Published:Updated:

விஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்

விஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
விஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்

விஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்

ல்-கொய்தாவில் கமல் எப்படி ஊடுருவினார், ஆண்ட்ரியாவுக்கும் அவருக்கும் என்ன உறவு, பூஜாகுமாருக்கும் கமலுக்கும் இடையிலிருந்த குழப்பமான உறவு என்னவானது, அமெரிக்க ஆபரேஷனில் தப்பித்துவிட்ட ஒமரும் சலீமும் சிக்கினார்களா என முதல் விஸ்வரூபத்தில் சொல்லப்படாத பல கேள்விகளுக்கும் பதில்சொல்கிறது ‘விஸ்வரூபம் 2’.

விஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்

நடிகராகவும் இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் கமலிடம் அதே அக்மார்க் பாய்ச்சல். சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கள் மூலம் கண்களாலேயே கதை சொல்கிறார்.

விஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்



“இங்க துரோகிகளுக்குச் சாவுதான்; இண்டியன் பாலிட்டிக்ஸ் மாதிரி பதவி கிடையாது”, “அப்போதைக்கு பிரச்னையில்லனா எந்த விஷயத்தையும் கெடப்புல போடுறதுதான அரசு பரிபாலனம்” என வசனங்களில் கமல்... அனல்.

அணு பாதிப்பு எவ்வளவு கொடூரமானது என்பதை, சாப்பிட்ட அடுத்த நிமிடமே ஒமர் ரத்தவாந்தி எடுக்கும் ஒரே ஷாட்டில் காட்டப்படுவது, ஈஸ்வர் ஐயர் தற்கொலை செய்துகொள்ளும்போது, கண்ணாடியில் சிதறி வழியும் ரத்தத்தில் இந்திய வரைபடம் எழுவது என இயக்குநர் கமலும் சிறப்பு.

ஆனால், ஓர் உளவாளியின் கதையில் இருக்க வேண்டிய வேகமும் விவேகமும் திரைக்கதையில் இல்லை. லண்டனில் குண்டு வைத்தாலும் டெல்லியில் வைத்தாலும்  எவ்வித சவாலுமின்றி முறியடித்து விடுகிறார் நாயகன்.  கதைநாயகன் எதை நோக்கிப் போகிறான், அவனது இலக்கு என்ன என்பதிலும் தெளிவில்லை. படம் முழுக்க வருகிற முதல் பாகக் காட்சிகளும் சலிப்பூட்டுகின்றன.

ஆண்ட்ரியா ஆக்‌ஷனிலும் சின்னச் சின்ன காமெடியிலும் கலக்குகிறார். பூஜாகுமார் காதல் தவிப்பில் உருகுகிறார். வகீதா ரஹ்மான், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த மகாதேவன் என சிறிய பாத்திரங்களில் வருகிற பெரிய நடிகர்கள் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

விஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்

“எல்லாருமே தீவிரவாதிங்க இல்ல; இதில விக்டிம்ஸும் இருக்காங்க...” என்கிற வசனங்கள் படத்தில் இடம்பெற்றாலும், ஜிகாதிகள் பொதுமக்களை ஈவு இரக்கமற்றுக் கொல்பவர்களாகவும் அமெரிக்க ராணுவம் மக்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்யாத உத்தமப்படைபோலவும் காட்டப்படுவதை ‘அங்கிள் சாமே’ நம்பமாட்டாரே ஐயா!

‘நானாகிய நதிமூலமே’ எனப் பாடல்களில் நெகிழ்த்தும் முகமது ஜிப்ரான், பின்னணி இசையில் சரியாக ஜொலிக்கவில்லை. மகேஷ் நாராயணனும், விஜய் சங்கரும் கச்சிதமாக எடிட் செய்திருக்கிறார்கள். ஷனு வர்கீஸ், ஷாம்தத் சைனுதீன் இருவரின் ஒளிப்பதிவும்தான் படத்திற்குப் பிரதான பலம். ஆப்கானிஸ்தான் நிலக்காட்சி, டெல்லியின் சந்தடிகள், கடலுக்குள் மூழ்கிய கப்பல் என லால்குடி இளையராஜா கலை இயக்கத்தில் சிறப்பாக உழைத்திருக்கிறார். கணினி வரைகலை பல இடங்களில் அரைகுறையாக முகத்திலடிக்கிறது.

“புள்ளகுட்டிகளப் படிக்கவைங்கடா!” என்று சர்வதேசத் தீவிரவாதிகளிடம் சொல்லியிருக்கிறார் கமல். கொஞ்சம் நேர்த்தியாகச் சொல்லியிருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு