
இன்பாக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு `பேட்ட’ எனப் பெயரிட்டுள்ளார்கள். படத்தின் வேலைகள் பரபரவென நடந்துகொண்டிருக்கின்றன. ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த படமே முடியும் தருவாயில் இருக்க, 2.0 என்னாச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஷங்கரோ 2.0 வேலைகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். `இனி எல்லாம் கிராபிக்ஸ் கலைஞர்கள் கையில். படம் நவம்பர் 29 ரிலீஸ்’ என அறிவித்துவிட்டு ‘இந்தியன் 2’ வேலைகளில் இறங்கிவிட்டார். களைகட்டும்!
பரபரப்புகள் இல்லாமல் படமெடுத்துக்கொண்டிருக்கிறார் ‘காக்கா முட்டை’ மணிகண்டன். விஜய்சேதுபதி நடிப்பில் விவசாயிகளின் வாழ்வைச் சொல்லும் ‘கடைசி விவசாயி’ என்ற படம் பாதிக்கு மேல் முடிந்துவிட்டதாம். படத்தின் நாயகன் வேடத்திற்கு முதலில் ரஜினிகாந்தை நடிக்கவைக்க முடிவெடுத்து முயற்சி செய்திருக்கிறார்கள். பிறகுதான் விஜய்சேதுபதி உள்ளே வந்திருக்கிறார். உழவே தலை!
கவிஞர் வைரமுத்து `தமிழாற்றுப்படை’ என்ற பெயரில் கட்டுரைகள் அரங்கேற்றம் செய்துவருகிறார். தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கால்டுவெல் எனத் தமிழைச் செழுமைப்படுத்திய பல ஆளுமைகளைப் பற்றி கட்டுரை அரங்கேற்றம் செய்தவர் இன்னும் ஐந்து ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை அரங்கேற்றவுள்ளார். படை வெல்லும்!
டிசியின் வொன்டர் வுமனுக்குப் போட்டியாக சூப்பர் நாயகி `கேப்டன் மார்வெலை’க் களமிறக்குகிறது மார்வெல் நிறுவனம். இந்தப் பாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் பிரை லார்சன். கேப்டன் மார்வெல்லின் ஃபர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் வெளியிட்டு வைரலடித்தது மார்வெல். கேல்கேடாட் ரசிகர்களோ ‘நாங்க வேற ரேஞ்ச் ப்ரோ, இதெல்லாம் ஒண்ணுமேயில்ல’ என அலட்டிக்கொள்ளவேயில்லை. கெத்துதான்!

ரன்வீர் சிங்குக்கும் தீபிகா படுகோனுக்கும் நவம்பர் மாதம் திருமணம். சமீபத்தில் அதற்காக அமெரிக்காவில் பேச்சுலர் பார்ட்டியெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். திருமணத்தை ஷாருக் தலைமையில்தான் நடத்த வேண்டும் என விடாப்பிடியாக இருக்கிறார்களாம் மணமக்கள். திருமணத்தை இந்திய முறைப்படி நடத்தவிருந்தாலும், அதை இந்தியாவில் நடத்தப்போவதில்லையாம். இத்தாலியில்தான் டும்டும்மாம்! மோஸ்ட் வான்டட்