
“ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு!”
“சொந்த ஊர் முத்துப்பேட்டை. காலேஜ் படிச்சு முடிச்சவுடன் சினிமாவுல நடிக்கணும்னு ஆசை. எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன், வாய்ப்பு கிடைக்கிறதுதான் பெரிய கஷ்டமா இருந்தது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சீரியல், அதுக்கப்புறம்தான் சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனா, என் பையனுக்கு அப்படி இல்லை. அவனுக்கு சினிமா வாய்ப்பு ரொம்ப ஈஸியா அமைஞ்சது. என் பையன் ஆதித்யா ஒரு நல்ல படத்துல அறிமுகமானது, எனக்கு சந்தோஷம்!” - நெகிழ்வுடன் உரையாடலைத் தொடங்குகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘96’ படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்து, பலரது பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார், எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர்.
“விஸ்காம் ஃபைனல் இயர் ஸ்டூடன்ட் நான். ஸ்கூல் படிக்கிறப்போ, நடிக்கணும்ங்கிற ஆசையை அம்மாகிட்ட சொன்னேன். ‘யாராச்சும் பேச வந்தாலே கூச்சப்பட்டு ஓடுவியே... சினிமாவுல நீ எப்படிடா நடிப்ப?’ன்னு கேட்டாங்க. அவங்க சொன்னது சரிதான். சினிமாவுல நடிக்கணும்னா, கூச்சத்தைத் தவிர்க்கணும்னு முடிவெடுத்து, அன்னையில இருந்து இப்போவரை யார் என்கிட்ட பேசுனாலும், தைரியமா பேச ஆரம்பிச்சேன்” என ஆதித்யா சொல்ல, எம்.எஸ்.பாஸ்கர் தொடர்கிறார்.
“சினிமாவுல நல்லது கெட்டது ரெண்டும் இருக்கு. ஆனா, சினிமாதான் என்னை வளர்த்திருக்கு. மூணு வேளை நிம்மதியா சாப்பிடுறதுக்கு சினிமாதான் காரணம். அதனால, என் பையன் சினிமாவுல நடிக்கணும்னு சொன்னதும், சந்தோஷமா சம்மதிச்சுட்டேன். `சின்சியரா இரு; அமைதியா இரு; யாரையும் தப்பாப் பேசாதே’ன்னு அட்வைஸ் சொன்னேன்” என்கிறார்.

“ ‘96’ வாய்ப்பு கிடைச்சதே ஒரு சுவாரஸ்யமான கதை. அப்பாவோட ஃபேமிலி இன்டர்வியூ ஆனந்த விகடன்ல வந்திருந்தது. அதுல, என் புகைப்படத்தைப் பார்த்துதான் என்னை ‘96’ படத்துல நடிக்கக் கேட்டாங்க” என்று ஆதித்யா சொல்ல, மீதிக்கதையைச் சொன்னார், எம்.எஸ்.பாஸ்கர்.
‘`என் நம்பருக்கு போன் வந்தது. என்னை நடிக்கக் கேட்கத்தான் கூப்பிடுறாங்கன்னு நினைச்சேன். ‘இந்தப் படத்துல சின்ன வயசு விஜய் சேதுபதி கேரக்டர்ல உங்க பையன் நடிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னதும், ரொம்பவே சந்தோஷம். நானே என் பையனைக் கூட்டிக்கிட்டுப் போய் தயாரிப்பாளரோட ஆபீஸ்ல விட்டுட்டு வந்தேன்” என எம்.எஸ்.பாஸ்கர் சொல்ல, ஆதித்யா தொடர்கிறார்.
‘`அப்பா விட்டுட்டுப் போனதோட, சரி. பிறகு இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கூட வந்ததில்லை. படத்தோட ஷூட்டிங் கும்பகோணத்துல நடந்தது. காலையில நாலு மணிக்கெல்லாம் போன் பண்ணி, ‘சரியான நேரத்துக்கு ஸ்பாட்டுக்குப் போயிடணும்; லேட் ஆக்கக்கூடாது’ன்னு சொல்வார் அப்பா. சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச பிறகு, அப்பா கொடுத்த ஒரே அட்வைஸ் இதுதான்’’ என்று ஆதித்யா நெகிழ்ந்தார்.
“படத்துல நான் நடிக்கிறதைப் பற்றி யாருக்கும் சொல்லிக்கலை. அப்பா, இயக்குநர் ப்ரியதர்ஷன் சார்கிட்ட மட்டும் சொல்லியிருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி அவர் என்னை போனில் அழைத்து வாழ்த்தினார். முக்கியமா, என் முன்னாள் காதலி எனக்கு போன் பண்ணாங்க. அவங்க என்னை வாழ்த்தியது எனக்கு ரொம்ப ஆச்சர்யம். ஏன்னா, நாங்க ரெண்டுபேரும் இப்போ தொடர்பிலேயே இல்லை. பிரிஞ்சு ரொம்பநாள் ஆச்சு!’’ என ஆதித்யா இடைவெளி விட,
“என்னடா இவன் அப்பா முன்னாடியே இப்படிச் சொல்றானேன்னு ஷாக் ஆகாதீங்க. ஆதியும் நானும் ஃபிரெண்ட்ஸ் மாதிரிதான் பழகுவோம். அவர் தப்பு செஞ்சா கண்டிக்கலாம். உணர்ச்சிகளுக்குப் பூட்டுப் போட முடியுமா?” என மகனின் கையை இறுகப் பற்றிக்கொள்கிறார், எம்.எஸ்.பாஸ்கர்.
சனா / படம்: ப.சரவணகுமார்