
ஆச்சர்யம்

தமிழ் சினிமாவின் அழகான, அன்பான அம்மா, சரண்யா பொன்வண்ணன். ‘அவனா செய்றான்; அவன் கெரகம். ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவானாம், பட்டிக்காட்டு சோசியர் சொன்னாரு’ என்கிறபோது அப்பாவியான அம்மாவும்கூட. அம்மா கேரக்டரில் சரண்யாவின் செகண்டு இன்னிங்ஸ் தொடங்கி 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. அஜித், விக்ரம் தொடங்கி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார்.
‘அட, ஆமால்ல... எல்லா ஹீரோக்களும் எம் புள்ளைங்க! யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு வரம்! கிளாமருக்குப் பயந்ததாலேயே ஹீரோயின் கேரியர் ஃபெயிலியர். ‘அம்மா’ ரோல்ல நடிக்கத் தொடங்கினப்போ, பலரும் ‘ஏன் இந்த முடிவு?’னு கேட்டாங்க. எல்லாத்தையும் கடந்து, மாநில, தேசிய விருதுகளையெல்லாம் வாங்கியாச்சு. விருதை விடுங்க... நிஜ வாழ்க்கையில எனக்கு மகன்கள் இல்லையேனு ஆரம்பத்துல வருத்தப்பட்டிருக்கேன். அந்தக் குறை தெரியாம கடந்து வந்ததுக்கு முக்கியக் காரணம் இந்தப் புள்ளைங்கதான். சும்மா ‘நடிப்பு’னு கடந்துபோயிட முடியாதுங்க. அம்மா - மகன் அந்நியோன்யத்தையெல்லாம் அனுபவிச்சிருக்கேன். படம் முடிஞ்சதா, பை பை சொல்லிட்டுக் கிளம்பிடுறதில்லை. சில நடிகர்களுக்கு நான் எப்பவும் அம்மாதான்’’ என்கிறவர், அந்த மகன்கள் ஒவ்வொருவர் குறித்தும் பேசுகிறார்.

அஜித்
என்னை ஒரு தேவதையா நடத்தியவர் என் மகன் அஜித். கொண்டாடுவார்னு சொல்லலாம். நம்மைப் பார்த்ததும் கைகூப்பி வணங்கி அழைச்சுட்டுப் போறது, பவ்யமா கையைக் கட்டி நின்னபடி நாம பேசுறதைக் கேட்குறது... இப்படி அவர் பண்ற விஷயங்கள் என்னை ரொம்பவே நெளியவைக்கும். ஆனா, சொன்னா கேட்க மாட்டார். அப்படித்தான் நடந்துக்குவார். பிரியாணி சமைக்கிறதுல நானும் அஜித்தும் ஒரேமாதிரி! ரெண்டு பேருக்குமே டேஸ்ட் கைகூடி வரும். ஆனா, அவர் கையால பரிமாற நான் சாப்பிட்டிருக்கேன். என் கையால பரிமாற, அவர் இன்னும் சாப்பிடலை. அழகு மகன். ஒரு வெள்ளைக்கார ஹீரோவைக் கூட்டி வந்து அஜித் பக்கத்துல நிற்க வெச்சாலும், அஜித்தே அழகு!

விமல்
பழக யோசிக்கிற டைப், விமல். ‘நீங்க பேசுனா பேசுவார். இல்லையா, அவர் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பார். ‘களவாணி’ ஷூட்டிங்ல பெரும்பாலான நாள்கள்ல ஒரு வணக்கத்தை மட்டுமே வெச்சுட்டுப் போயிருக்கார்.
விஜய் சேதுபதி
புதுமுகமா அவர் அறிமுகமானப்போ அவருக்கு அம்மாவா நடிச்சேன். அப்போ, எல்லோரையும்விட முதல் ஆளா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ஓரமா உட்கார்ந்திருப்பார். அப்போ உட்கார்ந்திருந்தார் சரி, இன்னிக்கும் அதே குணத்துல இருக்காருங்கிறது பெரிய ஆச்சர்யம். நூறு ‘அம்மா’ போட்டு என்னைக் கூப்பிடுவார். நடிப்புல அவருடைய வளர்ச்சி இப்போ வெறித்தனமா இருக்கிறதைப் பார்க்க முடியுது. ஆனா, எளிமை அப்படியேதான் இருக்கு. தன் முதல்பட இயக்குநருக்கு அவர் கொடுக்கிற மரியாதையைப் பல இடங்கள்ல நான் கண்கூடா பார்த்திருக்கேன். சுருக்கமா சொல்லணும்னா, அவரின் இந்த வளர்ச்சி அவருடைய நல்ல குணம், மனசாலதான் வந்தது.

விஷால்
ஒரு படம்தான் நடிச்சிருக்கேன். ஆனா, என் கணவரோடு நடிகர் சங்க மீட்டிங்ல சந்திச்சப்ப விஷாலைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். அவருடைய உயரத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தம் கிடையாது. குழந்தைத்தனமான மனசு. அவர் வகிக்கிற பொறுப்புகள், அவர்கிட்ட போகவே பயமுறுத்தும். ஆனா, அவர் மனசு எல்லோரையும் ஈர்த்துடும். ரொம்ப சென்டி மென்ட்டான ஆள். டக்குனு எமோஷன் ஆகிடுவார். எப்படிச் சொல்றது... இப்போ நான் அழுதேன்னு வைங்களேன், உடனே என் பக்கத்துல உட்கார்ந்து அவரும் அழ ஆரம்பிச்சுடுவார்.
சசிகுமார்
அம்மாவும் மகனும் நண்பர்களா இருக்கிறதைக் கேள்விப்பட்டிருப்பீங்க. நானும் சசிகுமாரும் அப்படித்தான். எனக்கு ஓர் உதவின்னா, நான் தேடுறது சசிகுமாரைத்தான். தவிர, நான் எதிர்பார்த்த உதவி நூறு சதவிகிதம் கிடைச்சுடும். ஆரம்பத்துல என்னை ‘மேம்’னு கூப்பிட்டார். இப்போ ‘அம்மா’தான்!

சிவகார்த்திகேயன்
‘நாயகன்’ படத்துல நடிச்சப்போகூட சக நடிகர்களைப் பார்த்து நடுங்கலை. பல ஹீரோக்களுக்கு அம்மாவா நடிச்சுட்டேன். அப்போல்லாம்கூட யாரைப் பார்த்தும் பயம் வரலை. ஆனா, சிவகார்த்திகேயன் முன்னாடி நடிக்கிறதுன்னா, கொஞ்சம் ஜெர்க் ஆகுது. அந்தளவுக்கு ஸ்பாட்லேயே வசனம் பேசி பொளந்து கட்டுற மகன். இவரும் என்னை அம்மாவாகவே நினைச்சுப் பழகுவார்.
தனுஷ்
நாலு படங்கள்ல தனுஷுக்கு அம்மாவா நடிச்சுட்டேன். ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்துல நடிச்சப்போ, தனுஷை அவ்வளவா கவனிக்கவே இல்லை. ஆனா, அடுத்தடுத்த படங்கள்ல அவர் வளர்ச்சியைப் பார்த்து எனக்கே லைட்டா பொறாமைனு சொல்லலாம். வேலைனு வந்துட்டா தனுஷ் காட்டற ஈடுபாடு, சிம்ப்ளிசிட்டி, மரியாதை... இப்படி ஒவ்வொரு குணமும் என்னை வியக்கவைக்குது. இன்னிக்கும் நான் போன் பண்ணா, ஒரே ரிங்ல எடுக்கிற ஹீரோ.
கதை சொல்ல வர்றதா இருந்தாலும் சரி, ஏதாவது பேசணும்னு வீட்டுக்கு வந்தாலும் சரி... உரிமையோட, ‘சாப்பாடு செஞ்சு வைங்க’ன்னு ஆர்டர் போட்டுட்டுதான் வருவார். என்ன ஒரு சோதனைன்னா... தனுஷ் பக்கா வெஜிடேரியன். நல்லா பிரியாணி செய்ற எனக்கு, இது பெரிய ஏமாற்றமா இருக்கும். வேற வழியில்லாம சாம்பார், ரசம், வத்தக்குழம்பு வெச்சுப் பரிமாறுவேன். சொந்த அம்மா மாதிரியே என்கிட்ட நடந்துப்பார். பொது இடத்துல பார்த்தா, தயங்காம நான் அவர் பக்கத்துல போய் உட்கார்ந்துக்குவேன். எங்க ரெண்டு பேருக்கிடையே அப்படியொரு அன்பு.

விக்ரம்
ஆக்சுவலா, விக்ரம் எனக்கு சொந்தக்காரர். ‘தாண்டவம்’ படத்துல நடிச்சப்போ, கோ ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் இந்த தகவலைக் கேள்விப்பட்டு எங்கிட்ட வந்து கேட்டார். இந்த மாதிரி கேள்விக்குச் சாதாரணமா, ‘தூரத்து உறவு’னு சொல்வோமில்லையா, அதையே நானும் சொல்லிட்டேன். அதை அவர் விக்ரம்கிட்ட போய் சொல்லிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு என் எதிர்ல வந்து நின்னவர், ‘என்ன சொன்னீங்க, டிஸ்டன்ஸ் ரிலேஷனா... சரி, இனி நாம தூரமாவே இருந்துட்டுப் போவோம்’னு கோபிச்சுக்கிட்டுப் போயிட்டார். பிறகு, கெஞ்சிக் கூத்தாடி, ‘ஐயா சாமி, இனி என் மகன்னு சொல்றேன்’னு சமாதானப்படுத்தினேன்.
ஜீவா
‘ராம்’ படத்துக்காக 20 நாள்கள் கொடைக்கானல்ல ஷூட்டிங். ஜீவாவுக்கும் எனக்கும் மட்டுமே காம்பினேஷன் சீன். நிறைய பேசினோம். ஷூட்டிங் முடிஞ்ச பிறகும் பேசிட்டே இருப்போம். காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எப்படி இருப்பாங்களோ, அப்படியொரு ஜாலியான உரையாடலா இருக்கும். ஒருகட்டத்துல நானே ஜீவாவை என் தம்பியா நினைக்க ஆரம்பிச்சுட்டேன். ஃபீல்டுக்கு வந்துட்டா அம்மா... மத்த நேரத்துல ஜாலியா பேசி எல்லா விஷயத்தையும் சொல்வார். அப்போ அவருக்குக் கல்யாணம் ஆகலை. சுப்ரியாவை லவ் பண்ணிட்டிருந்தார். தினமும் அந்தப் பொண்ணுகிட்ட பேசியதையெல்லாம் அப்படியே எங்கிட்ட சொல்வார். பிறகு ‘தெனாவட்டு’ படத்திலேயும் அவருக்கு அம்மாவா நடிச்சேன். பழகுனவங்ககிட்ட துறுதுறுனு கலாய்க்கிற ஜாலியான டைப். இப்போவும் எங்கே பார்த்தாலும் என் தம்பியா நினைச்சு உரிமையோடு பேசுவேன். பதிலுக்கு அந்தக் கள்ளம்கபடமில்லாத சிரிப்போடு, வஞ்சனை வைக்காம அப்படியே கொஞ்சம் கலாய்ச்சுட்டுப் போவார்!

சிம்பு
‘இவங்க என்ன சல்வார் கமீஸ்லாம் போட்டுக்கிட்டு வர்றாங்க... எனக்கு அம்மாவா தெரிவாங்களா?’னு இயக்குநர்கிட்ட கேட்ட மகன் இவர். ‘அலை’ படத்தின் ஷூட்டிங்ல இது நடந்தது. ஏன் எங்கிட்டேயே வந்து, ‘நீங்க ஹீரோயின் மாதிரி இருக்கீங்க. எனக்கு அம்மாவா எப்படி?! இது செட் ஆகுமா’னு கேட்டார். ‘இந்தக் கதையில அம்மா கொஞ்சம் இளமையாதான் இருக்கணும்’னு விளக்கினார் இயக்குநர், விக்ரம் குமார். என்ன இது, டைரக்டர் வேலையில குறுக்கிடுறாரேனு தோணும். அதேநேரம், படம் நல்லா வரணும்கிற அக்கறையாவும் அதை நினைச்சுப்பேன். இருந்தாலும், என் கேரக்டர் பத்தி திருப்தியடையாம, நிறைய சந்தேகம் கேட்டுக்கிட்டே இருந்தார். அம்மா கேரக்டர்ல எனக்கு அது முதல் படம். அதனால, எதையும் கண்டுக்கலை.
அவங்கப்பா (டி.ஆர்) படத்துல நடிக்க வாய்ப்பு வந்து, அது தொடர்பா பேச அவங்க வீட்டுக்குப் போயிருந்தபோது, சிம்பு வீட்டுக்குள்ள குட்டியூண்டு சைக்கிளை ஓட்டிக்கிட்டு இருந்தார். ‘அலை’ ஷூட்டிங் டைம்ல அவங்க அம்மாகிட்ட இதைச் சொன்னேன். ஆனா, ‘அலை’யில் நான் பார்த்த சிம்புவுக்கும் இன்னிக்குப் பார்க்கிற சிம்புவுக்கும் அவ்ளோ வித்தியாசம், ‘ச்சோ ஸ்வீட்’னு சொல்வாங்க இல்லையா, சிம்பு இப்போ ச்சோ மெச்சூர்டு!
கார்த்தி
அண்ணனுக்கு நேரெதிர் தம்பி. சூர்யா வீட்டுக்கு வர்றார்னா, பதறியடிச்சு வீட்டை ஒழுங்குபடுத்தி என்ன சாப்பாடு பண்ணலாம்னு யோசிச்சு ரெடி பண்ணுவேன். கார்த்தி வர்றார்னா, அப்படி எதுவும் இருக்காது. ‘விறுவிறுனு வீட்டுக்குள்ள வர்றவர், கிச்சனுக்கு வந்து, ‘தோசையை இங்கிட்டு போடுங்க’னு தட்டைத் தூக்கிட்டு நிற்பார். கார்த்தி இப்படித்தான். மிஸ்டர் கூல். ரெண்டு பேருக்கும் எப்படி இப்படியொரு வித்தியாசம்னுதான் தெரியலை!

சூர்யா
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’னு மூணு வார்த்தை சொல்றாங்களே, சூர்யாவுக்கு அது கச்சிதமா பொருந்தும். ‘இப்படித்தான் நிற்கணும்’, ‘இப்படித்தான் நடக்கணும்’கிற ஒழுங்கை விரும்புகிறவரா என் பார்வைக்குத் தெரியறார். அவங்க புரொடக்ஷனாகவே இருந்தாலும், வேலைக்கு ஆள்கள் இருந்தாலும், எல்லோரையும் சமமா நடத்துற அந்த குணத்தைப் பத்தி பெருமையா அடிக்கடி நான் என் கணவர்கிட்ட சொல்வேன். சக நடிகர்களை நடிக்க அனுமதிக் கிற குணமும், சூர்யாவின் ஸ்பெஷல்!
விஷ்ணு
நடிக்க ஆர்வமிருக்கிற பெர்சனாலிட்டி விஷ்ணு. இதுவரை மூணு படத்துல இவருக்கு அம்மாவா நடிச்சுட்டேன். நான் அடிக்கடி இவருக்குக் கொடுக்கிற அட்வைஸ், ‘`ஏமாந்துபோக வாய்ப்பிருக்கிற பையனா இருக்க... உஷாரா இரு. ஏன்னா, சினிமாத்தனம் இல்லாத பையனாவே வளர்ந்திருக்கார். இப்படியான ஆள்களை ஏமாத்த இங்கே பல பேர் ரெடியா இருக்காங்க...''

பரத்
உண்மையிலேயே என் மகனா நான் ஃபீல் பண்ணி நடிச்ச ஹீரோ, பரத். ‘எம்டன் மகன்’ ரிலீஸ் டைம்ல பார்க்கவும் சின்னப் புள்ளையாதான் இருந்தாரா... அதனால, நிஜ அம்மா - பையன் மாதிரிதான் வாழ்ந்தோம். ஸ்பாட்ல என்னை ‘அம்மா, அம்மா’னுதான் கூப்பிடுவார். நான் எந்தளவுக்கு பரத்கிட்ட அம்மாவா பழகினேங்கிறதுக்கு ஒரு சம்பவம் சொல்றேன்.
படத்தின் ஷூட்டிங் குன்றக்குடியில நடந்தது. ஈரச்சேலையோட கோயில் முன்னாடி உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துற காட்சி. நான் தரையில உருளும்போது சேலை காலுக்குமேல ஏறிக்கிட்டே வருது. சுத்தி ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கிற கூட்டம். நான் பரத்கிட்ட, ‘ஏம்ப்பா அம்மா மானத்தைக் காப்பாத்துப்பா’னு சொல்லிட்டேன். பரத் அப்போ வளர்ந்து வர்ற ஹீரோ. அவருடைய டயலாக்கை ஞாபகம் வெச்சுப் பேசுறதே பெரிய விஷயம். இதுக்கிடையில என் சேலையைச் சரி செய்கிற வேலையையும் செஞ்சார். இன்னிக்கும் அந்தக் காட்சியை டி.வி-யில பார்த்தா, என் பொண்ணுங்களைக் கூப்பிட்டு, ‘பரத் எவ்ளோ நேர்த்தியா இந்த வேலையைச் செய்தார் பாருங்கடி’னு சொல்வேன்!
சேரன்
மகன் என்ற உணர்வே தோணாம ஒரு ஹீரோவுக்கு நான் அம்மாவா நடிச்சேன்னா, அது சேரனுக்கு மட்டும்தான். தப்பா எடுத்துக்காதீங்க. நான் அவருக்கு அம்மாவா நடிச்ச ‘தவமாய் தவமிருந்து’ படத்தை இயக்கியவரும் அவரே! மகனும் டைரக்டரும் ஒரே ஆளா இருக்கிற ஷூட்டிங் சூழல்ல, பேச்சு எங்கிருந்து கலகலனு வரும்? அதனால, அவரை ஒரு வாத்தியார் ஸ்தானத்துலதான் வெச்சிருந்தேன்.
அதேநேரம், அந்தப் படத்துக்குப் பிறகு எங்க குடும்பத்துக்கு நல்ல நண்பர் ஆகிட்டார். இப்போவும் என் வீட்டுக்காரரை ‘அண்ணன்’னும், என்னை ‘அண்ணி’னும்தான் கூப்பிடுவார்.

ராகவா லாரன்ஸ்
`அம்மா'ங்கிற வார்த்தை இவர் வாயில் இருந்து வந்துகிட்டே இருக்கும். ‘பாண்டி’ ஷூட்டிங் ஸ்பாட்ல நானே இவருக்கு சமைச்சுப் போட்டிருக்கேன்.
உதயநிதி
உதயநிதியும் எனக்கு இன்னொரு ஆச்சர்ய மகனே! வெளியில எங்கேயாவது பார்த்தா எழுந்து நின்னு பேசுற அவருடைய குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘எனக்கு சங்கடமா இருக்கு, எழுந்து நிற்காதீங்க’னு சொல்லிப் பார்த்துட்டேன். கேட்க மாட்டேங்கிறார். உதயநிதியைப் பார்க்கிறப்போல்லாம் நான் நினைக்கிறது, ‘சீன் போடுற ஆம்பளைங்கெல்லாம் இவரைப் பார்த்துக் கத்துக்கணும்!’

‘மேடம்’னுதான் கூப்பிடுவார். சேர்ந்து நடிச்சப்போ, டயலாக் மறந்துடுவார். அவர் வசனத்தை நான் எடுத்துக் கொடுப்பேன். ‘தேங்க்ஸ் மேடம்’னு சொல்வார். அதேபோல சீனுக்கு முன்னாடி ‘என் டயலாகையும் சேர்ந்து படிச்சுக்கிட்டீங்களா’னும் கேட்பார். ஜாலியான, வெகுளியான புள்ளை!
- அய்யனார் ராஜன், பா.காளிமுத்து