சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்!”

“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்!”

“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்!”

‘`பாக்யராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்த முதல் நாள். ஷூட்டிங் முடிஞ்சதும் நேரா போய் கார்ல ஏறி உட்கார்ந்துட்டேன். உடனே பதறியடிச்சுட்டு ஓடிவந்த ஒருத்தர், `ஏய்... ஏய்... நீ எதுக்கு இந்தக் கார்ல ஏறின; இது ஆர்ட்டிஸ்ட் போற கார். முதல்ல இறங்கு’ன்னு என்னை வெளியே இழுத்துப்போட்டார். எனக்கு அழுகையே வந்துடுச்சு. அங்க இருந்த சில நடிகர்கள், `விடுப்பா... அந்தப் பையன் புதுசு. இன்னைக்குத்தான் வந்துருக்கான்’னு சொன்னாங்க. பிறகு உதவி இயக்குநர்கள் போற ஒரு வேன்ல ஏத்திவிட்டாங்க. ஷூட்டிங் பொருள்கள் ஏத்துன அந்த வேன்ல துணைநடிகர்களுடன் நிக்கக்கூட இடம் இல்லாம போனோம். 

“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்!”

உதவி இயக்குநர்னா இப்படித்தான் போகணும் போலன்னு நினைச்சுக்கிட்டேன். இப்படி முதல் நாள்ல இருந்தே அவமானம், அவமானம்தான். ஆனா, இன்றைய தலைமுறை நிறைய மாறியிருக்கு. என் மகள் ஜோவிதா நடிகையாகப்போறா. அவள் நடிகையாகப்போறாள் என்பதைவிட அப்படி எந்தக் கஷ்டங்களையும் அவர் சந்திக்கப்போறதில்லை என்றவகையில் எனக்கு சந்தோஷம்.” நடிகர் லிவிங்ஸ்டன் பேசப்பேச மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அமர்ந்திருக்கிறார் அவர் மகள் ஜோவிதா. அம்பிகாவின் மகன் நடிக்கும் ‘கலாசல்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜோவிதா.

“ ‘உனக்கு சினிமாவில் நடிக்கணும்னு ஆர்வம் இருக்கு. ஆனா, நீ சினிமாவுல நடிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் உன் ஆசைக்கு நான் தடைபோடலை. நீ நடி; ஆனா, அதையே உன் முழு நேர வேலையா எடுத்துக்காத. உன் ஆக்டிங் கரியர் நல்லா அமைஞ்சதுன்னா இதை முழுநேர வேலையா எடுத்துக்க. அதுவரை படிப்புலயும் கவனம் செலுத்து’ன்னு சொல்லியிருக்கேன். நான் சொன்னதை ஜோவும் புரிஞ்சுகிட்டா. இப்ப ஜோ ட்ராவலிங் அண்டு டூரிஸம், ரெண்டாவது வருஷம் படிச்சிட்டிருக்கா. சினிமா, படிப்புன்னு இரண்டுலயும் கவனம் செலுத்துறா...’’ ‘நான் சொல்வது சரிதானே’ என்பதுபோல் மகளைப் பார்க்கிறார் லிவிங்ஸ்டன்.

தன் சினிமா ஆர்வம் பற்றிப் பேசத் தொடங்குகிறார் ஜோவிதா. ‘`சினிமாவில் நடிக்கணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை இருந்தது. ஜோதிகா, அஞ்சலி மாதிரி கண்ணாடி முன் நடிச்சுப்பார்ப்பேன். அந்த ஆர்வத்தில் பத்தாவது படிக்கும்போது ஒரு குறும்படத்தில் நடிச்சேன். அதுக்குப்பிறகு இப்ப இரண்டு படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. ஒண்ணு பாரதிராஜா சார் படம்; இன்னொன்னு அம்பிகா மேடம் பையன் ராம் கேசவ் நடிக்கிற `கலாசல்’னு ஒரு படம். இந்த இரண்டு படங்களோட ஷூட்டிங் ஆரம்பிக்க லேட் ஆனதும், அப்பா சொன்னமாதிரி காலேஜ்ல சேர்ந்துட்டேன். நான் பாடவும் செய்வேன். ஒரு இங்கிலீஷ் மியூசிக் ஆல்பம் பண்ணணும்னு ஆசை இருக்கு.

அப்பா உதவி இயக்குநரா இருந்தபோது அவர் சந்திச்ச பிரச்னைகளை அடிக்கடி என்கிட்ட சொல்லுவார். ஆனா, ஒரு நடிகையா வர ஆசைப்படும் பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகளே வேறு. அதிலிருந்து தப்பிக்க என்கிட்ட தன்னம்பிக்கையும் தைரியமும் இருக்கு. ஹீரோயினாதான் நடிப்பேன்னு அடம்பிடிக்க மாட்டேன். நெகட்டிவ், சப்போர்ட்டிங் கேரக்டர்னு கதை நல்லா இருந்தா எந்த மாதிரியான ரோல்லயும் நடிக்க நான் தயார். பல இயக்குநர்கள் பெண்களை மையமா வெச்சு ரொம்ப நாகரிகமா படம் பண்ணிட்டிருக்காங்க. அதனால நான் சினிமாவில் நுழைய இதுதான் சரியான நேரமா இருக்கும்னு நினைக்கிறேன்’’ என்கிற ஜோவிதாவுக்கு, இயக்குநர்கள் பாலா, நலன் குமரசாமி படங்களில் நடிக்கவேண்டும் என்று விருப்பமாம்.
 
ஜோரா வரணும் ஜோவிதா!

மா.பாண்டியராஜன் / படம்: ஜெ.வேங்கடராஜ்