
பார்வைகள்
ஹீரோயிஸம் உச்சத்திலிருந்த 80-களிலேயே, கதையின் நாயகனாக - அப்பாவியான கதாபாத்திரங்களில் நடித்து, பெண்களின் மனதைக் கவர்ந்தவர், காலத்தால் அழியாத பெண் கதாபாத்திரங்களைப் படைத்த திரைக்கதை மன்னன் பாக்யராஜிடம் பேசினோம்...

இன்றைய சூழலில், தன் வாழ்க்கைத் துணையிடம் பெண்ணின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கின்றன... எப்படி இருக்க வேண்டும்?
பெண்ணுக்கு மிகவும் பிடித்தது, கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்ளும் கணவனையா? கை நிறைய சம்பாதிக்கும் கணவனையா? இப்படிக் கேட்டால், ‘இரண்டு அம்சங்களும் நிறைந்தவனைத்தான் பெண்ணுக்குப் பிடிக்கும்’ என்பதுதான் பதில்!
பணத்தை மட்டுமே தகுதியாகக்கொண்டு கல்யாணம் செய்துகொள்ளும் வாழ்க்கை நீண்ட நாள்கள் நிலைக்காது. பொருள் சம்பாதிக்கும் திறன் பெண்களுக்கும் வேண்டும். அதற்கு அவளும் படிப்பறிவு பெற வேண்டும். இப்படியிருந்தால்தான், ‘நல்ல குணநலன் கொண்டவனா?’ என்பதை மட்டுமே கவனத்தில்கொண்டு தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பாள். இந்த அடிப்படைதான் தம்பதிக்கிடையே நல்லதொரு புரிதலை ஏற்படுத்தும். வாழ்க்கை வளமாக அமையும்!
சமீபகாலமாகக் காதல் விவகாரங் களில், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றனவே..?
இதில், இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. கிராக்குத்தனமாக - சைக்கோவாக சில ஆண்கள் இருக்கிறார்கள். ‘உண்மையிலேயே நம்மை அவளுக்குப் பிடிக்கிறதா...’ என்பது பற்றியெல்லாம் சிந்திக்காமல், ‘நான் இவ்வளவு தூரம் உனக்காக மெனக்கிட்டிருக்கிறேன்... உன் பின்னாடியே சுற்றியிருக்கிறேன்’ என்பதை மட்டுமே இவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருகட்டத்தில், ‘அவள் கிடைக்க வில்லை’ என்பது உறுதியானதும், சட்டென்று மனம்மாறி தவறான செய்கைகளில் ஈடுபட்டுவிடுகிறார்கள்.
பெண்களிலும் சிலர், மனதில் உள்ளதை வெளிப்படை யாகச் சொல்லாமல், பட்டும்படாமல் சிரித்துப் பழகு கிறார்கள். சம்பந்தப்பட்ட ஆணும் மனதுக்குள் காதலை வளர்த்துக்கொள்கிறான். திடீரென ஒருநாள் அந்தப் பெண் மனம் மாறும்போது, அவனுக்கு அது தாங்கமுடியாத ஏமாற்றமாகிறது; உணர்ச்சிவயப்பட்டு தவறான முடிவெடுத்துவிடுகிறான்.

ஒரு பையன் சாதாரணமாகப் பேசிப் பழகுவதற்கும், தன்னையே சுற்றிச்சுற்றி வந்து, ஜொள்விட்டுப் பேசுவதற்குமான வித்தியாசம் பெண்ணுக்கும் தெரியும் அல்லவா? அதனால், ‘காதல் உணர்வு எதுவும் இல்லை. நட்பாக மட்டும்தான் பழகுகிறோம்’ என்றால், பெண்களும் அதை ஆரம்பத்திலேயே தெளிவாக எடுத்துச்சொல்லிவிடுவது நல்லது.
மன உறுதியைப் பொறுத்த அளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் இருப்பதாக உணர்கிறீர்களா?
ஆண்டாண்டுக்காலமாக தாய்வழிச் சமுதாயமாக வாழ்ந்து வந்தவர்கள்தான் நாம். அதனால், பெண்களுக்கு எப்போதுமே மன உறுதி உண்டு. கால ஓட்டத்தில் இதில் சில மாற்றங்கள் உண்டாகியிருக்கலாமே தவிர, மன உறுதியைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே ஸ்ட்ராங்க்.

ஆண்களைவிட தெளிவாக ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வதிலும் திறமையாகக் கையாள்வதிலும் அவர்கள் எப்போதுமே முன்னோடியாகத்தான் இருக்கிறார்கள்.
18 வயதில்கூட பசங்களுடைய பேச்சு விளையாட்டுத்தனமாக இருக்கும். 13 வயது பெண் குழந்தைகளிடம்கூட பெண்மைக்குரிய பக்குவத்தையும் முதிர்ச்சியையும் பார்க்க முடியும்.
‘பாக்யராஜ், தன் படங்களில் பெண் கதாபாத்திரங்களைப் பிற்போக்குத்தனமானவர் களாகவே சித்திரித்துவிட்டார்’ என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
‘மௌனகீதம்’ படத்தில், கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று தெரிந்ததும், விவாகரத்து வாங்கி, அந்தக் கணவனையே தூக்கியெறிந்துவிட்டுப் போவதாகத்தானே சித்திரித்திருக்கிறேன்?
‘முந்தானை முடிச்சு’ படத்தில், ஆசைப்பட்டவனையே கணவனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், குழந்தையைத் தாண்டி பொய் சத்தியம் செய்யும் அளவுக்கு கதாநாயகி துணியவில்லையா?
‘அந்த 7 நாட்கள்’ நாயகி, தன் பழைய காதலை கணவனிடமே வெளிப்படையாகச் சொல்லி விட்டுப் போகவே தயாராகி விட்டாளே?
‘சுந்தரகாண்டம்’ படத்தில், ஆசிரியரைக் காதலிக்கும் மாணவி கேரக்டர், முன்வைக்கும் தர்க்க வாதங்கள் முற்போக்கு இல்லையா? எனவே, பெண்களை ஒருபோதும் பிற்போக்குவாதிகளாக நான் சித்திரித்ததே இல்லை!
த.கதிரவன் - படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன்