
“நான் சினிமா இயக்குகிறேன்; சினிமா என்னை இயக்குகிறது!”
“இந்த ருத்ராவை ஏற்றுக்கொண்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றி. என் முன்னாள் அசோஸியேட், ‘ராமன் ராகவ்’ படத்தின் கதாசிரியர் வாசன் பாலா மும்பைத் தமிழர். தமிழ் சினிமாவில் புதிதாக கவனம் ஈர்க்கும் படங்கள் வந்தால் முதலில் என்னைப் பார்க்கச் சொல்வார். அப்படித்தான் சுப்ரமண்யபுரம், பருத்திவீரன், நான் கடவுள் போன்ற படங்களைப் பார்த்துக் கொண்டாடினேன். முருகதாஸ் மூலம் அஜய் ஞானமுத்து வந்தார். நடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்த சமயம் அது. அன்புக் கட்டளையைத் தவிர்க்க முடியவில்லை. `இமைக்கா நொடிகள்’ கதையைக் கேட்டவுடனே ஓ.கே சொல்லிவிட்டேன். இரண்டு மாதங்கள் மட்டுமே என் கால்ஷீட். ஆனால், நடுவில் ஜெயலலிதா மரணமும், ஜல்லிக்கட்டுப் போராட்டமும் படப்பிடிப்பைத் தள்ளிப் போட்டு இரண்டு வருடங்கள் வரை இழுத்து விட்டன.”

- தன் இயக்கத்தில் அடுத்த படம் ‘மன்மர்ஸியான்’ வெளியீட்டு வேலைகளுக்கு நடுவிலும் சென்னைக்கு வந்திருந்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லன்... பாலிவுட்டின் ராட்சத இயக்குநர் எனக் கொண்டாடப்படும் அனுராக் காஷ்யப் பதற்றமில்லாமல் படுகூலாக என்னை எதிர்கொண்டார்.
``கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படத்துக்குப்பிறகு உங்களுக்கு இங்கே நிறைய ரசிகர்கள் இருக்காங்க. நீங்க நேரடித் தமிழ்ப் படம் பண்ணலாமே? தமிழில் நீங்க இயக்குனீங்கன்னா யார் உங்க ஹீரோ சாய்ஸ்?”
``எனக்குத் தமிழ் பேச வராது. ஆனால், இப்ப சினிமா ஒட்டுமொத்த இந்தியாவையே இணைத்து வைத்திருக்கு. என்னுடைய படங்களை மொழியைத் தாண்டியும் இங்கே கொண்டாடுறாங்கன்னா ஏதோ ஒருவகையில் தங்கள் வாழ்க்கையோட பொருத்திப் பார்க்குறதாலதான். நிச்சயம் தமிழ்ல படம் பண்ணுவேன். இருமொழிப்படமா அது இருக்கும். தனுஷ், விஜய் சேதுபதி இருவரின் நடிப்புக்கும் நான் ரசிகன். இரண்டுபேரையும் ஒரே ஸ்கிரிப்ட்டுக்குள் கொண்டு வந்தால் வேற மாதிரியான படமாக அது நிச்சயம் வரும். சீக்கிரமே அதுநடக்கும்!’’
``உங்கள் படங்களில் பெரும்பாலான கேரக்டர்கள் எதிர்மறையான சிந்தனை கொண்டவர்களாகவே இருக்கிறார்களே? உங்களுக்குள் பர்சனலாக எதுவும் பாதிப்பு இருக்கிறதா..?’’
``என் கதைகள் சமயங்களில் எனக்குள்ளிருந்தும் கிளர்ந்து வரும். `அக்லி’ படம் ஒரு பெண் குழந்தையைத் தொலைத்துவிட்டுத் தேடும் விவாகரத்து ஆன தகப்பன் பற்றியது. அந்த அப்பா பாத்திரத்தை என்னுடன் பொருத்திப் பார்த்துக்கொண்டேன். என்னென்ன உளவியல் பிரச்னைகள் அந்த நேரத்தில் எனக்குள் இருந்ததோ அதையெல்லாம் படத்தில் வைத்தேன். உண்மையில் நான் நெகட்டிவ் மனநிலை கொண்ட மனிதன் இல்லைதான். என் வலி, என் சந்தோஷம் எல்லாவற்றையும் கலையாக மாற்றிக் கொள்ள முடிவது என் பலம். இவை எல்லாவற்றையும்விட எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் உங்கள் முதல் மூன்று படங்கள் சென்ஸார் போர்டால் தடைப்பட்டு நிற்கும்போது உங்களுக்கு எப்படி வலிக்கும்! நான் அதையெல்லாம் சினிமா மூலமும் புத்தகங்கள் மூலமும் கடந்து வந்தேன்.’’
``நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல்ஸில் உங்களுடைய ‘சேக்ரெட் கேம்ஸ்’ வெப்சீரீஸ்தான் ட்ரெண்ட். புதிதாக ஒன்று இந்தியாவுக்கு வந்தால் அனுராக்தான் நிறைந்திருக்கிறார். எப்படி இப்படி?”
“நல்லவேளை, நான் முதல் ஆளாக நெட்ஃபிளிக்ஸில் வந்துவிட்டேன். நிறைய கேள்விகளோடும் தயக்கத்தோடும் ஆரம்பித்தாலும் உள்ளே நாங்கள் குழுவாக இறங்கியதும் நம்பிக்கையோடு வேலை பார்த்தோம். உடனே நெட்ஃபிளிக்ஸ் சீரீஸால் சினிமா தியேட்டர்கள் அழியும் என சிலர் நினைக்கிறார்கள். சினிமா தியேட்டர்கள் எக்காலத்திலும் அழியாது. படம் பார்க்கும் உன்னத உணர்வை தியேட்டர்களைத் தாண்டி எதுவும் கடத்த முடியாது. மீதியெல்லாம் நமது சொகுசுக்காக பேஜர்... மொபைல்... அதில் டச் ஸ்க்ரீன் உருவானதுபோல மட்டுமே!’’

``இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உங்களை நாடோடியாக வாழும் அபூர்வ மனிதர் என என்னிடம் சொல்லியிருக்கிறார். ஏன் இப்படி உங்களுடைய சொந்த வாழ்க்கையை சிதைத்துக் கொண்டு சினிமா சினிமா எனத் தேடலில் இருக்கிறீர்கள்?’’
``ஓ... ஹீரோ சார்தான் சொன்னாரா..? (சிரிக்கிறார்) பயணிப்பது என் இயல்பு. நினைத்தவுடன் நினைத்த இடத்துக்குப் பயணமாகிவிடுவேன். முன்பெல்லாம் ரயில், பேருந்து என இந்தியாவுக்குள் பயணம் செய்வேன். இன்று விமானமாக மாறியிருக்கிறது, அவ்வளவே. எந்தத் திட்டமிடலும் எனக்கு இல்லை.’’
``உங்கள் படம் `தேவ்டி’யில் ஆரம்பித்து `மன்மர்ஸியான்’ வரை பெண்களை மையப்படுத்தியே கதைகள் சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் ஜோடனை ஏதுமில்லாமல். அப்படிப்பட்ட நீங்கள் திருமண வாழ்க்கையைத் துறந்து தனிமனிதனாக வாழ்வது முரணாக இல்லையா..?’’
``பெண்கள் அதிகம் இருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் நான். வலிமையான பெண்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவன். நான் சினிமா எடுப்பேன் என்றெல்லாம் அப்போது நினைத்ததில்லை. விபத்தாக ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ பார்த்து சினிமாதான் இனி என முடிவெடுத்ததெல்லாம் தற்செயலாகத்தான். கங்கையில் குதித்தால் ஆழம்வரை சென்று காசு எடுத்து மீண்டெழும் சிறுவனைப்போன்ற மனநிலை எனக்கு. ஒரு விஷயத்தில் இறங்கினால் அடி ஆழம்வரை செல்வேன். சினிமா என்னைப் பிடித்துக் கொண்டதும் அப்படித்தான். சினிமாவுக்காக நான் குடும்பவாழ்க்கையைத் துறக்க வேண்டிய சூழல். ஆனால், இப்போது வரை என் முதல் மனைவி ஆர்த்திதான் என் சினிமாவின் எடிட்டராகத் தொடர்கிறார். இரண்டாவது மனைவி கல்கி இன்றும் என்னுடன் நட்பு பாராட்டுகிறார். மணவாழ்வில் பிரிந்தாலும் நட்பாக இருக்க முடிவதென்பதே நான் ஏதோ ஒருவகையில் சரியாக இருப்பதால்தானே. என்னை இப்போது என் மகள் ஆலியா இயக்குகிறாள். சினிமாவில் வியாபார அறிவை வளர்த்துக்கொள்ள எனக்குப் பாடம் எடுக்கிறாள்.’’
``அனுராக் காஷ்யப் ஒரு படத்தை எப்படி கருவிலிருந்து கதை... கதையிலிருந்து திரைக்கதை... பிறகு சினிமாவாக மாற்றுகிறார்?’’
``சினிமா அதுவாகவே என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது. எல்லா இயக்குநர்களைப் போலத்தான் ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டு ஃபீல்டுக்குச் செல்வேன். ஆனால், பெரும்பாலும் `அக்லி’ போன்ற இருண்மை சினிமாக்களை உருவாக்கும்போது ஸ்கிரிப்ட்டை யாரிடமும் ஒருவரிகூட சொல்லவே மாட்டேன். நடிகர்கள் யாருக்கும் திரையில் பார்க்கும்வரை கதை எதுவும் தெரியாது. களத்தில் நான் சொன்னதைக் குழப்பத்தோடு உள்வாங்கி அவர்கள் அதைச் செய்தார்கள். அந்தக் குழப்பமான மனநிலை யதார்த்தமான சினிமாவாகத் திரையில் மலர்ந்திருக்கிறது!’’
ஆர்சரண், உ.சுதர்சன் காந்தி - படம்: சொ.பாலசுப்ரமணியன்