
ஷாஜி

‘ஷோலே’ என்றால் பற்றியெரியும் தீச்சுவாலை. அது ஓர் உருதுச் சொல் என்று எங்கள் ஹிந்தி ஆசிரியர் ‘அடிவீரன்’ யாக்கோப் சொன்னார். வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் கட்டப்பனை சந்தோஷில் ‘ஷோலே’ வந்தது. ஆனால், ஒரு புதிய சினிமா வெளியீட்டைப்போல் அதை ஊர் மக்கள் கொண்டாடினர். எங்கள் வீட்டிலும் புதுவெளியீடு ஒன்று இருந்தது. அது என் சின்னத் தம்பி. இரண்டு ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பிள்ளைகள் ஐவராகிவிட்டனர். இனிமேல் தாங்காதென்று அத்துடன் மகப்பேற்றை நிறுத்திவிட முடிவெடுத்த அம்மா, மருத்துவமனையில் படுத்திருக்கிறார். அந்த மருத்துவமனை எங்கள் பள்ளிக்கு மிகவும் அருகில் இருந்தது. என்னுடன் படிக்கும் பயல்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தால் பெரும் மானக்கேடு ஆகிவிடும். அதனால், பல வாரங்கள் நான் பள்ளிக்கே போகவில்லை. பாக்கு மரங்களிலிருந்து கீழே விழும் பழுக்காய்களைச் சேகரித்து ‘ஷோலே’ பார்க்கப் பணம் சேர்த்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் தம்பி பிறந்த தகவல் வந்தது. ‘குழந்தை பார்க்க’ப் போகணும். வெறுங்கையுடன் போவது ஆணொருத்தனுக்குக் கௌரவக்குறைவு. இருந்த பணத்தை வைத்து ஒரு சோப்பு டப்பாவை வாங்கிக்கொண்டு சாத்தானும் நானும் ‘குழந்தை பார்க்க’ச் சென்றோம். நன்றாகச் செவத்தப் பையன் காற்றில் கைகால்கள் வீசி ‘ள்ளே... ள்ளே...’ என்று அழுதுகொண்டிருந்தான். எங்கள் வருகையும் பரிசளிப்பும் அம்மாவுக்கு ஏதோ அருவருப்பை உண்டுபண்ணியிருக்கணும். என்னைக் கடுமையாகத் திட்டினார். தலையெழுத்து! ‘ஷோலே’யாவது பார்த்திருக்கலாம்.

இரண்டு வாரங்களுக்குமேல் எந்தப் படமுமே ஓடாத எங்களூரில் ‘ஷோலே’ மூன்றுமாதங்கள் ஓடியது. அம்மா வீடு திரும்பி, நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தபோதும் ‘ஷோலே’ ஓடிக்கொண்டிருந்தது. அப்படத்தைப் பார்க்காதவர்கள் யாருமே அங்கில்லை, என்னைத் தவிர! சினிமா என்கிற சமாச்சாரத்துடன் சம்பந்தமேயில்லாத ராஜுமோன் சாக்கோகூட ‘ஷோலே’ பார்த்துவிட்டான்! “அமிதாவச்சன் குதுரமேல ஏறிப்பாஞ்சு துப்பாக்கி சுடுறாரு. தருமேந்திரன் சரக்கடிச்சு கூப்பாடுபோட்டு மட்டையாறாரு. சஞ்ஞீவ் குமாருக்கு ரெண்டு கையும் கெடயாது. ஆனா, கால மட்டும் வெச்சு என்னா ஒரு ஷண்டு...” ஒவ்வொருத்தனும் மாறிமாறி என்னிடம் கதைச்சுருக்கத்தைச் சொன்னான்கள். பல பயல்களை அவர்களது அண்ணன்கள் படம் பார்க்க அழைத்துச் சென்றார்களாம். எனக்கு அண்ணனுமில்லை அக்காவுமில்லை. இனி ஓரிரு நாள்களில் ‘ஷோலே’ சினிமாக் கொட்டகையிலிருந்து எடுக்கப்படும். பதற்றமும் கோபமும் கலந்த சோர்வு மனநிலையில் திரிந்துகொண்டிருந்தேன். அப்போது சற்றும் எதிர்பாராமல் நண்பன் பிரியன் வந்து என்னிடம் “எடா.. நாம நாளெ க்ளாஸுல ஏறாம ஷோலே பாக்கப் போலாமா?” என்று கேட்கிறான்!
பள்ளிக்கூடம் போகிறோம் என்று பொய் சொல்லி, படம் பார்க்கப் போகும் திருட்டுத் திட்டத்தை முதன்முதலாக அன்றைக்கு நாங்கள் அமல்படுத்தினோம். கட்டப்பனையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள ஓர் ஓலைக்கொட்டகைதான் ‘சந்தோஷ்’ திரையரங்கு. மேற்கூரையில் சூரியஒளி வடிந்திறங்கும் எண்ணற்ற ஓட்டைகள். ஒலியும் ஒளியுமெல்லாம் மகா மட்டம். கட்டணம் குறைவான இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டிருந்தன. பிரியன் கொண்டுவந்த பணத்தை வைத்து உயர் கட்டணச் சீட்டுக்களையே வாங்கி, கடைசி வரிசையில் சென்று அமர்ந்தோம். பின்னுக்குப் போகப்போக சினிமாவின் சித்திரங்களும் ஒலியும் தெளிந்து தெளிந்து வரும் மாயாஜாலத்தை அன்றைக்குதான் முதலில் உணர்ந்தேன். அன்று வரை பார்த்த அனைத்துப் படங்களையும்விட ‘ஷோலே’ என்னைக் கிறங்கடித்தது. அதன் காட்சிகளும் பாடல்களும் மறக்க முடியாத அனுபவங்களாக மனதில் தங்கின. ‘யே தோஸ்தீ ஹம் நஹி தோடேங்கே.., ஓ ஜப் தக் ஹே ஜான்.., மெஹபூபா மெஹபூபா…’ அப்பாடல்களை உருவாக்கிய ஆர்.டி.பர்மன் எனது அபிமான இசையமைப்பாளராக மாறினார். உலகின் ஆகச் சிறந்த சினிமா ‘ஷோலே’தான் என்று எந்தச் சந்தேகமுமில்லாமல்எண்ணிக்கொண்டேன்.
மூன்று நாள்களில் ஷோலே மாறப்போகிறது. இனி ஆறே ஆறு காட்சிகள் மட்டுமே. ஆறையும் பார்க்க வேண்டும் என்று அடக்க முடியாத ஆசை. அதற்கான பணத்தைத் திரட்ட ஒரு ஜேப்படித் திருடனாக மாற முடிவெடுத்தேன். குடிபோதையில் ஆழ்தூக்கத்தி லிருந்த அப்பாவின் கதர்ச்சட்டைப் பையில் கைவிட்டபோது, 30 ரூபாய் சிக்கியது! பள்ளிக்கூடப் பக்கமே போகாமல் தினமும் கட்டப்பனை சென்று ஆறு காட்சிகளையும் பார்த்தேன். கடைசி நாள் கடைசிக் காட்சியை மனவலியுடன்தான் பார்த்தேன். அமிதாப் பச்சன் இறந்துபோகும்போது விசும்பி அழுதேன். வெளியான நாளிலிருந்து ஐந்தரை ஆண்டுகள் கடந்து பம்பாயின் ‘மினெர்வா’ திரையரங்கில் இப்போதும் ‘ஷோலே’ ஓடிக்கொண்டிருக்கிறது என்று குஞ்ஞு சொன்னார். பம்பாய் போக நமக்கு வழியில்லையே.
பக்தி மார்க்கத்தில்
‘ஷோலே’ என்னை ஓட்டைவிழுந்த சினிமாக் கொட்டகையான ‘சந்தோஷின்’ ரசிகனாகவும் மாற்றியது. ‘சந்தோஷு’க்கு வெளியே உள்ள சாலையோரங்கள் அடிக்கடி எனது போக்கிடமாயின. ஆகாயம் நோக்கி நிற்கும் சந்தோஷின் கூம்பு வடிவக் கோளாம்பிகள் ஒலிபரப்பும் திரைப்பாடல்களை ஒன்றுவிடாமல் கேட்டு ரசித்த அக்காலத்தில், ஒருமுறை பள்ளிக்கூடத்திலிருந்து எங்களை அங்கு படம் பார்க்கக் கொண்டுசென்றனர். மிருணாள் சென் இயக்கிய ‘ம்ரிகயா’ எனும் ஹிந்திப் படம். ஜனாதிபதியின் விருதைப் பெற்ற அப்படத்தின் கதாநாயகன் மிதுன் சக்கரவர்தி. சலில் சௌத்ரியின் மயக்கும் இசை. அதன் கதையும் காட்சிகளும் எதுவுமே பெரிதாகப் புரியவில்லை என்றாலும் ஒரு காட்டுவாசியின் பாத்திரம் கதாநாயகனாக வந்த ‘ம்ரிகயா’ நான் பார்த்த படங்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. ஆனால், இதெல்லாம் ‘ஷோலே’ படத்தை நெருங்க முடியுமா என்ன? இன்னுமொரு ‘ஷோலே’ தேடி ஊர்களில் வந்த நிறைய ஹிந்திப் படங்களைப் பார்த்துக் குவித்தேன். அப்போது ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒரு செய்தி வந்தது. ‘ஷோலே’விற்குப் பிறகு அதே கூட்டணி உருவாக்கிய ‘ஷான்’ எனும் படம் இந்தியா முழுவதும் அன்றைக்கு வெளியாகிறது. அன்றைய தினமே அப்படம் கட்டப்பனை சந்தோஷிலும் வருகிறது! மூன்று மாதங்கள் தொடர்ந்து ‘ஷோலே’ ஓட்டியதற்கான அங்கீகாரமாம்! அச்செய்தியை அறிந்த உடனே பிரியனும் நானும் சந்தோஷை நோக்கி ஓடினோம்.
பள்ளியில் கிறிஸ்துமஸ் விடுமுறைத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்தன. தேர்வெழுதாமல்தான் படம் பார்க்கப் போனோம். சினிமாக் கொட்டகை சென்றபோதுதான் தெரியவந்தது, ‘ஷான்’ வெளியீட்டுச் செய்தி ஒரு மாபெரும் பொய் என்று. ‘பக்த ஹனுமான்’ என்கிற புண்ணிய புராணப் படம்தான் அங்கே ஓடுகிறது. ‘சங்கீதா’விலும் ‘சாகரா’விலும் ஏதோ கறுப்பு வெள்ளைப் படங்கள். எதற்கும் வந்துவிட்டோம், வண்ணப்படத்தையே பார்த்துவிடுவோம். நாங்கள் ‘பக்த அனுமாரை’ப் பார்க்க நுழைந்தோம். ‘ராம ராம ராமா லோகாபிராமா...’ பக்திப் பரவசங்கள் எதுவுமே நமக்குக் கிடையாது என்றாலும், அப்படத்தில் சீதாவாக வந்த செம்பரத்தி சோபனாவை மீண்டும் ஒருமுறை பார்த்தது மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. ஆட்டம் முடிந்து பிற்பகலில் இரட்டையாறை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தோம். எதிரில் அதோ வருகிறார்கள் எங்கள் பள்ளியின் மூன்று வாத்தியார்கள். அதில், மலையாள ஆசிரியர் அன்பான மனிதர். நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லாத ஒரே மனிதர் அவர். கவிதை, கதை எழுத்துப் போட்டிகளில் என்னையும் சேர்ப்பார். என்னுடைய மொழி உச்சரிப்பு சிறப்பு என்று சொல்லி வகுப்பறையில் பாடங்களை உரக்கப் படிக்கவைப்பார். ஆனால், மற்ற இரண்டு வாத்திகளுமே பெரும் பிரச்னைக்காரர்கள். அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.

“பரீட்ச கட்டடிச்சு ரெண்டும் சேந்து எங்கடா போனீக?”
“கட்டப்பனாவுக்கு…”
“கட்டப்பனாவுல என்னடா ஒங்கள பொண்ணு பாக்க மாப்ள யாராச்சும் வந்தாகளா? எந்தச் சினிமாக் கொட்டகையில கெடந்தீகடா?”
“சந்தோசுல”
“சந்தோசம்டா... சந்தோசம்... நேரா ஸ்கூலுக்குப் போ... பாதிரி அச்சன் ஒங்கள வழிநோக்கி ஒக்காந்திருக்காரு.”
வாத்திகள் சும்மா புருடாவிட்டதுதான். ஆனால், கள்ளம் கபடமறியாப் பச்சைக் குழந்தைகளாகிய நாங்கள் அதை நம்பிக்கொண்டு பயந்து நடுங்கி தலைமை ஆசிரியரான பாதிரியார் முன் சென்று கூனிக்குறுகி நின்றோம். நடந்த அனைத்தையும் விலாவாரியாக விவரித்து எல்லாக் குற்றத்தையும் ஒப்புக்கொண்டோம்.
“கேக்கவே எவ்வளவு நல்லாருக்கு... மகான்கள் ரெண்டும் எந்த படத்த பாத்தீக?”
“பக்த ஹனுமான்”
“அட! ரெண்டுபேரும் பக்தி மார்க்கத்துல போயிட்டிருக்கீக.. ச்சு ச்சு ச்சு…”
எங்கள் நிக்கர்களை நன்றாகத் தூக்கிப் பிடித்துத் தொடைகளில் பிரம்புச் சூரலால் ஒன்றுக்கொன்று வலுத்த தலா பத்து அடிகளை வழங்கி பாதிரியார் கர்த்தரின் கருணையை வெளிப்படுத்தினார். அத்துடன் நிறுத்தாமல், எனது கிராமக்காரனும் பாதிரியின் பிரிய சீடனுமான அறவன் ஜான் கையில் அப்பாவுக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார். ஜானின் கையில் கடிதம் இருப்பதை மோப்பம் பிடித்த பிரியனும் நானும் அவனைக் காட்டு வழியில் மடக்கிப் பிடித்து அடித்து கடிதத்தைப் பிடுங்கினோம். “தங்களின் தவப்புதல்வன் தேர்வு எழுதாமல் சினிமாக் கொட்டகைகள் மேய்கிறான். உடனடியாகப் பள்ளிக்கூடம் வந்து மாற்றுச் சான்றிதழை வாங்கி உங்கள் விலைமதிப்பிலா பொக்கிஷத்தை இங்கிருந்து அகற்றித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்பதுதான் கடிதத்தின் சாராம்சம்.
கடிதத்தை நாங்கள் அடித்துப் பிடுங்கியது உட்பட அனைத்துக் கதைகளையும் நீதிமானாகிய ஜான், அப்பாவிடம் விலாவரியாக விளக்கினான். பள்ளிக்கூடம் சென்ற அப்பாவைப் பாதிரியார் தேர்ந்தெடுத்த வேத வாக்கியங்களால் அபிஷேகம் செய்தார். “இனிமேல் இப்படி நடக்காது பாதிரி அச்சா” என்று கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கேட்டுச் சமாளித்துக் கொண்டு அப்பா வீட்டுக்கு வந்தார். அடுத்து நடந்ததைச் சொல்ல வேண்டுமா? கொடூரமான அடி உதைகளால் என்னைச் சாகடித்தார். பின்னர் நேராகக் குப்பாச்சாம்படி ஊரிலுள்ள பிரியனின் வீட்டிற்கு விரைந்து, அவனது அப்பா மேவறச் சேட்டனுடன் சண்டையிட்டார்.
“எடோ மேவறக் கூதறே.. ஓம் மவன் ஒருத்தன்தா என்னோட செறுக்கன கெடுக்குறான். தெர்மா?”
“ஓ... பின்ன… ஒம்மவன் மட்டும் ஒரு பெரிய புண்ணியவான்... புழுங்க நெல்லுக்கு வா தொறக்காத என் செறுக்கன அந்த நாறிமவன்தானே இப்டி ஆக்கினா...”
தன்னை நாற்றம் பிடித்தவன் என்று திட்டினதில் கோபமேறிப்போன அப்பா, அவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டார் என்றும் பதிலுக்கு அவர் அப்பாவைக் குடையால் குத்தினார் என்றும் சம்பவ இடத்திலிருந்த சிலர் சாட்சி சொன்னார்கள். ஆனால், அச்சம்பவத்தின் சூடு அடங்கும் முன் நான் மீண்டும் ஹிந்திப் படங்களைத் தேடிப் போனேன். ‘துனியா மேரி ஜேப் மே’, ‘மேரீ ஆவாஸ் சுனோ’, ‘பர்ஸாத் கீ எக் ராத்’, ‘காலியா’, ‘மஹான்’, ‘ஹிம்மத்வாலா’, ‘ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா’, ‘தேஸ் பர்தேஸ்’, ‘லூட் மார்’ எல்லாம் பார்த்தேன். இல்லாத பணத்தைக் கொடுத்து ஹிந்தி நடிகர்களின் வண்ணப்படங்களை வாங்கி அங்கும் இங்கும் ஒட்டிவைக்கும் நோயும் முற்றிப்போயிருந்தது. வெளியாகி ஆறே மாதத்தில் ‘ஷான்’ இரட்டையார் ‘நிர்மலா’வில் வந்தது. ‘தோஸ்தோம் ஸே பியார் கியா’, ‘யம்மா யம்மா’, ‘ஜானூ மேரி ஜான்...’ ஆர்.டி.பர்மனின் துள்ளலான பாடல்கள். ஆனால், ‘ஷானா’ல் ‘ஷோலே’வின் கிட்டையே நெருங்க முடியவில்லை.
ஹிந்திப் படங்களைப் பற்றிச் சொல்லித் தர எனக்கு குஞ்ஞு இருந்தார். ஆனால், தமிழ்ப் படங்களைப் பற்றி அப்படித் தகவல் தர யாருமே இல்லை. இருந்தும் சில காலமாகத் தமிழ்ப் பாட்டுகளும் தமிழ்த் திரைப்படங்களும் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. தமிழ்நாட்டு எல்லையிலிருந்து எங்கள் ஊர்களுக்கு அதிகம் தூரமில்லை. இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதிகமாகவே இருந்தனர். ஆதலால், பல கொட்டகைகளில் அடிக்கடி தமிழ்ப் படங்கள் வந்தன. நெடுங்கண்டம் ‘தர்சனா’ போன்ற திரையரங்குகளில் பெரும்பாலும் தமிழ்ப் படங்களே வந்தன. அங்குதான் முதன்முதலில் ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்தேன். சிவாஜி கணேசன் நடித்த ‘திரிசூலம்’. திருமாளின் திருமார்பில், இரண்டு கைகள் நான்கானால் போன்ற அப்படத்தின் பாடல்களைக் கேட்டபோது, யேசுதாஸ் தமிழிலும் பிரபலமான ஒரு பாடகர் என்பதை அறிந்தேன். மலையாளப் படங்களையும் ஹிந்திப் படங்களயும்விட அழுத்தமான வண்ணங்களும் மிகையான உணர்வுகளும் தமிழ்ப் படங்களில் இருப்பதைக் கண்டேன். சிவாஜியின் பழைய கறுப்பு வெள்ளைப் படமான ‘பட்டிக்காடா பட்டணமா’ நான் பார்த்த முதல் கறுப்பு வெள்ளைத் தமிழ்ப் படம். ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘மாங்குடி மைனர்’, ‘பைரவி’ என மேலும் சில கறுப்பு வெள்ளைப் படங்களையும் பார்த்தேன். ‘மீனவ நண்பன்’ எனும் வண்ணப் படம்தான் நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம். ரஜினிகாந்த் நடித்த ‘அன்புக்கு நான் அடிமை’, ‘அன்னை ஓர் ஆலயம்’, கமல்ஹாஸனும் ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்த ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ எனப் பல தமிழ் வண்ணப் படங்களை அக்காலத்தில் பார்த்தேன். நான் முதன்முதலில் ஒரு ‘ஏ’ படம் பார்த்ததும் தமிழில்தான்.
‘A’ என்று பெரிதாக ஆங்கிலத்திலும் படத்தின் பெயர் சின்னதாக மலையாளத்திலும் எழுதப்பட்ட சில சுவரொட்டிகள் அங்குமிங்கும் தெரிந்தன. அதில் உண்ணிமேரி என்ற மலையாள நடிகை தனது மார்பகத்தைப் பாதி காட்டி அமர்ந்திருந்தார். பக்கத்தில் எனக்கு அடையாளம் தெரியாத தாடிவைத்த ஒரு நடிகர் அப்பாவித் தோற்றத்தில் ஏக்கத்துடன் நின்றுகொண்டிருந்தார். அது கட்டப்பனை ‘சங்கீதா’வில் மதியக் காட்சி. ‘ஏ’ படங்களைக் குழந்தைகள் பார்க்கக் கூடாது. ஆமா! ஆனால், பார்த்தால் என்ன ஆகும்? தமிழ்ப் படம் என்பதால், ஒருவேளை சீட்டு கிடைக்கலாம். ஒருவகைத் தயக்கத்துடன்தான் சங்கீதாவுக்குச் சென்றேன். அங்கு கூட்டமே இல்லை. பயத்துடன் சீட்டு ஓட்டையில் கை நுழைத்தேன். சீட்டு கிடைத்துவிட்டது! படத்தின் தொடக்கத்திலேயே ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’ என்ற பாடல். அட! இப்பாடல் இந்தப் படத்திலுள்ளதா? இரட்டையார் ‘பிந்து’வில் அடிக்கடி ஒலிக்கும் பாடல் அல்லவா இது! எனக்குப் பிடித்தமான பாடல். அதே இசைத் தட்டிலுள்ள ‘உச்சி வகுந்தெடுத்து’, ‘மாமே ஒருநா மல்லியப்பூ கொடுத்தான்’ பாடல்களும் இப்படத்தில்தான் வருமா?
பாடல்களுக்காகக் காத்திருந்த என்னை அத்திரைப்படம் மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அது ‘ஏ’ படமுமில்லை ‘பி’ படமுமில்லை. மிக அழகான ஒரு தமிழ்ப் படம். கிராமத்து மனிதர்களின் யதார்த்தமான வாழ்க்கைச் சித்திரங்கள். படம் என்னைக் குதூகலப்படுத்தியது, அழவைத்தது. கதாநாயகனின் தற்கொலை என்னை மிகவும் பாதித்தது. படம் முடித்து அழுகையுடன் வெளியே வந்து சுவரொட்டி
களை மீண்டும் உற்றுப் பார்த்தேன். சிவகுமார், தீபா நடிக்கும் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, இசை - இளையராஜா, இயக்கம் - தேவராஜ், மோகன் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் மேலும் தமிழ்ப் படங்களைப் பார்க்க அப்படம் என்னைத் தூண்டியது. சிவாஜியும், எம்.ஜி.ஆரும், டி.எம்.எஸும், எம்.எஸ்.வியும், கமல்ஹாஸனும், ரஜினிகாந்தும், இளையராஜாவும், மலேசியா வாசுதேவனும் எனக்குச் ‘சொந்தமுள்ள சாதிசனத்தை’விடச் சொந்தமாக மாறினார்கள். மலையாளப் படங்களையும் பாடல்களையும்விடத் தமிழ் மற்றும் ஹிந்திப் படங்களும் பாடல்களும் எனக்கு முக்கியமாக மாறின. ஒரே நாளில் இந்த மூன்று மொழிகளிலும் மாறிமாறி மூன்று, நான்கு எனப் படங்களைப் பார்ப்பது எனக்கு ஒரு சாதாரண விஷயமாக மாறிப்போனது.
நடுஜாமப் பயணங்கள்
இரண்டாம் ஆட்டங்கள் முடித்து நள்ளிரவுக்குப் பின், தன்னந்தனியாக வீடு திரும்புவதுதான் அக்காலத்தில் எனக்கிருந்த மிகப் பெரிய பிரச்னை. விறுவிறுப்புடன்தான் இரண்டாம் காட்சிக்கு நுழைவேன். ஆனால், படம் முடியும் முன்னே மனது பதற்றத்தில் படபடக்கத் தொடங்கும். நெடுங்கண்டத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு 12 மைல் தூரம். கட்டப்பனையிலிருந்து ஒன்பது மைல். இரட்டையாறிலிருந்து ஆறு மைல். இரவு பன்னிரண்டரை, ஒரு மணிக்கு வெளிச்சமோ ஆளரவமோ இல்லாத மலைவழிகளினூடாகக் கும்மிருட்டில் தனியாக நடந்து போகணும். கொஞ்ச நேரம் இருட்டில் தேடிப்பிடித்து நடந்தால் மெள்ள மெள்ள வெளிச்சம் மங்கலாகத் தெளிந்துவரும். மலைக் கிராமங்களின் இரவு கடும் குளிருடையது. வழிகளில் யாருமே இருக்கமாட்டார்கள். அக்காலத்தில் எங்கள் ஊர் மக்கள் பெரும்பாலும் அந்தியில் ஏழு மணிக்கு முன்பே இருக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டுப் போர்த்திக்கொண்டு தூங்கத் தொடங்குவார்கள். ஆதலால், உயிருள்ள மனிதர்களிடமிருந்து எந்தத் தொல்லையுமே வராது. ஆவிகள் அப்படி இல்லையே! தற்கொலை செய்த மனிதர்களின் ஆவிகள் கிராமங்களின் இருட்டு வழிகளில் அலைந்து திரியுதே!

எண்ணற்ற தற்கொலைகள் நிகழ்ந்த ஊர்கள் அவை. ஒவ்வோர் இடத்தையும் கடக்கும்போது, அப்பகுதியில் தற்கொலை செய்துகொண்ட மனிதர்களின் நினைவுகள் வந்து என் மனதைத் தாக்கும். அது ஒரு பெரும் பீதியாக உருமாறும். பாதத்திலிருந்து ஒரு சூடு பொங்கிவந்து உடம்பெல்லாம் பரவும். புதர்கள் மண்டிக்கிடக்கும் இடங்கள், கரும்புத் தோட்டங்கள், அக்கம் பக்கத்தில் எங்குமே வீடுகள் இல்லாமல் இருண்டு கிடக்கும் விவசாய நிலங்கள் போன்றவற்றைக் கடக்கும்போது திகில் தலைக்கேறி கால்கள் உறைந்துபோகும். அப்போது நான் உரத்த குரலில் ‘ஓ ஹோ ஹோ ஹோ... காடுகள் களிவீடுகள்...’ என்று எதாவது ஒரு பாட்டைப் பாடத் தொடங்குவேன். அக்குரல் குன்றுகளில் எதிரொலித்து திரும்பி வரும்போது பயம் சற்று அடங்கிவிடும். பயந்து நடுங்கிய அந்த ஒவ்வோர் இரவுப் பயணத்திலும் இனிமேல் ஒருபோதும் தனியாக இரண்டாம் ஆட்டங்களுக்குப் போகமாட்டேன் என்று உறுதிகொள்வேன். ஆனால், அடுத்த வெள்ளிக்கிழமை இரவில் இரட்டையார் ‘நிர்மலா’வில் அமர்ந்து ‘ஸ்னேஹத்தின்டெ முகங்ஙள்’ போன்று ஏதோ ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
இறுதியில் இரவுக் காட்சிகளைத் தனியாகப் பார்ப்பது வீட்டிற்கு ஓரளவுக்கு அருகிலுள்ள ‘பிந்து’விலிருந்து மட்டும் என்று முடிவெடுத்தேன். அங்கிருந்து கொஞ்சதூரம் வரைக்குமாவது உடன் நடக்க யாராவது கிடைப்பார்கள். பள்ளியில் என்னுடன் படித்த சஜியின் அண்ணன்கள் அக்காலத்தில் ‘பிந்து’வை விலைக்கு வாங்கியிருந்தனர். கோட்டயம் மாவட்டத்திலிருந்து சமீபத்தில் எங்களூருக்கு வந்தவர்கள். அவர்களது வீட்டிலிருந்து எனது வீட்டுக்கு ஒரு மைல் தூரம் மட்டுமே. கொட்டகையைப் பூட்டி அவர்கள் வீடு திரும்பும்போது அவர்களுடன் நடப்பேன். சினிமாக்களைக் குறித்தும் கொட்டகையை நடத்துவது குறித்தும் அவர்கள் பேசுவதைக் கேட்கும் ஆர்வத்துடன். ஆனால், அந்தப் படுபாவிகள் அதைப்பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். அன்றைக்குப் பெட்டியில் விழுந்த பணத்தின் கணக்கு பேசி முடித்தவுடன், ஒவ்வோர் இரவிலும் வீடு திரும்பும்போது எந்தெந்த மலைவளைவுகளில் எந்தெந்த ஆவிகளைப் பார்த்தார்கள் என்று பீதிமூட்டும் திகில் கதைகளைச் சொல்வார்கள். “போன செவ்வா கெளமெ நடுராத்திரி நேரத்துல வரிக்கானி வளவுல போகும்போது, வெள்ளைச் சேல கட்டின ஒருத்தி அந்தரத்துல பறந்து வர்றா... அவளுக்குக் காலே இல்ல... டேய் ஷாஜீ, அந்த ஏரியாவுல யாராச்சும் அளகான இளம்பொண்ணு ஒருத்தி நாண்டு செத்திருக்காளாடா?” அந்தக் கொடுமைக்காரர்களுடனான சகவாசத்தையே நான் நிறுத்திவிட்டேன். குஞ்ஞு, சாத்தான், பிரியன் என யாராவது நண்பர்கள் துணைக்கு இல்லாமல் இரண்டாம் ஆட்டங்களுக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன்.
குஞ்ஞு உடனிருந்தால் பயமே வராது. காரணம் அவர் என்னைவிடப் 15 வயது அதிகமிருக்கும் ஒரு சேட்டன். இரவில் கட்டப்பனையின் கொட்டகையைவிட்டு வெளியே வந்தவுடன் குளிரைத் துரத்த உடுத்தியிருக்கும் வேட்டியை அவிழ்த்துப் போர்த்திக்கொள்வேன். நடந்து கொண்டே மெள்ளத் தூங்கத் தொடங்கிடுவேன். குஞ்ஞு குறட்டைவிடத் தொடங்கியிருப்பார். குண்டும் குழியுமான மலைப்பாதைகளில் நடந்துகொண்டு நன்றாகத் தூங்குவோம். பகலில் நடக்கும்போதே அடிக்கடி கற்களில் இடித்து ரணமாகும் எனது கால்பாதங்கள் ஆச்சர்யமான அந்த நடப்புத் தூக்கத்திற்கிடையே எங்கேயுமே இடிக்காது. குழிகளில் சென்று விழவும்மாட்டோம். காலடி சற்றுத் தவறினால் உடனடி விழிப்பு வரும். ஆனால், இரட்டையார் வரும்முன் நடப்பின் களைப்பிலும் தூக்கக் கலக்கத்திலும் நான் சோர்ந்துபோவேன். “என்னால இனிமே நடக்க முடியாது” நான் குஞ்ஞிடம் சொல்வேன். “எடோ... நடங்கடோ. அடையாளக் குன்று வழி போலாம். சீக்கிரம் செல்லும்” என்று குஞ்ஞு சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இருக்கமாட்டேன். நாங்கள் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்துவிடுவோம். பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் கூரை ஓடு வேய்ந்து நாலாபக்கமும் திறந்து கிடக்கும் நீளமான கட்டடங்கள். நீள் இருக்கைகளும் மேசைகளும் சேர்த்துப் போட்டு அதைக் கட்டிலாகப் பாவித்து வேட்டியைப் போர்த்திக்கொண்டு தூங்குவோம். விடியலுக்குமுன் அடிக்கும் கடும் குளிரில் விழித்தெழுந்து மீண்டும் நடக்கத் தொடங்குவோம். ‘மஞ்ஞில் குளிச்ச மலைமுகளில்…’ மலையோரத்திலுள்ள தேவாலயத்திலிருந்து ஜென்ஸி பாடிய பக்திப் பாடல் ஈரக்காற்றில் பரவிவரும்.

ஓர் இரவில் கட்டப்பனை ‘சங்கீதா’விலிருந்து இரண்டாம் ஆட்டம் பார்த்தபின் குஞ்ஞும் நானும் தூங்கி நடந்துகொண்டிருந்தோம். யாரோ எங்களைப் பின்தொடர்ந்து வருவதுபோல் தோன்றியது. திரும்பிப் பார்த்தால் யாருமிருப்பதாகத் தெரியவில்லை! கொஞ்ச நேரம் அங்கேயே நின்று பார்த்தோம். யாருமே வரவில்லை. ஆனால், எங்களை யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற உணர்வு மட்டும் மாறவில்லை. தூக்கம் மறந்து வேகமாக நடந்தோம். இரட்டையார் பள்ளியில் படுக்கலாம் என்று அங்கே நுழையப் பார்த்தால், பக்கத்தில் எங்கேயோ யாரோ ஒளிந்து நிற்பதுபோல் தோன்றுகிறது! பீதி எங்களைக் கவ்வியது. இரவுக்குச் சற்றுமே பயப்படாத குஞ்ஞும் பயந்துபோனார். சரி... இங்கே தூங்க வேண்டாம். நடப்போம்... ஒன்றரை மணிநேரம் வலிந்து நடந்து பள்ளிக்கானம் பள்ளியை அடைந்தோம். மேற்கொண்டு என்னால் நடக்கவே முடியவில்லை. பின்னால் வந்தவன் போய்விட்டான் எனப்பட்டது. படுத்துத் தூங்க நீள் இருக்கைகளைச் சேர்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்த ஒருவர் இருட்டிலிருந்து தீப்பெட்டியை உரசிக்கொண்டு எங்கள்முன் குதித்தார். “ஐயோஓஓஓ... யாரு நீங்க? பயந்து அலறினேன். “டேய் குளத்துங்கல் குஞ்ஞு... பரநாறி மவனே... வளந்து மூணெல விடாத இந்த சின்னப் பையன வெச்சு நீ என்ன பண்ணப்போறேடா..? அவர் நாட்டுச் சாராயத்தின் நாற்றத்துடன் கடும் கோபத்தில் கேட்கிறார். ஆள் யாரென்று அப்போதுதான் தெரிந்தது. இலும்பி ஈப்பன் சேட்டன். அரசியல்வாதி, ஊரில் பெரிய மனுசன், எனது அப்பாவின் நண்பர்.
அசிங்கமான கொடிமரம்
இலும்பி ஈப்பன் பள்ளிக்குப் போகாத, படிப்பறிவே இல்லாத ஒராள். ஆனால், தான் ஒரு சிறந்தப் பேச்சாளன் என்று நினைத்துக்கொண்டு அரசியல் மேடைகளில் சொற்பொழிவாற்றுவார். அவரது கட்சியின் கொடிமரத்தை எதிர்க்கட்சியினர் தகர்த்தமைக்கு நடந்த கண்டனக் கூட்டத்தில் அவர் இவ்வாறு உறையாற்றினார். “ஈட்டித்தோப்பு போன்ற அழுக்கான (அழகான) இந்த கிராமத்தில் நட்டிருந்த எங்களது அசிங்கமான கொடிமரத்தைத் தகர்த்தவர்கள் (கொடிமரத்தைத் தகர்த்த அசிங்கமானவர்கள்) யாராகயிருந்தாலும் அவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று நீங்கள் நம்பக் கூடாது” இப்படி அழகுக்கும் அழுக்குக்கும் வித்தியாசம் தெரியாத ஆசாமி அவர். ஒருமுறை, இரட்டையார் அணை மைதானத்தில் நடந்த பெண்களின் கைப்பந்துப் போட்டியைப் பார்க்க அப்பா என்னையும் கொண்டுசென்றார். இந்த ஈப்பனும் உடனிருந்தார். சுறுசுறுப்பே இல்லாமல் நடந்துகொண்டிருந்த அலுப்பூட்டும் ஆட்டம் பார்த்து “நல்லாவே இல்லியே... போர் அடிக்குது” என்று அப்பா சொன்னார். அப்போது ஈப்பன் “நல்லா இல்லன்னு யாரு சொன்னா... நீ நல்லா உத்துப் பாரு... ஒரே ஜாலி” என்று அடக்கிய குரலில் சொல்வதைக் கேட்டேன். எதுவுமே புரியாமல் அவரைப் பார்த்தேன். ஆட்டக்காரிகளின் ஓடிக்குதிக்கும் புட்டங்களையும் தொடைகளையும் கண்ணசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்தப் பெரிய மனுசன் இதோ எங்களிடம் சொல்கிறார், “கட்டப்பனையிலிருந்தே ஒங்க பின்னாடி இருந்தேன்டா நானு... இரட்டையாறு பள்ளியில எதுக்கெடா ஏறினீக? அவர் கோபத்துடன் என் பக்கம் திரும்பினார். “டாய்... ஓ அப்பாவ நான் இப்பவே பாக்கிறேன்டா... கண்ட பிச்சக்கார நாய் கூடவெல்லாம் ராத்திரியில அலஞ்சு திரிஞ்சு அவங்கூடப் போய்ப் படுக்க ஒனக்கு வெக்கமில்லயாடா?” அவர் சொல்ல வந்தது என்னவென்று எனக்குப் புரிந்தது. குஞ்ஞும் நானும் ஓரினக் காமத்தில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்! அதைக் கண்டுபிடிக்கவா இவ்வளவு நேரம் பின்தொடர்ந்து வந்தார்? பரந்த அறிவும் உயர்வான எண்ணங்களும்கொண்ட குஞ்ஞைப் பற்றி அறிவுகெட்ட இந்த அயோக்கியன் இப்படி யோசிக்கிறானே! குஞ்ஞு வலுவான உடல்கொண்டவர். அவர் ஒரே அடி அடித்தால் தொப்பையும் தொந்தியுமாய்ப் பிளுபிளுத்த ஈப்பன் சுருண்டு விழுவான். ஆனால், எதுவுமே சொல்லாமல் தலைகுனிந்து நிற்கிறார் குஞ்ஞு! அங்கே கிடந்த உடைந்த ஒரு பெரம்புச் சூரலை எடுத்து ஈப்பன் என்னை அடிக்கத் தொடங்கினான். வேகமாக அங்கிருந்து வெளியேறி இருட்டில் தடுமாறி ஓடினோம். வசைபாடிக்கொண்டே பின்னால் ஓடிவந்த ஈப்பன் இருட்டில் மறைந்துபோனான்.
“அவன நீங்க அடிச்சு சுருட்டியிருக்கலாமே…” என்று நான் கேட்டபோது, “நீங்க ஒரு சின்னப் பையன். பல விசயங்கள இப்பச் சொன்னா உங்களுக்குப் புரியாது” என்று மட்டும் சொன்னார் குஞ்ஞு. எங்களுக்கிடையே இருந்த பெரிய வயது வித்தியாசமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன் என்று உலகம் விதித்திருப்பதன் தாழ்வுணர்ச்சியும்தாம் குஞ்ஞை மௌனமாக்கியது என்று அறிய எனக்குப் பல ஆண்டுகளாயின. என்னுடன் சினிமா பார்ப்பதை குஞ்ஞு முற்றிலுமாக நிறுத்திவிட்டார். எங்கேயாவது என்னைப் பார்த்தால் முகம் திருப்பி நடந்துபோனார். எனது மனம் மிகவும் புண்பட்டது. அந்த வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ‘அலவலாதி ஷாஜி’ என்ற அசிங்கமான ஒரு பட்டப் பெயர் அக்காலத்தில் என்மேல் விழுந்தது.
(தொடரும்..)
- ஓவியங்கள் : ரவி