பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மலையும் அழகு... மனிதர்களும் அழகு...

மலையும் அழகு... மனிதர்களும் அழகு...
பிரீமியம் ஸ்டோரி
News
மலையும் அழகு... மனிதர்களும் அழகு...

மலையும் அழகு... மனிதர்களும் அழகு...

‘மேற்குத் தொடர்ச்சிமலை’யின் ஆரம்பக் காட்சிபோல, விடியலின் ஒளியில் அந்த நீண்ட மலை துயில் எழுவதைப் பார்த்து நின்றோம். இயக்குநர் லெனின் பாரதியும் அவர் குழுவினரும் பேருந்தில் வந்து இறங்கினார்கள். வேப்பங்குச்சிகளை ஒடித்துக்கொண்டு சட்டென வாய்க்காலில் இறங்கிக் குளிக்கத் தொடங்கிவிட்டனர். ரோட்டோர இட்லிக் கடையில் காலை உணவு முடிந்தது.  படத்தின் வெற்றியைக் கொண்டாடவும் மலைக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவும் கிளம்பிய அவர்களுடன் புறப்பட்டோம். ஒரு பெரிய தலைக்கட்டுக் குடும்பம் திருவிழாவுக்கு வண்டிகட்டிப் போவது போலிருந்தது. மூன்று ஜீப்களில் முன்செல்லும் படக்குழுவைப் பின்தொடர்ந்தோம். குளிர்காற்றுடன் மலை வரவேற்றது.

மலையும் அழகு... மனிதர்களும் அழகு...

மலையடிவாரத்திலுள்ள உத்தமபாளையத்திலிருந்து புறப்பட்டு 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தால், ‘கம்பம் மெட்டு.’ சில கிலோ மீட்டரில் கேரள எல்லை தொடங்குகிறது. அங்கிருந்து உடும்பஞ்சோலை வழியே சதுரங்கப்பாறை. படத்தில், ஏலக்காய் மூட்டை பள்ளத்தாக்கில் தவறி விழுமே, அந்தக் ‘குதிரை பாய்ஞ்சான் மெட்டு’ அங்குதானிருக்கிறது. போகும் வழியில், படக்குழு வரும் சேதியறிந்து பொன்னாடை சகிதம் பலர் காத்திருந்து வாழ்த்தியது நெகிழ்ச்சியான அனுபவம்.

வழியில் தேநீருக்காக வண்டி நிறுத்தப்பட்டதும் உரையாடலைத் தொடங்கினோம். “இந்தப் படத்தை மக்கள்தாம் எடுத்துச் செல்கிறார்கள். திருமணப் பத்திரிகைகளில், துண்டுப் பிரசுரங்களில் படம் குறித்து அச்சிட்டுப் பரப்புகிறார்கள்; சமூக ஊடகங்களில் கொண்டாடுகிறார்கள். இது நம் கதை, இதை நாம்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்கள் களத்தில் இறங்கியது ஒரு இயக்குநராக எனக்குப் பெரிய மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் லெனின். அருகில் வந்த ‘வனகாளி’ பாண்டியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு,“படத்துல மட்டுமில்ல, நிஜத்திலயும் இந்த மலைப்பாதையில ஏலக்காய் மூட்டைகள தூக்கிக்கிட்டு பல காலம் ஏறி எறங்கின உழைப்பாளி இவரு” என லெனின் நெகிழ, அந்த முதியவர் தனது தோள்பட்டையின் காய்ப்புகளைக் காட்டுகிறார்.

“எப்படி இவ்வளவு புதிய ஆள்களை நடிக்க வச்சீங்க?”

“திரைக்கதை எழுதி முடிச்ச உடனேயே இங்க கிளம்பிவந்துட்டேன். கிட்டத்தட்ட மூணு வருஷம் இவங்களோட ஒண்ணுமண்ணா அலைஞ்சி திரிஞ்சேன். வழக்கமான சினிமாவா இல்லாம, இந்த மக்களோட வாழ்க்கைய கண்ணுக்கு எட்டுற தூரத்துல நின்னு பார்க்கிற மாதிரி இருக்கணும்னு தீர்மானிச்சதால, இவங்கதான் இந்தப் படத்துக்கு உயிர் தர முடியும்னு நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகல. நடிக்கிறதும் இவங்களால முடியாத காரியமில்ல. படத்தில ரங்கசாமியோட மகனா நடிச்ச பையன் இவன். ஒரு காட்சியில் அழவைக்கிறதுக்காக இவனைத் திட்றா மாதிரி திட்டினேன். பிறகு, சாக்லேட் கொடுத்து உண்மையச் சொன்னேன். ‘ஏன் மாமா... நீங்க அழணும்னு சொன்னா அழுதிருக்கப் போறேன். எத்தனை விதமா அழுதுகாட்டணும்னு சொல்லுங்க, அழுறேன்’றான்.” சிறுவன் ஸ்மித் வெட்கப்பட்டுச் சிரிக்கிறான்.

“படத்தில ஒரு க்ளோஸ்-அப் காட்சிகூட இல்லையே, ஏன்?” இந்தக் கேள்வி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கு. “இயக்குநரும் நானும் தொடக்கத்திலேயே திட்டமிட்டதுதான். எங்கேயும் படத்தை ரொமாண்டிசைஸ் பண்ணிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருந்தோம். உண்மைக்கு நெருக்கமான இந்தப் படத்துக்கு க்ளோஸ்-அப் ஷாட்ஸ் ஆடம்பரம்னு தோணுச்சு.”

‘கங்காணி’ அந்தோணி ராஜ், ‘எஸ்டேட் முதலாளி’ ஆறுபாலா, கதைநாயகன் ஆன்டனி, ‘உரக்கடை முதலாளி’ அரண்மனை சுப்பு, எடிட்டர் மு.காசிவிஸ்வநாதன், கம்யூனிஸ்ட் தோழர்கள் என, கற்பனைப் பாத்திரங்களும் நிஜமனிதர்களுமாகச் சிரித்தபடி தேநீர் அருந்துவது விநோதமாக இருந்தது. ‘வெரசா கிளம்புங்கப்பா... உச்சிக்குப் போகணும்’ என்று இருமியபடி குரல்கொடுக்கிறார் வனகாளி. கணந்தோறும் வானிலை மாறும் மலைப்பாதைகள் சுவாரஸ்யமாக நெளிகின்றன.

மலையும் அழகு... மனிதர்களும் அழகு...

உச்சிவேளை, குதிரை பாய்ஞ்சான் மெட்டை அடைந்தோம். படத்தின் ஒட்டுமொத்த பெண்பாத்திரங்களும் வந்து இறங்கினார்கள். ‘ரங்கசாமி’ என்று நிஜமாகவே கையில் பச்சை குத்தியிருக்கும் பொன்னுத்தாயிபாட்டியிடம் ‘உன் வீட்டுக்காரர் பேர் சொல்லு... ஒருவாட்டி சொல்லு’ என்று வம்பிழுக்கிறார்கள் இளசுகள். அவரும் வெட்கமும் கோபமுமாய் மறுத்து ஓடுகிறார். லெனின், அவரைக் கட்டிப்பிடித்து, ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்க, ‘உடனே பண்ணிக்குவோம்!’ என்று உற்சாகமாகிறார் பாட்டி. ஒற்றை விரலால் நாக்கை மடித்து விசிலடித்து பெத்தியம்மாள் பாட்டி ஆரம்பிக்க, மனநிலை பிறழ்ந்தவராக நடித்த பாண்டியம்மாள் பாட்டுப் பாட, கூட்டம்  ஆட்டம் போட, வெற்றிச் சந்திப்பு களைகட்டியது.

மலையின் விளிம்பில், இடுப்பளவு உயரப் புல் நிறைந்த பகுதிகளில் அனைவரையும் மறைந்து உட்காரச் சொல்லிவிட்டு, ஒவ்வொருவராகக் கைப்பிடித்து அழைத்துவந்து, கேமராவுக்குக் காட்டி அறிமுகப்படுத்துகிறார் லெனின். கைகளைப் பற்றியிருப்பதில், அணைப்பில், சிரிப்பில், கண்ணீரில் அவ்வளவு உண்மையும் நேர்மையுமிருந்தது ஒவ்வொருவரிடத்திலும்.

“காலையில மூணு மணிக்குக் கீழேயிருந்து கிளம்புனா, 6 மணிக்கு மலைக்கு வந்து சேருவோம். ஷூட்டிங் ஆரம்பிச்சா சமயத்துல நைட்டு 10 மணிகூட ஆகிறும். ஷூட்டிங் சாமான் எல்லாத்தையும் எங்க சுமையா நினைச்சுத் தூக்கிக்கிட்டு மேல வருவோம். ஒரு துண்டுப் பேப்பரைக்கூட கீழ போடவிடமாட்டாரு லெனின் சார்” என்கிறார் பெத்தியம்மாள் பாட்டி. “சார்னு சொல்லக் கூடாது, மகன்னு சொல்லு” என்கிறார் லெனின். “காசக் கொட்டி, உழைப்பைக் கொட்டி இந்த மக்களோட பொழப்ப படம் எடுத்திருக்காங்க. ஆனா, இந்தப் படம் ஓடாது, நஷ்டத்துல போயிரும்னு சொல்லிக் காதுபடவே பேசினாங்க... இன்னிக்கு எங்க கொலசாமி எல்லாத்தையும் மாத்தி எங்களை ஜெயிக்க வச்சிருக்கு. எங்க மகன் ‘சார்’ நல்லாருக்கணும்” என்று கண்ணீர்விட, லெனின் அவரை அணைத்துக்கொள்கிறார்.

“முதல் நாள் மலையேறி இறங்கினப்பவே ஓடிடலாமான்னு நெனைச்சேன். முதல் நாளே 80 கிலோ மூட்டையைத் தூக்கி முதுகில வச்சுட்டாங்க. ஆனா, அன்னைக்கு சொமந்த சொம இன்னிக்கு சந்தோஷமா இருக்கு. ஏதாவது ஒரு கேரக்டர் கொடுங்கனு கேட்டேன். ஹீரோ கேரக்டரையே கொடுத்துட்டார் இயக்குநர். இந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்புறம், அந்த ரங்கசாமியாவே உண்மையா வாழ ஆசப்படுறேன்” என்று சிரித்தார் ஆன்டனி.

படம் முழுக்கக் கையில் வைத்திருக்கும் கைத்தடியோடு ‘கேத்தரை’ தாமரை சரவணன் கைகூப்பியபடி வருகிறார். எனக்கு லெனின் அண்ணனை ரொம்ப காலமா தெரியும். ‘டேய்... ரெடியா இருடா’னு அடிக்கடி சொல்வார். எதுக்கு அப்பிடி சொல்றார்னு யோசிப்பேன். ஒரு நாள் மலைக்குப் போகலாமானு கூட்டிட்டு வந்து, இந்த விளிம்புல நின்னுகிட்டு, ‘வா ரெண்டு பேரும் குதிப்போம்’னு சொல்றார். நான் தெகைச்சுப்போயிட்டேன். அப்புறம்தான் விவரத்த சொன்னார், 45 நாளைக்குக் குளிக்காத, சவரம் பண்ணாதன்னார்...” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘உன் ரசிகைகளுக்கு நீ என்ன சொல்ல விரும்புற?’ என்று கங்காணி கலாய்க்க வெட்கப்படுகிறார் கேத்தரை.

“படத்தில் பங்குபெற்ற எல்லோரும் கலந்துகொள்ள முடியவில்லையே?” என்றதற்கு, “நான் அப்படி நினைக்கல. உதாரணமா, இளையராஜா அப்பா இங்க இல்ல. அதற்காக அவர் வரலண்ணு ஆகிடுமா? இந்தக் காத்துல இருக்கிற இசை அவர்தானே. நினைச்சுக்கும்போது எல்லாரும் பக்கத்துலதான் இருக்காங்க” என்ற லெனின் பாரதியின் கண்களில் ஈரப்பளபளப்பு. 

சந்திப்பின் இறுதியாக, மலைக்கு நன்றி சொல்லும் விதமாகக் காற்று அளைந்து கொண்டிருந்த இடுப்பளவு போதப்புற்களில் எல்லோரும் நன்றி முடிச்சு போட்டார்கள். முனியசாமி கோயிலில் ஆடு வெட்டி குழம்பு கொதித்துக்கொண்டிருப்பதாக போனில் செய்தி வந்தது. உழைத்துக் களைத்த ஒரு கூட்டம் தனது எளிய வெற்றியைக் கொண்டாடக் கள்ளும் கறியுமாய் அந்த மாலையை அழகாக்கிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் விடைபெற்றோம். காற்றின் விரல்களால் அவர்களின் புல் முடிச்சுகளை நேசத்தோடு நீவிக்கொண்டிருக்கலாம் மேற்குத் தொடர்ச்சிமலை.

வெய்யில், சனா - படங்கள்: வீ.சக்தி அருணகிரி