சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..!

கதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..!
பிரீமியம் ஸ்டோரி
News
கதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..!

கதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..!

ந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவோடு துறுதுறுவெனச் சுற்றித்திரிந்தவர். இப்போது வேறொரு பாதையில் வெற்றிக்காக ஓடிக்கொண்டிருக்கிறார். விஷ்ணு விஷாலின் வார்த்தைகளில் ஏகப்பட்ட எமோஷன்ஸ்... 

கதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..!

“கிரிக்கெட்லேருந்து சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“தமிழ்நாடு கிரிக்கெட் டீமுக்காக விளையாடிக்கிட்டிருக்கும்போது, மாசக்கணக்கா தொடர்ந்து விளையாடுவேன். ரெஸ்ட் இல்லாம விளையாடியதால், கால் எலும்புல பிரச்னை. கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகிடுச்சு. பெரியப்பா சினிமாவுல சின்னச் சின்ன கேரக்டர்கள் பண்ணிக்கிட்டிருந்தவர். அவர்தான் என்னை சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணச் சொன்னார். ஆறு வருடத்துல பல முயற்சிகள்; எதுவுமே பலன் தரலை. வெறுத்துப்போய், வேலைக்குப் போயிட்டேன். அப்போதான், ‘வெண்ணிலா கபடிக்குழு’ வாய்ப்பு வந்தது. ‘வேணாம், சினிமா எனக்கு சரிபட்டு வராது’னு சொல்லிட்டேன். ஆனா, தயாரிப்பாளர் என்னை வலுக்கட்டாயமா கதை கேட்க வெச்சார். ஆனா, ‘புரொடியூசர் சொன்னதுக்காக உங்ககிட்ட கதையைச் சொன்னேன். ஆனா, இதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க’னு சுசீந்திரன் சொல்லிட்டார். தயாரிப்பாளரோ, ‘நீதான் ஹீரோ’ன்னு சொன்னார்.

ரெண்டுநாள் கழிச்சு சுசீந்திரன் சார், ‘எடையையும், கலரையும் குறைச்சுட்டு வாங்க; பார்க்கலாம்’னு சொன்னார். அப்படியே போய் நின்னேன், அவருக்குப் பிடிச்சிருந்தது. முதல் ஷெட்யூல் முடிஞ்சதுமே, ‘என்கிட்ட பணம் இல்லை’னு நழுவிட்டார், தயாரிப்பாளர். அப்போதான் தெரிஞ்சது, நான் பெரிய இடத்துப் பையன்; சினிமாவுல நடிக்க ஆர்வமா இருக்கேன்னு தெரிஞ்சு, அவர் என்னைப் பயன்படுத்திக்க நினைச்சிருக்கார். வேறென்ன பண்றது?! அப்பா மூலமா இன்னொரு தயாரிப்பாளர்கிட்ட வட்டிக்குப் பணம் வாங்கி, இவருக்குக் கொடுத்தேன். படம் நல்லபடியா முடிஞ்சு, பெரிய ஹிட். ஆனா தயாரிப்பாளரோ, ‘படம் ஃபிளாப்’னு சொல்லி, நான் வாங்கிக்கொடுத்த இடத்துல பணத்தைக் கொடுக்கலை. சினிமா என்னன்னு எனக்கு அப்போதான் புரிஞ்சது.”

“ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்குமான இடைவெளி அதிகமா இருக்கே?!”

“ ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்துக்குப் பிறகு, நான் நடிச்ச ரெண்டு படம் ஃபிளாப். அப்பறம் செலக்டிவ் ஆகிட்டேன். `குள்ளநரி கூட்டம்’ தொடங்கி, ‘ராட்சசன்’ வரை... அப்படித்தான் பண்றேன். நல்ல முயற்சி, கதை... இதான் முக்கியம். வெற்றி தோல்வி அல்ல!”

“நடிக்கிற படங்கள்ல உங்களுக்கு இருக்கிற அதே முக்கியத்துவம், மத்த நடிகர்களுக்கும் இருக்கே. என்ன காரணம்?”


“உண்மைதான். இதுவரை நான் தேர்ந்தெடுத்த படங்கள் கமர்ஷியலா மட்டுமல்லாம, கதை சார்ந்தும் இருந்தது. ஏன்னா, ஒரு முழுக் கதையை நான் மட்டுமே தாங்கிக் கொண்டுபோக முடியுமான்னு ஒரு பயம். ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’ இந்த ரெண்டு படத்துலதான் எனக்குக் கொஞ்சம் அதிக முக்கியத்துவம் இருந்தது. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா சுமையை என்மேல ஏத்திக்க ஆரம்பிச்சிருக்கேன். அப்படி ஓரளவுக்குத் தயார்படுத்திக்கிட்டு நடிச்ச படம், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. ஆனா, அதிலும் ரோபோ சங்கரும் சூரியும்தான் ஹைலைட். பிறகு, எனக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கிற ‘கதாநாயகன்’ பண்ணுனேன். எனக்கு கமர்ஷியல் ஹீரோவா ஆகணும்னு ஆசை. அதுக்கு என்னைத் தயார்படுத்திக்கத்தான் இப்போ ஒரு கமர்ஷியல் படம்; ஒரு கதைக்கு முக்கியத்துவமுள்ள படம்னு மாறி மாறி பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.” 

கதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..!

“இந்திய அணிக்காக விளையாட  முடியலையேன்ற வருத்தம் இப்பவும் இருக்கா?”

“நிறைய இருக்கு. கிரிக்கெட் விளையாட முடியாமப்போனதுல இருந்து, கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறதையும் விட்டுட்டேன். ஒருமுறை இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்துல நடந்தப்போ, ஃபிரெண்டு ஒருத்தன் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டுப் போயிட்டான். மேட்ச்ல ராபின் உத்தப்பா சிக்ஸருக்குத் தூக்க, மைதானம் முழுக்க அவ்ளோ சத்தம். உத்தப்பா நான் விளையாடும்போது என் ஜூனியர். உத்தப்பா இடத்துல நான் இருந்திருக்கணும்னு வருத்தமா இருந்தது. அந்தப் போட்டியைப் பார்க்கக் குடும்பத்தோட வந்திருந்த ரஜினி சார், எனக்குப் பின்னாடி உட்கார்ந்திருக்கார். எனக்கு முன்னாடி கிரிக்கெட், பின்னாடி சினிமா... ஆசைப்பட்ட ரெண்டுமே நமக்குக் கிடைக்கலையேனு அப்போ அவ்ளோ ஆதங்கமா இருந்தது. அந்த இடத்துல என்னால உட்கார முடியலை. கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.”

“உங்ககூட விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் இப்போ இந்திய கிரிக்கெட் அணியில இருக்காங்க.?”

கதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..!



“தோனி, யுவராஜ், ஜாகிர் கான், கைஃப்... இன்னும் பலரோட எதிரணியில விளையாடி யிருக்கேன். நான் தோனிகூட விளையாடியதே, என் ஃபிரெண்டு சொல்லித்தான் எனக்குத் தெரியும்.  அஸ்வின் அப்போ பேட்ஸ்மேன். நான் அவரு டீம் கேப்டன். ‘இவருக்கு பவுலிங் கொடுத்துப் பார்ப்போமே?’னு கொடுத்தேன், முதல் இன்னிங்ஸ்ல 5 விக்கெட், ரெண்டாவது இன்னிங்ஸ்ல 5 விக்கெட் எடுத்தார். அதுவரை பேட்ஸ்மேனா இருந்த அஸ்வின், என் கேப்டன்ஷிப் மேட்ச்லதான் பெளலர் ஆனார். அவர் பவுலிங்ல பண்ற ஒவ்வொரு சாதனையும் எனக்கு சந்தோஷம். மத்தபடி, தினேஷ் கார்த்திக், பாலாஜி, முரளி விஜய் இப்படி நம்ம ஊர் பிளேயர்ஸ்கூட நல்ல ஃபிரெண்ட்ஷிப்ல இருக்கேன். என்கூட விளையாடிய எல்லோரும் ‘ஜீவா’ படத்தை மொத்தமா பார்த்துப் பாராட்டினாங்க.”

“நடிகர் விக்ராந்த் உங்களுக்கு ஸ்பெஷலாமே?!”

“என் பெஸ்ட் ஃபிரெண்ட் விக்ராந்த். சி.சி.எல் போட்டியில நண்பர்கள் ஆனோம். சினிமா, பொது விஷயம்... எல்லாம் பேசிக்குவோம். சி.சி.எல் போட்டி நடந்தப்போ, மேனேஜ்மென்ட்கூட எனக்கு சில முரண்பாடு. விளையாட மாட்டேன்னு வந்துட்டேன். ‘அவன் இல்லைனா என்ன, நீ ஆடு’ன்னு விக்ராந்த்கிட்ட சிலர் சொல்லியிருக்காங்க. ஆனா, ‘அவன் சொல்றது சரி. அவன் பேச்சை யாரும் கேட்க மாட்டேங்கிறீங்க. விளையாடுறதா இருந்தா, ரெண்டுபேரும் சேர்ந்து தான் விளையாடுவோம்’னு எனக்காக வந்துட்டான். வேற யாராவது அந்த இடத்துல இருந்தா, இப்படிப் பண்ணியிருப்பாங்களான்னு தெரியலை. ஏன்னா, நான் வெளியே வந்தாலும் எனக்கு வாய்ப்புகள் இருக்கு. அவன் இன்னும் சினிமாவுல அவனுக்கான இடத்துக்காகப் போராடிக்கிட்டி ருக்கான். சி.சி.எல் போட்டி மக்கள்கிட்ட அவனை ஈஸியா கொண்டுபோகும். ஆனாலும் எனக்காக அவன் வந்தான். சீக்கிரமே நானும் அவனும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போறோம்.”

உ.சுதர்சன் காந்தி / படங்கள்: பா.காளிமுத்து