
ஷாஜி ஓவியங்கள் : ரவி
``இந்த அசட்டுப் பயலோட கை சும்மாவே இருக்காதே! பண்ணி வெச்சிருக்கிற காரியத்தப் பாரு. எல்லாத்தயும் பண்ணிப்புட்டு கரண்டு அடிச்சு இந்தா கெடக்குறா..” புலம்பிக்கொண்டு ஓடிவந்த மாமன்கள் என்னைத் தரையில் உருட்டியெடுத்தனர். நெஞ்சுக்கூட்டில் பதக் பதக் என இடித்தனர். தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றினர். வாய் வழியாக வடிந்திறங்கிய நுரையைத் துப்பிக்கொண்டு நான் எழுந்து அமர்ந்தேன். என்னை இடித்தும் உருட்டியும் குணமாக்கும் முயற்சியில் சினிமாப்பட ஓட்டுநர் அனியன் சேட்டனும் மும்முரமாகப் பங்கேற்றார். “இந்தக் கேடுகெட்ட பய எல்லாத்தயும் பண்ணும்போது நீ என்னத்தப் புடுங்கிக்கிட்டு இருந்தே?” மாமன்கள் அவரைக் கடுமையாகச் சாடினர். சிலருக்குச் சிலரைக் கண்டாலே பிடிக்காதே. பார்த்த கணத்திலிருந்தே அனியன் சேட்டனுக்கு என்னைப் பிடிக்கவில்லை. நான் அங்கேயிருப்பது அவருக்குப் பெரும் அசௌகரியத்தைத் தருவதுபோலத்தான் என்னிடம் நடந்துகொண்டார். அந்தச் சினிமாக் கொட்டகை என்னுடையது என்று நான் உரிமைகொண்டாடியது அவருக்கு மிகுந்த எரிச்சலை உண்டுபண்ணியி ருக்கலாம். எனது அதிகார பாவனையும் சினிமா ஓட்டுவதைப் பற்றி நான் துருவித் துருவிக் கேட்ட விசித்திரக் கேள்விகளும் அவரை ஆத்திரத்துக்கு ஆளாக்கியிருக்கலாம். முதலாளியின் சொந்தக்காரப் பையன்! அதட்டவும் முடியாது, அடிக்கவும் முடியாது! அதனால் யாருக்குமே தெரியாமல் இவனுக்குச் ‘சரியான ஆப்பு வைக்கணும்’ என்று அவர் முடிவெடுத்திருக்கக்கூடும். சுழலும் படச்சுருளினூடாகப் பாய்ந்து படத்தைத் திரைக்குக் கொண்டுசெல்லும் வெளிச்சம், கார்பன் தண்டுகளை எரிக்கும்போதுதான் உருவாகும். அதற்கான இயந்திரப் பகுதியின்மேல்தான் இருட்டில் இடம் தெரியாமல் எட்டிப் பிடித்திருப்பேன். அதன்மேல் எங்கு தொட்டாலும் மின்சாரம் தாக்குவதுபோல் இணைத்திருப்பார். அப்படித்தான் நம்பமுடியும். ஏனெனில், சிலகாலத்திற்கு முன்பும் அப்படியொன்று எனக்கு நடந்திருக்கிறது.

பாட்டை ஒலிபரப்பும் கருவிகளின்மேல் எனக்குப் பெரும் மோகம் இருந்தது. ஓர் ஒலிபெருக்கியை எப்படியாவது இயக்கவேண்டும் என்கின்ற ஆசை என்னை உந்திக்கொண்டேயிருந்தது. எங்கள் பள்ளிக்கூடத்தில் எல்லா நாளும் காலையும் மதியமும் மாலையும் கொஞ்சநேரம் இந்தி, மலையாளத் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவது வழக்கம். பள்ளிக்கூடத்தின் ஒலிபெருக்கியை இயக்கிக்கொண்டிருந்தவன் எங்கள் வகுப்பிலேயே உள்ள கப்பியார் பாபு எனும் பையன். ஒருமுறையாவது அதை இயக்க அவன் எனக்கு வாய்ப்புத் தருவான் என்று நம்பி அவன் பின்னால் பல நாள் அலைந்தேன். அவன் என்னைக் கிட்டேயே சேர்க்கவில்லை. ஆனால், திடீரென்று ஒருநாள் “எடா... வேண்னா இன்னிக்கு நீ பாட்டு வெச்சிக்கோ” என்று பணிவாகச் சொன்னான். அடக்கமுடியாத சந்தோஷத்துடன் “அதுக்கு நா என்னடா பண்ணணும்?” என்று கேட்டேன். “எல்லாமே ரெடி பண்ணி வெச்சிருக்கேன்டா... நீ போய் ‘மாஸ்டர்’ அப்டீன்னு எழுதி வெச்சிருக்கிற ‘வட்டன்’ பிடிச்சுத் திருப்பினாப் போதும்” என்றான். ஓடிச் சென்று அந்தப் பொத்தானைத் தொட்டதும் என்னை அழுத்தமாக மின்சாரம் தாக்கியது. வலியில் கையை அமுக்கிக்கொண்டு ஒன்றுமே புரியாமல் ஓடிவந்து “கப்பியாரே... என்னெக் கரண்டு அடிச்செடா” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே கப்பியார் பாபுவும் அவனது அடிப்பொடிகளும் தலையறைந்து சிரிக்கத் தொடங்கினர்.
இந்துக்கள் நாம் ஒன்றல்லோ...
ஒலிபெருக்கியைப்போலவே ஒலிநாடாக் கருவிமேலான மோகமும் எனக்கு ஓர் ஒழியா வாதையானது. எங்கள் வீட்டிலிருந்து எருமைப் பாலை விற்றுக்கொண்டிருந்தது ராமேஷ்ணன் என்பவரின் சாயாக் கடையில்தான். அவரிடம் பெரிய ஒலிநாடாக் கருவி ஒன்று இருந்தது. சாயாக்கடையின் பின்னால் பல்விளைத் தாவரங்களின் தழைப்பச்சைத் தோட்டத்திற்கு நடுவேயுள்ள அவரது வீட்டிலிருந்து அந்த ஒலிநாடாக் கருவி சதாநேரமும் பாடியது. அக்கருவியை ஒருமுறையாவது அருகில் சென்று பார்த்து, அதில் நல்லதாக நான்கு திரைப்பாடல்களைக் கேட்கவேண்டுமே என்று எனக்குள் ஒரே ஆசை. ஒருநாள் பால் விற்றதன் பணத்தை வாங்கக் கடைக்குச் சென்றேன். அங்கே பணியாட்கள் மட்டுமே. பணம் பிற்பாடு தருகிறோம் என்று சொன்னார்கள். எனக்கோ பணம் உடனடித் தேவை. அதைவைத்து அரிசி வாங்கி வரவேண்டும் என்று அம்மா அனுப்பியிருக்கிறார். ஆனால், எனது நோக்கம் அரிசியல்ல. அன்று வெள்ளிக்கிழமை. கட்டப்பனையில் படங்கள் மாறும் நாள். அன்றைக்கே படங்களைப் பார்க்கவேண்டும். “பால்க்காசத் தாங்க”, நான் அடம்பிடித்தேன். அப்போது கடை முதலாளியின் எட்டு ஒன்பது வயதான மகள் அங்கு ஓடிவந்தாள்.

“வீட்டுக்கு யாருயாரோ வந்திருக்காக. அவிங்களுக்கு திங்கக் கொடுக்க பப்பட போளி, பளம் போண்டா, மடக்கு சான், வல்ஸன்... எல்லாத்தையும் பொட்டலம் கட்டித் தர அப்பா சொன்னாரு.” அவர்கள் பலகாரங்களைப் பொட்டலம் கட்டும்போது “என்னோட பால்க்காசு..” என்று நான் முணுமுணுத்துக்கொண்டேயிருந்தேன். “இவன் தொல்ல தாங்க முடியலயே... அவ்ளொ தேவைன்னா இந்தப் பொண்ணு பின்னாடி சேட்டன் வீட்டுக்குப் போய் அவர்ட்ட காசு கேளுடா”. இது நல்லா இருக்கே! பணத்தையும் வாங்கலாம் அந்த ஒலிநாடாக் கருவியையும் பார்க்கலாம். வெள்ளை நிறத்தில் ஒற்றை உடுப்பைப் போட்ட அந்தச் சிறுமியின் பின்னால் ராமேஷ்ணன் சேட்டனின் வீட்டுக்குச் சென்றேன். திண்ணையில் பளபளத்த மஞ்சள் வண்ணச் சேலை கட்டி, செக்கச்செவந்த, அழகான ஒரு குண்டுப்பெண்ணும் சாம்பல் வண்ணக் கால்சட்டையும் சொக்காவும் அணிந்த நீண்டுமெலிந்த ஓர் ஆணும் அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் கிட்டத்தட்ட 35 வயதிருக்கும். திண்ணையின் நீள்சுவர்களில் கிருஷ்ணரும் காளியும் வினாயகரும் அடக்கம் பலப் பல கடவுளர்களின் கண்ணாடிச் சட்டமிட்ட படங்கள். குறுகிய சுவரில் ஒரு பலகை மேடையில் அதோ அந்த ஒலிநாடாக் கருவி பளபளக்கிறது. நேஷனல் பானாசோனிக். அதன் சதுரம், வட்டம், குமிழிகள், திரிப்புக்கள் அனைத்தையும் கண்ணால் அளந்துகொண்டு முன்றிலின் மூலையில் ஒதுங்கி நின்றேன்.
விருந்தாளிப்பெண் சிரித்து மின்னுகிறார். ராமேஷ்ணன் சேட்டன் மிகுந்த உற்சாகத்துடன் பலகாரங்களைக் கொண்டுவந்து அவர்களுக்கு விருந்தோம்பல் செய்கிறார். இடையே சற்றே தயக்கத்துடன் “நீங்க எங்கேர்ந்து வர்றீகன்னு சொன்னீக?” என்று கேட்டார். எனக்கு ஆச்சர்யம். இவர்கள் ராமேஷ்ணன் சேட்டனின் சுற்றம் நட்பு எதுவுமே கிடையாதா? அவரே முதன்முறையாகத்தான் இவர்களைப் பார்க்கிறார் போல! இதற்கிடையே ராமேஷ்ணன் சேட்டன் என்னைப் பார்த்தார்.
``நீ எதுக்குடா இங்கே வந்தே?”
“பால் பணத்துக்கு”
“கடையிலேர்ந்து வாங்க வேண்டியதுதானே?”
“இங்கே வந்து கேக்கச் சொன்னாங்க”
“சரி... நீ இப்பப் போ. பணத்த அப்றமா தாரேன்”
“இப்பவே வேணும். அத்தியாவசியம் இருக்கு”
பணம் கிடைக்காமல் நகரவே மாட்டேன் என்ற முகபாவனையுடன் நான் அங்கேயே நின்றேன். அப்போது அந்த விருந்தாளிப் பெண் “இந்தப் பையனும் நிக்கட்டுமே. எல்லாருக்குமான செய்திதானே சொல்லப்போறேன்...” என்று சொன்னார்.
குளிர்ந்து வழியும் ஒரு புன்சிரிப்புடன் அப்பெண்ணை நோக்கி ராமேஷ்ணன் சேட்டன்,
“அப்பொ வந்த விசயத்த சொல்லுங்களே...”
“சொல்றதவிட பாடறதுதானே மகிழ்வு? நான் பாடறேன். நீங்க டேப்பு ரிக்காடுல பிடிச்சு எடுங்க. அப்றம் எல்லாரும் அதக் கேட்டுக்கிட்டே இருக்கலாமே...”

‘இந்த விலைமதியாப் பொருளின் உடையவன் நான்தானே’ என்பதுபோன்ற ஒரு பெருமிதச் சிரிப்புடன் ராமேஷ்ணன் சேட்டன், ஒலிநாடாக் கருவியைக் கையில் எடுத்து அதன் பொத்தானை அழுத்தினார். நான் அதன் பக்கம் விரைந்து சென்றேன். “டேய்... நீ போய் அங்கேயே நில்லுடா. இங்கே ஒனக்கு என்ன வேல? அய்யய்யோ... அதுவும் பிடிச்சு எடுத்திருக்குமே” என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பொத்தானை அழுத்தி ஒலிநாடாவை திருப்பி ஓட்டியபோது “டேய்... நீ போய் அங்கேயே நில்லுடா. இங்கே ஒனக்கு என்ன வேல? அய்யய்யோ... அதுவும் பிடிச்சு எடுத்திருக்குமே” என்று காட்டுப் பூனை குமுறுவதுபோன்ற குரலில் வெளியே கேட்டது. அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். சமாளித்துக்கொண்டு “சரி. இனிமே யாரும் பேசக் கூடாது. நீங்க பாடுங்க” என்று ராமேஷ்ணன் சேட்டன் ஒலிப்பதிவுப் பொத்தானை அழுத்தியதும் அப்பெண் தனது உச்சபட்சக் குரலில்,
‘ஜீவித யாத்திரைக்காராராராரா...
உன் காலடிகள் எங்கே போகிறதூஊஊஊஊ?
நாசத்தின் பாதையா? ஜீவனின் மார்க்கமா? லட்சியம் உன் முன்னால் எதூஊஊஊஊ?
அன்பின் உருவம் இயேசு நாதர்
உன்னை அழைக்கின்றாரே...
உன்னை அழைக்கின்றாரே…’ என்று பாடி முடித்தார்.
“கர்த்தரின் இத்தூதினை ராமகிருஷ்ணன் பிரதருக்கு அறிவிக்கத்தான் நாங்க வந்தோம்.”
ஓ... இதுதான் சமாசாரமா? ஏதோ பெந்தகோஸ்தே திருச்சபைக்கு ஆளைச் சேர்க்க வந்தவர்கள் இவர்கள்! அப்பெண்ணின் ஆடை அலங்காரமும் அழகான தோற்றமும் பார்த்து மதிமயங்கிப்போன ராமேஷ்ணன் சேட்டன், விவரம் தெரியாமல் அவர்களை அமரவைத்து விருந்தோம்பல் செய்திருக்கிறார். கடும் இந்துமத நம்பிக்கையாளரான அவரது முகம் இருண்டுபோனது. இருந்தும் கோபத்தை வெளிக்காட்டாமல் “என்னோட பொண்ணு இதவிட நல்லா பாடுவா… மவளே இந்நிரே... நீ இங்கிட்டு வந்து அந்தப் பாட்டப் பாடுடீ...” என்று தன் மகளை அழைத்தார். பலகாரம் வாங்க வந்த அதே சிறுமி வெளியே வந்து பள்ளியில் தேசியகீதம் பாட நிமிர்ந்து நிற்பதுபோல் கைகளை உடுப்பின் இருபுறமும் ஒதுக்கி வைத்துக்கொண்டு சத்தமாகப் பாடினாள்.
`இந்துக்கள் நாம் ஒன்றல்லோ...
இந்துக்கள் நாம் ஒன்றல்லோ...
இனிமேல் ஜாதிகள் வேண்டாமே
வர்க்கம் வர்ணம் வேண்டாமே
இந்துக்கள் நாம் ஒன்றல்லோ...
இந்துக்கள் நாம் ஒன்றல்லோ...’
அந்தப் பெந்தகோஸ்தே விருந்தாளிப் பெண்ணின் முகத்தை மீண்டுமொருமுறை பார்க்கத் திராணியில்லாமல் அங்கிருந்து வெளியேறினேன். ‘இந்துக்கள் நாம் ஒன்றல்லோ...’ என்று என்னையறியாமல் முனகிக்கொண்டே.
காலேஜ் குமாரன்
‘விலைக்கு வாங்ஙிய வீண’ எனும் படத்தில் வரும் ‘களிவிளையாட்டுகள் போச்சு பதின்பருவம் வந்தாச்சு’ எனும் பொருள்கொண்ட பாட்டைப்போல் எனது பால்யமும் பள்ளிக்கூடப் பருவமும் வெகு வேகமாக முடிந்துபோனது. கண்சிமிட்டும் முன் கனவேறும் பதின்பருவத்தை எட்டினேன். மீசை அரும்பியது. உடல் நீண்டு மெலிந்தது. அப்போதெல்லாம் கேரளத்தில் பத்தாம் வகுப்பு முடிந்த பின் பள்ளி கிடையாது, கல்லூரிதான். இரண்டு ஆண்டுக்காலம் ப்ரீ டிக்ரி. பின்னர் மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பு. கட்டப்பனை அரசுக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். படித்துப் பெரிய ஆள் ஆவதற்கொன்றும் அல்ல. எந்தவொரு கட்டுப்பாடுமே இல்லாத கல்லூரி அது. தினமும் டவுனில் உலா வரலாம். மூன்று சினிமாக் கொட்டகைகளில் வரும் எல்லாப் படங்களையும் பார்க்கலாம். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அங்கு படிக்க வரும் அழகான பெண்குட்டிகளைக் கண்குளிரப் பார்க்கலாம்.
காமக்கதைத் திரைப்படங்களைப் பார்க்கும் ஆசை அக்காலத்தில் அளவிற்கு அதிகமாகவே எனக்கிருந்தது. ‘ரதிநிர்வேதம்’ பார்க்க இரண்டு முறை இரட்டையார் நிர்மாலா சென்று சீட்டெடுக்க முயன்றேன். ஆனால், ஈவு இரக்கமில்லாமல் என்னைத் திட்டித் துரத்திவிட்டனர். விடாமுயற்சி திருவினையாக மாறி, கடைசியில் ‘தகர’ எனும் படத்தை அதே கொட்டகையிலேயே பார்த்தேன். அந்தச் சாகசங்களுக்கி
டையேதான் பத்தாம் வகுப்புத் தேர்வுப் பலன் வெளியானது. பட்டாங்குக்காரன் என்றாலும், அதிமேதாவியான தனது மகன் 500 மதிப்பெண்களைப் பெற்று வெற்றி வாகை சூடி வருவதை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த அப்பாவின் முன்னால் 251 எனும் கேவலமான மதிப்பெண்ணுடன் சென்று நின்றேன்.
“என்டெ குட்டப்பன் சாரே... பாதிரியார்கள் நடத்துற பள்ளிக்கூடத்துல ஆண்டுக்கு 150 ரூவா ஃபீஸக் கட்டி இந்தக் கள்ளப் புலயாடி மவனப் படிக்கவெச்சேன். அனா ஆவன்னான்னு ஓர் அட்சரம் கத்துக்காம ஊர் ஊரா அலஞ்சுநடந்து சினிமா பாத்துக்கிட்டு இதோ 251 வாங்கிக்கிட்டு வெட்கமில்லாம வந்து நிக்கிறான். இந்த அவராதி மவன இனிமே என்னத்தான் செய்யப்போறேனோ…” தம்பான் சேட்டனின் சாயாக்கடையில் குழுமியிருந்த ஊராருக்கு முன்னால்வைத்து அப்பா என்னைப் பொதுவிசாரணை செய்து தோலுரித்தார். மழலைப்பள்ளி ஆசிரியரான குட்டப்பனிடம்தான் எனது ‘உயர்’ படிப்பைப் பற்றி கருத்துக் கேட்கிறார்! மிகப்பெரிய ஏதோ குற்றம் செய்த ஒருவனைப்போல் அந்தச் சபைக்கு முன்னால் தலைகுனிந்து நின்றேன். அப்பா அடித்து உதைப்பார் என்று எண்ணினேன். ஆனால், அது நடக்கவில்லை. பொதுமக்கள் முன்னால் கடுமையாக வசைபாடி அவமானப்படுத்துவதோடு தண்டனையை நிறுத்திக்கொண்டார் என்றே நினைத்தேன். ஆனால், அது தப்புக் கணக்காகிப்போனது.

மூன்றே மூன்று கடைகள் இருக்கும் மூணுமுக்குக் கிராமச் சந்தியில்தான் அப்பா மன்றத் தலைவராகயிருந்த கூட்டுறவு வங்கி. அதன் பக்கத்திலுள்ள ஒரு தனிப்பயிற்சிக் கல்லூரியில் என்னைக் கொண்டுசென்று தள்ளினார். அவர் அடிக்கடி வந்துபோகும் இடம் என்பதால் எப்போதும் என்மேல் ஒரு பார்வை கிடைக்குமே என்று எண்ணினார். கட்டப்பனைப் பட்டினத்தில் இளம் கதாநாயகனாக அசத்த வேண்டியவனை இதோ இந்தக் குக்கிராம மூலையில் கட்டிப்போட்டிருக்கிறார். மூணுமுக்குக் கல்லூரியில் என்னைத் தள்ளிவிட்டதற்கு அப்பாவிடம் எனக்குக் கடுமையான கோபம். என்னைப் பற்றியான அவரது திட்டங்களை முறியடிக்கும் வகையில் பலவகையான மோசடி வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். வகுப்புகளில் அமராமல் காடுமலையேறி நடந்தேன். அப்பா வங்கிக்கு வரும்நாள் பார்த்து சினிமா பார்க்கப்போனேன்.
தாளம் இல்லை என்றாலும் ஓரளவிற்குப் பாடும் திறன்கொண்டிருந்த மாத்தன், நான் காதல்வயப்பட்டுப்போன செவப்பழகி ஜெய்னம்மா, சிலகாலம் எனக்கு நல்ல தோழியாக இருந்த டீனாம்மா, எல்லா வகுப்பிலும் தோற்றுத் தோற்றுப் படித்தமையால் என்னைவிடப் பல வயது அதிகம்கொண்டவனும் எல்லாத் தில்லுமுல்லுக்கும் உடந்தையாக நிற்கக்கூடியவனுமான நாலுமுக்கன் ஜோஸ் போன்றவர்கள் அக்கல்லூரியில் எனது நண்பர்கள் ஆனார்கள். ஆங்கில வாத்தியார் சிவன்குட்டி மறக்கமுடியாத ஆசிரியரானார். சரியான ஆங்கில உச்சரிப்பு, மொழிப்பயிற்சிக்காக ஆங்கிலப் புத்தகங்களையும் இதழ்களையும் அடிக்கடி படிக்கவேண்டியதன் முக்கியத்துவம் போன்றவை குறித்தெல்லாம் முதன்முதலில் நான் உணர்ந்தது அவர் நடத்திய வகுப்புகளிலிருந்துதான். ஷேக்ஸ்பியர், டோல்ஸ்டோய், தோஸ்தோவ்ஸ்கி, ஷெல்லி, கீட்ஸ், பைரன், யேட்ஸ், ஹார்டி, மார்லோ போன்றவர்களைப் பற்றியெல்லாம் முதலில் அறிந்துகொண்டதும் அவரிடமிருந்தே. ஆங்கிலத் திரைப்படங்களைப் பற்றியான முதன்முதல் அறிமுகமும் அவர் வழியாகத்தான் கிடைத்தது. ‘டயமண்டஸ் ஆர் ஃபார் எவர்’, ‘காட் ஃபாதர்’, ‘சௌண்ட் ஆஃப் மியூசிக்’, ‘மை ஃபெயர் லேடி’, ‘கோன் வித் த விண்ட்’, ‘எக்சார்ஸிஸ்ட்’ போன்ற திரைப்படங்களைப் பற்றி அவர் பேசும்போது இவ்வுலகையே மறந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.
கோதமங்கலம் பேய்
கையில் பணம் வரும்போதெல்லாம் ‘ப்ளிட்ஸ்’, ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’, ‘ஃபிரன்ட்லைன்’ என ஆங்கில இதழ்களை வாங்கிப் படிக்க முயன்றேன். ஒன்றுமே சரிவரப் புரியவில்லை. பின்னர் வெட்டம் மாணி என்பவர் எழுதிய ஓர் ஆங்கில-மலையாள அகராதியை வாங்கிப் பொருள் பார்த்துப் படிக்கத் தொடங்கினேன். “வெட்டம் மாணியின் அகராதியெல்லாம் ‘வெட்டத்தில்’ (வெளியே) காட்டக் கூடாது. ஆங்கிலம் படிக்க நல்ல ஆங்கிலம்–ஆங்கிலம் அகராதிதான் தேவை” என்று சொல்லித்தந்து, தடிமனான ஒரு ரான்டம் ஹவுஸ் அகராதியை என்னிடம் தந்தார் சிவன்குட்டி சார். மெள்ள மெள்ள ஆங்கில வாசிப்பு மண்டையில் ஏறத்தொடங்கியது. ஆனால், ஆங்கிலத் திரைப்படங்கள் எங்கள் ஊர்களில் எங்கேயுமே வருவதில்லை. எப்படியாவது ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்க்க வேண்டுமே என்று எண்ணிக்
கொண்டிருந்தேன். ஒருநாள் காலையில், ‘மனோரமா’ நாளிதழின் ‘இன்றைய சினிமா’ விளம்பரத்தில் கோதமங்கலம் எனும் ஊரில் உள்ள ‘மாதா’ சினிமாக் கொட்டகையில் ‘எக்சார்ஸிஸ்ட்’ ஓடுவதாக எழுதியிருப்பதைக் கண்டேன்.
60 மைல் தொலைவில் எர்ணாகுளம் மாவட்டத்தில்தான் கோதமங்கலம். அப்பகுதிகளுக்கு நான் போனதே கிடையாது. போனால் படமும் பார்க்கலாம் ஊர்களையும் பார்க்கலாம். போகவே முடிவெடுத்தேன். தனியாகப் போக பயம். நாலுமுக்கனையும் உடன் சேர்க்கலாம். ஆனால் பணம்? ஒரு திரைக்கதையை வடிவமைத்து வீட்டில் அரங்கேற்றினேன். “கல்லூரி ஓனர் ஃபீஸ் கேக்குறாரு. நாளைக்கே தரணும். இல்லேல் க்ளாஸுலேர்ந்து எறக்கி விடுவாக”. அம்மா ஒரு மூட்டைக் காப்பிக் கொட்டைகளை எடுத்துத் தந்தார். அதை விற்றுக் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு நாலுமுக்கனும் நானும் கோதமங்கலத்திற்கு ‘ஒளித்து’ ஓடினோம். பெரியாற்றின் கரையிலுள்ள குளிர்ந்த வனப்பகுதிகளினூடாக நகர்ந்த அப்பேருந்துப் பயணம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால், கோதமங்கலம் சென்றிறங்கும்போது அங்கே தாளமுடியாத சூடு.

‘மாதா’ கொட்டகையைத் தேடிப்பிடித்து மேட்னிக்கு ஏறினோம். அப்படம் நாலுமுக்கனுக்கும் எனக்கும் துளியளவுகூடப் பிடிக்கவில்லை. வெள்ளைக்காரனின் ஆங்கிலம் புரியவில்லை என்பது ஒரு பிரச்னை. ஆனால், அது மட்டுமல்ல. எந்தவொரு திக்குத் திசையுமே இல்லாத சினிமா! பேய் பிசாசுகளின் கதைதான். ஆனால், பயமுறுத்துவதற்காக எடுக்கப்பட்ட அதன் திகில் காட்சிகளைப் பார்த்தபோது எங்களுக்குச் சிரிப்புதான் வந்தது. மலையாளத்தில் வந்த ‘லிஸா’ இதைவிட எவ்வளவோ மேல். படம் முடியும் முன்னே நாங்கள் கொட்டகையை விட்டு வெளியேறினோம். “மைரு படம். இதப் பாக்கவா இவ்ளொ தூரம் நீ என்ன இழுத்திட்டு வந்த?” கோபம் தாங்கமுடியாமல் நாலுமுக்கன் குமுறினான். எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. இந்தக் குப்பையைத்தானா சிவன்குட்டி சார் திரைக்காவியம் என்று சொன்னார்? நான் அப்படத்தின் சுவரொட்டிகளை உற்றுப் பார்த்தேன். அவற்றில் ‘எக்சார்ஸிஸ்ட் -2’ என்று பெரிதாகவும், ‘த ஹெறிடிக்’ என்று பொடி எழுத்திலும் எழுதியிருந்தது. அய்யய்யோ! இது சரியான எக்சார்ஸிஸ்ட் இல்லையே! எக்சார்ஸிஸ்டின் இரண்டாம் பாகம் என்று பெயர் வைக்கப்பட்ட வேறு ஏதோ ஒரு படம் இது! மொத்தமாக மோசம்போனேன் என்பதை நாலுமுக்கனிடம் எப்படிச் சொல்வது? அடிப்பானே...
வெய்யில் மங்கி அந்தி வரத்தொடங்கியிருந்தது. எங்கே போவேன்? வீட்டுக்குத் திரும்பிப்போக முடியாது. கொலை விழும். கோதமங்கலம் பகுதியிலுள்ள செம்பன்குழி எனும் ஊரில் ஓர் உறவினரின் குடும்பம் வசிப்பது நினைவுக்கு வந்தது. “நாம அங்கே போகலாமா?” “நான் வரல. எனக்கு ஏ வீட்டுக்குப் போணும். நீ ஒருத்தன்தான்டா எல்லாத்துக்கும் காரணம். ஓன் அப்பனோட ஒரு எக்ஜார்ஜிஸ்ட்…” நாலுமுக்கன் கடுப்பேறி திட்டுகிறான். “சரி… நீ எங்கேயாவது போய் தொல... நா வீட்டுக்கு வரல”. பேருந்துக் கட்டணத்திற்கும் வழிச் செலவிற்குமான பணத்தை நாலுமுக்கன் பேரம் பேசி வாங்கினான். முதன்முதலில் ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்க்க ஆசைப்பட்டதன் விலை, பண நஷ்டமும் மானக்கேடும்!
நான் பெரியாற்றின் கரையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று விருந்தாளியாகத் தங்கி உண்டு உறங்கினேன். ‘பெரியாறில் மீன் பிடிக்கும் பொன்மானே’ என்ற திரைப்பாடலை முணுமுணுத்துக்
கொண்டே ஆற்றில் குதித்து நீச்சல் கற்றுக்கொண்டேன். வேறு வழியில்லாமல் நான்கைந்து நாள்கள் கழித்து வீடு திரும்பினேன். அங்கு கடுமையான வசைகள் நில்லாமல் ஒலித்தன. அவற்றிலிருந்து தப்பிக்க தினமும் காலையிலேயே கல்லூரிக்குப் போகத் தொடங்கினேன். அந்த நாள்களில்தான் மலையாள சினிமாவின் ஒரு பிரபல நடிகரின் மகன் எங்களுக்கு ஆசிரியராக வந்தார்.
(தொடரும்)