
அதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்!
திரையில் மட்டுமல்ல.... நிஜத்திலும் எந்தவிதப் பாசாங்கும் அற்ற யதார்த்த மனிதர் இயக்குநர் கே.பாக்யராஜ்!

தமிழக அரசியலின் இரு துருவங்களான ‘எம்.ஜி.ஆர் - கருணாநிதி’ இருவரோடும் நெருங்கிப் பயணித்தவர். அவரைச் சந்தித்துப் பேசினேன்...
‘‘சமூகப் போராட்டங்களில், உங்கள் குருநாதர் பாரதிராஜா கலந்துகொள்கிறார். ஆனால், நீங்கள் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்வதில்லையே, ஏன்?’’
‘‘அதில் அவருக்கு ஈடுபாடு அதிகம்; உரிமையும் அதிகம். அடுத்ததாக, அவருடைய கருத்துக்கும் என்னுடைய கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். நான், எனது என்று ஆரம்பித்தால் என் ஊர், ஜில்லா, மாநிலம் என்று போய்க்கொண்டே இருக்கும். ‘நாம் மனிதர்கள்’ என்றுதான் நான் பார்ப்பேன். ஆனால், ‘தமிழன்... தமிழன்தான்’ என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அது அவருடைய உரிமை... குறிக்கோள்!’’
‘‘கடந்த வருடம் ஓ.பன்னீர்செல்வம், ‘தர்ம யுத்தம்’ நடத்தியபோது அவரைச் சந்தித்து ஆதரவு கொடுத்தீர்கள். அதன்பிறகு அரசியல் பக்கம் ஆர்வம் காட்டவில்லையே?’’
‘‘ஓ.பி.எஸ் தர்ம யுத்தத்துக்கு நான் ஆதரவு கொடுக்கவில்லை. அன்றைய சூழ்நிலையில், ‘முதல்வராக இருந்த என்னை மிரட்டிக் கையெழுத்து வாங்கிவிட்டார்கள்’ என்று கூறி ஜெயலலிதா சமாதியில் போய் அவர் உட்கார்ந்ததும் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. அதனால், ஓர் ஆறுதலுக்காக... மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்... அவ்வளவுதான்! அதன்பிறகு அரசியல் ரீதியாக நானும் அவர்களோடு தீவிரமான எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வில்லை.’’
‘‘எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் அதே அமைச்சரவையில், துணை முதல்வர் பொறுப்பேற்றதில் அதிருப்தியாகிவிட்டீர்களா?’’
‘‘முதலில் தர்ம யுத்தம் நடத்திப் பார்க்கிறார். அது சரிவராமல் போகிறது. இதற்கிடையில், மேலிருந்து வரும் உத்தரவுகளும் அவரது நிலைப்பாட்டை மாற்றுகிறது. எல்லோருமே சூழ்நிலைக் கைதிதான். அவரும் வாழ்ந்தாக வேண்டுமே... அதனால் யாரையும் தப்பு சொல்ல முடியாது. ‘துணை முதல்வர்’ என்ற அந்தப் பொறுப்பையும் அவர் ஏற்காமல் போயிருந்தால், காணாமலேயே போயிருப்பாரே...! ஆனாலும்கூட, ‘சீட்தான் முக்கியம்’ என்ற இவர்களது செயல்பாடுகள் எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!’’

‘‘எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாக அறியப்பட்டவர் நீங்கள். ஆனால், அரசியலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓர் இடத்தைத் தக்கவைக்க முடியாமற்போனதற்கான காரணம் என்ன?’’
‘‘சினிமாவில் எப்படி ஜெயித்துக்காட்ட வேண்டும் என்பது குறித்த தெளிவான எண்ணம், ஆரம்பத்திலிருந்தே எனக்குள் இருந்தது. அரசியலைப் பொறுத்தளவில், இதுபோன்ற எந்த எண்ணமும் எனக்கு இருந்ததேயில்லை. தற்செயலாகத்தான் அரசியலுக்குள் வந்தேன். அதனால், மனதுக்குள் பெரிதாக எந்தத் தாக்கமும் எனக்கு ஏற்படவில்லை.’’
‘‘எம்.ஜி.ஆர் இறந்த பிறகும்கூட, அரசியலுக்குள் வருவதற்கான வாய்ப்பு வரவில்லையா?’’
‘‘எம்.ஜி.ஆர் இறந்த சமயம், ஆர்.எம்.வீரப்பனும் ஜெயலலிதாவும் தனித்தனி கோஷ்டிகளாகப் பிரிந்து நின்றனர். இந்த இரண்டு அணியினருமே என்னைச் சந்தித்து, ‘நீங்கள் ஆதரவு தரவேண்டும்’ என்று கேட்டார்கள். ‘எம்.ஜி.ஆர் இறந்து இன்னும் பத்து நாள்கள்கூட ஆகவில்லை. இந்தநேரத்தில், நாம் அணிகளாகப் பிரிந்துநின்று சண்டை போட்டுக்கொண்டால், எல்லோரும் சிரிப்பார்கள். அதனால், இப்போதைக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளைப் பதவியில் அமர்த்துவோம். அவரை யாரும் எதிர்க்கவும் மாட்டார்கள். அதன்பிறகு கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டி, யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கிறதோ அவரையே பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கலாம்’ என்று நியாயம் சொன்னேன். அப்போதுகூட என்னுடன் இருந்தவர்களெல்லாம் என் முடிவைப் பார்த்துச் சிரித்தார்கள்.

‘என்ன சார் இது... ஆர்.எம்.வீ-யை விடவும் ஜெயல லிதாவுக்குத்தான் கட்சியில் செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். நீங்களும்கூட சினிமாவில்தான் எனக்கு ஆர்வம்; அரசியலில் ஆர்வம் இல்லை என்கிறீர்கள். அப்படியென்றால், ஜெயலலிதாவுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவித்து விட்டால், எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு அது பயனுள்ளதாக இருக்குமே... இதுகூடப் புரியாமல் இப்படி நியாயம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே...’ என்றனர்.
‘அரசியலில், இது மிகச்சரியான உண்மை’ என்பது பின்னாளில் நான் யோசித்துப் பார்த்தபோதுதான் புரிந்தது... அரசியல் முடிவுகளை எடுக்கும்போது நியா யமெல்லாம் பார்க்கக்கூடாது. ஆக இவ்வளவுதான் என் அரசியல் அறிவு! ஆனால், இப்போதும்கூட, ‘சுயநலமாக இல்லாமல், மனசாட்சியோடு நாம் செயல்பட்டதுதான் சரி... அதனால்தான் மரியாதையை இழக்காமல் இருக்கிறோம்’ என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.’’
‘‘அரசியலில் ஆர்வம் இல்லை என்கிறீர்கள். ஆனால், ‘எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற தனிக்கட்சி ஆரம்பித்தீர்களே?’’
‘‘அன்றைய காலகட்டத்தில், ஜானகி அம்மாள் அணியில் இருந்த சிலர், ‘பாக்யராஜ் 45 சீட் கேட்கிறார்’ என்று இல்லாததும் பொல்லாததுமாக அவரிடம் சொல்லிவிட்டார்கள். அந்தம்மாவும் என்னை நம்பாமல், என்னிடம் கேட்டு உறுதி செய்துகொள்ளாமல், ‘என்ன பாக்யராஜ், நீங்க 45, 50 சீட் கேட்டீங்களாமே...?’ என்று நேரடியாக அவரே கேட்ட விதம் என்னை ரொம்பவே பாதித்துவிட்டது. நாம சீட் எதுவும் கேட்கவே இல்லை... ஆனாலும், நமக்கு எதிராகக் கிளப்பிவிடவும் ஆள் இருக்காங்க. அந்தம்மாவும் கொஞ்சம்கூட நம்மைப்பற்றிப் புரிந்துகொள்ளாமல், வந்து கேட்கிறாரே என்ற கோபத்தில், உணர்ச்சி வேகத்தில் கட்சியை ஆரம்பித்துவிட்டேன். மூக்கைச் சொறிந்துவிட்டால் எப்படிக் கோபம் வருமோ... அந்தமாதிரி கட்சியை ஆரம்பித்துவிட்டேன்.

அதன்பிறகு தினமும் அவரைத் தாக்கி அறிக்கை, இவரைத் திட்டி பேட்டி என்ற நிலை வந்தபோதுதான், ‘அடடா... நமக்கு இது சரிப்பட்டு வராது’ என்று முடிவெடுத்து விலகி விட்டேன்.’’
‘‘எம்.ஜி.ஆர் மீது இவ்வளவு அன்புகொண்ட நீங்கள், 2011 தேர்தலின்போது தி.மு.க-வில் ஐக்கியமானது ஏன்?’’
‘‘எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியில், அவரது புகழையே இருட்டடிப்பு செய்கிற வேலைகள் நடுவில் நடந்தபோது என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போஸ்டர்களில்கூட எம்.ஜி.ஆர் புகைப்படம் ஸ்டாம்ப் சைஸில் பெயருக்கு பிரின்ட் செய்யப்பட்டது. ‘உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகளுக்குக்கூட சீட் கொடுக்கவில்லை ஜெயலலிதா’ என்ற கோபத்தில்தான் தி.மு.க-வில் போய் இணைந்தேன்.’’
‘‘அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படியிருக்கும்?’’
‘‘அதை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது. இப்போதுகூட ‘எம்.ஜி.ஆர் பேரவை’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி சந்திக்கப்போகிறோம் என்று நினைக்கும்போது... சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், மீண்டும் மீண்டும் இது கட்சிக்கு சேதாரமாகிவிடுமோ என்று நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது.
‘கூடவே பிறந்த காதா அல்லது பின்னாடி முளைத்த கொம்பா...’ என்று சொல்வார்கள். புரட்சித் தலைவரைப் பொறுத்தவரையிலும் காதுதான் கொம்பாச்சு! ரசிகப் பெருமக்கள்தான் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் ஆனார்கள். ஏழைபாழைகளுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான் எம்.ஜி.ஆர்., கட்சியை ஆரம்பித்தார். எனவே அ.தி.மு.க-வும் இரட்டை இலையும் தொடர்ந்து கடைசி வரையில் இருக்கவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், கட்சியின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் ஆளாளுக்குப் பிரிந்துகொண்டு நிற்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதேநேரம் இன்றைக்கும் கீழ்மட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க தொண்டர்களின் முக்கால்வாசி வாக்குகள் அப்படியேதான் இருக்கின்றன. யார் பின்னே செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் தொண்டர்கள்.
ஏற்கெனவே, ஜெ - ஜா என இரண்டு அணிகளாகப் பிளவுப்பட்டு நின்றவர்கள், மீண்டும் ஒன்றுசேர்ந்து பலமான அ.தி.மு.க-வாக உருவானதுபோல், சிதறுண்டுபோன அனைவரும் ஒரே தலைமையின்கீழ் கூடும் நாள் வரும் என்று நானும் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.’’
த.கதிரவன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

“கருணாநிதிக்கும் உங்களுக்குமான உறவு பற்றி...?”
“எழுத்தாளனா வருவதற்கு எனக்குப் பெரிய தூண்டுகோலா அமைந்தது, கலைஞரின் எழுத்துகள்தான். சினிமாவில் நான் இருந்த காலத்தில் கலைஞர் தொடர்புடைய பிரபல வார இதழ் ஒன்றில், ‘இனி நான் உங்களுக்காக!’ என்ற தொடர் எழுதுவதற்காக என்கிட்ட கேட்டாங்க. எழுதலாமா, வேண்டாமானு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். வார இதழ் நிறுவனமோ, ‘கலைஞர், நீங்க எழுதுனா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றார்’னு சொன்னாங்க. ‘சரி, எழுதுறேன்’னு சொல்லிட்டேன்.
அந்தச் சமயத்தில் கலைஞரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ‘தலைவர் எம்.ஜி.ஆரை அரசியல்வாதியா ஃபோக்கஸ் பண்ணி எழுதமாட்டேன். அவருடைய சினிமா வாழ்க்கை பற்றி மட்டும்தான் எழுதுவேன். அதுக்கு நீங்க சம்மதிக்கணும். எந்த இடத்திலும் எடிட் பண்ணக்கூடாது’னு சொன்னேன். அவரும் ‘சரி’னு சொல்லிட்டு, எனக்கொரு வேண்டுகோள் வைத்தார். ‘நீங்க தொடர் எழுதிக் கொண்டிருக்கு ம் போது, ‘எம்.ஜி.ஆர் எழுதக்கூடாதுனு சொல்லிட்டார்’னு சொல்லிப் பாதியிலேயே விட்டுட்டுப் போகக்கூடாது’ என்றார். ‘எம்.ஜி.ஆர் அப்படிச் சொல்ல மாட்டார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’னு சொன்னேன். ‘எனக்கும் நம்பிக்கை இருக்கு. ஏன்னா, என் நண்பன் அவன்’னு பதில் சொன்னார் கலைஞர்.
என் வீட்டில் இருப்பவர்கள், நண்பர்கள் மட்டும்தான் என்னை ‘பாக்யா’, ‘பாகி’னு கூப்பிடுவாங்க. வேற யாரும் என்னை உரிமையா கூப்பிட மாட்டாங்க. ஆனா, கலைஞர் என்னை எப்போதும் ‘பாகி’னு உரிமையா கூப்பிடுவார், பேசுவார். என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான விஷயம் இது. ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் என்னைக் குறிப்பிடும்போதுகூட, ‘பாக்யராஜ் ஒரு நல்ல எழுத்தாளன்’னு குறிப்பிட்டிருந்தார்.
அதிமுக பொது மேடை ஒன்றில் நான் பேசவேண்டி இருந்தது. அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். நான் பேசும்போது, ‘கருணாநிதி’ என்ற அவருடைய பெயரைக் குறிப்பிடாமல், ‘கலைஞர்’னு சொன்னேன். அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அவருடைய பெயரைச் சொல்லுன்னு கோஷம் போட்டாங்க. அதற்கு நான், ‘கலைஞர்மீது எனக்குப் பெரிய மரியாதை உண்டு. அவருடைய வயதை மதிக்கிறேன்’னு சொன்னேன்.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு, ‘பாக்யராஜ் செய்தது சரி. பண்பு என்பது இதுதான். பாக்யராஜ் என்னோட மரியாதையையும் சேர்த்துக் காப்பாத்தியிருக்கான்’னு சொன்னார். எம்.ஜி.ஆர் - கலைஞருக்கு இடையே பரஸ்பர அன்பும் நட்பும் எப்போதும் இருந்தது.”
- சனா