Published:Updated:

தன்மானம் அவமானம் வெகுமானம் - 2

தன்மானம் அவமானம் வெகுமானம் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
தன்மானம் அவமானம் வெகுமானம் - 2

தன்மானம் அவமானம் வெகுமானம் - 2

பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த, கண்ணீரும் புன்னகையும் கலந்த சம்பவங்களைப் பகிரும் பகுதி இது.

தன்மானம்

உதவி இயக்குநராக வேலை பார்க்கும்போது உங்கள் தன்மானத்துக்குத்தான் அடிக்கடி சோதனை வரும். அது பணம் சார்ந்தோ மனம் சார்ந்தோ... எந்தச் சூழ்நிலையிலும் எதற்காகவும் எப்போதும் என் தன்மானத்தை மட்டும் விட்டுக்கொடுத்ததே இல்லை. 

தன்மானம் அவமானம் வெகுமானம் - 2

ஆரம்பத்தில் நான் சின்னச் சின்னப் படங்களில் அதிகமும் பிரபலமில்லாத இயக்குநர்களிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய நண்பர்கள் ``நீ திறமைசாலி. பாக்யராஜ், சுந்தர்ராஜன் மாதிரி பெரிய இயக்குநர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டு சீக்கிரமே படம் பண்ணு’’ என வற்புறுத்துவார்கள். ஆனால் எனக்கு ஏனோ அப்படி யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டு நிற்கப் பிடிக்காது. அதைத் திமிர், ஆணவம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால், என் வீட்டில் இருக்கும் எல்லோருமே பெரிய பிசினஸ்மேன்கள், அவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அதனாலேயே யாரிடமும் பணிவாக, பயமாக வாய்ப்பு கேட்கும் சுபாவம் எனக்கு வாய்க்கவில்லை. ஒருவேளை அப்போதே பெரிய இயக்குநர்களிடம் சான்ஸ் கேட்டு உதவி இயக்குநராகச் சேர்ந்திருந்தால் சீக்கிரமே இயக்குநர் ஆகியிருப்பேன்.  பத்தாண்டுகள் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கவேண்டியதாக இருந்திருக்காது.

நண்பர்கள் சிலர்  ‘ஏம்பா, நீதான் பெரிய பணக்காரனாச்சே, சொந்தமா படத்தைத் தயாரிச்சு டைரக்‌ஷன் பண்ணிக்கலாமே’ என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். ‘என் சொந்தப் பணத்தில் நிச்சயமாக டைரக்‌ஷன் செய்ய மாட்டேன். ஏதாவது தயாரிப்பு நிறுவனத்தில் கதை சொல்லி அதன்மூலமாகத்தான் இயக்குநராவேன்’  என்று அவர்களுக்கு பதில் சொல்வேன்.  

தன்மானம் அவமானம் வெகுமானம் - 2

உதவி இயக்குநராக வேலை பார்த்துக்கொண்டி ருந்த போதே 1987-ம் ஆண்டு கல்யாணம் செய்துவைத்துவிட்டனர். அப்போது ஒரு பிளாஸ்டிக் கம்பெனி ஆரம்பித்து அதை நடத்திக்கொண்டிருந்தேன்.  அந்தச் சமயத்தில்தான் ஆர்.சுந்தர்ராஜனிடம் அஸோஸியேட் டைரக்டராக வேலைபார்த்து மூன்று படங்களை இயக்கிய ராஜேந்திரகுமார் மூலமாக ஒரு வாய்ப்பு வந்தது. மீண்டும் சினிமா, உதவி இயக்குநர் வேலை.

``மலையாள தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி  தமிழில் ஒரு படம் தயாரிக்கப்போகிறார்.  என்னிடம் உதவி இயக்குநராக இருந்த  விக்ரமன்  இயக்கப்போகிறார். என்னை அதில் அஸோஸியேட் டைரக்டராகப் பணியாற்ற  அழைக்கிறார். என்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவரிடம் நான் எப்படி  வேலை  பார்க்க முடியும். அதனால் மறுத்துவிட்டேன்.  நீங்கள் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கொள்ளுங்கள்’’ என்று என்னை  வற்புறுத்தினார்.

``விக்ரமன் இயக்கப்போகும் படத்தின் கதையைக் கேட்பேன். அந்தக் கதை பிடித்திருந்தால் மட்டுமே அவரிடம் வேலை பார்ப்பேன். இல்லையென்றால் மறுத்துவிடுவேன்’’ என்று ராஜேந்திரகுமாரிடம் கறாராகச் சொல்லிவிட்டேன். விக்ரமன் சார் மிக நல்ல மனிதர். தயக்கமே இல்லாமல் என்னிடம் கதை சொன்னார். முதலில் ஏனோதானோ என்றுதான் கதை கேட்க ஆரம்பித்தேன். ஆனால், நேரம் செல்லச் செல்ல ஆச்சர்யமாகிப்போனேன். விக்ரமன் சார் சொன்ன வித்தியாசமான கதையைக்  கேட்டபிறகு என்ன செய்தேன் தெரியுமா? நேராக வீட்டுக்கு வந்து நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த அத்தனை கதைகளையும் திரைக்கதைகளையும் கிழித்து எறிந்தேன். விக்ரமன் என்னிடம் சொன்ன அந்தக் கதைதான் ‘புது வசந்தம்.’

தன்மானம் அவமானம் வெகுமானம் - 2



புது வசந்தம் வாய்ப்பு எப்படி என்னைத் தேடி வந்ததோ அதுபோலவே, இயக்குநர் ஆகிற வாய்ப்பும்  என்னைத் தேடித்தான் வந்தது.  புது வசந்தம் பட ஷூட்டிங்கில் நான் வேலை பார்க்கும் முறையைக்  கூர்ந்து கவனித்த  செளத்ரி சார் அவராகவே அழைத்துப் படம் இயக்க வாய்ப்பு தந்தார். அதுதான் ‘புரியாத புதிர்.’

அவமானம்

இப்போது மணிரத்னம் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பே ‘சிவந்த வானம்’ என்று டைட்டில் வைத்து, தெலுங்கு இயக்குநர் ஸ்ரீபாலாஜி ஒரு படமெடுத்தார். நான் அதில் உதவி இயக்குநராக வேலைபார்த்தேன். அந்தப்படம் சில காரணங்களால் பாதியிலேயே நின்றுவிட்டது. அடுத்து  ‘இணைந்த கோடுகள்’ என்ற படத்தில் வேலை பார்த்தேன் அந்தப்படம் ரிலீஸானது, ஆனால் பெரும் தோல்வியைச் சந்தித்தது. பிரமாதமாகக் கதை சொல்லக்கூடிய பெரிய ஜாம்பவான் என்று கமல்சாரால் புகழப்படும் சாம்.டி.தாசன் இயக்கிய ‘மயக்கம்’ படத்தில் வேலை பார்த்தேன். அது அந்தரத்தில் தொங்கிப் போனது. அதன்பிறகு நான் பணியாற்றிய ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ நான்கு வாரம் ஓடியது. அடுத்து வேலை செய்த ‘ஆண்களை நம்பாதே’  50 நாள்கள்தான் போனது.

``ரவி, நீ ஒரு படத்தில் அஸிஸ்டென்டா வேலை செஞ்சா அந்தப்படம் நிச்சயமா  பாதியிலேயே ட்ராப்பாயிடும், அப்படியே ரிலீஸானாலும் அட்டர் ஃப்ளாப்தான். அதனால பேட்டா பணத்தை எல்லாம் முன்னாடியே வாங்கிடுடா...’’ என்று கிண்டல் பண்ணும்போது அவமானத்தால் மனசு நொறுங்கிப்போய்விடும். தூங்கவே முடியாது. `நீ வேலை பார்த்தால் அந்தத் தயாரிப்பு நிறுவனம் நஷ்டமாகிவிடும், அந்தப்படம் ஓடாது’ என்று என் முதுகுக்குப் பின்னால் அல்ல, முகத்துக்கு நேராகவே சொல்லிச் சொல்லி மனதைக் காயப்படுத்திக்  கொண்டே இருந்தார்கள்.

ஆனால், இந்த ஏளனப்பேச்சுகள் எனக்கு நல்ல படிப்பினையை உண்டாக்கியது. ஒரு தயாரிப்பாளருக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும், ஒருரூபாய்கூட நஷ்டத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்கிற மந்திரத்தை மனசுக்குள் பச்சை குத்திக்கொண்டு உழைத்தேன். சினிமாவில் எது செய்யவேண்டும் என்பதைவிட எதைச் செய்யக்கூடாது என்பதையே என் பத்தாண்டுக்கால உதவி இயக்குநர் வாழ்க்கையில் கற்றுக்கொண்டேன். 

என்னை எப்போதும் விரட்டிய ‘ராசியில்லாதவன்’ என்கிற சென்டிமென்ட் குற்றச்சாட்டை என் இரண்டாவது படத்தின் மூலமாக உடைக்க விரும்பினேன். நடிகர் சரவணன் முதன்முதலாக நடித்த படம் தோல்வி. அதனால் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பலரும் யோசித்தனர். வேண்டுமென்றே  சரவணனை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தேன். ரஞ்சிதா நடித்த முதல் படம் ‘நாடோடி தென்றல்’ வணிகரீதியாகத் தோல்வியைச் சந்தித்திருந்தது. அவரையே நாயகியாக்கினேன். அந்தப்படம் ‘பொண்டாட்டி ராஜ்யம்.’ படம் மூடநம்பிக்கைகளை உடைத்து சூப்பர்ஹிட்டானது, நூறுநாள்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

வெகுமானம்

ஒரு காலத்தில் சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரஜினிசார், கமல்சாரின் படங்களைத் திரையில் பார்த்து பிரமித்துப்போய் விசிலடித்து வியந்திருக்கிறேன். சினிமா உலகின் அந்த இருதுருவங்களையும் இயக்கும் சூழ்நிலை அமைந்ததே எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்தான். அதிலும் ‘படையப்பா’ படத்தில் சிவாஜி சாரை இயக்கியது வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாக நினைக்கிறேன். 

தன்மானம் அவமானம் வெகுமானம் - 2

‘படையப்பா’ படத்தின் ஷூட்டிங் அவுட்டோரில் நடந்தது. முதல் காட்சி, பெரிய வீட்டின் படிக்கட்டில் இருந்து சிவாஜிசார் இறங்கி வருவதுபோல் காட்சி. காலை 7 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பமானது. அப்போது பனிக்காலம் என்பதால் சிவாஜிசாருக்கு மூச்சிரைப்பு இருந்தது.  சிரமத்தோடு நடிக்க ஆயத்தமானார். அவர் பின்னால் யாருமே வரக்கூடாது என்று ஷூட்டிங் ஸ்பாட்டிலும், கேமராமேனிடமும் கறாராகச் சொல்லிவைத்திருந்தேன். சிவாஜிசார் நடிக்க கேமரா சுழன்றது, திடீரென படம்பிடிப்பதை நிறுத்திவிட்டார் கேமராமேன். எனக்கு டென்ஷனாகிவிட்டது. ஏன் என்று சத்தம் போட்டேன்.  ‘சிவாஜிசார் பின்னாடி  ஆட்கள் வந்தாங்க,  அதனால நிறுத்திட்டேன்’  என்று பதில் சொன்னார். எனக்குக் கோபம் வந்து  ஆர்ட்டிஸ்டுகளைத் தாறுமாறாகத்  திட்டினேன். நான் செய்வதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார், சிவாஜிசார். ஷூட்டிங் இடைவேளையில் ரஜினி சாரிடம் ‘டைரக்டரா இவன், பொறுக்கி டைரக்டர்...’ என்று  கோபமாய்க் கூறியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.

அதே ‘படையப்பா’ படத்தின் ஷூட்டிங்,  இன்னொரு நாள் வாகினி ஸ்டுடியோவில் நடந்தது. பத்திரத்தில் சிவாஜி சார், ரஜினிசார், லட்சுமி மேடம், சித்தாரா கையெழுத்து போடும் காட்சி. படமாக்கும்போது சிவாஜி சாரிடம் சென்று, ‘ரஜினி சார், லட்சுமி மேடம் கையெழுத்து போடும்போது நீங்கள் முகத்தை சாதாரணமாக வைத்திருக்க வேண்டும், ஆனால், உங்கள் மகள் சித்தாரா கையெழுத்து போடும்போது அவர் தலையைக் கோதிவிட்டு, கண்கலங்க அவரைப் பார்க்க வேண்டும்’ என்றேன்.

சிவாஜி சார் என்ன நினைத்தாரோ ‘எங்கே நீ நடிச்சிக் காட்டு...’ என்று என்னிடம் சொன்னார். உடனே  நானும் நடித்துக் காட்ட ஆரம்பித்தேன். சித்தாரா தலையைக் கோதும்போது கிளிசரின் போடாமலே அழுதேன்.  என்னைப்பார்த்து வாஞ்சையோடு அருகில் அழைத்தார் சிவாஜிசார். ‘சித்தாரா கையெழுத்து போடும்போது மட்டும் நான் ஏன் கண்கலங்கி அழவேண்டும்?’’ என்று என்னிடம் கேள்வி கேட்டார்.
 
``ரஜினிசார் கையெழுத்து போடும்போது  ‘ஆம்பளை எங்கே போனாலும் பொழைச்சுக்குவான்’ என்று நினைப்பீர்கள், லட்சுமிமேடம் கையெழுத்து போடும்போது ‘வாழ்ந்து முடித்தவர்’ என்று தோன்றும், சித்தாரா கையெழுத்து போடும்போது இன்னும் வாழவே ஆரம்பிக்கலை இனிமேல்  உன்னை எப்படிக் கல்யாணம் செய்து கொடுப்பேன் என்கிற ஆதங்கம் எழும்’’ என்று  அழுகைக்கான காரணத்தை விளக்கிச் சொன்னேன்.

என்னிடம்  ஒன்றுமே பேசாமல் மெளனமாகப்  போய்விட்டார். மறுநாள் ரஜினிசாரிடம் ``இவன் சிறந்த டைரக்டர் மட்டுமல்ல, அருமையான நடிகன்’’ என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். நடிகர் திலகத்தின் வாயாலேயே நல்ல நடிகன் என்கிற வார்த்தைகளைப் பெற்றது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகக் கருதுகிறேன். 

எம்.குணா / படங்கள்: பா.காளிமுத்து / ஓவியங்கள்: பிரேம் டாவின்சி