
மிஸ்டர் மியாவ்

• ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா, ‘விஸ்வாசம்’ படத்திலும் இணைந்திருக்கிறார். 2019 பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
• நடிகை மர்லின் மன்றோவின் அறியப்படாத பக்கங்களைப் புரட்டும்விதமாக, அவரது வாழ்க்கையைக் குறுந்தொடராக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது, ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம். இந்தத் தொடர் பல உண்மைகளைச் சொல்லும் என எதிர்பார்க்கலாம்.

வைரல்
• பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியாவும் ஆரவ்வும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிக்கொண்டிருந்தன. ஆனால் இருவருமே, ‘‘நாங்கள் வெறுமனே நண்பர்கள்தான்’’ என அறிவித்தனர். இப்போது ஓவியாவும் ஆரவ்வும் பாங்காக் நகரில் கைகோத்து நடப்பதுபோன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் செம வைரல்.
• கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் விரைவில் தொடங்குகிறது.
• வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், சிம்புவுக்கு கீர்த்தி சுரேஷ் அல்லது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஜோடியாகலாம் என்று வெளியான செய்தியை மறுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
ஹாட் டாபிக்
• ‘‘காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதுபோல நிஜ வாழ்க்கையிலும் நெருக்கமாக இருக்கலாமே’’ என்று பல பாலிவுட் நடிகர்கள் தன்னிடம் கூறியதாகப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மல்லிகா ஷெராவத். ‘‘எனக்குத் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இருக்கிறது. பட வாய்ப்புகளுக்காகப் படுக்கையைப் பகிரமாட்டேன்’’ என்று அவர் கூறியிருப்பது, பாலிவுட்டை அதிரடித்திருக்கிறது.
• புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரே, ‘‘நண்பர்களும் குடும்பத்தினரும் ஆதரவாக இருப்பதையே என் பலமாகக் கருதுகிறேன்’’ என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றுவரும் சோனாலியை நடிகர் அக்ஷய் குமார் சந்தித்திருக்கிறார். ‘‘சோனாலி ஒரு போராளி. நிச்சயம் அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவார். கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் அக்ஷய்.

• ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’ உள்பட பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார், பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். ‘சக்தி’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, பார்வையற்ற பெண்ணாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

• பாலா இயக்கும் ‘வர்மா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார், ‘பிக் பாஸ்’ ரைசா. ‘‘இயக்குநர் பாலா படத்தில் நடித்தது வாழ்வில் மறக்கமுடியாத தருணம். பாலாவை நான் ஆசிரியராக ஏற்றுக்கொண்டேன்’’ என நெகிழ்கிறார் ரைசா.