சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி!”

“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி!”

“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி!”

ப்பா, அம்மா, மனைவி, குட்டி மகனுடன்  மகிழ்ச்சியுடன் வரவேற்றார், ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த ‘ஜானி’ ஹரிகிருஷ்ணன்.

“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி!”

குயிலின் கீச் கீச் குரல், சாயங்காலத்தில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த பெரியவர்கள், சந்தோஷக் கூச்சலுடன் விளையாடும் சிறுவர்கள் எனச் சுற்றி சத்தம் கேட்டுக்கொண்டிருந்த பூங்காவில், ஹரியும் அவரது குடும்ப நபர்களும் நம்மிடம் பேசத் தயாரானார்கள். “அப்பா அன்புதுரை, அம்மா விஜய சங்கரி, மனைவி உஷா, மகன் சேயோன்” என ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார், ஹரி. தொடர்ந்து ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள்.

முதலில் அம்மா, “இவன் நடிக்கணும்னு சொன்னதுமே, நான் சப்போர்ட்தான் பண்ணேன். ஏன்னா, இது அவனுடைய இஷ்டம். ஒருநாள் வீட்டு வாசல்ல ஜானி கெட்டப்ல நின்னு பார்த்துக்கிட்டே இருந்தான். மொதல்ல யாரோனு நினைச்சுப் பயந்து, ‘ஏய் அங்கிட்டுப் போ’னு துரத்திவிட்டேன். ‘நான்தான்மா உங்க பையன் ஹரி’னு சொல்லி அவன்கூட நடிக்கிறவங்களையெல்லாம் அறிமுகப்படுத்தி வெச்சான். இப்போ சில படங்கள் நடிச்சு, நல்ல நிலையில இருக்கான்” என்று சிரித்தார்.

தொடர்ந்து பேசிய அப்பா, “இவன் நடிக்கப்போறதை என்கிட்ட சொல்லலை. திடீர்னு ஒருநாள் ஜானி கெட்டப்ல வந்தான். எனக்கு அடையாளமே தெரியலை. ‘மெட்ராஸ்’ படம் வெளிவந்த அப்புறம்தான், இவன் நடிக்கிறான்னு எனக்குத் தெரிஞ்சது. நான் ஆபீஸ் போறதால சீக்கிரமே தூங்கிடுவேன். அவன் நைட் லேட்டாதான் வருவான். எப்போவாவது என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல விடச் சொல்வான்; விடுவேன். அவ்வளவுதான்.’’ என்கிறார்.

பிறகு பேசிய ஹரி கிருஷ்ணனின் மனைவி, “வீதி நாடகம், நடிகர் இதெல்லாம் தாண்டி ஒரு மனிதரா எனக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ஆனா, படத்துல பார்க்கிறதுக்கும் நேர்ல பார்க்கிறதுக்கும் ரொம்ப வித்தியாசம்.” என்றவரிடம், “உங்க ரெண்டுபேர்ல யார் முதல்ல புரப்போஸ் பண்ணது?” என்றோம். 

“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி!”

“ஆக்சுவலா நாங்க ஒருத்தருக்கொருத்தர் புரப்போஸ் பண்ணிக்கிட்டதே இல்லை. அப்படியே போயிடுச்சு. நாங்க லவ் பண்ணது ஐந்து வருடம் கழிச்சுதான் வீட்டுக்குத் தெரியும். அப்புறம் வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...” என வெட்கம் கலந்து ஹரியின் மனைவி பேசத் தொடங்கியதும், அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஹரி கிருஷ்ணன், இடைமறிக்கிறார். “ப்ரோ, நீங்க ஏன் பழைய கதையையெல்லாம் கிளறி விடுறீங்க!” என்றபடி, ‘அது ஒரு காலம்’ என்ற ரேஞ்சில் மேலே பார்த்தார்.

“எங்க அப்பா அம்மாகூட காதல் கல்யாணம்தான். அதைப் பற்றிக் கேளுங்க ப்ரோ. இவங்களும் சினிமா மூலமாதான் லவ் பண்ணாங்க. குறிப்பா, எங்க அம்மா சூப்பர் ஸ்டாரோட தீவிர ரசிகை. அவர் வீட்டுக்குப் பாயசம்லாம் எடுத்துட்டுப் போய் கொடுத்துட்டு வந்திருக்காங்க...” என்று அம்மா, அப்பாவை ‘மாட்டிவிட்டேன்ல’ தொனியில் பார்க்கிறார், ஹரி.

“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி!”



நாஸ்டால்ஜியா நினைவுகள் நிறைந்த முகத்தோடு பேசத் தொடங்கியவர், “ரஜினிகாந்த், அப்போ சினிமாவுக்கு வந்த சமயம். நானும் என் தோழியும் அவர் வீட்டுக்குப் பாயசம் செஞ்சு எடுத்துட்டு, பாயசத்தையும் கொடுத்துட்டு அவரையும் பார்த்துட்டுதான் வந்தோம். அந்தளவுக்கு ரஜினியை எனக்குப் பிடிக்கும். ஆனா, அதுக்கப்பறம் நான் அவரைப் பார்க்கற வாய்ப்பே அமையலை. அப்புறம்... ஏங்க, நீங்க கொஞ்சம் சொல்லுங்க” என்று தனது கணவரை வெட்கத்தோடு பார்த்தார். “என் மனைவி எனக்கு சொந்தக்காரப் பொண்ணுதான். இவங்களை நான் பார்த்ததே, ஒரு ரஜினி படத்துலதான். பார்த்ததும் பிடிச்சிடுச்சு. அப்போ போன் எல்லாம் கிடையாது இல்லையா... நேரடியா அவங்ககிட்ட பிடிச்சிருக்குனு சொல்லிட்டேன், வீட்டுலேயும் பேசிட்டேன். அப்புறமென்ன, கல்யாணம்தான்!” என தனது காதல் டு கல்யாணக் கதையை இரண்டே வரிகளில் சொல்லி முடிக்க, “லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு, ரஜினி சார் மாதிரியே சட்டை, பேன்ட், பெல்ட் எல்லாம் போட்டுக்கிட்டு அம்மாவை இம்ப்ரஸ் பண்ணதையெல்லாம் சொல்லவேயில்ல?” என அப்பாவைக் கலாய்க்கிறார், ஹரி.

“பால்ய காலத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போனீங்க. இப்போ இங்கே வருவோம். வீட்டுல நீங்க எப்படி, மாமியார் மருமகள் சண்டையெல்லாம் இந்த வீட்டுல நடக்குமா, யாரு சமைப்பா?” என ஹரியிடம் கேட்டேன். “இப்போவரை எந்த சண்டையும் வரலை. நீங்க எதுவும் கொளுத்திப் போட்டுப் போயிடாதீங்க பிரதர்... கம்முனு இருங்க!” என கோரிக்கை வைக்க, “நாங்க சண்டையெல்லாம் போடமாட்டோம். ரெண்டுபேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்!’’ என பெருமையோடு மருமகளின் தோளில் கை போட்டுக்கொள்கிறார், ஹரியின் அம்மா. கூடவே, “இவங்க எனக்கு அம்மா மாதிரி” என மாமியாரின் செல்ல மருமகள் மோடுக்கு மாறுகிறார், ஹரியின் மனைவி. நடுவில் புகுந்த அப்பா, “அதை ஏன் கேட்கிறீங்க? அடிக்கடி வீட்டுல இருந்து ரெண்டுபேரும் காணாம போயிடுவாங்க. என்ன ஏதுனு விசாரிச்சா, ஷாப்பிங்ல பிஸியா இருப்பாங்க.” என்கிறார், பரிதாபமாக! 

“ஹரி என் முதல் பையன்னா, பா.ரஞ்சித் எனக்கு ரெண்டாவது பையன். நான் நன்றி சொல்லணும்னா, முதல்ல ரஞ்சித்துக்குதான் சொல்வேன். ஒருநாள் ஹரி என்னை ‘மெட்ராஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிப் போயிருந்தான். அங்கே ரஞ்சித் என்னைக் கூப்பிட்டு பக்கத்துல உட்கார வெச்சு, ‘இதுதான் சினிமா; இப்படித்தான் சினிமா எடுப்போம்; பாருங்க’னு சொல்லி, வார்த்தைக்கு வார்த்தை என்னை அப்பா அப்பானு சொல்லிக் கூப்பிட்டார். எனக்கு ரொம்பப் பிடிச்சது!” என்று நெகிழ்ந்து கூறினார்.

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் நீடிக்கட்டும் என்று விடைபெற்று வந்தேன்.

தார்மிக் லீ / படங்கள்: ஜெ.வேங்கடராஜ்