தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

மனம்விட்டுப் பேசுங்க! - நடிகை ரேவதி

மனம்விட்டுப் பேசுங்க! - நடிகை ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
News
மனம்விட்டுப் பேசுங்க! - நடிகை ரேவதி

அவள் அரங்கம்

ளமைக்காலம், திரைப்பட வாய்ப்பு, தன் உலகமான மகள் மஹி என... சென்ற இதழின் தொடர்ச்சியாக வாசகிகளுடன் இந்த இதழிலும் மனம்விட்டுப் பேசுகிறார், நடிகை ரேவதி.

திருமண வாழ்க்கை குறித்து உங்கள் கருத்து என்ன? அதில் நீங்கள் உணர்ந்தவை?

- சுகன்யா ரகுநாதன், தேனி.

மனம்விட்டுப் பேசுங்க! - நடிகை ரேவதி

(சில நிமிட ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு மெல்லிய புன்னகையுடன் பேசுகிறார்). மிக அழகான பந்தம். அதனால் கிடைக்கும் ஓர் அங்கீகாரம், மகிழ்ச்சி, சிநேகம் ரொம்பவே சிறப்பானது. அதை நானும் உணர்ந்திருக்கேன். நானும் சுரேஷ் மேனனும் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டோம். ரொம்ப அன்பா, இருவருமே விட்டுக்கொடுத்து வாழ்ந்தோம். சினிமாவிலும் சேர்ந்து வொர்க் பண்ணினோம். என் நடிப்புக்கு ஊக்கம் கொடுத்தார். இப்படி அழகா நகர்ந்து சென்ற எங்க திருமண பந்தத்தில் கருத்து வேறுபாடுகள் வந்தன. இருவரும் விட்டுக்கொடுத்துப் போவோம்; ஈகோ பார்க்காம சமாதானமும் செய்துக்குவோம். ஆனா, ஒருகட்டத்தில் எங்களுக்குள் பிரிவு அதிகமாச்சு. ஒரே வீட்டில் இருவரும் பேசிக்காமலே  அவங்கவங்க வேலையில கவனம் செலுத்திட்டு இருந்தோம். அந்த உணர்வு எப்படி இருக்கும்? ரொம்ப மனவேதனையான காலகட்டம். கலங்கினேன்; யோசிச்சேன்... நாங்க இருவரும் மெச்சூரிட்டியான நபர்கள். நிரந்தரமான பிரிவுதான் ஒரே தீர்வுனு இருவரும் ஒருமித்த கருத் தோடு முடிவு செய்தோம். விவாகரத்து பெற்றோம். ஆனா, இப்போவரை நல்ல நண்பர்களாதான் இருக்கோம். இப்போ நாங்க ரெண்டு பேரும் எங்களுக்குப் பிடிச்ச விஷயங்களில் கவனம் செலுத்துறோம். என்றாலும், கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து முடிவைத் தேர்வு செய்கிற தம்பதிகளின் எண்ணிக்கை இன்று அதிகரிச்சுக்கிட்டே இருப்பதைப் பார்க்கிறது எனக்குக் கவலையாதான் இருக்கு. என் வாழ்க்கை அனுபவத்தில் சொல்றேன். கருத்து வேறுபாடு உள்ள தம்பதிகள் நல்ல நபர்களின் ஆலோசனையைப் பெறுங்க. அதிகபட்ச பொறுமையோடு, இருவரும் மனம்விட்டுப் பேசுங்க; ஒன்றுசேர்ந்து வாழ முயற்சிசெய்யுங்க. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நலனை நினைச்சுப்பாருங்க. பிரிவு மட்டுமே தீர்வுங்கிற கடைசிக் கட்டத்தில் மட்டுமே, விவாக ரத்து முடிவுக்கு வாங்க.

‘புதுமைப் பெண்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘மெளன ராகம்’, ‘கிழக்கு வாசல்’ எனக் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் பெரும்பாலும் நடித்தீர்கள். அதனால், ‘ரேவதி நடித்த கேரக்டர்ஸ் எனக்குக் கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்’ எனப் பல முன்னணி நடிகைகளே சொல்லியதுண்டு. இதுகுறித்து..?

- கோகிலா பழனி, புதுக்கோட்டை


எளிமையான கேள்விதான். ஆனால், என் மனசுக்குள் நிறைய உணர்வுபூர்வமான எண்ண ஓட்டங்கள் உண்டாகுது. என் சினிமா பயணத்தில், வாய்ப்புக்காக யாரையும் எப்போதும் அணுகினதில்லை; எதிர்பார்த்ததுமில்லை. ‘அப்படி நடிக்கணும்’, ‘இப்படிப் பெயர் வாங்கணும்’னு எந்த இலக்கையும் வெச்சுக்கிட்டதில்லை. முதல் படத்துக்குப் பிறகு கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள, சவாலான கேரக்டர்கள் அதிகம் கிடைத்தன. எனக்கு மட்டும் எப்படி இது அமையுதுனு, அதை நினைச்சு சந்தோஷப்படக்கூட நேரமில்லாம ஓடிட்டிருந்த காலம் அது. கால்ஷீட் கொடுத்த தேதிக்குச் சரியா ஷூட்டிங் முடிச்சுக்கொடுத்துட்டு, ஃப்ரீ டைம் கிடைச்சா சொந்த ஊருக்குப் போயிடுவேன். சினிமா உலகத்தை மறந்து, மகிழ்ச்சி யாயிருப்பேன். அப்போ நிறைய மக்களைச் சந்திப்பேன்; புத்தகங்கள் படிப்பேன். அதனால ஒரு கதையின் கேரக்டரை உள்வாங்கி எளிதா நடிக்க முடிஞ்சுது.

மனம்விட்டுப் பேசுங்க! - நடிகை ரேவதி



‘புதுமைப் பெண்’ படம் இப்போ ரிலீஸாகியிருந்தால் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. என் 17 வயசுல, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விதவையா நடிச்சப்போ, அதைச் சவாலான கேரக்டராதான் பார்த்தேன். அந்தக் கேரக்டர்ல நடிச்சா, என் இமேஜ் பாதிக்கப்படுமோ, பிறர் எப்படிப் பேசுவாங்களோனு கொஞ்சம்கூட நினைக்கலை. இப்படித்தான் என் எல்லா படங்களிலும் நடிச்சேன். ஒரு கதை என் மனசுக்குப் பிடிச்சிருந்தால் மட்டும்தான் நடிப்பேன். பிடிக்காத கதையை யார் இயக்கினாலும் சரி, அதில் யார் ஹீரோவா நடிச்சாலும் சரி, எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் சரி... அந்த வாய்ப்பை ஏற்க மாட்டேன். அதுவே பிடிச்ச கதையில் சின்ன கேரக்டராக இருந்தாலும் சரி, உடன் யார் நடிச்சாலும் சரி... நிச்சயம் நடிப்பேன். செய்கிற வேலையை மனநிறைவோடு செய்யணும்; எக்காரணம் கொண்டும் ஆபாசமா நடிக்கக் கூடாதுன்னு முதல் படத்தில் நடிக்கும்போதே எடுத்த முடிவை உறுதியா கடைப்பிடிக்கிறேன்.

சினிமாவை அளவுக்கதிகமா நேசிக்கிறேன். அதை வெறும் பணம் சம்பாதிக்கும் துறையா மட்டும் பார்க்கலை. அப்படிப் பார்த்திருந்தால், என் கொள்கைகள்ல உறுதியா இல்லாமல் போயிருந்திருப்பேன். என்றாலும், எனக்கு ஒரு சோதனை காலம் வந்தது. என் வாழ்நாள்ல மிகப்பெரிய இக்கட்டான சூழல் ஒருமுறை உண்டாச்சு. அப்போ நான் எப்படியான பிரச்னையில் இருந்தேன்னு யாருக்கும் தெரியாது. வலி நிறைந்த தருணம் அது. அப்போ, வேறு வழியில்லாம, என் மனசுக்கு ஒப்புக்காம ரெண்டு படங்கள்ல நடிச்சேன். அதற்காக ரொம்பவே ஃபீல் பண்ணினேன். அந்தப் படங்களும் வெற்றி பெற்றன. ஆனா, அதுக்குப் பிறகு இப்போ வரை என் கொள்கையில உறுதியாயிருந்து, மனசுக்குப் பிடிக்காத படங்கள்ல நடிக்காம இருக்கேன்.

நீங்க கேட்ட மாதிரி, சக நடிகைகள் ‘ரேவதி நடிச்ச அந்த கேரக்டர்ல நடிக்க ஆசை’னு சொன்னதைப் பேட்டிகளில் பார்த்திருக்கேன். என் கால நடிகைகள் முதல் இப்போதைய முன்னணி நடிகைகள் வரை பலரும், நேர்லயும் என் கேரக்டர்களுக்காக என்னைப் பாராட்டியிருக்காங்க. அப்போ சின்னதா ஒரு மகிழ்ச்சி மேலெழும்... அவ்ளோதான்!

பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் எனத் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்ற இயக்குநர்கள் பலருடனும் பணியாற்றிய அனுபவம்?

- வி.புவனேஸ்வரி, ஸ்ரீரங்கம்

மனம்விட்டுப் பேசுங்க! - நடிகை ரேவதி

நீங்க குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடாத திறமையான இயக்குநர்கள் பலரின் படங்கள்லயும் ஹீரோயினா அடுத்தடுத்து நடிச்சேன். எல்லோருக்கும் கிடைச்சுடாத வாய்ப்பு அது. அவங்கெல்லாம், தங்கள் கேமரா எதிர்பார்ப்பை ஈடு செய்ய இவளால் முடியும்னு என் மேல வெச்ச நம்பிக்கைக்கு நன்றி. பாரதிராஜா அங்கிளின் மூன்று படங்களில் (‘மண்வாசனை’, ‘புதுமைப் பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’) ஹீரோயினா நடிச்சேன். அவர் படத்தில் நடிச்சது பள்ளிக்கூடத்தில் படிச்ச மாதிரிதான். நான் வொர்க் பண்ணின எல்லா இயக்குநர்களுமே எனக்கு ஆசான்கள்தான். அவங்க படங்கள்ல நடிச்சேன்னு சொல்றதைவிட, சினிமா சார்ந்த நிறைய விஷயங்களைப் புதுமையான கோணத்தில் கத்துக்கிட் டேன்னு சொல்றதுதான் சரி.
 
மணிரத்னம் சாரின் ‘மெளன ராகம்’ படத்தில் நடிக்கிறப்போ, அவர் சினிமாவுக்கு வந்து கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. அதனால ரொம்ப ஃப்ரெண்ட்லியா, பயமில்லாம அவர் படத்தில் நடிச்சேன். அப்புறம்... இயக்குநர் கே.விஸ்வநாத் சாரின் படத்தில் நடிக்கலையேனு சின்னக் குறை எனக்கிருக்கு. அதை அவர்கிட்டயே சொல்லியிருக்கேன்.

உங்கள் திரைப்பயணத்தில் மறக்க முடியாத தமிழ்ப் படங்கள்..?

- வள்ளி ராஜேந்திரன், தஞ்சாவூர்


நிறைய படங்களைச் சொல்லலாம். ‘மண்வாசனை’, ‘மெளன ராகம்’, ‘புதுமைப் பெண்’, ‘புன்னகை மன்னன்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘கிழக்கு வாசல்’, ‘அஞ்சலி’, ‘தேவர் மகன்’, ‘மறுபடியும்’, ‘மகளிர் மட்டும்’னு அது பெரிய லிஸ்ட். என் முந்தைய படங்களை இப்போ பார்க்குறப்போ, பல படங்கள்ல இன்னும் சிறப்பா நடிச்சிருக்கலாமேனு தோணும்.

சினிமாவுல புகழுடன் இருந்த காலத்தில், புத்திசாலித்தனமா யோசிச்சிருந்தால், இன்னும் ஐந்து வருஷங்கள் கழிச்சு கல்யாணம் பண்ணியிருப்பேன்; என் வாழ்க்கையில முதிர்ச்சியோடு நல்ல முடிவுகளை எடுத்திருப்பேன்; இன்னும் பொறுமையா யோசிச்சு நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிச்சிருப்பேன். இந்தக் காலத்து இளம் தலைமுறையினருக்கு இருக்கிற அட்வான்ஸ்டு மெச்சூரிட்டி என் இளம் வயசுல எனக்கில்லை. ஒருவேளை இருந்திருந்தால், இன்னும் பல வாய்ப்புகள், வெற்றிகள், சாதனைகள் வசமாகியிருக்கலாம்.

நீங்கள் இயக்குநராகவும் முத்திரை பதித்தீர்கள். அந்த முடிவெடுத்தது எப்போது? அதில் நிறைவு கிடைத்ததா?

- அம்சவேணி, தூத்துக்குடி


முன்பு சொன்னதுபோல, நான் ‘மண்வாசனை’யில் நடிக்கும்போதே, லெஜெண்ட் இயக்குநரான பாரதிராஜா அங்கிள்கிட்ட, பயப்படாம நிறைய சந்தேகங்கள் கேட்பேன். அது ஆக்கபூர்வமா இருந்ததால, அவர் கோபப்படாம தன் வேலைப்பளுவுக்கு இடையேயும் எனக்குப் பதில் சொல்லுவார். கேமராமேன் கண்ணன் சார் மற்றும் எடிட்டர் ராஜகோபால் சார்கிட்டயும் சந்தேகங்கள் கேட்டு, தொந்தரவு செய்வேன். அசிஸ்டென்ட் டைரக்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர், டான்ஸ் மாஸ்டர், ஸ்டன்ட் மாஸ்டர்னு அனுபவமுள்ள டெக்னீஷியன்ஸ் ஒருத்தரையும் விடமாட்டேன். அவங்க எல்லோரும், என் ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு பல டெக்னிக்கல் விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தாங்களே தவிர, என்மீது கோபப்படலை. சினிமாத்துறை எனக்குப் பிடிச்சுப்போனதுதான், என் இந்த ஆர்வத்துக்குக் காரணம். அதனால், ஒரு நடிகை என்பதையும் தாண்டி, மீடியாவில் ஒரு படைப்பாளியா என்னை வெளிப்படுத்த நினைச்சேன்.

மனம்விட்டுப் பேசுங்க! - நடிகை ரேவதி



1990-ம் ஆண்டுகளின் இறுதியில், சன் டி.வி-யில் நானும் சுரேஷ் மேனனும் ‘சின்னச் சின்ன ஆசை’னு ஒரு சீரியல் தயாரிச்சோம். வாரம் ஒரு கதை. ஒவ்வொரு வாரமும், பிரபல நடிகைகள் இயக்குநராகப் பணியாற்றுவதுதான் கான்செப்ட். அப்படி சுஹாசினி, கெளதமி, அர்ச்சனா, குஷ்பு, சுகன்யா, ரோகிணினு முன்னணி நடிகைகள் பலரும் எங்களுக்காக டைரக்‌ட் பண்ணினாங்க. ‘நீ டைரக்ட் பண்ணினா நல்லா இருக்கும். ட்ரை பண்ணு’னு ஒருமுறை சுரேஷ் மேனன் என்கிட்ட சொல்ல, அப்படித்தான் நானும் டைரக்டரானேன். பிறகு, ‘Mitr, My Friend (ஆங்கிலம்)’, ‘கேரளா கஃபே (மலையாளம்)’, ‘பிர் மிலேங்கே’ மற்றும் ‘மும்பை கட்டிங் (இந்தி)’னு நாலு படங்களை இயக்கினேன்.

இயக்குநர் பொறுப்பு ரொம்பச் சவாலானது. ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு முழுப் பொறுப்பு இயக்குநரைத்தான் சாரும். இந்தப் பணியில் சொல்லிக்கிற அளவுக்கு அதிகம் வொர்க் பண்ண முடியாததால, ஓர் இயக்குநரா எனக்கு நிறைவு கிடைக்கலை.

டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றியிருக்கிறீர்கள். முதல் டப்பிங் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? பிற நடிகைகளுக்கு டப்பிங் பேச முதலில் தயங்கினீர்களா?

- சு.பல்லவி, பாலக்கோடு


எங்க வீட்டுல மலையாளத்தில்தான் பேசுவோம். அதனால, என் ஆரம்பக்கால தமிழ்ப் படங்களில் மலையாள சாயலுடன்தான் டப்பிங் பேசுவேன். நிறைய பயிற்சிக்குப் பிறகு, சரியான உச்சரிப்போடு பேச ஆரம்பிச்சேன். எந்த மொழிப் படமா இருந்தாலும், அந்த மொழிக்காரங்க போலவே பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘பசும்பொன்’ படத்தில், ‘சரண்யா பொன்வண்ணனுக்கு டப்பிங் பேசு’னு பாரதிராஜா அங்கிள் என்கிட்ட கேட்டார். சட்டுனு, ‘ஓகே அங்கிள்’னு ஆர்வமா சொன்னேன். ‘நான் ஒரு நடிகை... இன்னொரு நடிகைக்குக் குரல் கொடுக்கமாட்டேன்’னு எல்லாம் எந்த ஈகோவும் எனக்கில்லை. எல்லாமே ஒருவிதத்தில் சிறந்த வாய்ப்புதான். ‘அதைச் செய்யலாமா?’னு யோசிச்சுக்கிட்டு இருந்தா, அதுக்குள் அந்த வாய்ப்பு இன்னொருத்தரை சென்றடையலாம். அதுவும் என் தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்குனு இயக்குநர் நினைச்சதனால்தானே என்னை அணுகியிருக்கார்? அந்த நம்பிக்கையைக் காப்பாத்த வேண்டியது என் கடமை. ‘பசும்பொன்’ படத்துக்குப் பிறகு, ‘ஆசை’ (சுபலட்சுமி), ‘மின்சாரக் கனவு’ (கஜோல்), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (தபு), ‘வேதம்’ (திவ்யா உன்னி) போன்ற தமிழ் மற்றும் ‘தேவராகம்’ (ஸ்ரீதேவி) உள்பட சில மலையாளப் படங்களுக்கு டப்பிங் பேசினேன். இன்னும் இந்த வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியுடன் செய்வேன்.

இன்றைய கலாசார சீரழிவுகளில் சினிமாவுக்கும் பெரும் பங்குண்டு என்பது பற்றி உங்கள் கருத்து?

இன்னும் பல கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை அடுத்த இதழில் தொடர்கிறார் ரேவதி!


கு.ஆனந்தராஜ் - படங்கள் : க.பாலாஜி