
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், க.பாலாஜி
“சின்ன வயசுலேயே நீளமான வசனங்கள் எல்லாம் பேசி நடிச்சீங்க. ரெண்டு நாள் முன்னாடியே மனப்பாடம் பண்ணிடுவீங்களா..?”
- இரா.கலைச்செல்வன்

’’எங்க அப்பா ரொம்ப நல்ல டைரக்டர் அண்ட் ரொம்ப நல்ல ஃபாதர். அதனாலேயே டயலாக் பேப்பரை ஷூட்டுக்கு முன்னாடியெல்லாம் கொடுக்க மாட்டார்; ஸ்பாட்லதான் கொடுப்பார். அவர் பேசிக்காட்டுற மாதிரி நானும் அப்படியே பேசிக் காட்டுவேன். திடீர்னு இடையில வசனத்தை மாத்துவார். அதையும் ஞாபகம் வச்சுக்கிட்டு நடிக்கணும். அதுமட்டுமில்லாம ஷூட்டிங் ஸ்பாட்ல எங்க டீச்சரும் இருப்பாங்க. ஸ்கூலில் பர்மிஷன் வாங்கிதான் என்னை ஷூட்டிங்கிற்கு அழைச்சுட்டுப்போவாங்க. அப்போ எங்க ஸ்கூல் ஃபாதர், ‘நான் உங்க பையனை நடிக்க அனுப்புறேன். ஆனால், அவன் எக்ஸாம்ல பாஸ் ஆகணும்’னு சொல்லுவார். அதுனாலேயே ஸ்பாட்டுக்கு டீச்சர் வந்து சொல்லிக்கொடுப்பாங்க. டீச்சர் சொல்றதைப் படிச்சு எங்க அம்மாகிட்ட சொல்லிக்காட்டணும். இப்படி நடிப்பு, படிப்புன்னு மாறி மாறிப் பண்ணிட்டு இருந்தேன். கஷ்டமாகத்தான் இருந்தது; ஆனால், ஒரு கட்டத்தில் பழகிடுச்சு.’’
“பிக் பாஸ் மகத் , நண்பன் மகத் என்ன வித்தியாசம்... ஓப்பனா சொல்லுங்க”
- ஜார்ஜ் அந்தோணி
“அவனே ஓப்பனாதானே இருக்கான். அதுதான் எல்லோருக்கும் பிரச்னையா இருக்கு. ‘அவனுக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கு’னு எல்லோரும் சொல்றாங்க. சரிதான்... உனக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்து, வேறொரு பொண்ணை நீ தொட்டா... உன் கேர்ள் ஃப்ரெண்ட் செவுல்லேயே விடும். அவன் கேர்ள் ஃப்ரெண்ட் அப்படியில்ல. அது ஏன் உனக்குக் கஷ்டமா இருக்குனு எனக்குப் புரியலை. பிடிக்காத ஒரு பொண்ணை அவன் கையைப் பிடிச்சு இழுத்தா, அதைத் தப்புனு சொல்லலாம். அவன் அப்படி எதுவுமே பண்ணலேயே..!”

“சிம்புவோட நண்பர் என்பதால்தான் மகத் இப்படி இருக்காரா?”
- ஜார்ஜ் அந்தோணி
“போன சீஸனில் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இருந்த ஹரீஸ் கல்யாண்கூடதான் என் ஃப்ரெண்ட். அவர் ஒழுங்காக இருந்துட்டுத்தானே வெளியே வந்தார். மஹத் உள்ளே ஏதாவது தப்பு பண்ணியிருந்தா, அவன் சட்டையைப் பிடிச்சு நான் கேள்வி கேட்பேன். அப்படி எதுவும் அவன் பண்ணலையே! உதாரணத்துக்கு, ஒரு பொண்ணு குறைவான ஆடை போட்டிருக்குனு நீங்க கேள்வி கேட்டா, அந்தப் பொண்ணுமேலே எந்தத் தப்பும் இல்லை. பார்க்கிற பார்வையில்தான் தப்பு இருக்கு.”
சிம்புவிடம் ‘ஒரே வரியில் பதில் சொல்லவேண்டும். உடனே பதில் சொல்ல வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் கேட்ட விறுவிறு கேள்விகளுக்கு சிம்புவின் பதில்கள் :
டி.ராஜேந்தர் முன்பு ஆரம்பித்திருந்த கட்சியின் பெயர்: (நீண்ட யோசனைக்குப் பிறகு) ஞாபகம் இல்லங்க
இப்போதைய கட்சியின் பெயர்: இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்

ஒரு நாள் முதல்வர் ஆனால் நீங்கள் கையெழுத்திடும் முதல் திட்டம் என்னவா இருக்கும்?
இனிமே யாரும் முதல்வரே ஆகக்கூடாதுனு கையெழுத்துப் போடுவேன்.
பிடித்த அரசியல் தலைவர் : காமராஜர்
நீங்கள் வாங்கிய முதல் சம்பளம் : சாக்லேட்
உங்கள் நடிப்புக்கு நீங்கள் தரும் மார்க் : 69/100
பிடித்த ஊர் : லண்டன்
பிடித்த நிறம்: கறுப்பு
பிடித்த கார் : அப்பப்போ மாறும்
பிடித்த விளையாட்டு : கால்பந்து
பிடித்த விளையாட்டு வீரர்: தோனி

சாய்வதற்குத் தோளாக இருக்கும் நண்பர்: அது சூழ்நிலையைப் பொறுத்தது. ஒவ்வொரு பிரச்னைக்கு ஒவ்வொரு தோள்.
“குழந்தை நட்சத்திரமா நிறைய படங்கள் நடிச்சிருக்கீங்க. அந்த சமயத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் ?”
- நந்தினி
“நான் ஒரு சீன்ல நடிச்சு முடிச்சிட்டா, எனக்கு சாக்லேட் அல்லது கூல்டிரிங்ஸ் வேணும்னு கேட்பேன். ஒவ்வொரு ஷாட்டுக்கு முன்னாடியும் எனக்கு சாக்லேட்டைக் காட்டுவாங்க. அதைப் பார்த்து, உறுதிப்படுத்திக்கிட்டுதான் சீன்ல நடிப்பேன்.`சினிமாவுல என் முதல் சம்பளம், சாக்லேட்தான்!’
“உங்களைப் பொறுத்தவரையில் காதல்னா என்ன ?”
- ம.குணவதி
“காதல்னா கொடுக்கிறது; வாங்குறதில்லை. கொடுக்க ஆரம்பிச்சுட்டா, தானா எல்லாம் வந்திடும்!”
“இப்போ யாரையாவது லவ் பண்றீங்களா?”
- சுஜிதா சென்
“நான் லவ் பண்ணாதான் ஊருக்கே தெரியுமே. யாருக்கும் தெரியலைனா இப்போ யாரையும் லவ் பண்ணலைனுதான் அர்த்தம்.”

“டி.ஆர் புதுப்படம் தொடங்கப்போறதா அறிவிச்சிருக்கார். அதுல கெஸ்ட் ரோல் பண்றீங் களா? இந்த வயசிலும் அவர் ஆக்டிவ்வா இருக்கிறதை எப்படிப் பார்க்கிறீங்க ?”
- சுஜிதா சென்
“அது எனக்கு பிரமிப்பா இருக்கு. அதைப் பார்த்து கத்துக்கணும்னு நினைக்கிறேன். அதே போல, மணிரத்னம் சாரும் அப்படிதான். அவங்களுக்குள்ள ஒரு ஃபயர் இன்னும் இருக்கு. அதுதான் அவங்க எனர்ஜிக்கான காரணம்னு நினைக்கிறேன். அப்பா படத்தில் நடிக்கச் சொல்லிக் கேட்டார்ன்னா கண்டிப்பா பண்ணுவேன்.”
கமல் ரஜினியோட அரசியல் என்ட்ரி பற்றி உங்க கருத்து என்ன..? யாரோட அரசியல் கருத்துகள் உங்க ஐடியாலஜியோட பொருந்திப்போகுது?
இன்னைக்கு இருக்குற அரசியல் சூழலில் மோடியைப் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீங்க..?
அப்பா ஹீரோயின்களைத் தொட்டு நடிக்காதவர். ஆனா அதுக்கு நேரெதிர் நீங்க. உங்களை ஹீரோவா அறிமுகப்படுத்தும்போது அப்பா சொன்ன அட்வைஸ் என்ன?
(அடுத்த வாரம்)