
வெய்யில் - படங்கள்: கே.ராஜசேகரன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகும் இதென்ன அதிகப்பிரசங்கித்தனம்?’னு கேட்கிறாங்க. மனித உடன்பாடும் இணக்கமும் இல்லாமல் எதுவும் நடக்காது. சுப்ரீம் கோர்ட் சொன்ன பிறகும்கூட, ‘என்ன செய்ய முடியும்?’ எனத் தோளைக் குலுக்கியவர்கள்தானே அவர்கள். சட்டம், நீதிமன்றம் அனைத்தையும் தாண்டி மனிதநேயமும் உறவும் அவசியம். அது கூடுதலாகப் பல விஷயங்களைச் சாத்தியப்படுத்தும்” - நம்பிக்கையோடு பேசியபடி, ‘பிக்பாஸ்’ ஷூட்டிங்குக்குத் தயாராகிறார் கமல்.

“கடந்த முறை, ஒரு நடிகர் என்ற அடையாளத்தோடு மட்டும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினீர்கள். இன்று ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவர். இப்போது, ஒரு கமர்ஷியல் டி.வி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது சரிதானா?”
“இதில் சரி - தவறு என்ற விமர்சனங்களைத் தாண்டி, பல கோடி மக்களைச் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு. இது சினிமாவில் இருந்தாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் கிடைக்காது. இதை நான் இழக்க விரும்பவில்லை.”
“அரசியல் வருகைக்கான எல்லா சமிக்ஞைகளையும் பிக்பாஸில் வெளிப்படுத்தினீர்கள். இந்த முறையும் உங்கள் அரசியல் உரையாடலுக்கு ‘பிக்பாஸ்’ மேடையைப் பயன்படுத்துவீர்களா?”
“ஓரளவுக்குத்தான் பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். நிகழ்ச்சி சார்ந்த பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் நின்று நாம் உரையாடுவோம்!”
“பிக்பாஸ் போலவே யாவும் கண்காணிக்கப்படுகிற உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆதார் கார்டு குறித்துகூட பல சந்தேகங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“எந்தக் காலத்திலும், தனிமனித உரிமைகளும் அந்தரங்கங்களும் காக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஓர் அரசு, மக்களின் அந்தரங்கம் சார்ந்த சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் உறுதியளிக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டையைக்கூட ஆரம்பத்தில் நான் மிகத் தேவையான ஒன்றாகவே கருதியிருக்கிறேன். உள்ளே சென்று பார்க்கும்போது, பல விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டியவையாக இருக்கின்றன. அமெரிக்காவில் வழங்கப்படும் ஆதார் கார்டும் இந்தியாவில் வழங்கப்படும் ஆதார் கார்டும் ஒரே மாதிரியானவை அல்ல. அந்த வித்தியாசங்களை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஆதார் கார்டே வேண்டாம் என்று சொல்ல வேண்டியதில்லை, அதில் இடம்பெற்றிருக்கிற ‘கூடாது’களை வரையறுக்க வேண்டும்; சந்தேகங்களைக் கேள்விகளாக முன்வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது. ‘இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ!” என்று கேட்டது சித்தர் பாடல். இவர்கள், ‘ஆமாம்’ என்கிறார்கள்.”
“வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அரசு பல்வேறு திட்டங்களை, நிறுவனங்களை உள்ளே கொண்டுவருவதும் மக்கள் அதை எதிர்ப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது. இதில் மக்களுக்கு நம்பிக்கை தருகிற தரப்பு என்ற ஒன்றே இல்லையே?”
“அப்படியானவர்களாக நாம்தான் இருக்க வேண்டும். கவிஞர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள், அறிஞர்கள், கள அறிவுள்ளவர்கள் என நாம்தான் அஞ்சாமல் நின்று பேச வேண்டும். அதே சமயம் அனைத்துத் திட்டங்களையும் மக்கள் எதிர்ப்பது என்பதும் தவறுதான். சில விஷயங்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் கருத்தே தெரிவித்திருக்காது. ஏனென்றால், அதைப் பற்றிய எங்கள் ஆய்வு இன்னும் முடியவில்லை என்று அர்த்தம். தூத்துக்குடிபோல, இன்றைக்குச் சென்னையில் நாம் எதிர்கொள்கிற ஒரு முக்கியமான விஷயம் காமராஜர் துறைமுகம். மக்களைக் கேட்காமல் அவர்கள் பாட்டுக்கு அதை விரிவு படுத்திக்கொண்டே போகிறார்கள். ஓர் ஆற்றையே ஆக்கிரமித்துக்கொண்டி ருக்கிறார்கள். காமராஜர் பெயரில் ஒரு துறைமுகம் என்பது மகிழ்ச்சிதான். முன்னேற்றம் கூடாது என்பதல்ல நமது வாதம். அந்த முன்னேற்றத்தால் ஒரு நகரத்திற்கே பாதிப்பும் ஆபத்தும் வருவதை நாம் அனுமதிக்க முடியாது.”
“ ‘எல்லாவற்றுக்கும் போராட்டமா?’ என்ற கருத்து ஒரு தரப்பால் முன்வைக்கப்படுகிறது. போராட்டம் பற்றிய உங்களது கருத்து என்ன?”
“போராட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது. போராட்டங்கள் இல்லாமல்தான் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்று இவர்கள் நம்புகிறார்களா? வெள்ளைக்காரர்கள், ‘இந்த விளையாட்டு போரடிச்சிடுச்சு’ என்று கொடுத்து விட்டுப் போய்விட்டதாக நினைக்கிறார்களா? அம்பேத்கர் ஒரு வழியில் போராடிக்கொண்டி ருந்தார், சுபாஷ் சந்திரபோஸ் ஒரு வழியில் போராடிக்கொண்டிருந்தார், பகத்சிங் ஒரு வழியில் போராடிக்கொண்டிருந்தார், எத்தனை விதமான போராட்டங்கள்...
வாஞ்சிநாதன் தான் செய்வது போராட்டம் என்று நம்பித்தான் அன்று அப்படிச் செய்தார். ஆனால், அன்றைய சட்டத்தைக்கொண்டு பார்த்தால் அது கொலை. போராட்டங்களை விமர்சனம் செய்யுங்கள். ஆனால், போராட்டமே கூடாது என்று சொல்லாதீர்கள்; சுட்டுக்கொல்லாதீர்கள்.”

“போராட்ட வடிவங்களின் போதாமையை உணர்கிறீர்களா?”
“நிச்சயமாக. நம்மிடமிருக்கும் பெரும்பான்மையான போராட்ட வடிவங்கள் பழையவை. அதனால்தான், மக்கள் நீதி மய்யத்தில் உண்ணாவிரதப் போராட்டம் கிடையாது என்று அறிவித்தோம். இன்னும் ஏராளமான புதிய போராட்ட வடிவங்கள் வேண்டும். வெறும் புதிய உத்திகளாக அல்லாமல், மக்களை உந்துகிறவையாக இருக்க வேண்டும்; எதிர்க்கப்பட வேண்டி யவர்களுக்கு அழுத்தம் தரக்கூடியவையாக இருக்க வேண்டும். அதே சமயம் ரத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
“யார் பக்கமிருந்து?”
“இரண்டு பக்கமிருந்தும். குறிப்பாக அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போராட்டம் ஒருபோதும் வன்முறையாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியானால், தூத்துக்குடிப் போராட்டத்தில் வன்முறை நிகழவில்லையா என்று கேட்பார்கள். சரி, உங்களிடம் தலைக்கவசம் இருக்கிறது, தடியடிக்கான அனுமதியிருக்கிறது. இவற்றையெல்லாம் கையில் வைத்துக்கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் சட்டென்று சுட்டுவிடலாமா? எனக்கென்னவோ இது பதற்றத்தில் செய்த துப்பாக்கிச்சூடு மாதிரியே தெரியவில்லை. அரசுக்கே உரிய ராஜ கோபத்தோடு செய்ததுபோலவே இருக்கிறது”
“தூத்துக்குடி சென்று திரும்பிய ரஜினி, ‘எதற்கெடுத்தாலும் போராட்டமென்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்’ என்று பேசினார். அவரது ‘காலா’ படத்தில், ‘உடல்தான் நம் ஆயுதம், போராட வாருங்கள்’ என்றார். இதுபோலவே, நீங்கள் அரசியலில் மதச்சார்பற்றவராக வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள். விஸ்வரூபம் இந்தி ட்ரெய்லரில், ‘முசல்மானாக இருக்கலாம். ஆனால், தேசத்துரோகியாக இருக்கக் கூடாது’ என்ற வசனத்தைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இந்த இரு முரண்களை எப்படிப் புரிந்துகொள்வது?”
“ஒரு படத்தின் ட்ரெய்லர் காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு முழுப்படத்துக்குமான விமர்சனத்தைச் சொல்லிவிடக்கூடாது. முஸ்லிம்களைத் தாக்கிப் படம் எடுக்க நான் என்ன பி.ஜே.பி. கட்சியிலா சேர்ந்திருக்கிறேன்? முகமது ஜிப்ரான் இந்தப் படத்தில் இருக்கிறார். அவர் ஓர் இஸ்லாமியர்தான். அப்படி நான் காட்சிகளை, கருத்துகளை வைத்திருந்தால் அவருக்கு உறுத்தியிருக்காதா? ‘இந்தப் படத்தில் என்னால் ஏற்க முடியாத கருத்துகள் இருக்கின்றன. எனவே என்னால் இசையமைக்க முடியாது’ என்று சொல்லிவிட்டுப் போகும் அளவுக்குத் தெம்புடைய தம்பிதான் அவர்.
நான் எதைச் செய்தாலும் அதைத் தவறு என்று முழக்கமிடுவது ஓர் அரசியல்தான். ‘விஸ்வரூபம்’ படம் வெளியீட்டு சமயத்தில், படத்தில் பெரிதும் அவமானப்படுத்துகிற, புண்படுத்துகிற காட்சிகள் இருப்பதாகச் சொல்லிப் போராட்டம் நடத்தினார்களே, அதில் அப்படியென்ன காட்சி இருந்தது, சொல்லுங்கள். அது ஓர் அரசியல் விளையாட்டு!”
“ஜிப்ரான் எப்படி இந்தப் படத்திலிருந்து ‘முகமது ஜிப்ரான்’ ஆனார்?”
“அவர் கேட்டார், நான் டைட்டில் கார்டில் போட்டேன். அவ்வளவுதான்! சிலர் நியூமராலஜிக்காகப் பெயரை மாற்றிக்கொள்வார்கள். சிலர் ஒரு கட்டத்தில் நமது பெயர் இப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். பெயர்கள் அவரவர் விருப்பம்தானே!”
“ ‘விஸ்வரூபம்’ எதிர்ப்பு அரசியலுக்குப் பின்னே இருந்தவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்?”
“அதற்குப் பின்னிருந்தவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். மரணம் ஒருவரை எல்லா வகையிலும் குற்றமற்றவராக்கிவிடாது. நான் வெளிப்படையாகத்தான் சொல்கிறேன். தகாத வார்த்தைகளையெல்லாம்கூடப் பேசினார்கள். நான் அவர்களையெல்லாம் முஸ்லிம் மக்களின் குரலாக எடுத்துக்கொள்ளவில்லை. எல்லா மதத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். பகுத்தறிவுவாதிகளிலும்கூட நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.”
“அரசியல்வாதிகள் பேசுகிற சினிமா வசனங்கள், சினிமாக்காரர்கள் பேசுகிற அரசியல் வசனங்கள், இரண்டையும் ஒன்றாகக் கணக்கிலெடுத்துக்கொள்வது சரியா?”
“மக்கள் அப்படிப் பார்க்கத்தான் செய்வார்கள். ஏனென்றால், அரசியலில் சினிமாவும் சினிமாவில் அரசியலும் இருக்கத்தான் செய்கிறது. ‘ஹேராம்’ படம், இன்றைய அபாயங்களை எல்லாம் முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய படமாக இருந்தது. அது ஒரு முன்னறிவிப்பு. இப்படியே போச்சுனா என்ன ஆகும் என்கிற என்னுடைய பதற்றம்தான் அந்தப் படம். ‘விருமாண்டி’யும் அரசியல் படம்தான், வெளிப்படையாக அல்லாமல் உள்ளுக்குள் இருக்கும் அதன் அரசியல்.”
“பெண் துணை இல்லாத இன்றைய உங்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?”
“என் வாழ்க்கையில், என் அருகில் எப்போதுமே பெண்கள் இருந்துவந்திருக்கிறார்கள்; இருப்பார்கள். பெண் துணை என்பது என்ன, வெறும் பாலியல்தேவை சார்ந்த விஷயம் மட்டும்தானா... அப்படியானால், அம்மா அக்கா உறவெல்லாம் எதற்கு? (பெண் உதவியாளர்களைக் காட்டி) இதோ இவர்களெல்லாம் என் வாழ்க்கையில்தானே இருக்கிறார்கள். மேலும், வாடா போடா என்று என்னை அழைத்துப் பேசுகிற நிறைய தோழிகள் இருக்கிறார்கள். காதலிகளிடம் அழுவதைவிட, பேரிளம் தோழிகளிடம் அழுவது சந்தோஷமாக இருக்கிறது. மனிதனுக்கு உறவில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு தேவைகள் இருக்கும். துணை என்பது பொண்டாட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.”
அவரது குரலில் அழுத்தம் தெரிகிறது.