தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அன்பு அத்தனை பவர்ஃபுல்! - `புயல்' அஞ்சலி பாட்டீல்

அன்பு அத்தனை பவர்ஃபுல்! - `புயல்' அஞ்சலி பாட்டீல்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு அத்தனை பவர்ஃபுல்! - `புயல்' அஞ்சலி பாட்டீல்

இவள் யாரோ?ஆர்.வைதேகி

‘காலா’வில் புயலாக அசத்திய அஞ்சலி பாட்டீல் நிஜத்தில் தென்றலாக வருடுகிறார். இந்த மராத்திப் பெண் இப்போது தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறாராம். ‘`தமிழ்ல எனக்குப் பிடிச்ச வார்த்தை காதல். ‘காதல்’னா லவ்... ‘கடல்’னா ‘ஓஷன்’... சரிதானே?’’ - அகராதி சொல்லுமளவுக்கு அப்டேட்டாக இருக்கிறார், அஞ்சலி!

‘`மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்தைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண் நான். அப்பா, அம்மா, அக்கா, அண்ணான்னு அன்புக்குக் குறையே இருந்ததில்லை. என்னை நான் ‘எமோஷனல் சயின்ட்டிஸ்ட்’டுனு சொல்லிக்கிறதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். எப்போதும், எல்லாத்தையும் கேள்வி கேட்கற கேரக்டர் நான்.

அன்புன்னா என்ன? உறவுகள்னா என்ன? பெற்றோர் எப்படியிருக்கணும்? ஆசிரியர்கள் - மாணவர்கள் எப்படியிருக்கணும்? இப்படி சின்ன வயசுலயே எனக்குள்ள ஏராளமான கேள்விகள் இருந்திருக்கு. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடணும்னா நான் வளர்ந்த இடத்தைவிட்டு வெளியில வரணும்னு தோணினது. என்னுடைய தேடல்களுக்கு நாடகங்கள் சரியான களமா இருக்கும்னு நினைச்சேன். நாடகங்கள் மூலமா சமுதாய நிகழ்வுகளைக் கேள்வி கேட்க முடியும்... காலங்காலமா நம்பப்பட்ட கருத்துகளைத் தகர்த்தெறிய முடியும்னு நம்பினேன்...’’ - தத்துவமாக ஆரம்பிக்கிறவர் தன்னியல்பு மாறாமல் தொடர்கிறார்.

‘`மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்குப் பெற்றோரைச் சம்மதிக்க வைக்கிறது அத்தனை சுலபமாயில்லை. எமோஷனலா பிளாக்மெயில் பண்ணித்தான் என் காரியங்களைச் சாதிச்சுக்கிட்டேன். எனக்குப் பிடிவாத குணம் அதிகம். `நடிப்புங்கிறது மரியாதைக்குரிய வேலையில்லை'ங்கிறது அப்பாவின் எண்ணம். ‘நாலு பேர் என்ன பேசுவாங்களோங்கிறதுதானே உங்க கவலை? எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க. உங்க கடமையும் தீர்ந்துடும்.  அதுக்கப்புறம் என் கணவரையும் புகுந்த வீட்டுக்காரங்களையும் சம்மதிக்க வெச்சு நாடகத் துறைக்குப் போறது என் பொறுப்பு’னு சொன்னேன். அதுக்குப் பிறகுதான் நாடகத் துறையின் மேல எனக்கிருந்த அதீத ஈடுபாடு அவங்களுக்குப் புரிஞ்சது. என்னை நோக்கி சமுதாயம் எழுப்பின கேள்விகளை எதிர்கொண்டாங்க. என்கூடச் சேர்ந்து அவங்களும் வளர்ந்தாங்க.

அன்பு அத்தனை பவர்ஃபுல்! - `புயல்' அஞ்சலி பாட்டீல்

யுனிவர்சிட்டி ஆஃப் பூனாவில் நாடகம் பற்றிப் படிச்சேன். கோல்டு மெடலோடு வெளியில் வந்தேன். 2007-ல் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் டிசைன் அண்டு டைரக் ஷன் படிச்சேன். பிரஷாந்த் நாயரின் ‘டெல்லி இன் எ டே’ படத்துல எனக்கு நடிக்கிறதுக் கான முதல் வாய்ப்பு கொடுத்தார். அடுத்து சிங்களம், தெலுங்குனு வரிசையா மற்ற மொழிப் படங்களில் நடிச்சேன். 2012-ல் கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவலில் நான் நடிச்ச சிங்களப்படத்துக்காக எனக்குச் சிறந்த நடிகைக்கான விருது கிடைச்சது.

இதுவரை 20 படங்களில் நடிச்சு முடிச்சுட் டேன். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தைப் பார்த்து வந்த வாய்ப்பாகவே இருந்திருக்கு. நான் நடிச்ச சிங்களப்படத்தைப் பார்த்துட்டு பா.ரஞ்சித் ஆபீஸ்லேருந்து அழைப்பு வந்தது. ரஞ்சித்தை மீட் பண்ணினேன். என் கேரக்டர் பத்திச் சொன்னதும் எனக்குப் பிடிச்சிருச்சு. ரஞ்சித் சொன்ன ரெண்டு சீன்லயே நான் ஆஃப் ஆயிட்டேன். அறிமுக சீனையும், போலீஸ்கூட சண்டை போடற என் கடைசி சீனையும் அவர் விவரிச்ச பிறகு எனக்கு வேறு எதையும் கேட்கத் தோணலை.

 நடிப்புங்கிறது எனக்குப் பணம் கொடுக்குது. வாழறதுக்கான என் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேத்திக்க உதவியா இருக்கு. எல்லாத்தையும் தாண்டி என் கிரியேஷனுக்குத் தீனி போடுவதாக இருக்கு. படைப்புத்திறனுக்கு வேலை கொடுக்க முடியலைன்னா எனக்கு மூச்சு அடைக்கிற மாதிரி இருக்கும். தினமும் என் படைப்புத் திறனுக்கு ஏதாவது வேலை கொடுத்துட்டே இருக்கணும். கிரியேட்டிவிட்டியை மதிக்கிற ரஞ்சித் மாதிரி இயக்குநர்களுடன் வேலை செய்யறது எனக்குப் பணம், புகழைவிடவும் பெரிசாபட்டது’’ என்கிறவருக்குப் பகிர்வதற்கு இன்னும் சில பெருமைகளும் இருக்கின்றன.

‘`நடிப்பு எனக்கு எப்பவுமே கஷ்டமா இருந்ததில்லை. 500, 600 மக்கள் சூழ கூட்டத்துக்கு நடுவுல இருக்கிறது மட்டும்தான் கஷ்டம். நிஜத்துல அதிர்ந்து பேசாத கேரக்டர் நான். பயமும் கூச்ச சுபாவமும் அதிகம். கூட்டத்துக்கு நடுவில் ஒருத்தியா இருக்க சிரமப்படுவேன்.  ‘காலா’ படத்துல  தாராவியில டோபிகானா மக்கள் போராட்டம் பண்ற சீன்தான் எனக்கு அறிமுகம். அந்தக் கூட்டத்துக்கு நடுவில கத்தி, போராட்டம் பண்ற மாதிரியான கஷ்டமான சீன்ல எப்படி நடிக்கப் போறேனோனு பயந்துக்கிட்டிருந்தேன். ஆக்ஷன் சொன்னதும் என்னையும் அறியாம ஒரே டேக்ல டயலாக் பேசி நடிச்சேன். சீன் ஓகே ஆயிடுச்சு. சுத்தியிருந்த அத்தனை பேரும் பயங்கரமா கை தட்டினாங்க. அதுல ரஜினி சாரின் கைதட்டல் சத்தம் தனியா கேட்டது. ‘உன்னைப் பார்த்தா பெருமையா இருக்கு’ங்கிற மாதிரி இருந்தது அவருடைய பார்வையும் கைதட்டலும்.

‘காலா’வில் என் கேரக்டரைப் பார்த்துட்டு நிறைய தமிழர்கள் பாராட்டறாங்க. ஒருத்தர் போன் பண்ணி, தன் மகளுக்குப் `புயல்'னு பெயர்வைக்கப் போறதா சொன்னபோது எனக்கு வார்த்தைகள் இல்லை. நிறைய பொண்ணுங்க என் கேரக்டர் அவங்களை இன்ஸ்பயர் பண்ணினதா மெசேஜ் பண்றாங்க. இந்த அன்புக்கும் மரியாதைக்கும் எதைத் திரும்பக் கொடுக்கப்போறேன்?’’ நெகிழ்கிற அஞ்சலி, நடிப்பு, டைரக் ஷன், கவிதை என அநியாயத்துக்கு பிசி.

அன்பு அத்தனை பவர்ஃபுல்! - `புயல்' அஞ்சலி பாட்டீல்

‘`இன்டர்நேஷனல் டாகுமென்டரி டைரக்ட் பண்ணிட்டிருக்கேன். அடுத்த மாசம் திருவண்ணாமலையில ஷூட்டிங் ஆரம்பம். ‘மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்’னு ஒரு படத்துல லீடு கேரக்டர் பண்ணிட்டிருக்கேன். நான் ஒரு டிசைனரும்கூட. கவிதைகள் எழுதுவேன். தமிழ்ல நிறைய படங்கள் பண்ற ஐடியா இருக்கு. புயல் மாதிரி புரட்சி கேரக்டரா இல்லாம வேற வேற கேரக்டர்ஸுக்காக வெயிட்டிங். ஏஞ்சலினா ஜோலி மாதிரி முழுக்க முழுக்க ஆக் ஷன் படம் பண்ணணும் என்பது ரொம்ப வருஷத்துக் கனவு...’’ என்கிற அஞ்சலியின் விருப்பப்பட்டியலில் சமையலும் இருக்கிறது. எப்படி?

‘`சாப்பாட்டுக்குப் பணமில்லாத நாள்களை வாழ்க்கையில கடந்து வந்திருக்கேன். சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு அந்தப் பணத்துல எனக்கு மட்டுமே சமைச்சு சாப்பிடறது பிடிக்காமப் போனது. அடுத்தவங்களுக்கு சமைச்சுக்கொடுக்கிறது அதைவிடப் பேரானந்தமா தெரிஞ்சது. சமையலை மாதிரி மிகச் சிறந்த தியானம் வேற இல்லைனு உணர்ந்தேன். பிரமாதமா சமைப்பேன். என் குடும்பத்தாருக்கும் ஃப்ரெண்ட்ஸுக்கும் விதவிதமா சமைச்சுக்கொடுக்கிறது மூலமா என் அன்பை வெளிப்படுத்தறேன். கூடிய சீக்கிரம் ஒரு கஃபே ஆரம்பிக்கிற ஐடியாவும் இருக்கு...’’- ஆசை சொல்பவரிடம், அவள் விகடன் வாசகியருக்குச் சொல்ல அழுத்தமான மெசேஜ் இருக்கிறது.

‘`எதிரிகளை ஜெயிக்கிறது ரொம்ப ஈஸி. அந்தச் சின்ன சீக்ரெட் தெரியாமத்தான் பலரும் வாழ்க்கையோடு போராடிக்கிட்டிருக்காங்க. கடந்த காலத்துல நான் எக்கச்சக்கமான பாலினப் பாகுபாட்டுப் பார்வைகளை சந்திச்சிருக்கேன். தன்னம்பிக்கையும் திறமையும் உள்ள பெண்களைப் பலருக்குப் பிடிக்கிறதில்லை. புத்திசாலித்தனத்தை யாராலயும் ஒளிச்சு வைக்க முடியாது. அது அடங்கி இருக்காது. எப்படியும் தன்னை வெளிப்படுத்திடும். என் விஷயத்துலயும் அப்படி நடந்திருக்கு. ஒருகட்டத்துல அதை உணரவும் சமாளிக்கவும் கத்துக்கிட்டேன். என்னை அவமானப்படுத்தறவங்களையும் இரக்கத்தோடு அணுகப் பழகினேன். அப்படி நடந்துக்கிறது மூலமா அவங்களைக் குற்ற உணர்வுக்குத் தள்ளறது என் நோக்கமில்லை. என்னை அவமானப்படுத்தின அதே நபர், இன்னொரு  முறை இன்னொரு பெண்ணை அவமானப்படுத்த நினைக்கிறபோது என் முகம் அவங்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அவங்களை அப்படிச் செய்யவிடாம யோசிக்க வைக்கும். இந்த மனநிலையை வளர்த்துக்க எனக்கு அசாத்திய தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் தேவைப்பட்டது. ஆனா, என்னுடைய அந்த அணுகுமுறை எனக்கு அளவிலாத அன்பை சம்பாதிச்சுக் கொடுத்திருக்கு. அன்பு அத்தனை பவர்ஃபுல்!’’