கள் முன்னாடி 12 நாள்கள் அந்தக் காட்சியை எடுத்தாங்க. `அவன் இவன்’ படத்துக்கு அப்பறம் நடிப்பு மேல அதிக ஆர்வம் வந்துடுச்சு. ஆனால், என்னோட தோற்றத்துக்கு ஏற்ற மாதிரியான படங்கள் மட்டும்தான் என்னைத் தேடி வருது. அந்தப் படங்களில் மட்டும்தான் நடிச்சுட்டு இருக்கேன்.’’
“கலைஞர்கள் பொதுப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்குறது இப்போ அதிகமா இருக்குறதை எப்படிப் பார்க்குறீங்க..?”
``இப்போதுள்ள சூழலுக்கு அது தேவை. எங்களோட காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் மட்டும்தான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தார். அவர் இரண்டையும் பிரித்து வைத்திருந்தார். அதே மாதிரிதான் கருணாநிதியும். இவங்க கலைத்துறையில் இருந்தாலும் மக்களை சரியாகவும் வழி நடத்துனாங்க. ஆனால், இப்போ மக்களைப் பார்த்துக்க வேண்டியவங்க சரியாப் பார்த்துக்காததால் மக்களுக்காக சினிமா கலைஞர்களும் குரல் கொடுக்க வேண்டியதாக இருக்கு. ஏன்னா, சினிமா கலைஞர்களும் மக்களால் மேல வந்தவங்க தானே. அதனால் குரல் கொடுக்க வேண்டியது அவசியம். இதை நான் வரவேற்கிறேன்.’’