
கலக்கப் போவது நாங்க!

அலிடா - Alita
“நான் ஒரு கதை சொல்லி. என் தேடுதலுக்கான பயணம் அவ்வாறு தான் தொடங்குகிறது. நீங்கள் யாரும் செல்லாத இடங்களுக்குச் சென்று, யாரும் கேட்டிராத ஒரு கதையை சொல்வதில் தான் எல்லாம் இருக்கிறது” இதுதான் ஜேம்ஸ் கேமருன். ஃபார்முலா. தன் முதல் குறும்படமான Xenogenesis தொட்டு, ஏலியன்ஸ், டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் என மனிதர் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்க இது தான் காரணம். உலகையே ஆச்சர்யத்துக்குள் ஆழ்த்திய அவதார் படத்தின் அடுத்த பாகம் 2020ல் வெளிவர உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் கேமரூன் திரைக்கதை எழுதிய ``அலிட்டா : தி பேட்டில் ஏஞ்சல்” படம் வெளியாக இருக்கிறது. CYBORGகளும் மனிதர்களும் ஒன்றாக இயங்கும் சூழலில் பழைமையான சைபோர்க் ஒன்றை மனிதர்கள் கண்டெடுக்கிறார்கள். அதறகும் பிற சைபோர்களுக்கும் நடக்கும் போரும் அன்பும்தான் தான் கதை. ஜப்பானிய இதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்த அலிட்டாவை, தன் திரைக்கதை மூலம், ஹாலிவுட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி படங்களை இயக்கிய ராபர்ட் ரோட்ரிகெஸ் இப்படத்தை இயக்குகிறார்.

அக்வாமேன் - Aquaman
நீரினுள்ளே ஓர் உலகம், அதை ஆளப்பிறந்தவன் கடல் அரசிக்கும் சாதாரண நில மனிதன் ஒருவனுக்கும் பிறந்த குழந்தையான ஆர்தர் கரி. தன் மக்களை எதிரிகளிடம் எப்படி காக்கிறான் என்பது தான் அக்வாமேன். கேம் ஆஃப் த்ரோன்ஸ் ‘கால் த்ரோகோ’ புகழ் ஜேசன் மோமோ தான் அக்வாமேன். உண்மையிலேயே 10 பேரை ஒரே அடியில் அடித்து நொறுக்கும் உடல்வாகும், கருணையற்ற கண்களையும் கொண்ட ஹீரோ. ஜஸ்டிஸ்லீகிலேயே கணிசமான ரசிகர்களைப்பெற்றவர் என்பதால் இந்தப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. மார்வெல் நிறுவனம் அடுத்தடுத்து ஹிட்களைக் குவித்துக்கொண்டு இருந்தாலும், அதன் பரம எதிரி DCயோ கல்லாவை நிரப்பியது வொண்டர் வுமனில் மட்டும் தான். `ஜஸ்டிஸ் லீக்” திரைப்படமும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தி காஞ்சுரிங் , இன்சீடியஸ் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கவிருக்கிறார் என்பதால் டிசிக்கு அடுத்த ஹிட் கன்பார்ம் என்கிறார்கள்!

ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: தி கிரைம்ஸ் ஆஃப் க்ரிண்டல்வால்ட்’ (Fantastic Beasts: The Crimes of Grindewald)
ஹாரி பாட்டர் மூலம் ஜாக்பாட் அடித்த ஜே.கே.ரௌலிங் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபோது, அவரது மூளையில் உதித்த ஐடியா `ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்.’ ஹாரி பாட்டர் முதல் பாகத்தில் ஹாரியின் கையில் இருக்கும் புத்தகம்தான் இது. அதை எழுதியவர் Newt Scamander. கதையில் வரும் நீட் ஸ்கேமண்டரின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை வைத்து இந்தப் படங்களைத் தற்போது எடுத்து வருகிறார்கள். 2016ம் ஆண்டு வந்த முதல் பாகம் அசுர ஹிட் அடிக்க , இந்த நவம்பர் மாதம் அதன் இரண்டாம் பாகம் வருகிறது. முதல் பாகத்தின் இறுதியிலேயே கெத்து வில்லனாக அறிமுகமானார் ஜானி டெப். இந்தப் பாகத்தில் நாயகன் எட்டிக்கும், வில்லன் டெப்புக்குமான காட்சிகளுக்கு கைத்தட்ட காத்திருக்கிறது ரசிகர்படை. ஏற்கனவே 2020ல் மூன்றாவது பாகம் வெளியாக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். காத்திருக்கிறார்கள் ரௌலிங் ரசிகர்கள்.

காட்ஸில்லா: கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ் (Godzilla: King of the Monsters)
டைனோசர், கிங்காங் படங்களுக்கு போட்டியாக, உலகெங்கிலும் அதிக மார்க்கெட்டைக்கொண்ட மற்றுமொரு மான்ஸ்டர் ஹீரோ காட்ஸில்லா. 1954ம் ஆண்டிலிருந்தே வெளியாகும் தொடர் என கின்னஸ் சாதனையை வேறு வைத்திருக்கிறது காட்ஸில்லா. இதுவரையில் இரண்டே இரண்டு காட்ஸில்லாக்கள் மட்டுமே, ஹாலிவுட்டில் நாசம் பண்ணி இருக்கின்றன. மூன்றாவது காட்ஸில்லாவை, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இப்போது தட்டி எழுப்பி, 2019 மே ரிலீஸுக்கு தயார்படுத்திவருகிறது. ‘தி காஞ்சுரிங்’ புகழ் வேரா ஃபார்மிகா, ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்’ புகழ் சாலி ஹாக்கின்ஸ், ‘ஸ்டேரஞ்சர் திங்ஸ்’ தொடரில் அசத்திய மில்லி பாபி ப்ரவுன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முந்தைய காட்ஸில்லாக்கள் போல இல்லாமல் இது நம்மை பதறவைக்கும் என்கிறார்கள் பார்ப்்போம்!

‘தி கிளாஸ்’ (The Glass)
சிக்கலான மனிதர்களும், அவர்களால் ஏற்படும் நிகழ்வுகள், அது சார்ந்த உளவியல்கள் இதுதான் இயக்குநர் மனோஜ் நைட் ஷ்யாமளனின் அடையாளம். தி சிக்ஸ்த் சென்ஸில் தொடங்கி அவருடைய ஒவ்வொரு படங்களிலும் இப்படிப்பட்ட விஷயங்களையே தொடர்ந்து கையாளுகிறார் மனோஜ். அவருடைய `ஸ்பிளிட்’ படத்தில் வரும் ஜேம்ஸ் மெக்காய், `அன்பிரேக்கபிளி’ல் வரும் ப்ரூஸ் வில்லிஸ், சாமுவேல் ஜாக்சன் மூவரையும் வைத்து மனோஜ் இயக்கி இருக்கும் படம் தான் `தி கிளாஸ்’. உடையா எலும்புகள் மற்றும் தொடுதலின் மூலம் ஒருவரின் இறந்தகாலத்தைக் கண்டறியும் சூப்பர் பவர் கொண்ட ஒருவன். அதீத புத்திசாலி, ஆனால் சுலபமாக கை, கால் எலும்புகள் முறியும் தன்மைகொண்ட ஒருவன். மனதளவில் 23 நபர்களாகவும் வாழும் dissociative identity disorder என்ற மனநோய் கொண்ட ஒருவன் என இந்த மூன்று நபர்களைச் சுற்றிக் கதை நகரும். வரும் ஜனவரி மாதம் கிளாஸ் பயமுறுத்தப்போகிறான் என்கிறார்கள். வா தல!

ஷஸாம்! (Shazam!)
இந்த ஆண்டுக்கு அக்வாமேன், அடுத்த ஆண்டுக்கு ஷஸாம் என முடிவு செய்திருக்கிறது DC நிறுவனம். சின்ன வயது சிறுவன் ஒருவனுக்கு `ஸஸாம்’ என்று கூறியவுடன் சூப்பர் ஹீரோ ஆகும் சக்தி கிடைக்கிறது. அதை வைத்து அவன் நிகழ்த்தும் காமெடி சாகசங்கள்தான் கதை. டிசி படங்களில் எப்போதுமே நகைச்சுவை எல்லாம் இருக்காது. ஒரே இருள்தான்! ஆனால் ஸஜாம் முழுக்க முழுக்க ஒரு காமெடி ஹீரோ, டிசியில் இருந்து இப்படி ஒருகதை என்பதால், என்ன புதுமை என்பதைக்காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். டிரெய்லரில் கூட ஒவ்வொரு வரியிலும் காமெடியை தூவி இருக்கிறார்கள். டிசியின் க்ரீன் லேன்டர்னில் நாயகனாக வந்த ரியான் ரெனால்ட்ஸ் தான் மார்வெல் பக்கம் டெட்பூலாக ஒதுங்கி ஹிட் அடித்தார். தற்போது, அதே வேலையை ஜேக்கரி செய்திருக்கிறார். ஆம், மார்வெல்லின் தோர் படங்களில் ஃபண்ட்ரல்லாக வரும் ஜேக்கரி லெவி தான் ஷஸம் நாயகன். லைட்ஸ் அவுட், அனபெல்: கிரியேஷன் படங்களை இயக்கிய டேவிட் சேன்ட்பெர்க் இப்படத்தை இயக்கியுள்ளார்.
கார்த்தி