சினிமா
Published:Updated:

விஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்!

விஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்!

ம.கா.செந்தில்குமார்

விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படம் வெளியான 1992ம் ஆண்டைக் கணக்கில் கொண்டு, சினிமாவுக்கு வந்த 25வது ஆண்டு என்று ‘மெர்சல்’ வெளியீடு சமயத்தில் கொண்டாடினார்கள். ஆனால், விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 1984ம் ஆண்டைக் கணக்கில் கொண்டால், இது அவர் சினிமாவுக்கு வந்த 35ஆம் ஆண்டு. ஜூன் 22ம் தேதி அவரின் பிறந்த நாள். சினிமாவிலிருந்து அடுத்த அரசியல் வரவு இவர்தான் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரின் அரசியல் வருகை, அடுத்தடுத்த படங்கள் குறித்துப் பார்ப்போமா?

சினிமா:

காதல், காமெடி, ஆக்‌ஷன் படங்கள் வரிசையில் கருத்து சொல்லும் அரசியல் படங்களை இப்போது தேர்ந்தெடுக்கிறார் விஜய். கதை சொல்ல வரும் இயக்குநர்களும் இந்த அரசியல் சூழலை மனதில் வைத்தே கதை சொல்கிறார்களாம்.

ஆனால், ‘‘அரசியல் களத்துக்குள் கதையைத் திணிக்காதீங்ணா. கதையின் போக்கில் அரசியல் இருந்தா ஓ.கே. நிறைய அன்பும் கொஞ்சம் வம்புமா ஸ்கிரிப்ட் பண்ணுங்க. ஏன்னா, மக்கள் தியேட்டருக்கு வரணும்; ரசிக்கணும்’’ என்பது விஜய்யின் கருத்து. முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்திலும் அரசியல் இருக்கிறது. பழ.கருப்பையா முதல்வர் வேடத்தில் நடிக்க, அவர் முன்னிலையிலேயே தீவிரமான அரசியல் வசனங்களை விஜய் பேசும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

 அடுத்து தன் 63வது படத்துக்காகப் பலரிடமும் கதை கேட்டிருக்கிறார். அதில் வெற்றிமாறன், பா.இரஞ்சித், அட்லி, ஹெச்.வினோத் ஆகிய நால்வரும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள்.  விஜய் படத்தை அடுத்து இயக்கப்போகிறவர் யார் என்பது ஜூலையில் தெரிந்துவிடும்.

விஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்!

ரசிகர்கள்:

92ல் ரசிகர்மன்றம், பிறகு நற்பணி மன்றம், 2001லிருந்து ‘விஜய் மக்கள் இயக்கம்.’ தொடக்கத்திலிருந்தே  மாதாமாதம் நேரம் ஒதுக்கி ரசிகர்களைச் சந்திப்பது விஜய்யின் வழக்கம். ஆனால் பெரிய பட்ஜெட், படப்பிடிப்பு நாள்கள் அதிகம் என்ற சினிமா காரணங்களால் மாதாமாதம் நடந்த சந்திப்பு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எனத் தற்போது சுருங்கியிருக்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக ரசிகர்களைச் சந்திப்பதையே விஜய் விரும்புகிறார்.

ஒரு சந்திப்புக்கு இரண்டாயிரம் ரசிகர்கள் என்பதுதான் கணக்கு. விஜய் சரியாகக் காலை 10 மணிக்கு வருவாராம். முதல் பாதியில் ஆயிரம் பேர், மதியத்துக்கு மேல் ஆயிரம் பேர் என, வந்திருக்கும் இரண்டாயிரம் பேரிடமும் தனித்தனியாக நின்று, தோள்மீது கைபோட்டுப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறாராம்.

 காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை உணவும் ரசிகர்களுக்கு உண்டு. மாலை கிளம்பும்போது இரவு உணவையும் அங்கேயே முடித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதே இதற்குக் காரணம். அந்தச் சந்திப்பில், ‘உங்கள் பகுதியில் உதவி தேவைப்படுவோருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். நம் இயக்கம் சார்பாகவும் செய்யலாம். உங்களால் உதவ முடியவில்லை என்றால், மக்கள் பிரதிநிதிகளிடம் பரிந்துரை செய்யுங்கள். ஆனால், விஜய்யின் மக்கள் இயக்கமும், குறிப்பிட்ட அரசியல் கட்சியும் சேர்ந்து உதவின என்பது போன்ற அரசியல் சாயம் வராததுபோல் இருக்க வேண்டும்’ என்பாராம்.

சமூகம்:


சமூக விஷயங்களை அப்டேட் செய்துகொள்வதில் விஜய்க்கு ஆர்வம் அதிகம். ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டத்தில் கலந்துகொண்டதுகூட அவர் திடீரென்று எடுத்த முடிவுதானாம். அதிகாலை 1.15 மணிக்குத் தன் உதவியாளரை அழைத்து, ‘மெரினாவுக்குப் போகலாம்’ என்று சொல்லி, கிளம்பியிருக்கிறார்.  அரியலூர் அனிதா வீட்டுக்குச் செல்லும் முடிவும் முதல்நாள் இரவுதான் எடுக்கப்பட்டதாம்.

ஆனால், சமீபத்தில் விஜய் தூத்துக்குடி சென்றுவந்தது திட்டமிடலாம். அங்கு போவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு அதன் பக்கத்து மாவட்டத்து ‘விஜய் மக்கள் இயக்க’ இளைஞர்களைச் சென்னைக்கு அழைத்திருக்கிறார். ‘எந்தெந்த வீடு எங்கெங்க இருக்குன்னு பார்த்துக்கங்க. டூவீலர்ல போறோம். பார்க்கிறோம். கிளம்புறோம். இந்தத் தகவலை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். சென்னை டு மதுரை விமானத்தில் சென்றால்கூடத் தெரிந்துவிடும் என்பதால் வீட்டிலிருந்து சாலை வழியாகவே ஒன்பது மணிநேரம் பயணம் செய்து தூத்துக்குடி சென்றாராம். அதுவும் அங்கு தன் ரசிகர் ஒருவரின் வீட்டில் ஒரு மணிநேரம் தங்கிவிட்டு, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அனைவரின் வீடுகளுக்கும் பைக்கிலேயே சென்று வந்திருக்கிறார். பிறகு இரவோடு இரவாகப் பயணம் செய்து சென்னை திரும்பிய பிறகுதான் அவர் தூத்துக்குடி சென்றுவந்த செய்தி பிரேக்கிங் ஆகியிருக்கிறது. ‘ஏன் இந்த ரகசியம்’ என்று யாராவது கேட்டால், ‘நமக்கு சினிமாவில கிடைக்கிற விளம்பரமே போதும்’ என்பாராம்.

விஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்!

பர்சனல்:

வீட்டில் உள்ளவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என விரும்புபவர் விஜய். மாதத்தில் முதல் நாளிலிருந்து தொடர்ந்து 20 நாள்கள் படப்பிடிப்பு என்றால் கடைசி 10 நாள் முழுவதும் குடும்பத்துக்குத்தான். அந்தப் பத்து நாள் முழுவதும் காலையில் அலுவலகம், மதியத்துக்கு மேல் வீடு என்றே இருப்பாராம். அதேபோல அந்த 10 நாள்களும் மகனைப் பள்ளியிலிருந்து அழைக்க இவரே நேரில் செல்வாராம். சமயங்களில் மகன் விளையாடும் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கவும் செல்வதுண்டாம். பள்ளியில் தன் மகன் சஞ்சயின் நண்பர்களிடம் மணிக்கணக்கில் பேசுவாராம். மகன் சஞ்சய் இந்த வருடம் கல்லூரி போகிறார். மகள் தியா 8ம் வகுப்பு.

தன் வீடு மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு ஞாயிறு விடுமுறை. அன்று அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது.  யாராவது அவர்களை ஞாயிறு அழைக்கச் சொன்னால், உறுதியாக மறுத்துவிடுவாராம் விஜய்.

நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்குச் செல்லும்போது சமயங்களில் இரவு தங்க நேர்ந்தால், ஏசி அறை, குஷன் பெட் என்று எதையும் எதிர்பார்க்க மாட்டாராம். சாதாரணமாகத் தரையில் பெட்ஷீட் விரித்துப் படுத்துவிடுவாராம். சமீபத்தில் வெளிநாடு போயிருந்தபோது இரவு சாப்பிட்டுவிட்டு நண்பர்கள் தூங்கியிருக்கிறார்கள். ஆனால், விஜய் கிச்சனை முழுவதும் சுத்தம் செய்துவிட்டுதான் படுத்தாராம். உணவை வேஸ்ட் செய்வது பிடிக்கவே பிடிக்காது - ஒரு பருக்கையைக்கூட விணாக்கமாட்டாராம்.

அரசியல்:

சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைப்போல், ‘ஏன் அப்படிப் பண்ணினார். இப்படிப் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும்ல’ என்று தமிழக அரசியல் குறித்து விஜய்க்கும் நிறைய ஆதங்கங்கள் உண்டு. அதை நெருங்கியவர்களிடம் பகிர்ந்துகொள்வார்.

“விஜய் மக்கள் இயக்கம் எல்லா மாவட்டங்களிலும் பரவலாக அமைந்துள்ளன. அதை அரசியல் இயக்கமாக மாற்றுவதில் இவருக்கு எவ்வித சிரமும் இருக்காது. ஆனால் கமல், ரஜினி இருவரின் அரசியல் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனித்துவருகிறார் தளபதி. அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளை வைத்து, உடனடியாக வரலாமா, கொஞ்சம் தள்ளிப்போடலாமா என்பதை முடிவு செய்வார். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதும் உறுதி; அரசியல் வருகைக்கு நீண்ட காலம் பிடிக்காது என்பதும் உறுதி” என்கிறது விஜய்யின் நெருங்கிய வட்டாரம்.

ஆகமொத்தம் விஜய் அரசியலுக்கும் ரெடி, அரசியல் சினிமாவும் ரெடி!