சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வடசென்னை - சினிமா விமர்சனம்

வடசென்னை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வடசென்னை - சினிமா விமர்சனம்

வடசென்னை - சினிமா விமர்சனம்

‘ஒருத்தன் செத்தா முடியிற சண்டையா இது?’ - படத்தில் வரும் வசனம். ரத்தமும் சதையுமாகத் தொடரும் இந்தக் கேள்வியின் நீட்சியே ‘வடசென்னை’யின் நாற்குழி சதுரங்க ஆட்டம். 

வடசென்னை - சினிமா விமர்சனம்

பெரும் படையோடு வடசென்னையில் கடத்தல் களமாடுவதோடு, மக்கள் பிரச்னைக்கும் குரல் கொடுக்கிறான் ராஜன். துரோகத்திற்கு ராஜன் பலியானபிறகு, ராஜன் ஆள்களே இரு பிரிவாக நின்று சண்டை செய்கிறார்கள். துரோகமும் ரத்தக்கவுச்சியும் அடிக்கும் இந்த வன்முறை வரலாற்றில் ‘அன்பு’ என்ற இளைஞன் அடுத்த ராஜன் ஆகிற கதையே ‘வடசென்னை’யின் முதலாம் அத்தியாயம்.

தமிழ் சினிமாவுக்குப் பழக்கப்பட்ட பழிக்குப் பழி கதைதான் என்றாலும், வன்முறைக்குப் பின்னால் இருக்கும் அரசியலை ரத்த சரித்திரமாக, அத்தியாயம் அத்தியாயமாகப் பேசிக் கவர்ந்திருக்கிறார், வெற்றி மாறன். கேட்டு வாங்கிய ‘ஏ’ சர்ட்டிபிகேட் என்பதால், படம் நெடுக ரத்த வாடையும் கெட்ட வார்த்தைகளும்.  

வடசென்னை - சினிமா விமர்சனம்

அன்புவாக, தனுஷ். சுண்டாட்ட வீரன், காமம் படர்ந்த காதலன், தந்திரம் நிறைந்த விசுவாசி, சண்டைக்காரன், மக்களுக்காகக் குரல் கொடுக்கும் போராளி என வெவ்வேறு உடல்மொழி, வெவ்வேறு தோற்றம் என ஒவ்வொரு காட்சியிலும் பிரமிக்கவைக்கிறார். 

வடசென்னை - சினிமா விமர்சனம்

ஹீரோவுக்கு இணையாகக் களமாடுகிறார், ‘ராஜன்’ அமீர். காவல்துறை அதிகாரி வின்சென்ட் அசோகனை அமீர் அறையும் காட்சியில் திரையரங்கில் தீப்பிடிக்கிறது. மீனவர் சங்கக் கட்டடத்தில் ராதாரவிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் காட்சியில், உயர்ந்து நிற்கிறார்.

வடசென்னை - சினிமா விமர்சனம்அன்பு, ராஜனைத் தவிர படத்தைத் தாங்கிப்பிடிக்கும் வலுவான பாத்திரங்களாக, குணா (சமுத்திரக்கனி), செந்தில் (கிஷோர்), தம்பி (டேனியல் பாலாஜி), வேலு (பவன்). ஒவ்வொரு பாத்திரத்துக்கும் இயக்குநர் சிரத்தையெடுத்து உருவம் கொடுக்க, நடிப்பால் நால்வரும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ஹோட்டல் காட்சி ஒன்றில் சிங்கிள் ஷாட்டில் இவர்கள் போட்டி போட்டு நடித்திருப்பது, அந்த மெனக்கெடலுக்கான உதாரணம். மனித மனங்களின் அத்தனை குரூரங்களையும் கண்முன் நிறுத்துகிறார்கள் இவர்கள். ‘ஜானி’ ஹரி, ராதாரவி, தீனா, சரண் சக்தி, சுப்ரமணிய சிவா... எனப் படத்தில் இடம்பெறும் அனைவரும் கச்சிதமான நடிப்பால் சிறப்பு செய்திருக்கிறார்கள். அன்பின் காதலியாக ஐஸ்வர்யா ராஜேஷ் கெத்து காட்டினால், ராஜனின் ராணியாக பிரமிப்பில் ஆழ்த்துகிறார், ஆன்ட்ரியா.
 
நீளமான கதையைக் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்கள் ஜி.பி.வெங்கடேஷ் மற்றும் ஆர்.ராமர். 15 ஆண்டுக்கால வித்தியாசத்தைக் கலை இயக்கம் மூலம் கச்சிதமாகச் செதுக்கியிருக்கிறார், ஜாக்கி. கேங்ஸ்டர் சினிமாவுக்கேற்ற நிறைவான சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார், திலீப் சுப்பராயன்.  கடலுக்கும் கரைக்கும் பாலம் அமைத்திருக்கிறது வேல்ராஜின் கேமரா. சும்மாவே ஆடுகிற சந்தோஷ் நாராயணன், ‘வடசென்னை’யில் சலங்கை கட்டி ஆட்டம் போட்டிருக்கிறார். துரோகத்தையும், வன்முறையையும் அவரது பின்னணி இசை துல்லியமாகக் கடத்துகிறது. 

வடசென்னை - சினிமா விமர்சனம்‘நாங்க பேசுறதே உனக்குப் புரியமாட்டேங்குது; உனக்கெப்படி எங்க வாழ்க்கை புரியும்?’, ‘நம்மளைக் காப்பாத்திக்கிறதுக்குப் பேரு ரெளடியிசம்னா, ரெளடியிசம் பண்ணுவோம்’ போன்ற பல வசனங்கள் ஷார்ப்.

படத்துக்குப் பெரிய அளவில் உதவவில்லை என்றாலும் ஜெயிலில் நடக்கும் கடத்தல் குறித்த விவரிப்பு, எம்.ஜி.ஆர் மறைவையும், ராஜீவ் காந்தி மறைவையும் கதையோடு தொடர்புபடுத்திய விதம், கடற்கரை மக்களின் நில அரசியலைப் பேசியிருப்பது, முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரையே பாத்திரமாகச் சித்திரித்த துணிச்சல், மனித மனதின் நுட்பமான உணர்வுகளைச் சித்திரிக்கும் வகையிலான காட்சிகள், இருபது நிமிடங்களுக் கொருமுறை கதைப்போக்கை மாற்றும் திரைக்கதை எனப் படத்தில் பாராட்டவேண்டிய அம்சங்கள் பல. அதேசமயம், செந்திலை அன்பு குத்துவதை செந்தில் வகையறாவால் கண்டுபிடிக்க முடியாமல் போவது, சந்திராவின் திட்டங்களுக்கு இரையாகும் அளவுக்கு குணா பலவீனமாக இருப்பதான சித்திரிப்புகள், மக்களுக்காகப் போராடுபவர்கள் கடத்தல்காரர்களாகவும் ரௌடிகளாகவும்தான் இருக்கவேண்டுமா என்ற கேள்வி என்று பல குறைகளைச் சுட்டிக்காட்டலாம்.

‘இது வடசென்னை குறித்த முழுமையான பதிவு அல்ல’ என்று தொடக்கத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்தாலும் படம் முழுக்கப் பேசப்படும் கெட்டவார்த்தைகள், சூறையாடுவது, ரௌடித்தனம் போன்ற சமூகவிரோதச் செயற்பாடுகள் ஆகியவை வடசென்னை குறித்த எதிர்மறை பிம்பத்துக்கே வலுச்சேர்க்கும். மக்கள் நிலங்களைக் காலிசெய்ய மறுப்பது கடத்தல் செய்யவே என்பதான அர்த்தமும் வந்துவிடுகிறது.

இவற்றைக் கழித்துப்பார்த்தால் வடசென்னை, ஒரு ராவான, ரசனையான அரசியல் கேங்ஸ்டர் சினிமா.

- விகடன் விமர்சனக் குழு