தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

கீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா? - நடிகை சீதா

கீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா? - நடிகை சீதா
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா? - நடிகை சீதா

அன்றும் இன்றும்

கீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா? - நடிகை சீதா

ளைய மகள் கீர்த்தனாவின் திருமணம் முடிந்த மகிழ்ச்சி, மூத்த மகளுக்கு வரன் தேடும் படலம், நடிப்பு, குடும்பப் பணிகள் எனப் பல ஓட்டங்களுக்கு இடையே, சென்னை சாலிகிராமத்திலுள்ள நடிகை சீதாவின் வீட்டில் தொடங்கியது மகிழ்ச்சியான உரையாடல்.

புதுப்பொண்ணு கீர்த்தனா எப்படி இருக்காங்க?

கடந்த மார்ச் மாதம் கீர்த்தனாவின் கல்யாணம் சிறப்பா முடிஞ்சது. ரொம்ப நாள் கழிச்சு குடும்பத்தில் நடந்த நல்ல விசேஷம் என்பதால, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. கீர்த்தனாவுக்கு டிரஸ், ஆக்சஸரீஸ்ல பெரிய ஈடுபாடு கிடையாது. சிம்பிளா இருக்கணும்னு தான் விரும்புவா. எனக்குப் பட்டுப் புடவைகள் ரொம்பப் பிடிக்கும். அவளுக்கு நான் கொடுத்த கல்யாணப் பரிசுகளில், பொண்ணுக்காக தேடித்தேடி வாங்கிய பட்டுப் புடவைகள் ஸ்பெஷல். கல்யாணத்துக்குப் பிறகு ஒருநாள், கிரீன் அண்டு பிங்க் காம்பினேஷன்ல ஒரு பட்டுப் புடவையைக் கட்டிட்டு என் வீட்டுக்கு வந்திருந்தா. அவளை புடவையில், கணவரோடு ஜோடியா  பார்த்தப்போ ரொம்பப் பூரிப்பா இருந்துச்சு. மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் அசைவம் பிடிக்காது. அவ இங்கே வரும்போதெல்லாம், சைவத்தில் விதவிதமா சமைச்சுப் பரிமாறுவேன். கீர்த்தனா சந்தோஷமா இருக்கா!

‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகமான சீதாவுக்கும், இப்போதைய சீதாவுக்குமான வித்தியாசம்?

சினிமா உலகம்னா அப்போ எனக்கு என்னன்னே தெரியாது. ஒரு நிகழ்ச்சியில கலந்துகிட்டப்போ எடுக்கப்பட்ட என் போட்டோவைப் பார்த்த இயக்குநர் பாண்டியராஜன் சார், அப்பாகிட்ட என்னை நடிக்கக் கேட்டிருக்கிறார். ‘ஒரு படத்துல மட்டும் நடி... பிடிக்கலைன்னா, பிறகு நடிக்க வேண்டாம்’னு அப்பா சொல்ல, சம்மதிச்சேன். பத்தாம் வகுப்பு படிச்சப்போ, ‘ஆண் பாவம்’ படத்துல நடிச்சேன். மருதாணி வெச்சுக்கிட்டு, படுத்துக்கிட்டே காலை ஆட்டிக்கிட்டு இருக்கிற மாதிரியான காட்சி. அந்த ஷாட் முடிஞ்சதும், மொத்த டீமும் வேற லொக்கேஷனுக்குப் போயிட்டாங்க. அதுகூட தெரியாம ரொம்ப நேரம் அங்கேயே காலாட்டிக்கிட்டு இருந்தேன். அந்த அளவுக்கு அப்போ அப்பாவியா இருந்தேன். தொடர்ந்து நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடிச்சதால, படிப்பைத் தொடர முடியலை. கேட்ட நேரத்துக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம் கிடைக்கும். வெரைட்டியான காஸ்ட்யூம், தேவையை உடனே பூர்த்திசெய்ய ஆள்கள்னு ஸ்பெஷல் கவனிப்புடன் இருந்தேன். ஆறு வருஷத்துல 80 படங்களுக்கும் மேல ஹீரோயினா நடிச்சேன். நான் சினிமாவுக்கு வந்து 33 வருடங்கள் ஓடிடுச்சு. நிறைய பிரச்னைகளைச் சந்திச்சு, எதிர்கொண்டு, இப்போ முதிர்ச்சியான மனநிலைக்கு வந்திருக்கேன்.

கீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா? - நடிகை சீதா

திருமண வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது..?

1989-ம் ஆண்டு இறுதியில் எனக்குத் திருமணம் நடந்துச்சு. பிறகு சில படங்களை முடிச்சுக்கொடுத்த நிலையில், குடும்ப வாழ்க்கையில மட்டுமே கவனம் செலுத்தினேன். நிறைய வாய்ப்புகள் வந்தும் 11 வருஷமா நடிக்கலை.

2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிறகு வாழ்க்கைத் தேவைக்காக மீண்டும் நடிக்க ஆரம்பிச்சேன். என் கல்யாண வாழ்க்கையில பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டும் உண்டு.

அம்மா சீதா..?

அம்மாவாக, என்னை முழுமையாக உணர்கிறேன். அபிநயா, கீர்த்தனா, ராக்கி (ராதாகிருஷ்ணன்) என்று மூணு பிள்ளைகள். அவங்களை ஸ்கூல், சிறப்பு வகுப்புகள்னு எல்லாவற்றுக்கும் டிராப் அண்டு பிக்கப் பண்ற வேலையை நான்தான் செய்வேன். ஹோம்வொர்க் பண்ண வைப்பேன். விளையாட அழைச்சுக்கிட்டுப் போவேன். இப்படி என் மூணு பிள்ளைகளோடும் கழித்த நாள்கள் எனக்குப் பொக்கிஷம். பெரிய பொண்ணு அபிநயா, பரீட்சையில் சரியா 35 மார்க்குக்கு மட்டும்தான் எழுதுவா. கேட்டா, ‘கை வலிச்சது’னு சொல்லுவா. இவளைப் போலவே, பையனுக்கும் சுட்டித்தனம் அதிகம். கீர்த்தனா ஸ்மார்ட். மத்தவங்க அட்வைஸ் அவளுக்குப் பெரிசா தேவைப்படாது.

மணிரத்னம் சார் - சுஹாசினி இருவரும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் கீர்த்தனாவை நடிக்கவைக்க வலியுறுத்திக் கேட்டாங்க. படிப்பு பாதிக்காத வகையில, ரெண்டு மாத சம்மர் லீவில், அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சுட்டா. முதல் படத்துக்கே சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது வாங்கினா. பிறகு எக்கச்சக்க வாய்ப்புகள் வந்தாலும், தொடர்ந்து நடிக்க கீர்த்தனாவுக்கு விருப்பமில்லை. காலேஜ் படிப்பை முடிச்சுட்டு, இயக்குநராக ஆசைப்பட்டு மணிரத்னம் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணினா. இப்போ, புதுப் படம் இயக்குவதற்கான வேலைகள்ல கவனம் செலுத்துறா. என்னுடன் வசிக்கிற அபிநயா இப்போ தனியார் நிறுவனத்துல வேலை செய்துகிட்டு இருக்கா. அவளுக்கு வரன் பார்த்துக்கிட்டிருக்கேன். பையனுக்கும் சினிமா ஆசைதான். பிரபுதேவாகிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்றான்.

கீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா? - நடிகை சீதா

வீட்டின் உள்கட்டமைப்பு சிறப்பா இருக்கு. உங்க க்ரியேட்டிவிட்டியா?

ஆமாம்... அப்பாவின் இந்தப் பழைய வீட்டை, 2001-ம் ஆண்டு புனரமைப்பு செய்தோம். சினிமா ஆர்ட் டைரக்டரான என் மாமா ஜி.கே, எனக்கு இதில் நிறைய உதவினார். குறைவான தொகையில், பழைய கதவு உள்ளிட்ட மரச்சாமான்களை வாங்கிவந்து, அவற்றில் கூடுதல் வேலைப்பாடுகளைச் செய்தோம். பிறகு படிப்படியாக ஆர்ட் வொர்க் செய்து, வீட்டை ட்ரெடிஷனல் லுக்குக்கு மாற்றினேன். அம்மா, நான், அபிநயா மூணு பேரும் நல்லா பெயின்ட்டிங் பண்ணுவோம். இங்கே இருக்கிற கடவுள் பெயின்ட்டிங் எல்லாமே நாங்க வரைந்ததுதான். கோயில் போன்ற இந்த வீடு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். 

உங்க வாழ்க்கை முறை எப்படி இருக்கு?

தினமும் காலையில் நடைப்பயிற்சி, பூஜை விஷயங்களைத் தவறாம செய்திடுவேன். பிறகு சினிமா, சீரியல் ஷூட்டிங் உள்ளிட்ட விஷயங்கள், பர்சனல் வேலைகள். முன்பைவிட, இப்போ ரிலாக்ஸ்டா இருக்கேன். நடிக்க வந்த காலத்திலிருந்து இப்போவரை எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை. அதனால மகிழ்ச்சியுடன் நடிக்கிறேன்.

ஹீரோயினா நடிச்சதைவிட, ரெண்டாவது இன்னிங்ஸ்ல நடிக்கிற கேரக்டர் ரோல்கள்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. டான்ஸ் ஆட வேண்டியதில்லை; நிறைய காஸ்ட்யூம் மாத்த வேண்டியதில்லை. சிம்பிளா போய் நடிச்சுட்டு வந்திடலாம். சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற மதிப்புடன் நடத்துறாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனால், எல்லோரும் ‘அம்மா’னு கூப்பிடுறாங்க.

கீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா? - நடிகை சீதா

எதிர்காலத் திட்டமிடல்..?

அபிநயாவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னா, நானும் என் அம்மாவும்தான் இந்த வீட்டில் இருப்போம். அம்மாவுக்கும் ரொம்ப வயசாகிடுச்சு. அடுத்து நான் தனியாதான் வாழணும். அந்த நாள்களைப் பத்தி இப்போவே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இதுவரை வாழ்ந்ததுபோல, இனியும் எதிர்பார்ப்பு இல்லாம நிம்மதியா வாழ்ந்தா போதும். எனக்கு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால புண்ணிய தலங்களுக்குச் சுற்றுலா போகலாம்னு திட்டமிட்டிருக்கேன். நான் வருத்தத்தில் இந்த முடிவை எடுக்கலை. அப்போதைய பிஸியான ஓட்டத்துல அது முடியலை. அதனால, இப்போ போக ஆசைப்படறேன்.

-  கு.ஆனந்தராஜ், தி.குமரகுருபரன்