
புக் மார்க்

கனடா இலக்கியத் தோட்ட இயல் விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன், தன் ஏற்புரையில் தம்மூர் குற்றாலத்தையும் கனடாவின் நயாகராவையும் ஒப்பிட்டுப் பேச்சைத் தொடங்கினார். ``நயாகரா அருவியின் மேலே பறந்துகொண்டிருந்த சிறிய பறவைதான் என்னைக் கவர்ந்தது. நான் சின்ன விஷயங்களின் மனிதன்’’ என்றார் முத்தாய்ப்பாக.

``மு.அருணாசலம் எழுதிய `குமரியும் காசியும்’ என்ற நூல் மீண்டும் மறுபதிப்புக்கு வரவேண்டும். இந்த நூல், 1959-ம் ஆண்டில் வந்த முக்கியமான ஒரு நூல். இந்த நூலை `தமிழ் நூலகம்’ என்ற சொந்தப் பதிப்பகத்தின் மூலம் மு.அருணாசலமே வெளியிட்டிருந்தார். நூலின் தலைப்பைப் பார்த்து, `குமரியைப் பற்றியும் காசியைப் பற்றியுமான ஓர் ஆன்மிக நூல்’ எனக் கருதிவிடக் கூடாது. இந்த நூல், உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை, வெள்ளக்கால் பா.சுப்ரமணிய முதலியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற பத்துத் தமிழ் அறிஞர்கள் பற்றிய நல்ல அறிமுகம், அவர்களுடன் பழகும்போது ஏற்பட்ட அனுபவங்கள், அவர்களின் சிறப்புகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.
பெரிய ஆளுமைகளின் குணங்கள், வாழ்வியல்முறை, மற்றவர்களுடன் எப்படிப் பழகினார்கள் என்று அவர்களின் அன்றாட வாழ்க்கை பற்றித் தெரிந்துகொள்வதற்கு இந்த நூல் பெரிதும் பயன்படும். ஆளுமைகளின் அறிவுத்தளம் மட்டுமல்லாது அவர்களின் நடைமுறை யதார்த்தம் எப்படியிருந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் இந்த நூல் பயன்படும். பெரிய ஆளுமைகளுடன் பழகிய அனுபவங்களை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதை விளக்கும் ஆரம்பகால வழிகாட்டி. அதனால்தான் தொடர்ந்து இந்த நூல் பற்றியும், இது மொழிபெயர்ப்பு ஆகவேண்டியதன் தேவை குறித்தும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பதிவுசெய்து வருகிறேன்.’’
- பெருமாள் முருகன்

`திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்பட இயக்குநர் அனீஸின் அடுத்த படமான `பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படத்துக்கு வசனம் எழுதி முடித்திருக்கிறார் எழுத்தாளர் பாக்கியம் சங்கர். தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கும் இவர், இதற்கிடையில் சென்னை வண்ணாரப்பேட்டையை மையப்படுத்தி நாவல் ஒன்றும் எழுதிக்கொண்டிருக்கிறாராம்.

மணிரத்னம் இயக்கும் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நாயகிகளுள் ஒருவர் ஈழத்துப் பெண். அவருக்கான உரையாடல்களை எழுத்தாளர் அகரமுதல்வன் எழுதியிருக்கிறார்.

``கிராமத்திலிருக்கும் பிரச்னைகளால் மனமுடைந்த பெண்கள், அங்குள்ள கோயில்களின் கோபுரங்களில் ஏறிக் குதித்துத் தற்கொலை செய்துகொள்வார்கள். இதை `கோபுரம் ஏறிச் சாடுதல்’ என்று நாட்டார் வழக்காற்றில் சொல்வர். அவ்வாறு பொதுப்பிரச்னையின் பொருட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்த பெண்கள், உடன்கட்டை ஏறி இறந்த பெண்கள், கிராமப்புறத்தில் தேவதாசியாக இருந்த பெண்கள் ஆகியோரே நாட்டார் மரபில் பெரும்பாலும் வழிபடு தெய்வங்களாக உள்ளனர். ஆனால், தமிழக வரலாற்றை எழுதிய வரலாற்று ஆய்வாளர்கள், `அவர்கள் எல்லோரும் பார்ப்பனப் பெண்கள்’ என்று சொல்லி இந்துமதத்துக்குரிய பெண் தெய்வங்களாக அவர்களை மேல்நிலையாக்கம் செய்துவிட்டனர். இவ்வாறு மேல்நிலையாக்கம் செய்வது வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வாறு மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட பெண் தெய்வங்கள் `நாட்டார் தெய்வங்கள்’ என்பதைக் கள ஆய்வுகள் மூலமாகவும், கல்வெட்டுகள், செப்பேடுகள், நாட்டார் பாடல்கள் ஆகியவற்றைக்கொண்டும் மறு ஆய்வுசெய்து நிறுவும் பொருட்டு ஒரு நூல் எழுதும் முயற்சியில் உள்ளேன்.
இந்த நூல், 300 பக்க அளவும் மேலே சொன்ன பெண் தெய்வங்களைப் பற்றி எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும். இதைக் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். எதிர்காலத்திலும் இதேபோல நாட்டார் தெய்வங்களாக இருந்து மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட தெய்வங்கள் தொடர்பாக ஆதாரபூர்வமான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யவுள்ளேன்.’’
- அ. கா. பெருமாள்

தமிழின் மிக முக்கியமான சில சிறுகதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் மகன் சாரங்கன். வறண்டு வெடித்த பெரும் நிலப்பகுதி, கைவிடப்பட்ட பெரிய கல்குவாரி, பாலை போன்ற பரந்த நிலத்தில் நிற்கும் பட்டுப்போன பெரிய ஒற்றை மரம் என மூன்று இடங்களைத் தேடிவருகிறார். அப்படி உண்மையாகவே இருக்கும் நிலத்தை மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் சாரங்கன்.

``சார்லஸ் ஆலன் எழுதிய `பேரரசன் அசோகன்’ என்ற புத்தகம் இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். மறக்கடிக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு பற்றிய இந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க சுவாரஸ்யம் கூடிக்கொண்டேபோகிறது. இது தவிர, வாசகர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என நான் விரும்பும் நூல் `புத்தரும் அவர் தம்மமும்’. டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தகம் இது. தமிழில் இந்தப் புத்தகத்தைப் பேராசிரியர் பெரியார்தாசன் மொழிபெயர்த்திருந்தார்.’’
- கவிஞர் உமாதேவி