Published:Updated:

“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா!”

“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா!”

“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா!”

“ஆறு வயசுலேயே தமிழ், இந்தி, தெலுங்குனு எல்லா சினிமாக்கள்லேயும் ரவுண்டு கட்டி டான்ஸ் ஆடியிருக்கேன். அதனால ஒன்பதாவதோட படிப்புக்கு டாட்டா வச்சுட்டு டான்ஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். அப்புறம், சிவசங்கர், ராஜு சுந்தரம், தினேஷ்னு சில மாஸ்டர்கள்கிட்ட உதவி நடன இயக்குநரா வேலை. அப்புறம் நடன இயக்குநரா வேலை பார்த்தேன். இப்போ இயக்குநர் ஆகிட்டேன்... டான்ஸரோ, மாஸ்டரோ, இயக்குநரோ எது பண்ணினாலும் பரபரப்பா பண்ணணும்... அவ்ளோதாங்க!”

“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா!”

ரஜினி, விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன்... என்று பல ஹீரோக்களை நடனமாட வைத்தவர் பாபா பாஸ்கர். இப்போது ‘குப்பத்து ராஜா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

“வண்ணாரப்பேட்டைதான் நம்ம ஏரியா. மூணு அக்காக்களுக்குப்பிறகு கடைசியா பிறந்த பையன். அப்ப எனக்கு எல்லாமே அப்பாதான். ஒவ்வொரு நாளும் குளிப்பாட்டி விடும்போது, ‘மவனே... மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா’’னு சொல்லிட்டே இருப்பார். அவர்தான் வடபழனியில் பவுல்ராஜ் மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்க என்னைச் சேர்த்துவிட்டார். அவர்தான் என் குரு. அந்த வண்ணாரப்பேட்டை டு வடபழனி பயணம்தான் என் வாழ்க்கை. ‘சிறந்த டான்ஸ் மாஸ்டர்’னு எனக்குத் தந்த அந்த முதல்விருதை என் அப்பா கையில்தான் வாங்கினேன்.”

“டான்ஸர் டு டான்ஸ் மாஸ்டர் பயணம் சொல்லுங்க...” 

“சினிமாவுல டான்ஸ் ஆடுற ஒவ்வொரு குரூப் டான்ஸருக்கும் ஹீரோ பக்கத்துல நின்னு டான்ஸ் ஆடணும்னு ஆசையிருக்கும். கடைசி வரிசையில் டான்ஸ் ஆடிட்டிருந்த நான் கொஞ்ச கொஞ்சமா முன்னேறி முதல் வரிசைக்கு வந்தேன். எப்படியாவது ஹீரோ பக்கத்துல நின்னு டான்ஸ் ஆடணும்ங்கிற தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருந்தேன். நாகார்ஜுனா நடிச்ச ஒரு தெலுங்குப் படத்துல அந்த இடம் எனக்குக் கிடைச்சது. நாகார்ஜுனா பக்கத்துல நின்னு ரிகர்சல் பண்ணிட்டிருக்கேன். ‘உங்க அக்கா இறந்துட்டாங்களாம்’ங்கிற செய்தி காதுல விழுது. பெரும் அதிர்ச்சி. ஆனா, அவங்க சாவுக்குக்கூட நான் போகலை. அதுக்கு காரணம், ஹீரோ பக்கத்துல நின்னு ஆடுற அந்த வாய்ப்பை இழந்துடுவோம்ன்ற பயம். கடைசியில ஊருக்கு வந்து அக்காவோட அஸ்தியைத்தான் பார்த்தேன்.”

“தனுஷ் உங்க நெருங்கிய நண்பர்னு கேள்விப்பட்டோம். அந்த நட்பைப் பற்றிச் சொல்லுங்க...”

“ஆமாங்க. அவரும் நானும் ஒரே ஸ்கூலில்தான் படிச்சோம். தனுஷ் சூப்பரா படிப்பார். நான் ரோமியோ மாதிரி சுத்திக்கிட்டிருப்பேன். பரீட்சை ஹாலில் எனக்கு முன்னாடி தனுஷ் உட்கார்ந்திருப்பார். தனுஷ் அவருடைய பரீட்சை பேப்பரை எனக்குக் காட்டினாதான் அவர் வீட்டுக்கு ஒழுங்கா போகமுடியும். நான்தான் வம்புக்கு இழுப்பேன். அப்படி வம்பு பண்ணிட்டிருந்தவனை, ‘திருவிளையாடல்’ படத்துல மாஸ்டராக்கினார். அது விஐபி, மாரினு இப்பவரை தொடருது. தனுஷ் உண்மையிலேயே நல்ல இதயம் உள்ள மனுஷன்.”

“ரஜினி  படங்களில் வேலை செய்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்க...”

“ ‘சிவாஜி’ படத்தில் நான் உதவி நடன இயக்குநர். ‘`எந்திரன்’ படத்துல வேலை பார்த்தப்ப என்னைப் பாராட்டி செயின் கொடுத்தார். ரஜினி சார் மனுஷங்களை நேசிக்கக்கூடிய மனிதர். ‘2.0’-விலும் வேலை செய்திருக்கேன். படத்துல வரப்போறது ரொம்பச் சுட்டியான ரோபோ. அதுக்குச் சுட்டித்தனமான பாட்டு ஒண்ணும் இருக்கு. அந்தப் பாட்டுல ரஜினி சார், அக்‌ஷய்குமார் இரண்டு பேரையும் ஆட வெச்சிருக்கேன். அதை என் பாக்கியமா நினைக்கிறேன்.’’

“இயக்குநரா அறிமுகம், எப்படி இருக்கு?”

“டைரக்டர் ஆவேன்னு நினைக்கவே இல்லை. ஜி.வி.பிரகாஷ் நடிச்ச ‘புரூஸ் லீ’ பட ஷூட்டிங் ஸ்பாட்ல ‘’மாஸ்டர் ஏதாவது கதையிருந்தா சொல்லுங்க. படம் பண்ணலாம்’’னு ஜி.வி சொன்னார். ‘ஓ.கே’னு சொல்லிட்டு மறந்துட்டேன். மூணுமாசம் கழிச்சு ஒரு கதையோட ஓப்பனிங், இன்டர்வெல், க்ளைமாக்ஸ் தோணுச்சு. ஜி.வி கிட்ட சொன்னேன். ஓகே பண்ணுனார். படத் தயாரிப்பாளரையும் ஜி.வியே ரெடி பண்ணிக் கொடுத்தார். அப்படித்தான் திடீர்னு இயக்குநர் ஆனேன்.”

“ ‘குப்பத்து ராஜா’ என்ன மாதிரியான கதை?”

“நான் பார்த்துப் பழகின சென்னை வண்ணாராப்பேட்டை ஏரியாதான் களம். என் மக்கள் எதால பாதிக்கப்பட்டாங்க. எந்த வர்க்கங்கள் எங்களை ஆண்டதுனு சுவாரஸ்யமா இன்றைய சினிமாவுக்கு ஏற்றமாதிரி ‘குப்பத்து ராஜா’வில் கொடுத்திருக்கேன். படத்துல முக்கியமான கேரக்டர்ல பார்த்திபன் சார் நடிச்சிருக்கார். பல காட்சிகளை நான் வளர்ந்த வண்ணாராப்பேட்டை ஏரியாவுல லைவ் லொகேஷனில் ஷூட் பண்ணினோம். படத்துல மொத்தம் 34 கதாபாத்திரங்கள். எல்லாருமே சிறப்பா நடிச்சிருக்காங்க. ‘ஜி.வி.பிரகாஷ் எதார்த்தமா நடிச்சிருக்கார்’னு படம் பார்த்துட்டுச் சொல்லுவீங்க. ஜி.வி., பார்த்திபன் சார் பண்ணின கேரக்டர்கள் தனுஷ், ரஜினி சார் நடிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். செமயா இருந்தது. பார்ப்போம். எதிர்காலத்தில் என்ன வேணாலும் நடக்கலாம்.”

சனா