
வஞ்சகர் உலகம் - சினிமா விமர்சனம்
ஒரு கொலையில் விழும் மர்மமுடிச்சும், அது அவிழும்போது கிடைக்கும் அதிர்ச்சிகளுமே `வஞ்சகர் உலகம்!’
தான் பார்த்த ‘உலக சினிமாக்களின்’ தாக்கத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ் பீதா.

எதிர்வீட்டுப் பெண் கொலையில் கைது செய்யப்படுகிறார் பேச்சுலர் சிபி. இந்தக்கொலையில் தானாகவே தலையிடு கிறார் ஒரு தாதா. பத்திரிகையாளர்கள் இரண்டுபேரும் காவல்துறையும் கொலையாளி யார் என்பதைப் புலன்விசாரணை செய்கிறார்கள். கொலையாளி யார் என மெதுவாக... பொறுமையாக... ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து... ஒருவழியாக விடை சொல்கிறார்கள்.

தாதா சம்பத்தாக குருசோமசுந்தரம். லேட் என்ட்ரியாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அவர் ஆட்டம்தான். வசன உச்சரிப்பிலும், சின்னச் சின்ன அலட்சியப்பார்வை யாலும், அட்டகாச சிரிப்புகளாலும் மனிதர் அசத்தியிருக்கிறார்.
சாம் என்ற சண்முகமாக அறிமுக நடிகர் சிபி புவனசந்திரன். ரொமான்டிக்கான திருட்டுத்தனமும், துறுதுறுப்பான முரட்டுத்தனமுமாக க்யூட் பாஸ்! சின்னப் பாத்திரமாக இருந்தாலும் கண்களாலேயே நடித்துச் சிறப்பித்திருக்கிறார் சாந்தினி. வாயிலே வடைசுடும் வழக்கமான தாதா கேரக்டரில் ஜான் விஜய்... போதும் பாஸ்! அழகம்பெருமாள், வாசுவிக்ரம், `லென்ஸ்’ ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், ஹரீஷ் பேரடி என எல்லோருமே கதையின் ஓட்டத்துக்கு ஏற்றபடி அளந்து நடித்திருக்கிறார்கள். படத்தில் பவர்ஃபுல்லான ரோலில் வரும் அந்தப் பத்திரிகையாளர் விஷாகன் கொஞ்சம் கூடுதலாக நடித்திருக்கலாம். அனிஷா அம்ப்ரோஸின் பாத்திரம் எதற்கு என்றே தெரியவில்லை!

படத்தின் பலமே சம்பத் கேரக்டரின் `அந்த’ ரகசியம் தான். ஆனால், அதை எளிதில் யூகிக்க முடிவது திரைக்கதையில் பெரும் சறுக்கல். திரும்பத் திரும்ப காவல் நிலையத்தையும், அழகம்பெருமாளின் வீட்டையும், கமிஷனர் ஆபீஸையும், பத்திரிகை ஆபீஸையும் காட்டிக் காட்டி படத்தில் எல்லோரும் துரைராஜைப் பற்றி பே...சி...ப்... பேசிப் பேசி... ஒருகட்டத்தில் ‘யாருய்யா அந்த துரைராஜ்? இப்ப சொல்றியா இல்லை வெளியே போகவா?’ என்று நமக்கே கத்திக் கேட்க வேண்டும்போல இருக்கிறது.
படத்தின் `ரட்சகன்’ இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்! கூடல் காட்சிக்கு ‘மங்கல வாத்தியம்’ வாசித்தது, நாதஸ்வரம் தவில் மூலமே ஆக்ஷன் காட்சிக்கு அழகு சேர்த்தது என இசையில் வித்தியாசம் காட்டியவர், ‘தீ யாழினி’ பாடலின்மூலம் மனதை வசீகரிக்கிறார். ரோட்ரிகோ டெல் ரியோ ஹெரரா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு கதைசொல்லலில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. எடிட்டர் ஆன்டனியின் ‘நறுக்’ எடிட்டிங் ஓரளவு படத்தைக் காப்பாற்ற உதவி செய்திருக்கிறது.
கேங்ஸ்டர் படம் எடுக்க நினைத்ததும் அதைத் தொழில்நுட்பரீதியாகப் பக்காவாகக் கட்டியெழுப்பியதும் ஓகே. ஆனால் உயிரற்ற காட்சிகளால் திரைக்கதை பின்னியதில் வழுக்கியிருக்கிறார்கள்!
- விகடன் விமர்சனக் குழு