Published:Updated:

தன்மானம் அவமானம் வெகுமானம் - 3

தன்மானம் அவமானம் வெகுமானம் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
தன்மானம் அவமானம் வெகுமானம் - 3

தன்மானம் அவமானம் வெகுமானம் - 3

பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த, கண்ணீரும் புன்னகையும் கலந்த சம்பவங்களைப் பகிரும் பகுதி இது. இந்த வாரம் நாசர்.

தன்மானம்

தன்மானம் அவமானம் வெகுமானம் - 3

மாதம் 350 ரூபாய் சம்பளம். இதுதான்  நான் பியூசி படித்து முடித்ததும் வாழ்க்கைக்காக வரையறுத்து வைத்திருந்த அளவுகோல்.  இந்திய ராணுவத்தில் உள்ள ஏர்ஃபோர்ஸில் எனக்கு வேலை கிடைத்தது. பயிற்சிக்காலத்தில் மாதம் 280 ரூபாய் கொடுத்தனர். அதுவே எனக்குப் பெரிய  நிம்மதியைக் கொடுத்தது. அப்போது  நான் மிகவும் ஒல்லியாக இருப்பேன். மூக்கு நீளமாக இருக்கும். அதனால் சினிமா நடிகனாக வேண்டும் என்று கனவில்கூட நினைத்ததில்லை. ஆனால் என் அப்பாவுக்கு அப்படி ஒரு கனவு இருந்தது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் என்னைச் சேர்த்துவிட்டார். எனக்கு சீனியர் ரஜினிகாந்த்; என்னோடு படித்தவர் சிரஞ்சீவி. அதன்பிறகு சென்னைத் தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியிலும் படித்தேன். பின்னர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன்.  அங்கே ரவுஃபார் என்றொரு நண்பர் கிடைத்தார் சென்னை ராயப்பேட்டையில் இருந்த அவர் வீட்டில்தான் இருந்தேன். ரவுஃபாரின் மைத்துனர் சிறந்த போட்டோகிராபர். அவர்தான்  என்னை விதவிதமாக போட்டோ எடுத்துக் கொடுத்தார். அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, நான் சினிமா சான்ஸ் தேடிவந்தேன். ஒருநாள் ரவுஃபாரின் மைத்துனர், ‘ ‘நாசர்,  நான் எடுத்துக் கொடுத்த போட்டோவை வெச்சுக்கிட்டு என்ன பண்ணுவீங்க?’’  என்று கேட்டார். ‘‘தினம் ஒரு டைரக்டர் வீட்டு வாசலில் போய் நிற்பேன். அவர் வெளியில் வரும்போது அவரைப் பார்த்துச் சிரிப்பேன். என் கையில் இருக்கும் போட்டோ ஆல்பத்தை அவரிடம் காட்டுவேன். அப்புறம் அவர் காரில் ஏறிப் போய்விடுவார்” என்று பதில் சொன்னேன். என் நண்பர் ரவுஃபார், அப்போது என்னைப் பார்த்துக் காறி உமிழ்ந்து, ‘இதெல்லாம் ஒரு பிழைப்பா...’ என்று கோபமாகத் திட்டினார். ``நாசர் என்பவன் யார்? அவனை சினிமாக்காரர்கள் ஏன் பயன்படுத்திக்கொள்ள  வேண்டுமென்று நினைப்பார்கள்? நீ யாரென்று நிரூபி!” என்றா. அந்தச் சொற்கள் என் நெற்றிப் பொட்டில் பொளேர் என அறைந்த மாதிரி இருந்தன.  மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடிப்புப் பயிற்சி எடுத்துக் கடுமையாக உழைத்து என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன்.

நண்பராக இருந்தாலும் அவர் காறி உமிழ்ந்தது என் தன்மானத்தைச் சீண்டிப் பார்த்த செயல்தான். ஆனால், அதைக் கோபமாக அவர்மீது திருப்பாமல், சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வைராக்கியமாக மாற்றிக்கொண்டேன். இல்லையென்றால் இந்தச் சம்பவத்தைச் சொல்வதற்கு நாசர் என்னும் ஒரு நடிகன் உருவாகியிருக்க மாட்டான்.

அவமானம்

என்னோடு ஃபிலிம்சேம்பர் இன்ஸ்டிட்யூட்டில் படித்த சிரஞ்சீவி பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு முன்பு இன்ஸ்டிட்யூட்டில் சீனியராகப் படித்த நடிகர் ராஜீவ், தாஜ் ஹோட்டலில் கேப்டனாக வேலை பார்த்தார். அவர்மூலம்,  நான் தாஜ் ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் மூன்று மாதம்  பயிற்சிப் பணி. தாஜ்  ஹோட்டல் வேலை முடிந்ததும் இரவில், அப்போது  கட்டிக்கொண்டிருந்த ஜெமினி மேம்பாலத்துக்கு அடியில் படுத்துக்கொள்வேன், சிலநாள் ஜி.என்.செட்டி தெருவில் இருக்கும் பெரிய மரங்களின் கீழ் படுத்திருக்கிறேன்.  என் வீடு செங்கல்பட்டில் இருந்தது. தினசரி அதிகாலை 3 மணிக்கே அம்மா எழுந்து, சமையல் செய்து சாப்பாடு கட்டிக் கொடுத்துவிடுவார். நான் 4 மணி ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு வருவேன். காலையில் மயிலாப்பூரில் உள்ள கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்குப் போய்க் காத்திருப்பேன். அடுத்து அங்கிருந்து நடந்தே எல்லையன் காலனியில் உள்ள பாரதிராஜா ஆபீஸூக்குப் போய் வாய்ப்பு கேட்பேன். சென்னை, தி.நகர் ஹிந்தி பிரச்சாரசபா உள்ள ஒரு தெருவில் இரு சினிமா கம்பெனியின் கதை, விவாதத்துக்கு அழைத்தனர். காலை 10 மணிக்குப் போவேன்.  12 மணிக்கு வெளியே போகச்சொல்லி, மாலை 4 மணிக்குத் திரும்ப வரச்சொல்வார்கள்.  மதியச் சாப்பாடு தராமல் தவிர்ப்பதற்காகத்தான் அப்படி!

நானும் தி.நகரில் இருந்து மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு நடந்தே வந்து கொஞ்சநேரம் புல்வெளியில் படுத்துக்கிடப்பேன், 3 மணிக்கு மேல் செடிகளுக்குக் குழாய்கள் மூலம் தெளிக்கப்படும் தண்ணீரில் முகம் கழுவிவிட்டுத் திரும்பவும் செல்வேன்.    

தன்மானம் அவமானம் வெகுமானம் - 3

சினிமா வாய்ப்பு கேட்கப்  போகும்போது சினிமாவில் உடல் ரீதியாக ஒப்பிட்டு அவமானப்படுத்துவார்கள். ஒல்லியான உடல், நீளமான மூக்கையும் சுட்டிக்காட்டி ‘நீயெல்லாம் சினிமாவில் நடிக்கணுமா?’ என்று ஏளனம் செய்தனர். நான் திரைப்படக் கல்லூரியில் கோல்டுமெடல் வாங்கியதைச் சொன்னால் ‘ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தால் பெரிய ஆளா? போய்யா வெளியே...’ என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்பிய கதைகள் ஏராளம். ஒரு பெரிய டைரக்டரிடம் வாய்ப்பு கேட்டுப் போனபோது, இன்னொரு பெரிய நடிகர் பெயரைச் சொல்லி “அவங்கல்லாம் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சா நடிச்சாங்க..?” என்று கேட்டார். அப்படிக் கேட்பதெல்லாம் அப்போது எனக்கு சாதாரணம்தான். ஆனால் அவர் அதோடு நிற்கவில்லை... என் சர்ட்டிபிகேட்டைத் தூக்கி என் முகத்தின் மேல் வீசினார். அவ்வளவுதான். அந்த நிகழ்விலிருந்து என் சர்ட்டிபிகேட் காட்டி வாய்ப்பு தேடுவதை நிறுத்திக்கொண்டேன்.

 ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தில் நடித்தபோது ஒரு சம்பவம்.  சத்யராஜ் ஹீரோ. என் முகம் சினிமாக்காரர்களுக்கே அப்போதெல்லாம் பழக்கமில்லை.  ஒருநாள் ஏவி.எம்மில் படப்பிடிப்பில் பார்த்த சத்யராஜ் ‘நீங்க ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சவரா?’ என்று கேஷூவலாகப் பேச ஆரம்பித்துப்  பழகினார். மதியவேளை. சத்யராஜ் தன்னுடனே சாப்பிட அழைத்தார். நானும் கைகளைக் கழுவிக்கொண்டு அமர்ந்தேன். உணவு பரிமாறுபவர் எனக்குத் தட்டு கொடுத்தார். சாப்பிடத் தயாராகும்போது திடீரென இன்னொருவர் என்னை நோக்கி ஓடிவந்தார். ``நீங்க இங்க சாப்பிடக்கூடாது. உங்களுக்கெல்லாம் அங்க வெச்சிருக்குல்ல?” என அதட்டியபடி கையில் இருந்த தட்டைப் பிடுங்கினார். எனக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது.  

தன்மானம் அவமானம் வெகுமானம் - 3

என்னுடைய வீடு சாலிகிராமத்தில் இருந்தபோது, ஏவி.எம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தால் அங்கிருந்து வீட்டுக்கு நடந்தே போய்விடுவேன். ஒருமுறை மதியமே ஷூட்டிங் முடிந்துவிட்டது. நல்ல வெயில் வேறு. வீட்டுக்குப் புறப்படத் தயாரானபோது, தயாரிப்பு நிர்வாகி ஓடிவந்து, ``சார், ஏசி கார் ரெடியா இருக்கு. கொஞ்ச நேரம் உட்காருங்க. வீட்டில் டிராப் பண்றோம்’ என்று சொன்னார். ``நடந்தே போய்க்கிறேன்யா” என்று  எவ்வளவோ மறுத்தும், வற்புறுத்தி காரில் உட்கார வைத்தார். நான்  உள்ளே அமர்ந்ததும், திடீரென காரின் கதவைத் திறந்த இன்னொரு தயாரிப்பு நிர்வாகி `‘ஹலோ... இது ஹீரோயின் போற ஏ.சி கார். இதுலபோய் உட்கார்ந்திருக்கீங்க? முதல்ல இறங்குங்க...’’ என்று அதிகாரத் தோரணையில் சொல்ல, நான் காரைவிட்டு மெளனமாக இறங்கி எப்போதும் போல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  சினிமா உலகத்தைப் பொறுத்தவரை  ஒருவர் வெற்றி பெறுவதற்காகப் போராடும்வரை அவன் சாப்பிடும் தட்டில் போடப்படும் உணவு அவமானம்தான். சினிமா ஆண் பெண் பாரபட்சம்  பார்க்காது.  எல்லோரையும் திட்டமிட்டே அவமானப்படுத்தும்.  சினிமா உலகில் உள்ள சிலர் என்னை இழித்துப் பழித்துப் பேசியதெல்லாம் என் மனதை பயங்கரமாகக் காயப்படுத்தி ரணமாக்கியிருக்கிறது. உலகில் பார்க்கும் எல்லா வேலைகளுக்கும் மாதச் சம்பளம் உண்டு. ஆனால், சினிமாவில் மட்டும் அதற்கு உத்தரவாதம் கிடையாது. நடிக்க ஆரம்பித்த காலத்தில் மட்டுமல்ல; இப்போதும்கூட அந்த பயம் எனக்கு உண்டு.

வெகுமானம்

இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று என்னுடைய சினிமா உலகம் விரிந்து கிடக்கிறது.`பாகுபலி’ படத்தில் நடித்தபிறகு உலகளவில் பலருக்கும் நாசரைத் தெரிவது ஆச்சர்யமான ஆனந்தம். முதன்முதலில் கே.பாலசந்தரின் ‘கல்யாண அகதிகள்’ படத்தில் அறிமுகமானேன். முதல்நாள் படப்பிடிப்பில் எனக்கு 200 அடிகொண்ட நீளமான வசனம் கொண்ட காட்சி. ஒரே டேக்கில்  நடித்து முடித்துவிட்ட என்னை கே.பி-சார் யூனிட்டில் இருந்தவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். `‘ரஜினி, கமல் எல்லாம் டைரக்டர்கிட்டே கன்னாபின்னான்னு திட்டு வாங்கியிருக்காங்க, நீங்க  மட்டும் எப்படித் தப்பிச்சீங்க?’’ என்று என்னிடம் கேட்டார்கள். முதல்நாள் மட்டுமல்ல, ‘கல்யாண அகதிகள்’ படப்பிடிப்பு முடியும்வரை
கே.பி.சாரிடம்  ஒரு திட்டுகூட வாங்காமலே நடித்து முடித்தேன்.   

தன்மானம் அவமானம் வெகுமானம் - 3

`தேவர் மகன்’ படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜிசாரை நான் கடுமையாகத் திட்டும் காட்சியைப் படமாக்க ஆயத்தமானார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் அவர் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றிருந்தேன். திடீரென என் அருகில்வந்த சிவாஜிசார் எனக்கு மட்டும் கேட்கும் குரலில், ‘பாய், அப்பனைத் திட்டுற பாக்கியம் எந்தப் பிள்ளைக்குக் கிடைக்கும்? யோசிச்சுட்டு நிக்காதய்யா... என்னை நல்லா திட்டுய்யா...’ என்று எனக்கு தைரியமூட்டி நடிக்கவைத்தார். அதன்பிறகு ‘தேவர் மகன்’ பிரிவ்யூ காட்சிக்கு அழைத்தனர். அப்போது நான் வெளியூர்ப் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. அன்று இரவு நான் தங்கியிருந்த அறையின் தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையில் பிரபு. `‘அப்பா பேசணும்னு சொல்றார்” என்று சொல்ல,  எனக்குப் படபடப்பானது. அடுத்த நொடி, சிம்மக்குரல் கர்ஜித்தது. ‘பாய்... இப்போதான்யா ‘தேவர் மகன்’ படத்தைப் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாதுய்யா... அந்தப் படத்துல மாயத்தேவனாவே வாழ்ந்திருக்கடா...’ என்று மனம் திறந்து பாராட்ட, எனக்குப் பேசவே முடியாமல் குரலெல்லாம் கட்டிக்கொள்ள... இதைவிட ஒரு நடிகனுக்கு என்ன வெகுமானம் வேண்டும்!

‘குருதிப்புனல்’ படப்பிடிப்புக்கு முன்பாகவே,  திரைக்கதை  - வசனம் எழுதப்பட்டு, ஒர்க்‌ஷாப் நடத்தப்பட்டு உருவான திரைப்படம். தமிழ்சினிமாவில் சிவாஜிசாருக்குப் பிறகு சிறந்த நடிகர் கமல்சார்  என்பது உலகறிந்த உண்மை. ‘குருதிப்புனல்’ திரைப்படத்தின் பிரிவ்யூ காட்சியைப் பார்த்துவிட்டு எல்லோரும் வெளியில் வந்தோம். அப்போது என்னைப் பார்த்த கமல்சார், ``நாசர், ஃபென்டாஸ்டிக் கேரக்டர்... அல்டிமேட் பர்ஃபாமென்ஸ். இனிமேல் இதைவிட ஒரு ரோல் கிடைக்கவே கிடைக்காது’’ என்று மனம்திறந்து பாராட்டினார். இப்படி மாபெரும் நடிகர்களால் பாராட்டு பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

எம்.குணா - படங்கள்: ப.சரவணகுமார்