சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மக்கள் பாடகன்!

மக்கள் பாடகன்!
பிரீமியம் ஸ்டோரி
News
மக்கள் பாடகன்!

மக்கள் பாடகன்!

 ‘அத்த மக ஒன்ன நெனச்சு
அழகுக் கவிதை ஒண்ணு வடிச்சேன்
அத்தனையும் மறந்துபோச்சே
அடியே ஒன்ன பாத்ததுமே...’

“மெட்ராஸ் போயிட்டிருந்த பஸ்ல, நல்லா தூங்கிட்டிருந்தேன். நான் பாடுன இந்தப் பாட்டு காதுல விழுந்துச்சு; துள்ளிக்குதிச்சு எந்திருச்சேன். நடுவுல சாப்பாட்டுக்கு நிப்பாட்டுன எடத்துல, என் பாட்டைப் போட்டிருந்தாங்க. அவ்வளவு சந்தோஷம். பஸ்லேருந்து இறங்கிக் கடையில போய்ப் பாத்தா, அந்த சிடியில என் பேரே இல்ல. அப்போ பிரபலமா இருந்த ஒரு பாடகரோட போட்டோ போட்டிருந்தாங்க. ‘என்னடா இது, நம்ம குரல்ல பாடுன பாட்டு, அந்த ஏரியா முழுக்கக் கேக்குது, ஆனா அந்தப் பேரு நமக்குக் கிடைக்கலையே’னு எனக்கு அழுகையே வந்துருச்சு. அந்தக் கடைக்காரர்கிட்ட, ‘இது எம்பாட்டுண்ணே’னு சொன்னேன். அவர் நம்பல. பையில வெச்சிருந்த என்னோட சிடியை எடுத்துக் காட்டினதும்தான் நம்பினாரு” - உருக்கமான அனுபவத்தைச் சிரித்துக்கொண்டே சொல்கிறார் ‘ஆந்தக்குடி’ இளையராஜா. 

மக்கள் பாடகன்!

தமிழகத்தின் மோட்டல்களில் அதிகம் ஒலித்துக்கொண்டிருப்பவை ‘ஆந்தக்குடி’ இளையராஜாவின் பாடல்கள்தாம். இவர் பாடி, நடித்த ‘அத்த மக ஒன்ன நெனச்சு’ பாடல் ஆல்பம் யூடியூபில் 12 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. அவரைத் தேடி ஆந்தக்குடிக்குச் சென்றோம். கிராமத்துக்குக் கலைஞர்களுக்கே உரிய வெள்ளந்தியான மொழியில், தன் ‘இளையகானம்’ குழுவினரோடு நம்மை வரவேற்றார்.

“ ‘ஆந்தக்குடி’ இளையராஜா பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேன்?”

“சிவகங்கை மாவட்டம், ஆந்தக்குடிதான் சொந்த ஊரு. சின்ன வயசுல, பாட்டுப் புத்தகங்களை வாங்கி, அந்தப் பாட்டுகளை உரக்கப் பாடுவேன். ஊர்ல திருவிழா, கல்யாணம்னு எந்த வீட்டுல ரேடியோ செட் கட்டினாலும், நான் போய் மைக்கைப் பிடிச்சுப் பாடிருவேன். ராத்திரியில வீட்டுத் திண்ணையில உக்காந்து நான் பாடினா, கைதட்ட சனம் சேர்ந்திடும். பதினோராம் வகுப்புப் படிக்கும்போது, எங்கப்பா, ஒருத்தர்கிட்ட கெஞ்சி, நான் ஊர்ல நடந்த கூத்துல மேடையில பாடுறதுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அதுதான் நான் பாடுன மொத மேடை. அப்புறம், பல இசைக்குழுக்கள்ல சேர்ந்து பாடினேன். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துல பிபிஇ படிச்சேன்.”

“சினிமாவில் நடித்திருக்கிறீர்கள், பாடியிருக்கிறீர்கள்... அந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?”


“ஒரு சேனல்ல காமெடி நிகழ்ச்சி ஆடிஷனுக்காகப் போனேன் அங்க வடிவேல் கணேஷ் அண்ணன் அறிமுகம் கிடைச்சது. அவர்தான், ‘ ‘வெளுத்துக் கட்டு’ பட நடிகர்கள் தேர்வுக்குப் போகச் சொன்னார். நான் ரொம்பவும் மதிக்கிற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தயாரிக்கிற படம்னு தெரிஞ்சதும் இன்னும் சந்தோஷம். நான் நடிச்சதோட, பாடியும் காட்டினேன். அது அவருக்குப் பிடிச்சுப்போக, நானும் நடிக்கத் தேர்வானேன். அப்புறம், ‘விழா’ படத்துல ஜேம்ஸ் வசந்தன் சார் இசையில, ‘மதுர என்னும் மாநகராம்...’ என்ற பாட்டைப் பாடி, நடிச்சேன். ஸ்ரீகாந்த் தேவா இசையில ரெண்டு பாடல்கள் பாடியிருக்கேன். அடுத்தடுத்து நல்ல வாய்ப்பு வரக் காத்திருக்கேன்.”

மக்கள் பாடகன்!

“உங்களை உலகம் முழுவதும் தெரியவைத்த ‘அத்த மக ஒன்ன நெனச்சு’ பாடல் உருவான கதை?”

“ ‘விழா’ படத்துல இணை இயக்குநராக இருந்த ராஜா குருசாமி, ‘ஆல்பம் ஒண்ணு போடலாம்’னு சொன்னார். அதுக்காக, தஞ்சாவூர் ராசி மணிவாசகம் எழுதிய பாட்டுதான் அது. நிகழ்ச்சிகள்ல கிடைக்கும் பணத்தை வெச்சுதான் இந்த ஆல்பம் எடுத்தோம். லைட்டிங்குக்காக தெர்மாகோலுக்குப் பதில் வேட்டியைப் பிடிச்சிட்டு எல்லாம் நின்னு, ரொம்ப சிக்கனமா எடுத்துமுடிச்சோம். ஆனா, இப்படி ஹிட்டாகும்னு எதிர்பார்க்கலை. நான் அழகா இல்ல, மக்கள் ஏத்துக்குவாங்களானு தயக்கம் இருந்துச்சு. இப்ப, ‘இளையகானம் இளையராஜா’ நெட்டுல என்னைத் தேடுறாங்க. சந்தோஷமா இருக்கு!”

மக்கள் பாடகன்!“குடும்பத்தைப் பற்றி?”

“அப்பா, அம்மா ஊர்ல விவசாயம் பாக்குறாங்க. என்னையும் என் பாட்டையும் உசுரா நினைக்கிற மனைவி சுதாவுக்கு, என்னோட ‘உன் சிரிப்புலதான் முத்து உதிரும்’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். பொண்ணு சஹானா, பையன் ஜாய்சன்  ரெண்டு பேரும் எம்பாட்டுகளை டப்ஸ்மாஷ்,  டிக்டாக் எல்லாம் செஞ்சு விளையாடுறாங்க.”

“உங்கள் இசைக்குழு கலைஞர்களைப் பற்றிச் சொல்லுங்க?”


“நான் பாடுற பாடல்களுக்குக் கிடைக்கிற பாராட்டுகளின் பெரும் பங்கு, இணைந்து பாடுற லட்சுமிக்குச் சேரணும். அவங்க பாட்டுப் பாரம்பர்யத்தில் வந்தவங்க. ‘சிவகங்கை ‘கொட்டும் முரசு’ கோட்டைச் சாமி - கிடாக்குடி மாரியம்மாள்’னா அவ்ளோ ஃபேமஸ். அவங்களோட பொண்ணுதான் லட்சுமி. அப்புறம், கார்த்திகேயனுக்கு கிராமியப் பாடலுக்கு உரிய நல்ல குரல் வளம். நான் இல்லாத நிகழ்ச்சிகள்ல அந்த இடத்தை நிரப்பிடுவார். தபேலா நவீன், நாதஸ்வரம் ஜெய்சங்கர், கீபோர்டு ஹென்றி, பம்பை அருள், தவில் அருள்தாஸ்னு பத்து வருஷமா ஒரே குழுவா இருக்கோம். எனக்குக் கிடைக்கிற ஒவ்வொரு கைத்தட்டலுக்கும் இவங்களோட ஒத்துழைப்புதான் காரணம்.”

“நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உரிய மரியாதையும், பொருளாதாரமும் கிடைக்கிறதா?”

“நல்ல பேர் எடுத்து வளர்ற வரை, நாட்டுப்புறக்கலைஞர்கள் எல்லோருக்குமே கஷ்டம்தான். சில கலைஞர்களுக்குக் கடைசி வரைக்குமே சரியான வாய்ப்புகள் அமையுறதில்லைங்கிறது வருத்தமான விஷயம். அதையெல்லாம் தாண்டிதான் கலைஞர்கள் பாடிட்டும் நடிச்சிட்டும் இருக்காங்க. அவங்கதான் இந்த மண்ணோட கதையை எல்லோருக்கும் சொல்றவங்க.

விஷ்ணுபுரம் சரவணன் / படங்கள்: சாய் தர்மராஜ்