மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி

ஷாஜி, ஓவியங்கள் : ரவி

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி

``டாய்... நீதானே அந்த அலவலாதி ஷாஜி?” - ஷாஜி என்ற பெயரினால் நான் மிகவும் அவமானப்பட்டது ‘லிஸா’ எனும் திரைப்படத்தில் ஜெயன் பேசிய இந்த வசனத்தை வைத்துத்தான். அலவலாதி என்பது கிட்டத்தட்டத் தெருப்பொறுக்கிக்கு நிகரான ஒரு நிந்தைப் பெயர். சினிமா பார்ப்பதற்காக இரவும் பகலும் அலைந்து திரிதல், அதற்குப் பணம் சேர்க்க நடத்தும் பலவகைக் கழைக் கூத்தாட்டங்கள், பள்ளிப் படிப்பின்மேலான முழுஉதாசீனம் என எனது செயல்கள் எல்லாவற்றையும் உள்குத்தாக வைத்துக்கொண்டு அந்தப் பட்டப்பெயரை எனக்குச் சூட்டிவிட்டு மகிழ்ந்தனர் ஊரார். அப்படியொரு வசனத்தை ஜெயன் பேசாமலிருந்திருந்தால் இந்தக் கெட்டப்பெயரிலிருந்து நான் தப்பித்திருப்பேனே... ஆனால், ஜெயனை என்னால் வெறுக்க முடியவேயில்லை. பெரும்பாலான படங்களில் அவர் இதுபோன்ற வசனங்களைப் பேசிக்கொண்டுதான் அடிப்பார். “எங்கிட்ட வெளயாடினா ஒன் எலும்புகளின் எண்ணிக்கை ஏறும், பற்களின் எண்ணிக்கை குறையும்” என்று சொல்லிக்கொண்டு குண்டர்களையும் போக்கிரிகளையும் அடித்து அப்பளமாக்கிய ஜெயன் எனும் உச்ச நட்சத்திரத்தின் ஆட்சிதான் அப்போதைய மலையாள சினிமாவில் நடந்துகொண்டிருந்தது. ஆண்டுக்கு 25 படங்களிலாவது அடிப்பார். அந்தத் தனித்துவமான அடிதடி மற்றும் துப்பாக்கிச் சூட்டு முறைகள், 56 அங்குல பெல்பாட்டம் கால்சட்டைக்கு மேலே பளபளக்கும் அவரது பல வண்ண ஆடைகள், அதிகம் வாய் திறக்காமல் பற்களைக் கடித்துப் பிடித்துக்கொண்டு அடக்கிப்பேசும் ஆக்ரோச வசனங்கள் என அந்த ஜெயன் பாணிக்கு வெறிகொண்ட ரசிகனாக நானிருந்தேன். அவரது படங்களின் பெயர்களிலிருந்தே அடிதடியின் அனல் பறந்தது. ‘ஆவேசம்’, ‘சத்ரு சம்ஹாரம்’, ‘அடவுகள் பதினெட்டு’,  ‘நாயாட்டு’, ‘பிச்சாத்திக் குட்டப்பன்’, ‘ஜெயிக்கானாய் ஜெனிச்சவன்’,  ‘மனுஷ்ய மிருகம்’, ‘இடி முழக்கம்’…

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி

ஒருநாள் காலையில் வீட்டின் சமையற்கட்டில் அமர்ந்து, சுட்ட வெங்காயம் போட்ட பழைய கஞ்சியைக் குடித்துக்கொண்டிருந்தேன். அப்பா திண்ணையில் அமர்ந்து வானொலிச் செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தார். திடீரென்று அவர் “எடா... நீ இதக் கேட்டியா... ஜெயன் எறந்து போயிட்டாராமே?” என்று சத்தமாகச் சொன்னார். அதிர்ச்சியில் எனது கையிலிருந்த கஞ்சிப் பாத்திரம் கீழே விழுந்து கவிழ்ந்தது. பதறி ஓடி ரேடியோவுக்கு அருகே சென்றேன். “தமிழ்நாட்டில் மெட்ராஸுக்கு அருகேயுள்ள சோழவரத்தில் நடந்த  ‘கோளிளக்கம்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கிடையே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சமகால மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஜெயன் காலமானார்…” உடைந்து நொறுங்கிப் போனேன். எனது பள்ளித்தோழனும் அதிதீவிர ஜெயன் விசிறியுமான பி.கெ.விஜயன், பைத்தியம் பிடித்தவனைப் போல் கதறி அழுதான். பிரியனும் சாத்தானுமெல்லாம் துயரக் கடலில் விழுந்துபோனார்கள். சொந்த வீட்டில் யாராவது இறந்தால்கூட இவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டோம். “ஜெயனச் சதிபண்ணிச் சாவடிச்சது தான்டா...” என்று ஒருவருக்கொருவர் சொல்லிப் புலம்பினோம். ஜெயனால் இப்படிச் சாதாரணமாகச் செத்துப்போக முடியாது என்று ஆழமாக நம்பினோம். தொடர்ந்துவந்த பல மாதங்கள் ஜெயனின் நினைவிலேயே கழித்தோம். எங்கள் ஊர்ப் பக்கமிருந்துதான் ஜெயன் மரணத்தை நோக்கிப் புறப்பட்டார் என்று தெரியவந்தது எங்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இறப்பிற்கு இரண்டு நாள் முன்பு, எங்களூரிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள பீர்மேடு என்ற பகுதியில் ‘அறியப்பெடாத்த ரஹஸ்யம்’ என்ற சினிமாவின் படப்பிடிப்பிற்காக ஜெயன் தங்கியிருந்தாராம். இன்னும் இரண்டே நாள்களில் அப்படத்திலுள்ள அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டிருக்குமாம். ஆனால், ‘கோளிளக்கம்’ படக்குழுவினர் ‘நூற்றுக்கணக்கான ஆள்களும் ஹெலிகாப்டர் போன்ற ஏற்பாடுகளும் உங்களுக்காக மட்டுமே இங்கே காத்திருக்கிறது, ஒரேயொரு நாளைக்கு வந்து இறுதிக்காட்சியை முடித்துத் தாருங்கள்’ என்று வற்புறுத்தி அவரை மெட்ராஸ் கூட்டிச் சென்றனர். பீர்மேட்டில் தன்னுடனிருந்த நஸீரிடம் இரண்டே நாள்களில் திரும்பி வருவேன் என உறுதி அளித்தவாறுதான் ஜெயன் சென்றார். ஆனால், அடுத்த நாளே அவரது உயிர் பிரிந்தது. இந்தப் பேச்சுகளெல்லாம் ஐதீகக் கதைகளைப்போல் ஊரெல்லாம் பரவி எங்கள் வலியை அதிகரிக்கவைத்தன. அதற்கு முன்பும் எங்கள் ஊர்ப்பக்கம் ஜெயன் படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார் என்பதெல்லாம் அப்போதுதான் தெரிய வந்தது. என் பக்கத்து வீட்டுக்காரரான ஓவியர் விஜயன், ஜெயனை நேரில் பார்த்திருக்கிறார்! குளமாவு ஊரில் நடந்த  ‘தச்சோளி அம்பு’ எனும் புராணப் படத்தின் படப்பிடிப்பில்.

‘அங்கம்’ எனப்படும் சுழல்வாள்ச் சண்டையை வேடிக்கை பார்க்க நின்றுகொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவராக, சட்டை போடாமல் நின்றதற்கு விஜயனுக்கு ஒன்றரை ரூபாவும் சாயாவும் ஒரு பருப்பு வடையும் கொடுத்தார்களாம். இடுக்கி அணைக்குள்ளே இருக்கும் குளமாவு ஊரில் மட்டுமல்லாது தேக்கடி, வண்டிப்பெரியார், குட்டிக்கானம் போன்ற பகுதிகளிலும் அவ்வப்போது படப்பிடிப்புக்கள் நடந்தன. தேக்கடியில் வைத்து நடந்த ஏதோ ஒரு தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில், பாடியாடி ஓடி வந்த விஜயஸ்ரீ எனும் குண்டு நடிகையின் இறுக்கமான கவர்ச்சிக் கால்சட்டை தையல் விட்டுக் கிழிந்துபோனது என்றும் அதன் ஓட்டை வழியாக அவரது உள்ளாடை தெரிந்ததைக்கண்டு வாய்விட்டுச் சிரித்த தன்னை அசிங்கமான கெட்ட வார்த்தைகளில் திட்டி, படக்குழுவினர் அங்கிருந்து துரத்தியதாகவும் தேனாலி பேவி என்பவர் ஒருமுறை என்னிடம் சொன்னார். குஞ்ஞும் ஒரு படப்பிடிப்பைப் பார்த்திருக்கிறார், கட்டப்பனை கிறிஸ்தவ மருத்துவமனை வளாகத்தில். அது சரத்பாபு, ஜோதி நடித்த ‘முடிவல்ல ஆரம்பம்’ எனும் தமிழ்ப்படம். “அது மட்டும் எங்கிட்டே சொல்லக் கூடாது” போன்ற ஏதோ ஒரு சிறு வசனத்தைப் பேசி நடிக்க, ஜோதிக்குப் பல மணி நேரம் ஆகியது என்று குஞ்ஞு சொன்னார். ஆனால், எங்களூர்களில்வைத்து எந்தவொரு படப்பிடிப்பையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

எது நல்ல படம்?

தனது மண்குடிசையின் சுவரில் வெள்ளைத் துணியை ஆணியடித்து இழுத்து நிறுத்தி, தாங்க முடியா முடைநாற்ற மடிக்கும் வஜ்ரப்பசை எனும் மரப்பசையைத் தீயில் உருக்கிக் கூழாக்கி அதை வண்ணங்களில் சேர்த்து, அந்த வண்ணங்களை வைத்து ஒரு விளம்பரப் பதாகையை வரைந்து கொண்டிருந்தார் ஓவியர் பொந்தன்புழை விஜயன்.

“ஜெயன் எறந்துபோன மாதிரி நஸீருக்கும் எதாவதொண்ணு ஆச்சுன்னா நம்மெல்லாம் என்ன செய்வோம்?” நான் அவரிடம் கேட்டேன்.

“சாஜி ஒரு நல்ல படம்கூட இன்னும் பாக்கல. அதனால இப்படிச் சொல்றீக. நல்ல படத்துக்குப் பெரிய நடிகன் நடிகையெல்லாம் ஒண்ணும் தேவயில்ல.”

விஜயன் எதைச் சொல்கிறார்? நான் இதுவரை பார்த்தது எதுவும் நல்ல படம் அல்ல என்கிறாரா? பெரிய நடிகர்கள் இல்லாம எப்படி சினிமா எடுக்க முடியும்?

“அப்போ ‘ஷோலே’ நல்ல சினிமா இல்லியா?” 

“அதுவும் ஒரு அடிதடிப் படம்தானே? பாட்டுகளும் சில காட்சியமைப்புகளும் நல்லாருக்கு. அவ்ளொதான். அதால அது ஒரு நல்ல படமெல்லாம் கெடயாது.”

“அப்றம் எது நல்ல படம்? ‘செக்ஸில்ல ஸ்டன்டில்ல’ என்று ஒரு படம் வந்ததே... அதுவா?”
 
“அதுல செக்ஸும் ஸ்டன்டும் மட்டும்தானே இருக்கு!”

“அப்போ ‘ம்ருகயா’?”

“ஓ... அதைப் பாத்தீகளா? அது நல்ல படம்”

“அப்டீன்னா மலையாளத்துல நல்ல படமே இல்லியா?”

“இருக்கே... ‘தம்பு’, ‘எஸ்தப்பான்’, ‘உத்தராயனம்’, ‘சுயம்வரம்’, ‘கொடியேற்றம்’,  ‘ஸ்வப்னாடனம்’, ‘உள்கடல்’... சாஜிக்கான படமும் இருக்கு. ‘கும்மாட்டி’... நல்ல சிறுவர் படம்”
நான் ஒருபோதும் கேட்டிராத படங்களின் பெயர்களைத்தாம் விஜயன் சொல்கிறார்! பெருங்குழப்பத்திற்கு ஆளானேன். ஓய்வு நேரங்களில் சினிமாப் பெயர்களைச் சொல்லிக் குழந்தைகள் நடத்தும் ஒரு விளையாட்டு இருக்கிறது. அதில்கூட இந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டதேயில்லையே! இவை எவையுமே சாதாரணமாகக் கொட்டகைகளில் வரும் படங்கள் அல்ல போலும். கட்டப்பனையில் ‘தர்சனா’ என்று ஒரு திரைப்படச் சங்கம் இருந்தது. விஜயன் அதன் உறுப்பினர். அவர்கள் சங்கீதா கொட்டகையில் அவ்வப்போது இத்தகைய படங்களைக் கொண்டுவந்து காண்பிப்பார்கள். அப்படங்களின் அதிதீவிர ரசிகரான விஜயனின் கருத்தின்படி நஸீரும் ஜெயனும் நல்ல நடிகர்களே கிடையாது. அவர்கள் வணிக சினிமா நட்சத்திரங்கள். நடிகன் வேறு நட்சத்திரம் வேறு. நான் அதுவரைக்கும் கேட்டிராத இத்தகைய விஷயங்களைச் சொல்லி சினிமா பற்றியான எனது புரிதல்களைக் குழப்பிவிட்டார் விஜயன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி

ஊரார் பார்வையில் ஒரு விவசாய தினக்கூலியாக இருந்தாலும், விஜயன் சாதாரண ஆளில்லை என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஓவியரும் சிற்பக் கலைஞரும் மட்டுமல்லாது பல விஷயங்களில் அறிவுகொண்டவர் அவர். இருந்தும், நஸீரைப் பற்றி அவர் சொன்னது உட்படச் சில கருத்துகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்போதுதான் நான் ‘ஆறடி மண்ணின்டெ ஜென்மி*’ என்ற ஒரு பழைய கறுப்புவெள்ளைப் படத்தைப் பார்த்திருந்தேன். நஸீர், மது, ஷீல, ஜெயபாரதி, ஜோஸ் பிரகாஷ் எனப் பல  ‘வணிக நட்சத்திரங்கள்’ இருந்தும், அது ஒரு சிறந்த படமாகவே எனக்குத் தோன்றியது. அடிதடி, காதல், காமக் காட்சிகள் எதுவுமில்லை. கடுமையான ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் கதாநாயகனாக நஸீர், தனது கலகலப்பான நடத்தைகளாலும் நகைச்சுவையாலும் அனைவரையும் மகிழ்விக்கிறார். இறுதியில் அவர் இறந்துபோகும்போது, அடக்கமுடியாமல் அழுதேன். அப்பாத்திரமாக அவர் வாழவே செய்திருந்தார். ‘அனுபவங்ஙள் பாளிச்சகள்’, ‘கள்ளிச் செல்லம்ம’, ‘முறப்பெண்ணு’, ‘இருட்டின்டெ ஆத்மாவு’, ‘படயோட்டம்’,  ‘நதி’ போன்ற பல படங்களில் நஸீர் மிகச் சிறப்பாக நடித்ததாக உணர்ந்திருக்கிறேன்.

ஓளங்ஙள் பாளங்ஙள்

கட்டப்பனை சாகராவில் ‘ஓளங்ஙள்’, சந்தோஷில் ‘பாளங்ஙள்’! இரண்டு படங்களின் சுவரொட்டிகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்து, ஒரு பாட்டின் வரிபோல் ‘ஓளங்ஙள் பாளங்ஙள் தாளங்ஙள் மேளங்ஙள் காளங்ஙள் கூளங்ஙள்..’ என்று ஒரு பொருளற்ற பாட்டாகப் பாடிச் சிரித்தோம். ஆனால், அப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று யாருக்குமே தோன்றவில்லை. ஓளங்ஙளில் முகம் தெரியாத ஏதோ நடிகன் கதாநாயகன். பாளங்ஙளில் கோபி மற்றும் நெடுமுடி வேணு நடித்திருக்கிறார்கள். இவர்கள் யாருமே எங்களது விருப்பப் பட்டியலில் உள்ள நடிகர்கள் அல்லர். ஒருவேளை ஓவியர் விஜயன் சொல்லுகின்ற நல்ல பட வகையறாவில் வரும் படங்களா இவை? ஓளங்ஙள் படத்தைத் தனியாகவே சென்று பார்க்க முடிவெடுத்தேன். மிகவும் அழகான ஒரு சின்னப் பையன் அசாத்தியமான முறையில் கால்பந்து விளையாடுகிறான். மின்னல் வேகத்தில் நகர்ந்து பந்தைத் தட்டும் அவனது கால்கள்... இருட்டில் ஓலமிடும் ஒரு மலையருவி மெல்ல மெல்லத் தெளிந்து வருகிறது. ஓர் இரவு விடிந்து பகல் பிறக்கிறது. இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை. ஆனால், அப்பாடல்களை யாருமே வாயசைத்துப் பாடுவதில்லை. அவை அவ்வப்போது பின்னாலிருந்து ஒலிக்கின்றன. ஒரு காட்சி பாதியில் முறிகிறது. அதன் வசனங்கள் அடுத்த காட்சிக்குமேல் அசரீரியாகத் தொடர்கின்றன. எந்தவொரு படத்திலுமே இப்படியெல்லாம் நான் பார்த்ததேயில்லை. வழமையான சினிமாப் பாணிகள் எதுவுமே அப்படத்திற்கு இருக்கவில்லை என்றபோதிலும், அப்படம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. சாகச நாயகர்களின் அடவுகளும் அடிதடிகளும் இல்லாத படங்களின்பால் மனது பயணப்படத் தொடங்கியது.

விஜயனிடம் “ஓளங்ஙள் பார்த்தேன், பிடித்திருந்தது” என்று சொன்னபோது, அவர் பாலு மகேந்திரா எனும் இயக்குநரைப் பற்றியும் ‘நெல்லு’, ‘உள்கடல்’ போன்ற மலையாளப் படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக இருந்ததைப் பற்றியும் சொன்னார். ‘பாளங்ஙள்’ சமீபத்தில் வந்த மிக முக்கியமான படமென்றும் அதன் இயக்குநர் பரதன் அசாத்தியமான படைப்பாளி என்றும் விஜயன் சொன்னார். அடுத்தநாளே சென்று ‘பாளங்ஙள்’ பார்த்தேன். பாளங்ஙள் என்றால் தண்டவாளங்கள். எங்கள் மலை மாவட்டத்தில் ரயில்வண்டிகளோ தண்டவாளங்களோ கிடையாது. முழுக்க முழுக்க ரயிலின் பின்புலத்தில் எடுக்கப்பட்ட  ‘பாளங்ஙள்’ எனக்கு மறக்கமுடியாத ஒரு புத்தம்புது அனுபவமாக மாறியது. கோபியின், நெடுமுடி வேணுவின் மிக இயல்பான நடிப்பும் சரீனா வஹாபின் அழகும் என்னைக் கவர்ந்திழுத்தன. அத்துடன் சினிமா குறித்து விஜயன் சொல்லும் வார்த்தைகள் எனக்கு வேத வாக்கியங்களாகிப்போயின. சதாநேரமும் விஜயனின் பின்னால் சுற்றிவரத் தொடங்கினேன். அவர் விளம்பரப் பதாகைகள் வரையும்போதும் மிளகைப் பறிக்க ஏணிமேல் ஏறி மிளகுக் கொடிகளுக்கிடையே தலையாழ்த்தும்போதுமெல்லாம் அவருக்குப் பின்னாலேயே திரிந்தேன். ஏழாவது மட்டும் படித்த, ஆங்கிலம் படிக்கத் தெரியாத விஜயன் சொல்லித்தான் கலைப்படம், நடுநிலை சினிமா போன்ற சொற்களையும் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், ஐசென்ஸ்டைன், புடோவ்கின், குரொசாவ, தர்கோவ்ஸ்கி போன்ற பெயர்களையும் முதன்முதலில் கேட்டேன்.

கட்டப்பனை சங்கீதாவில் ‘தர்சனா’ திரைப்படச் சங்கத்தின் சினிமாக் காட்சி ஆரம்பிக்கப்போகிறது. ரித்விக் கட்டக் இயக்கிய ‘சுவர்ண ரேகா’ எனும் படம். ஆனால், தர்சனாவின் உறுப்பினர்களுக்கு மட்டும்தாம் அனுமதி. எல்லா நாள்களையும்போல் சீட்டெடுத்து உள்ளே செல்ல முடியாது. அடையாள அட்டை வேண்டும். விஜயன் வரும்போது எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி அவருடன் உள்ளே போகலாம் என்று திட்டம்போட்டு நான் அந்த அரங்கிற்கு வெளியே திரிந்தேன். ஆனால், விஜயன் அன்றைக்கு வரவேயில்லை!

திரையரங்கின் முன்னால் சதா காணப்படும் காலிப்பயல்களில் ஒருவனான என்னை காவல்காரன் மீசைச் சேட்டனுக்கு தெரியும். அவரிடம் “சேட்டா... நானும் படம் பாக்கலாமா?” என்று கேட்டேன். “அய்யோ... இது பசங்க பாக்கற படம் கெடயாது. தரிசனாவோட ஆள் அல்லாம யாரயும் உள்ளேவிட முடியாது” என்று சொன்னார். ஆனால், சீட்டுக்கான காசை ரகசியமாக அவருக்குக் கையூட்டாகத் தந்தால், ‘படம் தொடங்கிச் சற்று நேரம் கழித்து உள்ளேவிடுகிறேன்’ என்றார். முன்வரிசையின் மூலையில் யார் கண்ணுக்கும் தெரியாமல் அமர்ந்துகொள்ள வேண்டும்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி

பதுங்கி உள்ளே சென்று, முன்வரிசையின் மூலையிலேயே அமர்ந்தேன். மிகவும் பின்னால் ஓரிரு வரிசை இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் இருந்தனர். ‘ம்ரிகயா’ போன்ற ஒரு ஹிந்திப் படம்தான் ‘சுவர்ண ரேகா’ என்று நினைத்தேன். ஆனால், இது என்னவென்றே தெரியாத ஏதோ ஒரு மொழி! படம் மிகவும் மந்தமாக ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்தது. அலுப்பைத் தாங்கமுடியவில்லை. வெளியே போகலாம் என்றே முடிவெடுத்தேன். ஆனால், மெள்ள மெள்ள அந்த பெங்காலி திரைப்படமும் அதன் காட்சிகளும் எனக்குப் விளங்கத் தொடங்கின.  ‘ஆஜ் தானேர் கேதே ரௌத்ர சாயாய் லூகோ சூரீ கேலா.’ அப்பாடல்களும் காட்சிகளும் என் மனதிற்குள் பதிந்தன. நீளமான படமாகயிருந்தும் மற்ற திரைப்படங்களிருந்து அதுவரைக்கும் கிடைக்காத ஓர் அனுபவத்தினால் நிறைந்துபோன மனத்துடன்தான் திரையரங்கைவிட்டு வெளியே வந்தேன்.

கட்டப்பனை தரிசனாவை நகலெடுத்து, எங்கள் பக்கத்து ஊரான இரட்டையாற்றிலும் யாரெல்லாமோ சேர்ந்து ஒரு திரைப்படச் சங்கத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அதன் உறுப்பினர்களாக மாற பெரிதாக யாருமே முன்வரவில்லை. இறுதியில்  ‘நிர்மலா’ கொட்டகையை வாடகைக்கு எடுத்து, ‘சீட்டெடுக்கும் அனைவரும் உள்ளே வரலாம்’ என்ற அறிவிப்போடு ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் ஒவ்வொரு திரைப்படத்தைக் காண்பித்தனர். மலையாள நடுநிலை சினிமாவின் முக்கிய இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய நான்கு படங்களைத்தாம் முதலில் கொண்டுவந்தனர்.  ‘மண்ணு’, ‘உள்கடல்’, ‘மேள’, ‘கோலங்ஙள்’. முதிர்ந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படங்கள். காமக்காட்சிகளும் கடுமையான கெட்டவார்த்தைகளும் உண்டு. ஆனால், படங்களைப் பார்க்கக் கூட்டம் வராமையால் கேட்டவர்களுக்கெல்லாம் சீட்டைக் கொடுத்தார்கள். நான்கு படங்களையும் பார்த்தேன். நான் அன்றாடம் பார்த்த மனிதர்களின் வாழ்க்கையை அப்படங்கள் மாறுபட்ட கோணங்களில் காண்பித்தன. மலையாளத்தில் அத்தகைய படங்களை நான் அதுவரைக்கும் பார்த்ததேயில்லை. அப்படங்களின் கதாநாயகர்கள் வாழ்க்கையுடன் போராடிப் படுதோல்வியைச் சந்திக்கும் பரிதாபத்திற்குரிய சாமான்யர்கள்.

‘மண்ணு’ எனும் படத்தில் சோமன் மற்றும் சாரதாவின் நடிப்பும் ‘அகலங்ஙளிலெ அல்புதமே’ எனும் பாடலும் என்னைக் கவர்ந்தன. பாலு மகேந்திரா ஒளி அமைத்த  ‘உள்கடலின்’ காட்சிகளும் அதன் கதாநாயகியான ஒல்லிக்குச்சி நடிகை சோபாவும் புதுமையான அனுபவங்கள். கொழுக்கு மொழுக்கு என்று அடிமுடி தடித்த ஷீலாவும், ஜெயபாரதியும், ராஜஸ்ரீயும், விஜயஸ்ரீயும்தானே அதுவரைக்குமிருந்த பிரபல நாயகிகள். எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையமைத்த ‘உள்கடலின்’ பாடல்கள், பின்னர் பலகாலம் நிர்மலாவின் ஒலிபெருக்கியில் ஒலித்தன. ‘மேள’ எனும் படத்தில், தனது இடுப்பு அளவுக்கு மட்டுமே உயரம் இருக்கும் ஒரு குள்ளன்தான் தனக்குக் கணவனாக வரப்போகிறான் என்று அறிந்துகொண்டே சம்மதத்துடன் அவனைத் திருமணம் செய்கிறாள் பேரழகியான அஞ்சலி நாயுடு. உயரம் குறைவு என்றாலும் அவர் ஒரு மதிப்புமிக்க சர்க்கஸ் கலைஞன் என்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால், கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து முதன்முதலில் அந்த சர்க்கஸைப் பார்க்கும்போதுதான் எந்தவொரு கலைத் திறனுமில்லாத, யாருமே மதிக்காத ஒரு மூன்றாம் தர சர்க்கஸ் கோமாளிதான் தனது கணவன் என்று அவளுக்குத் தெரிய வருகிறது, உடைந்துபோகிறாள். தனது மனைவிக்குத் தன்னால் ஒருபோதும் நியாயம் செய்ய முடியாது என்று, கடைசியில் அக்குள்ளன் கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறான். கோலங்ஙளில் “ஃபா... அவராதி மவளே” என்று இன்னொரு பெண்ணைப் பார்த்துப் பச்சை பச்சையான கெட்டவார்த்தைகளை எடுத்து எறியும் அந்தப் பெண்பாத்திரத்தை எங்களது கிராமங்களில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து அசாதாரணமான திரைப்படங்கள் உருவாகும் மாயாஜாலத்தை கே.ஜி.ஜார்ஜின் படங்களில் உணர்ந்தேன். ஆனால், அப்படங்களைப் பார்க்கப் பெரிதாக யாருமே வராமையால் சில நாள்களிலேயே இரட்டையார் திரைப்படச் சங்கம் இழுத்து மூடப்பட்டது.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி

நான் கொட்டகை முதலாளியானபோது

தூரத்து ஊர்களிலுள்ள சொந்தக்காரர்களைப் பார்க்கப் போனபோது, ஒருமுறை அம்மா என்னையும் கூட்டிச் சென்றார். அவரது சிற்றப்பாவின் குடும்பத்தினருக்கு சங்ஙனாசேரிக்குப் பக்கத்திலுள்ள தெங்ஙணா எனும் ஊரில் ஒரு திரையரங்கு இருப்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால், அவ்வளவு பெரிய இடத்துக்கெல்லாம் எப்படிப் போவேன் என்ற ஐயப்பாட்டுடன் இருந்தேன். அங்கே சென்ற உடனேயே இதோ நானும் ஒரு திரையரங்கு முதலாளி ஆகிவிட்டேன் என்று நினைக்கத் தொடங்கினேன். சொந்தக்காரரின் கொட்டகை சொந்தக் கொட்டகை. நான் அந்தத் திரையரங்கிலேயே நேரத்தைக் கழித்தேன். ‘பில்லா’ எனும் தமிழ்ப்படம்தான் அங்கு ஓடிக்கொண்டிருந்தது. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, நெடும்கண்டம் தர்சனாவில் நான் பார்த்த படம். சீட்டுகள் விற்கப்படும் அறையிலும் அரங்கின் வேறு வேறு ரகமான இருக்கைகளிலும் மாறி மாறி அமர்ந்து ஆசையைத் தீர்த்தேன். கூட்டம் குறைவான காட்சிகளுக்கு வாசலில் நின்று சீட்டைக்  கிழித்தேன். ஆனால், அதிக நேரமும் படம் ஓட்டும் அறையிலேயே தங்கினேன். கன்னங்கரேல் தோல்வண்ணத்தில் பற்கள் துருத்தி நிற்கும் அனியன் என்ற பெயரைக்கொண்ட ஒரு சேட்டன்தான் படத்தை ஓட்டுபவர். எப்போதும் வேட்டியை மடித்துக்கட்டி, சட்டையே போடாமல் திரியும் அவரது கழுத்தில் ஒரு பெரிய தங்கச் சங்கிலி அசைந்தாடி மின்னியது. அவர் படச்சுருள் மாற்றுவதையும் இயந்திரத்திற்குள்ளே கார்பன் தண்டுகளை எரிப்பதையும் உற்றுப் பார்த்துக்கொண்டு, கொட்டகை உரிமையாளரின் கர்வத்துடன் நான் அங்கே உலாத்தினேன்.

சனிக்கிழமை இரவு. படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அரங்கு நிறைந்த கூட்டம். திரையில் இறுதிக்காட்சியின் அமர்க்களச் சண்டை. அந்த அறையின் கண்ணாடிக் கட்டம் வழியாக அவ்வப்போது படத்தைப் பார்த்துக்கொண்டும் படமோட்டும் இயந்திரத்தின் திரிப்புக்களைத் தொட்டுத் தடவ ஆசை தாங்காமலும் நின்றுகொண்டிருந்தேன். இடையில் அனியன் சேட்டன் எதற்கோ வெளியே சென்றார். உடனே என்னையறியாமலேயே ஏதோ ஒரு நெம்புகோலில் பிடித்து இழுத்துவிட்டேன். பெரும் சத்தத்துடன் தீப்பொறிகள் பறந்தன, படம் நின்றுபோனது. எல்லா விளக்குகளும் அணைந்துபோயின. கும்மிருட்டில் பயந்து நடுங்கி வேறு ஏதோ இயந்திரப் பகுதியில் எட்டிப் பிடித்தபோது, கடுமையாக மின்சாரம் தாக்கித் தூக்கி எறியப்பட்டேன். தரையில் அடித்து விழுந்து நடுங்கித் துடித்தேன்…

(தொடரும்...)

*ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இசையமைத்து, பி.பாஸ்கரன் இயக்கிய ‘ஆறடி மண்ணின்டெ ஜென்மி’ (ஆறடி மண்ணுக்கு அரசர்) கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்த ‘நீர்க்குமிழி’ (1965) எனும் தமிழ்ப்படத்தின் மலையாள வடிவம். தமிழில் நாகேஷின் தோற்றத்தினாலும் அதீத நகைச்சுவையாலும் அப்பாத்திரம் வலுவிழந்துபோனதாகவே கருதுகிறேன். ஆனால், நஸீரின் கவரும் தோற்றத்தாலும் அடக்கமான நடிப்பாலும் மலையாளத்தில் அது மிகச் சிறப்பாக அமைந்தது என்றே சொல்வேன்.