Published:Updated:

இங்கேயும் சென்னைக்கு இதுதான் முகமா? - 'வெள்ள ராஜா' வெப் சீரிஸ்..!

இங்கேயும் சென்னைக்கு இதுதான் முகமா? - 'வெள்ள ராஜா' வெப் சீரிஸ்..!

`வெள்ள ராஜா' சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் வகையா, வெறும் க்ரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. `நார்கோஸ்', `ப்ரேக்கிங் பேட்', `ஆரண்ய காண்டம்', `சேக்ரட் கேம்ஸ்', `அருவி', இந்த சீரிஸின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய `மாநகரம்' முதலானவற்றின் சாயலை மொத்தமாக `வெள்ள ராஜா'வில் பார்க்க முடிகிறது. அதிலும் பாபி சிம்ஹாவின் அந்த முக்கியமான சண்டைக்காட்சி நிச்சயம் `புதுப்பேட்டை' படத்தை நினைவுக்குக் கொண்டுவரும்.

Published:Updated:

இங்கேயும் சென்னைக்கு இதுதான் முகமா? - 'வெள்ள ராஜா' வெப் சீரிஸ்..!

`வெள்ள ராஜா' சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் வகையா, வெறும் க்ரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. `நார்கோஸ்', `ப்ரேக்கிங் பேட்', `ஆரண்ய காண்டம்', `சேக்ரட் கேம்ஸ்', `அருவி', இந்த சீரிஸின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய `மாநகரம்' முதலானவற்றின் சாயலை மொத்தமாக `வெள்ள ராஜா'வில் பார்க்க முடிகிறது. அதிலும் பாபி சிம்ஹாவின் அந்த முக்கியமான சண்டைக்காட்சி நிச்சயம் `புதுப்பேட்டை' படத்தை நினைவுக்குக் கொண்டுவரும்.

இங்கேயும் சென்னைக்கு இதுதான் முகமா? - 'வெள்ள ராஜா' வெப் சீரிஸ்..!

'நெட்ப்ளிக்ஸ்' முதன்முதலில் 'நார்கோஸ்' வெப் சீரிஸ் தயாரித்த போது, உலகம் முழுவதும் அது பெரும் வரவேற்பைப் பெற்றது. பாப்லோ எஸ்கொபாரின் வாழ்க்கையை நிஜ அரசியலோடு பொருத்தி உருவாக்கப்பட்டிருந்தது அந்தத் தொடர். இந்தியாவில் ரசிகர்களைக் கவர, மீண்டும் கேங்க்ஸ்டர் வகையையே தேர்ந்தெடுத்தது `நெட்ப்ளிக்ஸ்'. அனுராக் காஷ்யப் - விக்ரமாதித்ய மோட்வானே இயக்கத்தில் வெளிவந்த 'சேக்ரட் கேம்ஸ்' எதிர்பார்த்த ஹிட்டை அளித்தது. அதே பாணியில் முதல் நேரடி தமிழ் சீரிஸ் 'வெள்ள ராஜா' என்ற தலைப்பில் கேங்க்ஸ்டர் கதையாக வெளியிட்டிருக்கிறது அமேசான் ப்ரைம். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோதலில் மிகப்பெரிய கொகைன் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தீ விபத்தில் இறக்கிறார்கள். எனினும் நகரம் முழுவதும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் போதைப் பொருள்களைக் குறித்து விசாரிக்கச் சென்னை வருகிறார் காவல்துறை அதிகாரி பார்வதி நாயர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியிட்டு, தான் பணிபுரியும் பள்ளியைப் புதுப்பித்து விடலாம் என்ற கனவோடு, தன் அக்கா குழந்தைகள் இருவரை அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார் காளி வெங்கட். காப்பர் நிறுவனம் அருகில் வாழ்ந்த மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதை எதிர்த்து, அந்த நிறுவனத்துக்கு எதிராகப் போராடி வருகிறார் காயத்ரி. ஈரோட்டிலிருந்து சென்னை வரும் சரத் ரவி மற்றும் அவரது நண்பனுக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த வெளிநாட்டுப் பணத்தை மாற்ற வேண்டும். இவர்களோடு இன்னும் சில கதாபாத்திரங்கள் இணையும் புள்ளியாக இருக்கிறார் பாபி சிம்ஹா. தேவா என்ற கேங்க்ஸ்டராக வரும் பாபி சிம்ஹாவின் தொழில் - கொகைன் கடத்துவது. அதற்குத் தனது `பாவா லாட்ஜை' பயன்படுத்துகிறார். லாட்ஜை விட்டு வெளியில் வந்தால் கொல்லப்படுவோம் என்று சிம்ஹாவுக்குத் தகவல் கிடைக்கிறது; எப்போதும் ஆளே வராத பழைய லாட்ஜ், அன்று திடீரென ஹவுஸ்புல் ஆக, சந்தேகத்தில் லாட்ஜில் தங்க வந்தவர்களைப் பணயக் கைதிகளாக்குகிறார் சிம்ஹா. சிம்ஹா தப்பித்தாரா, இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதை. 

`சவாரி' திரைப்படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். `வெள்ள ராஜா' கதையை அவருடன் இணைந்து எழுதியிருக்கிறார்கள் 'மாநகரம்' திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் குறும்பட இயக்குநர் மடோன் அஷ்வின். பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காளி வெங்கட், காயத்ரி என ஒவ்வொரு பாத்திரத் தேர்வும் கச்சிதம். `பாவா லாட்ஜ்' செட்டை மிரட்டலாக உருவாக்கியிருக்கிறார்கள். அரை நூற்றாண்டு காலப் பொருட்களோடும், அழிந்தும் அழியாமலும் இருக்கும் ஓவியங்களோடும் அலங்கோலமாக இருக்கும் பாவா லாட்ஜில் நம்மை அமர வைத்தது போன்ற உணர்வைத் தருகிறது. `பாவா லாட்ஜ்' இன்டீரியர்களைக் கட்டமைத்தவர்களுக்கும், உணர்வைக் கடத்திய ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்! திரைப்படங்களைப் போல இல்லாமல், ஒவ்வொரு எபிசோடையும் `அடுத்து என்ன?' என்று பார்வையாளர்களைப் புரிந்து `எடிட்' செய்யப்பட்டிருக்கிறது. 

`வெள்ள ராஜா'வின் ராஜாவாக `தேவா' கேரக்டரில் பாபி சிம்ஹா. அவரைச் சுற்றியே கதை நடக்கிறது. டைட்டில் கார்டில் காட்டப்படும் அனிமேஷன் தேவாவின் பால்ய காலத்தைக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் அந்த ஒற்றைச் சண்டைக் காட்சியில் அவ்வளவு மாஸ் காட்டியிருக்கிறார் சிம்ஹா. மற்ற காட்சிகளில் மிரட்டியபடியே கேங்க்ஸ்டராக வருவதெல்லாம், மீண்டும் `ஜிகர்தண்டா' அசால்ட் சேதுவையே நினைவுக்குக் கொண்டு வருகின்றன. தேவாவாக வரும் சிம்ஹா லாட்ஜுக்குள் இருந்தபடி, வெறும் மூன்று அடியாட்களுடன் வாழ்ந்து வருவதும், வெளியில் மற்றவர்களெல்லாம் பெரிய குழுக்களாகத் திரிவதும் தேவா ஒன்றும் அவ்வளவு பெரிய தாதா இல்லை என்கின்றது. கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்திற்குத் தேவையான அடித்தளம் தேவாவுக்கு இல்லை. ஒரு காட்சியில், `நார்கோஸ்' புகழ் பாப்லோ எஸ்கொபாரை டிவியில் பார்த்தபடி, அவர்தான் தனது ஹீரோ என்கிறான் தேவா. அதற்கான எந்த முகாந்திரமும் தேவாவிடமோ, `வெள்ள ராஜா' கதையிலோ இல்லை. 

காவல்துறை அதிகாரி தெரசாவாக வருகிறார் பார்வதி நாயர். 25 முறை ட்ரான்ஸ்ஃபர் ஆன, கறாரான ஆபீஸர். அலுவலகத்தில் பழைய பைல்களைப் புரட்டியபடியே விசாரணை நடத்தி, கொகைன் நெட்வொர்க்கைக் கண்டுபிடிக்கிறார். அழுத்தமான முகத்தோடு, என்ன சிந்திக்கிறார் என்பதை வெளிப்படுத்தாத கேரக்டர் பார்வதியுடையது. இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம். கதையில் அவருக்கான இடம் இருந்தும், தவறவிட்டிருக்கிறார். அடுத்த சீசனில் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கலாம். காப்பர் நிறுவனத்தை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக வருகிறார் காயத்ரி. காளி வெங்கட், சரத் ரவி ஆகியோரின் கதைகள் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்த்த உணர்வைத் தருகிறது. அவர்கள் செய்யும் காமெடி சிரிப்புக்கு பதிலாக அலுப்பைத் தருகிறது.

`வெள்ள ராஜா' சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் வகையா, வெறும் க்ரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. `நார்கோஸ்', `ப்ரேக்கிங் பேட்', `ஆரண்ய காண்டம்', 'சேக்ரட் கேம்ஸ்','அருவி', இந்தச் சீரிஸின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' முதலானவற்றின் சாயலை மொத்தமாக 'வெள்ள ராஜா'வில் பார்க்க முடிகிறது. அதிலும் பாபி சிம்ஹாவின் அந்த முக்கியமான சண்டைக்காட்சி நிச்சயம் 'புதுப்பேட்டை' படத்தை நினைவுக்குக் கொண்டுவரும். 

கேங்க்ஸ்டர்களோ, போதை மருந்துகளோ தாமாக உருவாவது இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் லாப கணக்குகளிலும், அதிகாரப் போட்டியிலும் கேங்க்ஸ்டர்கள் உலகம் முழுவதும் உருவாகிறார்கள். போதை மருந்துகளையும் சாதாரணமாகப் புழக்கத்திற்குக் கொண்டுவர அரசியல்வாதிகள் முக்கியம்; அந்த அரசின் கொள்கைத் திட்டங்கள் முக்கியம். கேங்க்ஸ்டர் என்பவன் தனி மனிதனல்ல; அரசுக்கும், சாதாரண குடிமகனுக்கும் இடையில் சட்டவிரோதமான அதிகாரத்தைக் கையில் கொண்டவர்கள் கேங்க்ஸ்டர்கள். 'நார்கோஸ்', 'சேக்ரட் கேம்ஸ்' இரண்டிலும் கொலம்பியா, இந்தியா ஆகிய நாடுகளின் சமகால அரசியல் பேசப்பட்டிருக்கும்; அதனூடே வளர்ந்த கேங்க்ஸ்டர்கள் இருப்பார்கள். சமீபத்தில் வெளிவந்த 'வடசென்னை' திரைப்படமும் அப்படித்தான். 'வெள்ள ராஜா' இது எதுவும் இல்லாமல், வெறும் திருடன் போலிஸ் விளையாட்டாக இருக்கிறது. 

'வெள்ள ராஜா' சீரிஸில் மிகவும் பாராட்டத்தக்கது அதன் பின்னணி இசை. சிம்ஹாவின் கோபத்திலும், ஆக்‌ஷன் சீன்களிலும் பட்டாசாக வெடித்திருக்கிறார் விஷால் சந்திரசேகர்.  ஒவ்வொரு முறையும் டைட்டில் கார்டின் போது, அந்த இசையும், அதன் அனிமேஷனும் பார்ப்பவர்களைக் கவர்ந்து இழுக்கின்றன.

புதிய காவல்துறை அதிகாரி தெரசா முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பும் குழந்தைகள் வரை அனைவரும் சென்னை அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சென்னை வந்து பாவா லாட்ஜில் தங்கி, தேவாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். `மாநகரம்' திரைப்படம் நன்றாக இருந்தபோதும், அதன் மீது வைத்த அதே குற்றச்சாட்டு தான். சென்னை முழுவதும் வெறும் ரவுடிகளாக இருக்கிறார்கள். போதை மருந்து கடத்துகிறார்கள்; பள்ளிக்கூட குழந்தைகளுக்கு விற்கிறார்கள்; கையில் எப்போதும் `பொருளோடு' திரிகிறார்கள்; கொலை செய்கிறார்கள். இனி வெளியூர்க்காரர்கள் சென்னை லாட்ஜ்களில் தங்கினால் கவனமாக இருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது `வெள்ள ராஜா'. மொத்த சீரிஸிலும், சம்பந்தமேயில்லாமல் ஒரே ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் வருகிறது. மற்றவர்களை விட, உயர் ரக ஸ்னைபர் துப்பாக்கியோடு மக்களோடு மக்களாக இருக்கிறது. இது எதற்காக? 

கெட்ட வார்த்தைகளையும், அதீத வன்முறைகளையும் காட்டுவதற்காக மட்டும் இணையம் சுதந்திரம் தரவில்லை. வர்த்தக சமரசங்களுக்காக, இங்குச் செய்யப்பட்ட அனைத்து stereotypeகளையும் உடைப்பதற்காகவும்தான். ஆனால் அப்படிப்பட்ட இணைய வெளியிலும் மீண்டும் முன்பு இருந்த அதே சித்திரிப்புகளை உருவாக்குவது ஏன்? 

அழுத்தமில்லாத கதைக்களம், பல முறை பார்த்துப் பழக்கப்பட்ட கிளைக்கதைகள் என இருந்தாலும், `வெள்ள ராஜா' நிச்சயம் வெப் சீரிஸ் பார்க்கத் தொடங்குபவர்களைக் கவர்வான்; மற்றவர்களை ஈர்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்!