
“45 வயசுலகூட நாயகியா நடிக்கலாம்!”

“மாடலிங்னா என்னன்னு தெரியாத வயசுலேயே விளம்பரப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ஆனா, எனக்கு சினிமாவுல நடிக்கணும்னுதான் ஆர்வம். ‘மிஸ் மெட்ராஸ்’ ஜெயிச்ச சமயம். இயக்குநர் ப்ரியதர்ஷன் சார், “ ‘லேசா லேசா’ படத்துல நடிக்கிறியா?”னு கேட்டார். என் குடும்பம் சினிமாப் பின்னணி கிடையாது. முதல்ல சம்மதிக்கலை. கஷ்டப்பட்டு சினிமாவுல நடிக்க சம்மதம் வாங்குனேன். அந்த முதல் சினிமா வாய்ப்பும், அனுபவமும் இப்போவரை எனக்குப் பரவசம்தான்.”

விடிவி `ஜெஸ்ஸி’ ஃபீவரே இன்னும் குறைந்தபாடில்லை. அதற்குள், தமிழ்சினிமாவின் மற்றுமொரு மறக்கமுடியாத காதலி 96 ‘ஜானு’வாகக் கலங்கடிக்கிறார். திரையுலகில் திரிஷாவுக்கு இது 15வது ஆண்டு. ரொம்பவே நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்துப் பண்ணுகிற பக்குவப்பட்ட நடிகையாக மாறியிருக்கிறார். `96’ வெற்றிக்குப் பிறகு உற்சாகமூடில் இருந்தவரை சந்தித்தேன்.
“உங்க ஸ்கூல் லைஃப்கூட `96’ மாதிரிதானா?”
சிறிய புன்னகைக்குப் பிறகு பேசுகிறார். “இல்லைங்க, நான் படிச்சதெல்லாம் லேடீஸ் ஸ்கூல், லேடீஸ் காலேஜ்லதான். அதனால, ஸ்கூல் ஃபிரெண்ட்ஷிப்தான் காலேஜ்லயும் தொடர்ந்தது. எங்க நட்பு வட்டத்தை நாங்க பெருக்கிக்கவும் இல்ல; மாத்திக்கவும் இல்ல. எங்க கேங்ல சிலருக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. சிலருக்குக் குழந்தைகளும் இருக்கு. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கோம். வருத்தமான விஷயம் என்னன்னா, என் ஃபிரெண்ட்ஸ் யாரும் இந்தியாவுல இல்ல.”

“சினிமா வட்டத்துல உங்களுக்கு நண்பர்கள் அதிகம். அவங்க எந்தளவுக்கு உங்க வளர்ச்சிக்கு உதவியா இருந்திருக்காங்க?”
“நண்பர்கள் அதிகம்தான்; பெஸ்ட் ஃபிரெண்டுனு யாரும் இல்ல. ஒரு படத்துக்காக நிறைய நேரம் செலவழிக்கும்போது, அதுல வொர்க் பண்ணுன நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்ஸ் எல்லோரிடமும் நிறைய பழகுற வாய்ப்பு கிடைக்கும். அப்படிப் பிடிச்சுப்போறவங்களோட, இப்போவும் நான் பேசிக்கிட்டுதான் இருக்கேன். இன்னும் பல நண்பர்கள் கிடைப்பாங்க. ஆனா, இந்த இடத்துக்கு என்னைக் கொண்டு வந்தது எதுன்னு சரியா கண்டுபிடிச்சு சொல்லத் தெரியலை!”
“ஹீரோயின்கள் ரொம்பகாலம் சினிமாவுல நிலைச்சு இருக்க முடியாதுங்கிற நிலை, இப்போவும் இருக்குன்னு நினைக்கிறீங்களா... மாறியிருக்கா?”

“நான் சினிமாவுக்கு வரும்போது, ஹீரோயின்களுக்குக் கல்யாணம் ஆயிட்டாலோ, வயசாயிட்டாலோ ரசிகர்கள் மீண்டும் ஹீரோயினா பார்க்கமாட்டாங்கன்னு ஒரு நிலை இருந்துச்சு. ஆனா, இப்போ அது மாறியிருக்கு. நயன்தாரா சிங்கிள் ஹீரோயினா கலக்குறாங்க. ஜோதிகா, சிம்ரன் ரீஎன்ட்ரி கொடுத்திருக்காங்க. பாலிவுட்ல நாற்பது, ஐம்பது வயசுலகூட நடிக்கிறாங்க. கல்யாணம் முடிஞ்சாலும், ஹீரோயினா தொடர்ந்து பண்றாங்க. இதையெல்லாம் ரசிகர்கள் ஏத்துக்கிறாங்க. ஸோ, ரொம்ப நல்ல முன்னேற்றம் இது. சினிமாப் பிரபலங்களோட தனிப்பட்ட வாழ்க்கையையும் நடிப்பையும் பிரிச்சுப் பார்க்கத் தெரிஞ்ச ரசிகர்கள் இப்போ அதிகமாகிட்டாங்க. ‘96’ படத்தை என்னை மனசுல வெச்சுத்தான் எழுதினேன்னு இயக்குநர் பிரேம் சொன்னார். விஜய் சேதுபதிங்கிற பெரிய ஹீரோ, படத்துல இருந்தாலும், எனக்கு முக்கியத்துவம் தந்து எழுதுறது, பெரிய முன்னேற்றம்னுதான் நினைக்கிறேன். இப்படியெல்லாம் நடக்கும்போது, 45 வயசுலகூட ஹீரோயினா நடிக்கலாம்னு தோணுது!”
“ ‘96’ கதையை என்ன காரணத்துக்காக செய்யலாம்னு முடிவெடுத்தீங்க?”
“யார் கதை சொன்னாலும், முதல் 20 நிமிடக் கதையைக் கேட்குறதுதான், என் வழக்கம். ஆனா, இந்தக் கதையை பிரேம் சொன்னப்போ, ‘முழுக் கதையையும் சொல்லுங்களேன்’னு நானேதான் சொன்னேன். முழுக்கதையும் கேட்டப்போ, அவ்ளோ பிடிச்சுப்போச்சு. பொதுவாகவே எனக்குக் காதல் கதைகள் பிடிக்கும். தமிழ்ல, ‘அலைபாயுதே’, ‘விடிவி’ மாதிரி காதல் கதைகள் எப்போதாவதுதான் வருது. காதல் தளும்பத் தளும்ப இருந்ததுனாலதான், இந்தக் கதையை ஓகே பண்ணுனேன். நான் நினைச்சதைவிட, அதிகமா இந்தப் படத்தைக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க, ரசிகர்கள்.”

“ஏற்றத் தாழ்வுகள், பிரச்னைகள், சர்ச்சைகள்... இதெல்லாத்தையும் உங்ககூட இருந்தே பார்க்கிற உங்க அம்மாவைப் பற்றி?!”
“என் வாழ்க்கையில 17 வருடம் முழுக்க சினிமாவுக்காகவே கழிச்சிருக்கேன்னா, அதுக்கு என் அம்மா உமா கிருஷ்ணன்தான் முக்கியமான காரணம். என்னைச் சுற்றிய சர்ச்சை, தோல்வி, வருத்தம் இதெல்லாம் என் மனசை நோகடிச்சிருந்தா, என் தன்னம்பிக்கையே சீர்குலைஞ்சுபோயிருக்கும். அப்படி நடக்காமப் பார்த்துக்கிட்டது, அம்மாதான். முதல் படத்துல தொடங்கி, இப்போவரை என்கூடவே இருக்காங்க. 60-க்கும் அதிகமான படங்கள் பண்ணிட்டேன். எப்போவும் எனக்கு சலிப்பு தட்டாமப் பார்த்துக்கிட்டதும், அவங்கதான். மனசு அமைதியா இருந்தாதானே, வேலையில கவனம் செலுத்தமுடியும். என் மன அமைதிக்குக் காரணமும், அம்மாதான்.”
“அம்மாவைப் பற்றி நிறைய பேசியிருக்கீங்க. உங்க அப்பாவைப் பற்றிப் பொதுவெளியில அதிகமா பகிர்ந்துகிட்டதில்லையே?”
“அப்பா, கிருஷ்ணன். இப்போ அவர் இல்லை. இருந்தவரை அவரும் எனக்கு உறுதுணையா இருந்தார். அப்பாவுக்குத் தமிழ்சினிமாவைப் பற்றி நிறைய தெரியும். பல வருடம் அமெரிக்காவுலேயே தங்கி பிசினஸைப் பார்த்துக்கிட்டு இருந்ததால, அவரைப் பார்க்க நான்தான் கிளம்பிப் போவேன். என்னை நினைச்சு, அப்பாவுக்கு ரொம்பப் பெருமை. அது போதும் எனக்கு!”
“சக ஹீரோயின்களை எப்படிப் பார்க்குறீங்க, இந்தக் கேரக்டர்ல நாம நடிச்சிருக்கலாமேனு எப்பவாவது நினைச்சிருக்கீங்களா?”
“எந்த நடிகையைப் பார்த்தும் நான் பொறாமைப்பட்டதில்லை. எல்லாத் துறையிலும் போட்டி இருக்கும்; அதையெல்லாம் நான் பொருட்படுத்திக்கமாட்டேன். ஜோதிகா இப்போவும் ரொம்ப அழகான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறாங்க. அனுஷ்கா, நயன்தாரானு ஒவ்வொருத்தர்கிட்டவும் இருக்கிற நல்ல விஷயங்களை நான் ரசிக்கிறேன். ஆரோக்கியமான போட்டிதான், நாம செய்யற வேலையை இன்ட்ரஸ்டிங் ஆக்கும்.”
“ ‘அபியும் நானும்’, ‘நாயகி’, ‘மோகினி’ மாதிரி ஹீரோயினை மையப்படுத்திய படங்கள்ல நடிச்சிருக்கீங்க சரி... ஒரு பவர்ஃபுல் கேரக்டர்ல த்ரிஷாவை எப்போ பார்க்கலாம்?”
“ஹீரோயின்களை மையப்படுத்திய படங்கள் இப்போதான் நிறைய வர ஆரம்பிச்சிருக்கு. இனி நிச்சயம் பண்ணணும். ‘96’க்குப் பிறகு, இனி அப்படி ஒரு நல்ல கதை கிடைக்கும்போது நூறு சதவிகித நம்பிக்கை வைக்கணும்னு தோணுது. சினிமாவுல ஒரு நடிகைக்கு இருக்கிற கால வரையறையை நான் நம்பல. இன்னும் இறங்கி அடிப்போம்.”

“உங்களுக்குப் பிறகு சினிமாவுக்கு வந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் இங்களோட வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?”
“ரெண்டுபேருமே திறமைசாலிகள். சமந்தாவை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஷூட்டிங் டைம்லதான் முதல்முறையா பார்த்தேன். தெலுங்கு வெர்ஷன் ‘ஜெஸ்ஸி’ அவங்கதான். அப்போவே, ஸ்பாட்ல அவங்க நடிப்பை ரசிச்சிருக்கேன். கீர்த்தியை ஒரே ஒருமுறைதான் சந்திச்சிருக்கேன். ‘நடிகையர் திலகம்’ படத்துல கலக்கியிருந்தாங்க. அமேஸிங் ஆக்ட்ரஸ்!”
“நிறைய சர்ச்சைகளைக் கடந்து வந்திருக்கீங்க. எந்த விஷயம் ரொம்ப பாதிச்சது?”
“அப்படி எதையும் நான் நினைக்கமாட்டேன். ஏன்னா, என்னை உடைக்கிற உரிமையை நான் யாருக்கும் கொடுத்ததில்லை. எந்தப் பிரச்னையையும் நான் பெருசா எடுத்துக்கிறதில்ல. அதுக்காக, என்னை ‘ரோபோ’னு நினைச்சுடாதீங்க. யாராவது என்னைக் கஷ்டப்படுத்துனா, ஃபீலிங் இருக்கும். ஆனா எல்லோரும் அவங்க அவங்க விதைச்சதை, அவங்களேதான் அறுப்பாங்கன்னு நினைச்சிக்குவேன்.”
“எவ்ளோ நாளைக்கு சிங்கிள் ஸ்டேட்டஸ்?”

“காதல் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல. ‘விடிவி’யில சொல்றமாதிரி, ‘காதல் நம்மளப் போட்டுத் தாக்கணும்.’ அப்போ நிச்சயம் ஸ்டேட்டஸ் மாறும்!”
“ `பேட்ட’ பற்றி?”
“ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு. ரஜினி சார்கூட தமிழ்சினிமாவின் பல முக்கிய பிரபலங்கள் படத்துல இருக்கிறாங்க. இப்போதைக்கு இதை மட்டும்தான் என்னால சொல்லமுடியும். ரஜினி சார்கூட நடிக்கிறது, என் சினிமாப் பயணத்தை முழுமையாக்கி யிருக்குன்னுதான் சொல்லணும்.”
“விஜய்யின் ‘சர்கார்’ படத்துல வர்ற ‘சிம்டாங்காரன்’ பாட்டுக்கு கலவையான விமர்சனம் வந்துகிட்டிருந்தப்போ, நீங்க ரொம்பவே ரசிச்சு ட்வீட் பண்ணியிருந்தீங்களே?!”
“விஜய்கூட நாலு படம் பண்ணியிருக்கேன். அவர் எனக்கு எப்போவுமே ஸ்பெஷல். அவரோட பொறுமை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ‘சர்கார்’ பட ஆடியோ லாஞ்ச்ல அவரைப் பார்க்கும்போது, ‘இன்னும் இவ்ளோ இளமையா இருக்காரே!’னு தோணுச்சு. தவிர, நான் ரஹ்மான் சாரோட வெறித்தனமான ரசிகை. பிடிச்சவங்க ரெண்டுபேர் சேர்ந்து வொர்க் பண்ணியிருக்காங்க, ‘சிம்டாங்கார’னை ரசிக்காம இருக்க முடியுமா?!”
“அஜித், விஜய் கூட திரும்ப எப்போ சேர்ந்து நடிக்கப்போறீங்க?”
“அஜித், விஜய்... இவங்க ரெண்டுபேர்கூட திரும்ப நடிக்கணும்னா, வேணாம்னா சொல்வேன்?! முதல் ஆளா நிற்பேன். அஜித் என் ஆல்டைம் ஃபேவரைட். ரொம்பப் பிடிச்ச நடிகர் மட்டுமல்ல, பிடிச்ச மனிதர். நல்லதோ கெட்டதோ, மத்தவங்க முன்னாடி நடிக்கமாட்டார். அவர் அவராவே இருப்பார்.”
“ரஜினி, கமல், விஜய், விஷால்... அரசியலிலும் ஆர்வமா இருக்கும் இவங்கள்ல உங்க சாய்ஸ் யார்?”
“இவங்களோட அரசியல் என்ட்ரி பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல. இதுக்கு நான் பதில் சொன்னாலும், அதைச் சர்ச்சை ஆக்கிடுவாங்க. ஏன்னா, இப்போதைய அரசியல் நிலவரம் எதையும் நான் தெரிஞ்சுக்கிறதில்லை. அப்படியே எனக்கு ஒரு கருத்து இருந்தாலும், அது என் தனிப்பட்ட விஷயம்.”
“சோஷியல் மீடியாவுல உங்களைப் பற்றி வரக்கூடிய மீம்ஸ், ட்ரோல்ஸ் விமர்சனங்களையெல்லாம் எப்படி எடுத்துக்குறீங்க?”
“சமயத்துல கோபம் வரும். என் குறைகளை நான் விமர்சனமா ஏத்துக்குவேன். ஆனா, முகத்தை மறைச்சுக்கிட்டு என்னை விமர்சனம் பண்றது, கோழைத்தனம். ‘இந்தப் படத்துல நீ கேவலமா இருக்க’ன்னு நண்பர்கள் பலமுறை சொல்லியிருக்காங்க. முகத்துக்கு நேரா சொல்ற அந்த விமர்சனம் எனக்குப் பிடிச்சிருக்கு. மத்தபடி, நெகட்டிவ் எனர்ஜியை என் பக்கத்துல வெச்சுக்க நான் விரும்பமாட்டேன். முடிஞ்சவரை தவிர்த்திடுவேன்.”
அலாவுதின் ஹுசைன்