
அய்யனார் ராஜன் - படம்: தி.குமரகுருபரன்
ஹாட்ரிக் விருது, ரஷ்யப் பயணம், புது வீடு... செம உற்சாகத்தில் இருக்கிறார், ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா. விரைவில் கணவர் தினேஷ் ஜோடியாக சீரியல் ஒன்றில் நடிக்க விருக்கிறார்.
‘`என் சொந்த ஊர் பெங்களூர்லயே இப்போ என்னை எங்கே பார்த்தாலும் மக்கள் மீனாட்சின்னுதான் கூப்பிடறாங்க, அந்தளவுக்கு ‘மீனாட்சி’ என் அடையாளமாவே ஆகிடுச்சு. ‘சரவணன் மீனாட்சி’ முதல் சீசன் ஹீரோயின் ஸ்ரீஜா நல்ல பேர் வாங்கியிருந்தாங்க. ஸ்ரீஜா - செந்தில் நிஜ வாழ்க்கையிலேயும் சேர்ந்துவிட, சீஸன் 2வில் ஹீரோயினா செலக்ட் ஆனேன். அப்போ, ‘ஸ்ரீஜாவை ஏத்துக்கிட்ட மாதிரி மக்கள் என்னையும் ஏத்துக்குவாங்களா’னு தோணுச்சு. ஆனா, அந்த சீசன்லேயே ரெண்டு மூணு ஹீரோக்களைக் கடந்துட்டு, இப்போ அடுத்த சீசன்லேயும் நாலாவது ஹீரோகூட சீரியல் போய்க்கிட்டு இருக்கு. எனக்கே இதை நம்ப முடியலை. வாழ்க சீரியல் ரசிகர்கள்!
சீரியலை ஒளிபரப்பும் சேனல்கிட்ட இருந்தே விருது வாங்குறது, என்னைப் பொருத்த வரை பெரிய விஷயம். ‘அவங்களே ஒளிபரப்புவாங்களாம்; அவங்களே விருது கொடுத்துக்குவாங்களாம்’னு ஈஸியா கமென்ட் பண்ணலாம். ஒரே ஸ்கூல்லதான் எல்லோரும் படிக்கிறாங்க; ஆனா, ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்ற பசங்களைக் கொண்டாடுறதில்லையா... அந்த மாதிரிதான் இதுவும்.’’

“என்ன, திடீர் ரஷ்யப் பயணம்?”
“ரஷ்யாவில் வாழும் தமிழர்களுக்கான அமைப்பு ஒன்று, வருடா வருடம் தமிழ் சினிமா, டிவி ஏரியாவுல இருந்து ஒருத்தரைத் தேர்வுசெய்து விருது தர்றாங்க. ‘ரஷ்யத் தமிழர்கள் மத்தியில ரீச் ஆன சீரியல் நடிகையா நீங்க இருக்கீங்க. அதனால் ரஷ்யா வந்து விருது வாங்கிக்கணும்’னு என்னைத் தொடர்புகொண்டு கேட்ட அந்த நிமிடம் எனக்கு சிரிப்பு வந்திடுச்சு. `விட்டா, விளாடிமிர் புதினே சரவணன் மீனாட்சி பார்க்கிறார்னு சொல்லிடுவீங்களே’னு கலாய்ச்சுட்டு போனை வெச்சுட்டேன். அப்புறமென்ன... ஃபிளைட் ஏறி மாஸ்கோ போய் இறங்கியாச்சு. நாலு நாள் அனுபவம் மறக்கவே முடியாது. நிறைய இடங்களைச் சுத்திப் பார்த்தேன். அப்பதான் அங்கே தேர்தல் முடிஞ்சிருந்ததால, அதிபர் மாளிகையை மட்டும் எட்டி நின்னுதான் பார்க்க முடியும்னு சொல்லிட்டாங்க. அதுதான் சின்ன வருத்தம்’’.
“கணவருடன் சேர்ந்து சீரியலில் நடிக்கப்போறீங்களாமே!?”
“புராஜெக்ட் தொடங்கிடுச்சு. வழக்கமா சீரியல்னா மாமியார் வீட்டுக் கதையாதானே இருக்கும்? இது என்னோட மாமியார் ஊர் கதை. நான் வாழ்க்கைப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சுத்தி நடக்கிற கதை. ‘பிரிவோம் சந்திப்போம்’ல தினேஷ்கூட சேர்ந்து நடிச்சப்போ எங்களுக்குள்ள காதல் மலர்ந்து, நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணமாகிப் பல வருடமான நிலையில, மறுபடியும் நாங்க காதல் ஜோடியா நடிக்கப்போற அந்த அனுபவத்துக்கு வெயிட்டிங்!”
“நீங்க பெங்களூருப் பொண்ணு. தினேஷ், தமிழ்நாடு. உங்க வீட்டுல காவிரி விவகாரம்லாம் எதிரொலிக்குமா?”
‘`என்னைக் காதலிக்கிறதா சொல்லி எங்க வீட்டுல அவர் அனுமதி கேட்டப்போ, எங்க வீட்டுத் தரப்புல யோசிச்ச நிறைய விஷயங்கள்ல காவிரியும் ஒண்ணு. ரெண்டு தரப்பு பெரியவங்களும் கூடியிருந்த சூழல்ல, எங்க வீட்டு ஆளுங்களோட தயக்கத்தைக் கலைக்கிற மாதிரி இவர் விட்ட ஒரு கமென்ட், ஒரு நொடியில நல்ல முடிவைக் கொடுத்துச்சு. அது என்ன தெரியுமா, ‘தண்ணிதான் தரமாட்டேங்கிறீங்க, பொண்ணாச்சும் கொடுங்களேன்!’ ’’
ரசிக்கும்படி சிரிக்கிறார் ரச்சிதா.