சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்!”

“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்!”

“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்!”

காதலும் குறும்பும் எதார்த்தமும் இழையோடும் படங்களைத் தந்த தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான ஸ்ரீதர் இறந்து, பத்தாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த மகத்தான கலைஞரின் நினைவுகளை மீட்டெடுக்க, அவர் மனைவி தேவசேனாவைச் சந்தித்தேன்.

“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்!”

“ஒரு படம் எடுத்துக்கொண்டி ருக்கும்போதே அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கிடுவார். ஒரு நாளைக்கு மூணு ஷிஃப்ட்டெல்லாம் ஷூட்டிங் பண்ணுவார்.

அதிக பொருட்செலவில் வெளிநாட்டில் ஷூட்டிங் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம், ‘சிவந்த மண்’ அப்போ அவருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு இருந்துச்சு. உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் சுவிட்சர்லாந்து கிளம்பினார். இன்டர்லேகன்ங்கிற இடத்திலுள்ள பனிமலையில் ஷூட்டிங். ஷூகூடப் போட முடியாத நிலையில், வெறும் காலுடன் வேலை செய்தார். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஷூட்டிங்ல, மேலே நகர்ந்துட்டிருந்த கிரேன்ல உட்கார்ந்து ஷூட் பண்ணிட்டிருக்கார். மின்சார வயர் அவர் மேல் உரசப்போகுது. அதைப் பார்த்துப் பலரும் அதிர்ச்சியில் கத்த, சுதாரிச்சு நகர்ந்துட்டார். அவருக்கு எப்போதும் சினிமா சிந்தனைதான்.” - கணவர் பற்றிய நினைவுகளோடு பேசத் தொடங்கினார் தேவசேனா.

“மனைவியாக அவருடன் வாழ்ந்த காலகட்டங்களில் நிகழ்ந்த மறக்க முடியாத சில தருணங்கள் பற்றி...”


“சென்னை குயின் மேரீஸ் காலேஜ்ல பி.ஏ., இரண்டாம் வருடம் படிச்சுக்கிட்டிருந்தேன். அந்த 1963-ம் ஆண்டு சென்னையில் எங்க திருமணம் திருவிழா மாதிரி நடந்துச்சு. அதில், இந்தியாவின் முன்னணி அரசியல், சினிமா மற்றும் பலதுறைப் பிரபலங்கள் கலந்துகிட்டாங்க. கல்யாணமான பிறகு மூணு மாதம்தான் காலேஜ் போனேன். இந்த இடைப்பட்ட காலத்துல ஒருமுறை என்னை அழைச்சுக்கிட்டுப்போக கணவர் காலேஜ் வந்தார். அப்போ எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொள்ள, அங்கிருந்து கிளம்புறதே பெரிய சிரமமாகிடுச்சு. அவர் பெரிய கார் பிரியர். ஒரே நேரத்தில் 14 கார்களைப் பயன்படுத்தினார். கல்யாணமான புதிதில், கணவரின் ஒருசில பட ஷூட்டிங்கை மட்டும் பார்க்கப் போனேன். மகள் ஸ்ரீப்ரியாவும், மகன் சஞ்சய்யும் பிறந்த பிறகு, குடும்பப் பொறுப்புகள்ல மட்டும்தான் கவனம் செலுத்தினேன். மனைவியாக 45 ஆண்டுகள் அவர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தேன்.

“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்!”

ஒருமுறை கண்ணில் அடிபட்டு, ஓய்வில் இருந்தார். ஒருநாள் காலையில வாசல் கதவைத் திறந்தேன். வெளியே நடிகர் சிவாஜி கணேசன் உட்கார்ந்திட்டிருந்தார். பதறிப்போய், ‘எப்போ வந்தீங்க, காலிங் பெல் அடிக்கலாமே’னு கேட்டேன். ‘கொஞ்ச நேரம்தான் ஆச்சு. சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு உட்கார்ந்து ட்டேன்’னு சொன்னார். கணவரைப் பற்றி விசாரிக்க, எம்.ஜி.ஆர் அடிக்கடி போன் பண்ணுவார்; அப்போ தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களின் ஷூட்டிங் பெரும்பாலும் சென்னையிலதான் நடக்கும். சாப்பிட வீட்டுக்கு வரும்போது, தன் பட ஆர்ட்டிஸ்டுகளையும் அழைச்சுக்கிட்டு வருவார். அதனால எங்க வீட்டு கிச்சன் எப்போதும் பரபரப்புடன் இருக்கும். அவரின் ஒவ்வொரு படம் முடிஞ்சதும் பெரிய பார்ட்டியும் நடக்கும். அவற்றில் இந்தியத் திரையுலக உச்ச நட்சத்திரங்கள் எல்லோரும் கலந்துகொண்டி ருக்காங்க. அப்படிக் கலகலப்பா இருந்த எங்க வீடு, 2008-ம் ஆண்டில் அவர் மறைவுக்குப் பிறகு களையிழந்துடுச்சு.”

“பக்கவாத பாதிப்பினால் வீட்டிலேயே முடங்கியிருந்தபோது, கணவரின் சினிமா உலகம் எப்படி இருந்தது?”


“என் வாழ்வில் மறக்க முடியாத காலகட்டம் அது. சினிமாவில் நிறைய உழைப்பைக் கொடுத்த என் கணவர், 1990-களின் இறுதியில் சினிமாப் பணிகளைக் குறைச்சுக்கிட்டார். ஒரு கெமிக்கல் ஃபேக்டரி நடத்தி, 600 பேருக்கு வேலைகொடுத்தார். ஒரு லெதர் ஃபேக்டரியையும் நடத்தினார். அந்த பிஸியான தருணத்துலயும்  நடிகர் விக்ரமை ஹீரோவா வெச்சு ‘தந்துவிட்டேன் என்னை’னு கடைசியா ஒரு படம் இயக்கினார். அப்போதே `எனக்குப் படம் திருப்தியா வரலை’னு சொன்னார். கணவரின் இயக்கத்தில் நான் பார்க்காத ஒரே படமும் அதுதான்.

“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்!”

1994-ம் ஆண்டு அவருக்குப் பக்கவாதப் பிரச்னையின் தாக்கம் அதிகமாகி, படுத்த படுக்கையாகிட்டார்.  வருஷத்துக்கு ஒருமுறை எக்ஸ்ரே எடுக்கிறது உள்ளிட்ட முக்கியத் தேவை தவிர, ஹாஸ்பிடல் கூட்டிட்டுப்போகாம வீட்டுலயே வைத்து அவரை 14 வருஷங்கள் குழந்தையைப் போல பார்த்துக்கிட்டேன். வீல் சேரில் உட்கார வெச்சு, சில வெளி நிகழ்ச்சி களுக்கும் அவரைக் கூட்டிட்டுப்போவேன்.  அப்போ அவரைப் பார்க்க நிறைய பிரபலங்கள் வீட்டுக்கு வருவாங்க. அவர் நிறைய பேச முற்படுவார். பக்கத்துல இருந்து பிறருக்கு விளக்கிச் சொல்வேன். அர்விந்த் சுவாமி, சரத்குமாரை வெச்சுப் படம் எடுக்கணும்னு, வரவழைக்கச் சொன்னார். அவங்க வீட்டுக்கு வந்ததுமே, ‘அவரால் இந்தச் சூழலில் படமெடுக்க இயலாது. இருந்தாலும், அவர் சந்தோஷத்துக்கு நடிக்கிறேன்னு சொல்லுங்க’னு சொன்னேன். இருவரும் அப்படியே சொன்னாங்க. எம்.எஸ்.விஸ்வநாதன், சி.வி.ராஜேந்திரன், கோபு ஆகியோர் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து, அவரை உற்சாகப்படுத்துவாங்க. டி.வி-யில் சில படக்காட்சிகளைப் பார்ப்பார்; பத்திரிகைகள் வாசிப்பார். சினிமா உலகத்தை அப்டேட்டடா வெச்சிருப்பார். திடீர்னு, ‘நான் ஒரு கதை யோசிச்சிருக்கேன். அஜித் அல்லது தனுஷ் நடிச்சால் நல்லா இருக்கும்’னு சொல்லுவார்.”

“தன்னை அறிமுகப்படுத்திய குருவாக உங்கள் கணவர்மீது ஜெயலலிதா கொண்டிருந்த அன்பு பற்றி...”

“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்!”



“பொதுவாக ஒரே நடிகர், நடிகைகளைத் தன் படங்களில் அடிக்கடி நடிக்க வைப்பதை என் கணவர் விரும்ப மாட்டார். புது முகங்களை அதிகளவில் அறிமுகப்படுத்தினார். அப்படித்தான், ‘வெண்ணிற ஆடை’யில் ஜெயலலிதாவையும் அறிமுகப்படுத்தினார். ஜெயலலிதா முதன் முறையா முதல்வராகப் பொறுப்பேற்ற தருணத்துல ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். ஜெயலலிதா நன்றி சொல்லி பதில் கடிதம் அனுப்பினாங்க. அதை இன்னும் வெச்சிருக்கேன். ஆனால், கணவர் பக்கவாதம் வந்து படுக்கையில் இருந்தபோது, ஜெயலலிதா மட்டும் வரலை. அதனால் என் கணவருக்கு இருந்த வருத்தத்தை, ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதை ஜெயலலிதா படிச்சாங்களானு தெரியலை. ஆனால், ஜெயலலிதாவுக்கு என் கணவர்மீது கோபம் இருந்திருக்கு. அதன் வெளிப்பாடாக, இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் என் கணவரின் பெயரைக்கூட ஜெயலலிதா சொல்லலை; அவருக்கு எந்த மரியாதையையும் செய்யலை. இந்திய சினிமா உலகில் அவரைப் போன்ற ஒரு மகத்தான கலைஞரைப் பார்க்க முடியுமா? அவரால் எத்தனையோ கலைஞர்கள் பிரபலமடைந்தாங்க. ஆனால், அவருக்கு உரிய மரியாதை செய்யாம, இந்தத் தலைமுறைக்கு அவரின் புகழைக் கொண்டுசெல்லாம இருந்தது நியாயமா? ஜெயலலிதா அப்படிப் பண்ணியிருக்கக்கூடாது. அதனால், எனக்குக் கோபம் உண்டு.”

“கணவர் மறைவுக்குப் பிறகு சினிமா உலகம் உங்கள் குடும்பத்தைக் கண்டுகொண்ட விதம் பற்றி...”

“ ‘நடிகர் திலகம் ஃபிலிம் அப்ரிசியேஷன் அசோசியேஷன்’ சார்பில் மாதம்தோறும் சிவாஜியின் திரைப்படங்களைத் திரையிடுறாங்க. அப்போது, ‘நீங்கள் வந்தால், ஸ்ரீதர் சாரே வந்ததுபோல இருக்கும்’னு எங்களை அழைக்கிறாங்க; மரியாதை செய்றாங்க. ‘ரசிகாஸ்’ ரசிகர் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு என் கணவரின் நினைவைப் போற்றி ஒரு விழா எடுத்தாங்க. ‘நினைவெல்லாம் ஸ்ரீதர்’னு ஒரு விழா எடுத்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் என் கணவரைப் பெருமைப்படுத்தினார். பொண்ணு அமெரிக்காவில் வசிக்கிறாள். என் பையன் குடும்பத்தினருடன் நான் பொருளாதார ரீதியாக ரொம்ப நல்லா இருக்கேன். திறமையான கலைஞரான என் கணவரை சினிமாத் துறையினர் எப்போதும் மறக்காமல் இருந்தால் மகிழ்ச்சியடைவோம்.”

கு.ஆனந்தராஜ் / படங்கள்: பா.காளிமுத்து