சினிமா
Published:Updated:

“சினிமா இசையில் சுதந்திரமில்லை!”

“சினிமா இசையில் சுதந்திரமில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சினிமா இசையில் சுதந்திரமில்லை!”

“சினிமா இசையில் சுதந்திரமில்லை!”

ளையராஜா, ரஹ்மான், அனிருத், சந்தோஷ்  நாராயணன் என பருவநிலைக்கேற்ற ப்ளேலிஸ்ட்கள் எல்லாருடைய மொபைலிலும் இருக்கும். இப்போது ஐந்தாவதாக ஒரு ப்ளேலிஸ்ட் பெரும்பான்மையான இளைஞர்களின் மொபைலில் ஜம்மென அமர்ந்திருக்கிறது. ‘தைக்குடம் ப்ரிட்ஜ்’. 

“சினிமா இசையில் சுதந்திரமில்லை!”

ஐந்தாண்டுகளுக்கு முன் சில இளைஞர்கள் கொச்சி அருகே சின்னதாக தொடங்கிய இந்த இசைக்குழுவுக்கு இப்போது கண்டங்கள் தாண்டி ஆயிரக்கணக்கான ரசிகர்கள். போகுமிடங்களில் எல்லாம் பரபரவென விற்றுத் தீர்கின்றன டிக்கெட்கள். ஒரு இண்டிபெண்டென்ட் இசைக்குழுவிற்கு இவ்வளவு வரவேற்பு என்பது எப்போதாவதுதான் நடக்கும். குழுவிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏராளமான ரசிகர்கள். முக்கியமாக குழுவைத் தோற்றுவித்த வயலின் அரக்கன் கோவிந்த் வசந்தாவிற்கு. எஸ்!  ‘96’ ஆல்பத்தின் இசையமைப்பாளர்.

சமீபத்தில் சென்னையில் நடந்தது இவர்களின் கான்செர்ட். மேடையில் அதிரடிக்கும் இவர்களின் ரிகர்ஸல்கள் எப்படி இருக்கும் என்பதையறிய ஆளுக்கு முந்தி ஆஜரானோம். ஒவ்வொருவராக மேடை ஏறுகிறார்கள். ஒருபக்கம் டிரம்ஸை சரி பார்க்கிறார் அனிஷ். மறுபக்கம் மைக் செக் செய்கிறார் அணியின் ஆற்றலாளர் வியன் பெர்னாண்டஸ். வாய்ப்பாட்டுக்காரர்கள் காலி ஆடிட்டோரியத்தின் மூலைகளில் கண்மூடியபடி பாடல் வரிகளை அசைபோடுகிறார்கள். கடைசி ஆளாக கையில் வயலினோடு வருகிறார் கோவிந்த். வயலின் நரம்புகள் மீட்டலுக்குத்  தயாராகின்றன.

மொத்தமாக மேடையேறுகிறார்கள், கடைசியாக ஒருமுறை எல்லாரும் சேர்ந்து ரிகர்ஸல் பார்க்க. கண்களை மூடி விரல்களை அசைக்கிறார் கோவிந்த். எதிர்பார்க்காத நொடியில் சட்டென பிறக்கிறது ‘காதலே காதலே’. வயலினில் நம் நரம்புகளைக் கட்டி வைத்து இழுப்பதுபோல ஜிவ்வென இருக்கிறது.  லைவ் ஷோவிற்கு தயாராகிக் கொண்டு இருந்தவர்களிடம், ‘பேசலாமா?’ என்றதும் ‘அதுக்கென்ன, வாங்க’ என சிரித்தபடி அழைக்கிறார் கோவிந்த்.

“ ‘தைக்குடம் ப்ரிட்ஜ்’ பிறந்து அஞ்சு வருஷம் ஆச்சு. தொடங்கியபோது இண்டிபெண்டென்ட் இசைக்குழுவிற்கு வரவேற்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?”

“ ‘பத்தாண்டுகளுக்கு முன்புவரை இண்பெண்டிடென்ட் இசைக்கு வரவேற்பு மிகவும் கம்மிதான்.  சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சியால் இப்போது தேடித் தேடி இசையை ரசிக்கும் வட்டம் ஒண்ணு உருவாகியிருக்கு. இதனால் இப்போது ஏகப்பட்ட இசைத்திறமைகளை அடையாளம் காணவும் முடியுது.’’

“ஐந்தாண்டுகள் ஒரே குழுவாக எப்படி செயல்படமுடியுது? உங்களுக்குள்ளே சண்டை எல்லாம் வராதா?”

“ ‘தைக்குடம் ப்ரிட்ஜ்’ தொடங்குவதற்கு முன்னால இருந்தே நாங்க நெருங்கிய நண்பர்கள். எங்க எல்லாரையும் இணைக்கும்புள்ளி இசைதான். இன்னும் இன்னும் சிறந்த ஆல்பங்களைத் தந்துகிட்டே இருக்கணும்ங்கிற எண்ணம் எங்களைக் குழுவாக செயல்பட வைக்குதுனு நினைக்கிறேன். “

“ரிகர்ஸல், ஆன் ஸ்டேஜ்னு எல்லா இடங்கள்லயும் எனர்ஜி குறையாம ஜாலியா இருக்கீங்க. அதிகம் சேட்டை செய்றது இந்த க்ரூப்ல யாரு?”

‘‘இதுல சந்தேகமே இல்ல. ரெண்டு பேர்தான் ரொம்ப சேட்டை செய்வாங்க. ஒண்ணு வோக்கலிஸ்ட் அனிஷ். இன்னொண்ணு இதோ பக்கத்துல அமைதியா உட்காந்திருக்கிற வியன் பெர்னாண்டஸ். எல்லாருமே ஜாலி டைப்னாலும் இவங்க ரெண்டு பேரோட எனர்ஜியும்தான் எப்பவுமே அதிகமா இருக்கும்.’’

“சினிமா இசையில் சுதந்திரமில்லை!”

“இன்டிபெண்டென்ட் மியூசிக்ல மற்றமொழி கலைஞர்களைவிட மலையாள இசைக்கலைஞர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறமாதிரி இருக்கே? காரணமென்ன?”

கோவிந்த் யோசிக்க, ‘‘எனக்குமே இது தோணியிருக்கு’’ என ஆஜராகிறார் வியன். ‘‘நான் மும்பைக்காரன். அதனால அங்கே இருக்கிற வரவேற்புக்கும் இங்கே இருக்கிற வரவேற்புக்குமான வித்தியாசத்தை உணர முடியுது. பொதுவாவே தென்னிந்தியாவில் இசைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுது. கலைஞர்கள் கொண்டாடப்படுறாங்க. இந்த நிலைமை வட இந்தியாவுலயும் வந்தா நல்லா இருக்கும்’’ என வியன் பெருமூச்சுவிட, இடைமறிக்கிறார் கிடாரிஸ்ட் அசோக்.

‘‘எங்களை நாங்க மலையாள இசைக்குழுனு அடையாளப்படுத்திக்கிறதில்ல. மலையாளம், தமிழ், இந்தினு பல மொழிகள்லயும் பாடுறோம். ஆங்கிலப் பாடல்கள் மட்டுமே பாடுற மியூசிக் பேண்ட் கூட கேரளாவுல இருக்கு. இசைக்கு மொழி எல்லாம் இல்லையே! அதனால இப்படி சின்னதா ஒரு வட்டத்துல அடையாளப்படுத்துறது தேவையில்லை”

“இண்டிபெண்டென்ட் இசைக்கலைஞர்களோட அல்டிமேட் லட்சியம் சினிமாவுக்குள்ள நுழையுறதுதானா?”


‘‘சினிமாவுல பாடினா பணம், புகழ் எல்லாம் நிறைய வரும்தான். பொதுவாவே சினிமாவுல வர்றது மட்டும்தான் இசைனு ஒரு எண்ணம் இங்கே இருக்கு. ஆனா உண்மையில சினிமா இசை உங்களை சுதந்திரமா செயல்பட விடாது. கதையோட்டத்துக்குப் பொருந்தணும், ஹீரோ ஹீரோயினுக்கு ஸ்பேஸ் இருக்கணும்னு நிறைய கண்டிஷன்கள். ஆனா, இண்டிபெண்டென்ட் மியூசிக்ல நீங்க நினைச்சதெல்லாம் பண்ணலாம். எந்த கண்டிஷனும் கிடையாது. மற்ற நாடுகள்ல சினிமா இசை அளவுக்கு இண்டிபெண்டென்ட் இசைக்கும் முக்கியத்துவம் இருக்கு. இங்கேயும் நிலைமை மாறும்’’ என்கிறார் அசோக்.

“ ‘தைக்குடம் ப்ரிட்ஜ்’ பேண்ட்டோட அடுத்த திட்டம்?”

“எங்களோட ‘நம’ ஆல்பத்தை இன்னும் நிறைய பேருக்கு எடுத்துட்டுப் போகணும். அதுக்காக அடுத்த சில மாசங்கள் வரிசையா டூர் பண்ணப்போறோம்’’ எனச் சொல்லிவிட்டு மேடைக்குக் கிளம்புகிறார் கோவிந்த்.

நித்திஷ் - படம்: பா.காளிமுத்து