தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

பேசப் பேச பூக்கள் பேசுதே! - சுமதி ராம்

பேசப் பேச பூக்கள் பேசுதே! - சுமதி ராம்
பிரீமியம் ஸ்டோரி
News
பேசப் பேச பூக்கள் பேசுதே! - சுமதி ராம்

வாசிப்பால் வந்த நேசிப்பு

  ஏரி நீரில் உன் முகம்தான் விழுகையிலே
  ஏந்திக்கொள்ள தேவதைகள் வந்திடுமே... 
  நிலவின் மொழியில் நீ
  நிலத்தின் மொழியில் நான்
   பேசப் பேச பூக்கள் பேசுதே...

பேசப் பேச பூக்கள் பேசுதே! - சுமதி ராம்

யக்குநர் ராமின் ‘பேரன்பு’ திரைப்படத்துக்காக, அவர் மனைவி சுமதி எழுதிய பாடல் இது. ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கிற கவிதைத் தொகுப்பை எழுதி, அதற்காகத் தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றவர் சுமதி. தன் கணவரின் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகவிருக்கும் மகிழ்ச்சியில் இருப்பவரைச் சந்தித்தோம். புத்தகங்கள் நிறைந்திருந்த அந்த வீட்டின் அமைதியைக் கலைத்துப் பேசியது சுமதியின் குரல்...

‘‘என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல மல்லிபுதூர் கிராமம். அப்பாவும் அம்மாவும் வேலை விஷயமா மகாராஷ்டிராவுக்குப் போயிட்டாங்க. என்னோடு பிறந்த மூன்று சகோதரிகளும் அம்மா அப்பாகூட மகாராஷ்டிராவில் இருந்தாங்க. நான் மட்டும் பாட்டி வீட்டுல வளர்ந்தேன். அந்தக் கூட்டுக்குடும்பத்தில் பாட்டி, தாத்தா, அத்தை, சித்திகள், மாமா எல்லோரும், அப்பா அம்மா கூட இல்லாத குறை தெரியாம என்னை அன்பா பார்த்துட்டாங்க. இளங்கலை தமிழ் இலக்கியம் முடிச்சதுக்கு அப்புறம், முதுகலைப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்தேன். அங்கேதான்  ராமைப் பார்த்தேன்.

என் தோழி மகாலட்சுமியின்  நண்பராகத்தான் ராம் முதன்முதலா எனக்கு அறிமுகமானார். அவருக்கும் எனக்கும் புத்தகங்கள்தான் பாலமா இருந்தது. எனக்கு அவர் கைப்பட எழுதி ஒரு கடிதம் கொடுத்தார். மொத்தமே ஆறு வரிகள்தான் அந்தக் கடிதத்தில் இருந்தன. அதை வாசிக்கிறப்போ ஏதோ ஒரு கிளாஸிக் நாவலின் ஒரு பத்தியைப் படிச்ச உணர்வு இருந்தது. ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம்; நண்பர்களானோம். ஆறே மாதங்களில், எங்க காதலைப் பரிமாறிக்கிட்டோம்.

பேசப் பேச பூக்கள் பேசுதே! - சுமதி ராம்

ஒரு தடவை செமஸ்டர் எக்ஸாமுக்கு முதல் நாள் அவர் என் கையில் ஒரு நாவலைக் கொண்டுவந்து கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் புத்தகம் கொடுத்து நான் அதை வாசிக்கலைன்னா எங்களுக்குள்ள பெரிய சண்டையே வரும்.  அதனால எக்ஸாமுக்குப் படிக்காம நாவலைப் படிச்சிட்டிருந்ததை இப்ப நினைச்சாலும் சிரிப்புதான் வருது. நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு காதலிச்சோமோ, அந்தளவுக்கும் மேல அவர் புத்தகங்களை  நேசிச்சார். இப்பவும் அப்படித்தான். தினமும் ஒரு புத்தகம் படிக்கலைன்னா அவருடைய நாள் முழுமையடையாது. முதுகலை முடிச்சதும், அவரே எனக்குச் சென்னையில் எம்.சி.சி காலேஜ்ல எம்.பில்லுக்கு அட்மிஷன் போட்டுட்டார்.

சென்னையில் நான் எம்.பில் படிச்சப்போ, அவர் எனக்கு எழுதின கடிதங்களை, எங்க வீட்டில் உள்ளவங்களே படிப்பாங்க. ஆனாலும், யாருக்கும் எதுவும் புரியாது. ஏன்னா, ஏதாவது ஒரு புத்தகத்தில் வரும் கதாபாத்திரத்தின் காதலாக அது இருக்கும். இல்லைன்னா, ஒரு கவிதையையோ, சிறுகதையையோ படிக்கிற மாதிரி இருக்கும். அதுல எனக்காக என்ன சொல்லியிருக்கார் என்கிற விஷயம் எங்க ரெண்டு பேருக்கு மட்டுமே தெரியும்... புரியும். `நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்'னு வீட்டுல வாய்திறந்து சொல்லலை. அவங்களே எங்களுடைய காதலைத் தெரிஞ்சுக்கிட்டு திருமணம் செஞ்சு வெச்சுட்டாங்க.
1995-ல் காதலிக்க ஆரம்பிச்சோம், 2000-ல் எங்க திருமணம்.

பிறகு, கோயம்புத்தூரில் ஒன்பது ஆண்டுகள் பேராசிரியராக வேலை  பார்த்தேன். ஏழு வருடங்களுக்கு முன்னாடி, அவினாசிலிங்கம் கல்லூரியில் பிஹெச்.டி முடிச்சேன். பசங்க வளர்ந்ததும், அவங்களைப் பார்த்துக்கிறதுக்காக வேலையை விட்டுட்டேன். கல்லூரிப் பணியில் இருந்தப்பதான் கவிதைகள் எழுதிட்டிருந்தேன். அதையெல்லாம் தொகுத்துச் சின்னச் சின்ன திருத்தங்கள் செய்து, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ங்குற புத்தகமா அந்தத் தொகுப்பை வெளியிட்டது ராம்தான். நான் இந்தளவுக்கு வளர்ந்ததுக்குக் காரணம் அவர்தான். நிறைய விஷயங்களைக் குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்கிற மாதிரி எனக்குச் சொல்லிக்கொடுப்பார்’’ என்கிறவரிடம் குழந்தைகள் குறித்துக் கேட்டோம்.

‘‘பொண்ணு ஸ்ரீசங்கர கோமதி, பத்தாம் வகுப்பு படிக்கிறாங்க. அப்பாவும் பொண்ணும் சேர்ந்தா வீடே கலகலன்னு இருக்கும். பெயின்ட்டிங், கீ-போர்டு, டென்னிஸ், ஜும்பானு அவ விரும்பும் விஷயங்களைக் கத்துக்கவைக்கிறார். போட்டோகிராபியில் ஆர்வமா இருக்கிறானு தெரிஞ்சதும் ஒரு கேமரா வாங்கிக்கொடுத்து அவளை சர்ப்ரைஸ் பண்ணினார். என் பொண்ணுக்குப் பெரிய ஃபேஷன் டிசைனராக ஆகிறதுதான் ஆசையாம். பையன் மயன். யுவன்சங்கர் ராஜாவை அவருக்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அவர் பெயரைத்தான் வைக்கிறதா இருந்தது. அப்புறம் மயன்னு வெச்சிட்டோம். ‘மயன்’ங்குறது  புராணங்களில் இலக்கியங்களில் வரக்கூடிய கட்டடக்கலை நிபுணருடைய பெயர். மயன் இப்போ ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு லீவுவிட்டா எங்க வீடே தலைகீழாகக் கிடக்கும். மயனுக்கு அவங்க அப்பாகிட்ட அசிஸ்டென்ட்டா சேர்வதுதான் ஆசையாம். ஏன்னு கேட்டா, `அப்போதானே அப்பாகூடவே இருக்கலாம்’னு சொல்றார்.

ராம் இயக்கிய படம் ரிலீஸாகி ரெண்டு நாள்கள் கழிச்சு, நாங்க எங்கேயாச்சும் இயற்கை சூழ்ந்த இடத்துக்கு ட்ரிப் போறது வழக்கம். அப்போ, அழகான ஓர் இடத்தைப் பார்த்தாலோ, ஒரு நதியைப் பார்த்தாலோ ‘இனிமே நான் புகைக்க மாட்டேன்’னு ராம் சொல்லுவார். ஆனா, அந்தச் சத்தியத்துக்கு ஆயுள் ரெண்டே நாள்கள்தான். பழையபடி ஆரம்பிச்சிடுவார். அதுதான் அவர்கிட்ட பிடிக்காத  ஒரே விஷயம்.

பேசப் பேச பூக்கள் பேசுதே! - சுமதி ராம்

க்ரியேட்டரா அவர், ‘இது ஓகே’னு அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவடையமாட்டார். சின்னச் சின்ன விஷயங்கள்கூட நேர்த்தியா அமையறவரை கரெக்‌ஷன்ஸ் பண்ணிட்டேயிருப்பார். ‘பேரன்பு’ படத்துக்கு நான் பாட்டு எழுதும்போது, ‘ஆஹா இவருக்கு வேணும்கிறது கிடைக்கிற வரை விடமாட்டாரே... மாட்டிக்கிட்டோமே...’னு நினைச்சேன். நிறைய நிறைய எழுதவெச்சு, அதில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பாடலுக்காகப் பயன்படுத்திக்கிட்டார். யாரையும் மனதார பாராட்டுற அவருடைய பண்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பலரும் நினைக்கிற மாதிரி இவர் அவ்வளவு சீரியஸான பர்சன் இல்லை. அவரை மாதிரி யாராலும் ஹியூமரஸா இருக்க முடியாது. அதிலும் என்னைக் கலாய்க்கிறதுனா அவருக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி வந்துடும். உப்புமான்னா அவருக்கு உயிர். அதே மாதிரி, தினமும் சாம்பார் சாதம் கொடுத்தாலும் சலிக்காம சாப்பிடுவார். இப்போ படத்துக்காக டயட்ல இருக்கார்.

நான் சின்ன வயசுலயிருந்தே அப்பா அம்மாகூட வளர்ந்ததில்லை. அப்பா பாசத்தை ரொம்பவே மிஸ் பண்ணியிருக்கேன். இப்போ என் பிள்ளைங்களோடு என்னையும் ஓர் அப்பாவா இருந்துப்பார்த்துக்குறார் ராம். இதோ... இந்த ‘உருது கதைகள்’ புத்தகத்தை இப்போ வாசிச்சிட்டு இருக்கேன்ல... அவர் வந்ததும் இந்த வாசிப்பு அனுபவத்தில் எனக்குக் கிடைச்ச விஷயங்களை அவர்கூட பகிர்ந்துக்கணும். இதுதான், இப்படித்தான் நாங்க!” - கையிலிருக்கும் புத்தகத்தின் மடங்கியிருக்கும் தாளை நீவிவிட்டபடியே சொல்கிறார் சுமதி. மனது அந்த வரிகளை நினைவூட்டுகின்றன நமக்கு...

‘நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேசப் பேச பூக்கள் பேசுதே!’

- வெ.வித்யா காயத்ரி,   பா.காளிமுத்து