சினிமா
Published:Updated:

கோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்

கோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்

கோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்

கோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்

சாதாரண நிலையில் இருந்து முன்னேறி, சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் சாதிவெறி, அரசியல் அதிகாரம், ரௌடித்தனம் ஆகியவற்றின் கொடூர பாதிப்பைச் சொல்வதே ‘கோலிசோடா 2’.

கோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்


தாதாவின் டிரைவராக வேலைபார்க்கும் பரத் சீனிக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசை. ஆட்டோ டிரைவர் வினோத்துக்கு சொந்தமாகக் கார் வாங்கி ஓட்ட ஆசை. பரோட்டாக் கடையில் வேலைபார்க்கும் இசக்கி பரத்துக்கு பேஸ்கட் பாலில் சாம்பியனாகி ஃபேக்டரியில் வேலை வாங்க ஆசை. இவர்களின் ஆசையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கத் துடிக்கும் மூன்று வில்லன்களைப் பழிவாங்க எப்படி இணைந்த கைகளாய் ஒன்றாகிறார்கள் என்பதை, தனக்குப் பழக்கமான ஹிட் ரூட்டில்  கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். 

பரத் சீனி, வினோத், இசக்கி பரத் என்று மூன்று நாயகன்களும் ஆவேசத்திலும் ரொமான்ஸிலும் அசத்துகிறார்கள். சமுத்திரக்கனி வாழ்க்கையின் தத்துவங்களைப் பிட்டுப்பிட்டு வைக்கும் வழக்கமான கேரக்டர். கலக்கியிருக்கிறார். ஆனால் பணத்தையும் உடைமைகளையும் எடுத்துக்கொண்டு ஓடுவதைத் தவிர, வேறு எதற்கும் அவர் ஃபார்மசியைத் திறக்காதது ஏன் என்று தெரியவில்லை. கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக ஏதோ அதிரடி செய்யப்போகிறார் என்று நினைத்தால், முதல் காட்சியில் தாடியுடன் வந்து, கடைசிக் காட்சியில் மழித்த முகத்துடன் தோன்றுகிறார். அவ்ளோதான் அதிரடி!

கோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்

ஷரவண சுப்பையாவும், சாதிச்சங்கத் தலைவர் சீமைராஜாவாக வரும் ஸ்டன்ட் சிவாவும் அசத்தல் வில்லன்கள். ரவுடியாக மலையாள இயக்குநர் செம்பன் வினோத் ஜோஸ் அட்டகாசமான தமிழ் வரவு. ரோகினி வரைந்து காட்டும் சித்திரக்கதை... ஹைகூ! சுபிக்‌ஷா,  கிரிஷா குரூப், ரக்ஷிதா என மூன்று ஹீரோயின்களில் துறுதுறுப்பாய் சுபிக்‌ஷா மனதில் அழுத்தமாய்ப் பதிகிறார்.

விஜய் மில்டனின் கேமரா 360 டிகிரியில் சுற்றிச் சுழன்றிருக்கிறது. தீபக்கின் எடிட்டிங் டேபிள் ஒரு விறுவிறு ஆக்‌ஷன் சினிமாவைக் கொண்டு வர கடுமையாக உழைத்திருக்கிறது. அச்சு ராஜாமணியின் இசையில் ‘என் பொண்டாட்டி’ பாடல் க்யூட் கவிதை. பின்னணி இசையில் டெம்போ குறையாமல் பின்னி எடுத்திருக்கிறார் அச்சு.

 இடைவேளை வரை சீட் நுனிக்குத் தள்ளும் காட்சிகள் இடைவேளைக்குப் பின் திசைமாறி அலைகின்றன. அதிலும் மூன்று ஹீரோக்களும் இணைந்து நூற்றுக்கணக்கானவர்களை அடித்து நொறுக்குவதெல்லாம்.... ஏன்பா ஏன்?

முதல் பாதியின் யதார்த்தம் இரண்டாம் பாதியில் குறைவு என்பதால் ‘கோலிசோடா - 2’வில் சத்தம் அதிகம், சாதனை குறைவு!

- விகடன் விமர்சனக் குழு